வியாழன், 11 நவம்பர், 2021

திருடனுக்கும் உபசாரம் - நிர்மலா ரங்கராஜன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மதுரைக்கு ஒரு பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


WE DON’T KNOW WHAT TOMORROW WILL BRING. SO DON’T STAY ANGRY FOR TOO LONG. LEARN TO FORGIVE AND LOVE WITH ALL OF YOUR HEART.  DON’T WORRY ABOUT THE PEOPLE WHO DON’T LIKE YOU. ENJOY THE ONES WHO LOVE YOU.


******


சற்றே இடைவெளிக்குப் பிறகு, சக தில்லி வாசி, நண்பரின் மனைவி திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்களின் ஒரு அனுபவப் பகிர்வுடன் உங்கள் அனைவரையும் சந்திக்க வந்திருக்கிறார்.  அவரது பதிவு தான் இன்று.  வாருங்கள் அவரது பதிவினை படித்து ரசிக்கலாம் - வெங்கட் நாகராஜ், புது தில்லி. 


******


திருடனுக்கும் உபசாரம் - நிர்மலா ரங்கராஜன்




நண்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம் 🙏


இதுவரை நான் எழுதிய பதிவுகளை படித்து கருத்துரைத்து, மேலும் எழுதும் ஆர்வத்தை உருவாக்கிய அன்பு உள்ளங்களுக்கு எனது உளம் நிறைந்த நன்றி 🙏


இதற்கு முன் இரயிலில் பெட்டியை திருட்டு கொடுத்த சம்பவம் பற்றி பகிர்ந்து இருந்தேன். இன்று மீண்டும் ஒரு சம்பவத்தை தங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


சம்பவமா ?


என்னம்மா அது?


வாங்க பார்க்கலாம்......


ஒரு நாள் வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரம் பார்த்து அலைபேசியில் அழைப்பு வந்தது. வந்த செய்தி இதுதான் "நாங்கள் HCL நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம்.  நீங்கள் சமீபத்தில் வாங்கிய உங்கள் கணினியில் பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. அதுவும் அந்த குறிப்பிட்ட அனைத்து கணினியிலும் ஒரே மாதிரியான பிரச்சினை உள்ளது, அதை சரி செய்ய வேண்டும் எனவே உங்கள்  கணிப்பொறியை எங்கள் கம்பெனியிலிருந்து வரும் நபரிடம் கொடுத்து அனுப்பவும்"  என்று. 


அப்போது புதிதாக வாங்கியிருந்த எங்கள் கம்ப்யூட்டர் நிஜமாகவே ஏதோ பிரச்சினையால் ஆன் ஆகவில்லை. எனவே வந்த செய்தி நம்பும்படியாக இருந்தது. ஆனாலும் கணவர் வீட்டில் இல்லாததை காரணம் காட்டி வந்த நபரை திருப்பி அனுப்பி விட்டேன். அனுப்பிய பிறகு கணவருக்கு தொடர்பு கொண்டு செய்தியை சொன்னேன். அவரோ கணினியை  கொடுத்து அனுப்ப சொல்லி சொன்னார். நானும் சரி என்று சொன்னேனே தவிர உள்ளுக்குள் 'ஆஹா வந்தவனை திருப்பி அனுப்பி விட்டோமே இப்போது என்ன செய்வது' என்று ஒரே யோசனை. 


மதிய உணவுக்காக கணவர் வீட்டிற்கு வந்தார், அப்போது அவரிடம் நடந்ததை விரிவாக கூறினேன். சரி பரவாயில்லை என்று சொல்லி விட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு அலுவலகம் புறப்படும் சமயம் அந்த நபர் அங்கு நின்று கொண்டு இருந்தான். கணவருக்கு அந்த ஆளை அடையாளம் காட்டினேன். அவரும் அந்த ஆளை திரும்பவும் வீட்டிற்கு அழைத்து வந்து என்னிடம் சொல்லி அந்த கம்ப்யூட்டர் ஐ கொடுத்து அனுப்பு என்று சொல்லி விட்டு அலுவலகம் சென்று விட்டார். அவனுக்கு டீ போட்டு கொடு அல்லது சாப்பாடு கொடு என்று சொல்லி சென்றார். 



நானும் மிகுந்த பரிவுடன் உணவு வேளையாக இருப்பதால் ஏதாவது சாப்பிடும்படி வற்புறுத்த அவனோ, எதுவும் வேண்டாம் என்றும் தனக்கு அதிக வேலை இருப்பதால் விரைவாக செல்ல வேண்டும் என்றும் ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் கேட்டான்.  பிறகு அவசர அவசரமாக கம்ப்யூட்டரை தூக்கிச் செல்ல தயாரானான். நான் அவனை மறித்து இப்படியே எப்படி தூக்கி செல்ல முடியும்?  கொஞ்சம் பொறு என்று சொல்லி அதற்கு உண்டான அட்டை பெட்டியை மேலிருந்து கீழே இறக்கி கொடுத்து அதனுள் பாதுகாப்பாக வைத்து கட்டி பிறகு தூக்கி செல்லுமாறு கொடுத்தேன். அவனும் சந்தோஷமாக எடுத்து சென்று விட்டான். ஆனால் சம்மந்தப்பட்ட காகிதங்கள் ரசீது எதுவும் என்னிடம் கேட்கவில்லை. நானும் அதை பற்றி எதுவும் யோசிக்க வில்லை.


சிறிது நேரத்தில் கணவரிடம் இருந்து அழைப்பு வந்தது, என்னவென்றால் அவர் கம்பெனிக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை  என்று சொன்னதாகவும் கூறினார். அதிர்ச்சி! இப்போது என்ன செய்வது, எங்கே சென்று அந்த ஆளை தேடுவது என்று புரியாமல் வேகமாக சென்று நுழை வாயிலில் இருந்த காவலாளியிடம் கேட்டேன். 


அவரோ இந்த வழியாக யாரும் போக வில்லை என்றும் மற்றொரு வாயில் வழியாக சென்று இருக்கலாம் என்றும் கூறினார். மேலும் அவர் குறிப்பேட்டில் இருந்த அன்று வந்தவர்கள் பெயர் வரிசையை எடுத்து காட்டினார். அதில் வந்தவனின் பெயரும், உள்ளே வந்ததற்கான காரணமும் குறிப்பிட பட்டிருந்தது. அங்கே இங்கே என்று தேடிப் பார்த்தோம். அவன் பறந்து சென்று விட்டான். 



அதன் பிறகு இரண்டு நாட்களாக நான் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. சரியாக சாப்பிடாமல் தூங்காமல் நடந்ததை நினைத்து ஒரே சோகம். இருக்காதா பின்னே? அன்றைய கால கட்டத்தில் அந்த கம்ப்யூட்டரின் மதிப்பு அறுபது ஆயிரம். மிக அதிக சிறப்பம்சங்களுடன் விசேஷமாக வடிவமைக்கப் பட்ட கம்ப்யூட்டர் அது.                  


பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் மிகுந்த அக்கறையுடன் விசாரித்தனர். ஆறுதலும் கூறினார்கள். ஆனாலும் அந்த இடத்தில் வேறு ஒரு கம்ப்யூட்டர் வந்த பிறகு தான் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 

 

காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருந்தோம்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ( பல மாதங்கள் கடந்த பிறகு) ஒரு நாள் காவல் துறையினர் தொலைபேசியில் அழைத்து திருடனை பிடித்து விட்டதாகவும், அங்கு இருக்கும்  திருடனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  பொருட்களில் உங்கள் பொருள் இருந்தால் வந்து எடுத்து செல்லுங்கள் என்றும் கூறினர். 


(திருடுவது தான் அவனுக்கு தொழிலாம். அரசாங்க அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை இரவு உள்ளே சென்று சனி ஞாயிறு தினங்களில் ஏகப்பட்ட  பொருட்களை திருடிச் செல்வது வழக்கமாம். அவனை பற்றிய அருமை பெருமைகளை தொலைக்காட்சி Zee news ல் கூறினர்.)


திருடப்பட்ட பொருள் எதுவும் அடையாளத்தோடு இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கும் போது நாம் எப்படி நம் பொருளை கண்டுபிடிக்க முடியும்? எனவே அதை அப்படியே விட்டாச்சு.


எத்தனை வருடங்கள் ஆனாலும் இது போன்ற சம்பவங்கள் மனதை விட்டு மறைவது இல்லை. நமக்கு நல்ல பாடமாகவும் அமைந்து விடுகிறது.  


வாழ்க்கை அனுபவங்களில் இதுவும் ஒன்று. 


மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்.


நன்றி 🙏


நிர்மலா ரங்கராஜன்


******


பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


26 கருத்துகள்:

  1. அடப்பாவமே... இப்படிக் கூட ஒரு அனுபவமா? பாவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்க வேண்டிய அனுபவமும் கூட.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கதையை மிகச் சுருக்ஙமாக சொல்லப்பட்டுள்ளது. திருடன் பற்றிய விவரம் நானே துப்பறிந்தது இடம் பெறவில்லை.திருடன் HCL company dropout labour, திருடன் முதன் முதல் தொடர்புகொண்ட தொலைபேசி எண் மற்றும் இறுதியாக பொது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டது பற்றி எங்கள் மொபைலில் பதிவாகியதால், airtel company ஐ போலீஸ் துணையுடன் கைபற்ற முடிந்தது.திருடன் பிடிபட்ட சம்பவம் zee tv ல் வெளியாகி, newspaperலும் வந்தது. அதை எடுத்துக் கொண்டு திகார் சிறையிலிருந்தவனை அடையாளம் கண்டேன். அதன் பிறகு, போலிஸ் ஸ்டேஷனில் கேஸ் குளோஸ் பண்ணும் சமயம், திருடப்பட்டு கைப்பற்றப் பட்டுள்ள கம்பியூட்டர்களில் எதையாவது எடுத்துக் கொள்ள சொன்னார்கள், வேண்டாம் என்று சொல்லி, பாராட்டு கிடைக்கப் பெற்று, திருடன் தண்டணை பெற்றான் என்று நிம்மதியாக வீடு வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...    அதையும் சேர்த்து சொல்லி இருந்தால் இன்னமும் பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்திருக்குமே...

      நீக்கு
    2. சுருங்கச் சொல்லி விளக்கி இருக்கிறார்களே! விவரமாக நீங்கள் சொன்னதில் மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. பயனுள்ளதாகவும் இருந்திருக்கும் - உண்மை தான் ஸ்ரீராம். இப்படியான சமயங்களில் ரொம்பவே அலைய வைப்பார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    வருத்தம் தரும் கஸ்டமான அனுபவம்தான். எத்தனை நாள் ஆனாலும் மறக்க முடியாதது. சில அனுபவங்கள் நம்மை புடம் போடுகின்றன. ஆனாலும் பல சமயங்களில், எதிராளியின் பேச்சில் நாம் நம்மையும் அறியாமல் ஏமாந்து விடுகிறோம். இப்படியெல்லாம் இந்த கலிகாலத்தில் நடக்கிறது. என்ன செய்வது? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      கடினமான அனுபவம் தான். பல நாட்கள் கழித்தும் மறக்க முடியாததும் கூட.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. விருந்து உபச்சாரத்தோடு திருட்டு. வேதனையான அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனையான அனுபவம் தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வேதனையான நிகழ்வு தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அவனை தங்களது கணவர் விருந்து உபசரிக்க சொன்னது ஆச்சரியம் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சர்யம் தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. சட் என்று அந்தச் சமயங்களில் நமக்கு யோசனை தோன்றுவதில்லை. நானும் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ஏமாந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சந்தர்ப்பங்களில் இப்படித்தான் நடந்து விடுகிறது. பிறகு தான் ஏமாந்து விட்டோம் என்பதே புரியும் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மிகவும் சோகமான சம்பவம். பொருட்களை மற்றவர்களிடம் கொடுக்கும்போது அவர்களை பற்றிய முழு விபரங்களையும் வாங்கிகொண்டு கொடுப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோகமான சம்பவம் தான் இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. சில சமயங்களில் இப்படி நம் மைன்ட் ப்ளாங்க் ஆகி யோசிக்கும் திறனை இழக்கிறது, எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும். உங்கள் பெட்டி பறிபோனது தெரியும் ஆனால் அது நீங்கள் பாதுகாப்பாக எடுத்துச் சென்றிருந்தும் திருடப்பட்டது. ஆனால் இது சட்டென்று நம்பி ஏமாந்துவிடுவது. பலருக்கும் நிகழ்ந்திருக்கும் என்று தோன்றுகிறது அதாவது கம்ப்யூட்டர் என்றில்லாமல் ஏதேனும் ஒரு விஷயத்தில். சங்கடமான தருணங்கள் உங்களுக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனது இப்படி வெறுமையாகி நடந்து விடுவது உண்மை தான் கீதாஜி. பிறகு உணர்ந்து பலனும் இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வேதனையான நிகழ்வு தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அணைவருக்கும் பாடமாகும் அணுபவம் மேடம்.
    தற்போது பொருட்கள் வாங்கும்போது தொழில்நுட்பத்தில் நடக்கும் திருட்டுத்தனங்கள் குறித்து அறிந்தோர் அலைப்பேசி எண் கொடுத்து பொருள் வாங்குவது இல்லத்திற்கு பாதுகாப்பானது.
    பின்னால் பொருட்களுக்கு சேவை தேவைப்படும்போது வாட்ஸ்ஸாப்பிலேயே அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அணுப்பிவிடலாம்.
    எல்லா பெரிய நிறுவனங்களும் வாட்ஸ்ஸாப்பிலேயே பாட்டுகளை "Robots" வைத்திருக்கின்றன.
    பின்னர், வீட்டிற்கு வரும் "Service engineer" இடம் நம் அலைப்பேசிக்கு வரும் "OTP" ஐ அவர் தம் செயலியில் பதிவிட்டு நமக்கு நிறுவன ஒப்புதல் பெற்றபின்னே அவரை அணுமதிக்கலாம்.
    அவர் வாங்கும் கட்டணம், சேவையின் தரம், அணைத்தையும் நாமே அந்த நிறுவனத்தின் செயலியில் உள்ளீடு செய்துவிடலாம்.
    இதனால் யேமாற்றும் சதவிகிதம் மிகவும் குறைவு.
    விழிப்புணர்வு அணைவருக்கும் தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் பாடமாகும் அனுபவம் - உண்மை தான் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. //கம்பெனிக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும் அவர்கள் அப்படி யாரையும் அனுப்பவில்லை என்று சொன்னதாகவும் கூறினார்.//

    முன்பே அப்படி கேட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.

    ஆனால் இப்படி ஆக வேண்டும் என்று இருக்கும் போது நினைவுக்கு வராதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்கள் இப்படித்தான் நடக்க வேண்டும் என இருக்கும்போது மாற்றமுடிவதில்லை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....