அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
வாழ்க்கை ஒரு விசித்திரமான பரீட்சை அடுத்தவரைப் பார்த்து காப்பி அடிப்பதால் தான் பலர் தோல்வியடைகிறார்கள்… காரணம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கேள்வித் தாள்….
******
ருபின் பாஸ் குறித்து சென்ற வாரம் முதல் பகுதியில் சொன்னது போல மலையேற்றம் என்பது சாதாரண விஷயமல்ல. இதற்கென்றே சில வழிமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று தகுந்த வழிகாட்டி மற்றும் போர்ட்டர் என அழைக்கப்படும் சுமை தூக்கியை பயணத்தில் அமர்த்திக் கொள்வது. இந்த விஷயங்கள் குறித்தும் அவர்களது பயணம் குறித்தும் தொடர்ந்து நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களின் வார்த்தைகளில் படிக்கலாம் வாருங்கள் - வெங்கட் நாகராஜ். ஓவர் டு ப்ரேம்!
*****
இந்த மலையேற்றத்திற்காக, நாங்கள் ஏற்பாடு செய்திருந்த இளம் வழிகாட்டி மற்றும் போர்ட்டர் அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். 18 வயது மட்டுமே ஆன சுறுசுறுப்பான இளைஞர் சந்தர் மோகன் ராவத் எனும் அந்த இளைஞரையே நாங்கள் எங்கள் வழிகாட்டியாக அமர்த்திக் கொண்டோம். அதற்குக் காரணம் அவர் ஏற்கனவே நான்கு முறை ரூபின் பாஸ் மலையேற்றத்தை முடித்திருந்ததார். அவர் அடுத்த நாள் எங்களுடன் சேர்ந்து கொள்ள இருந்தார். எங்கள் முதல் நாள் பயணத்தில் நோய்டாவிலிருந்து புறப்பட்டு சங்க்ரி நகரில் ஏற்பாடு செய்து வைத்த தங்குமிடத்தில் தங்கிக் கொண்டோம். அடுத்த நாள் (பயணத்தின் இரண்டாம் நாள்) காலை ஏழு மணி அளவில் எங்களின் பயணத்திற்காக உள்ளூரிலிருந்து ஒரு ஜீப்-ஐ வாடகைக்கு அமர்த்திக் கொண்டோம். எங்கள் வாகனத்தினை அங்கேயே நிறுத்தி விட்டு ஜீப்பில் நாங்கள் தங்கிய இடத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தௌலா (Dhaula) எனும் இடத்திற்குப் பயணிப்பதாகத் திட்டம்.
தங்குமிடத்திலிருந்து புறப்பட்டு வழியில் நெட்வார் எனும் இடத்தில் எங்கள் வழிகாட்டியை உடன் அழைத்துக் கொள்வதாக ஏற்பாடு! அரை மணி நேர காத்திருப்புக்குப் பிறகு அவர் வீட்டிலிருந்து மலைப்பாதையில் வந்து சேர்ந்தார். அவரையும் அழைத்துக் கொண்டு அந்த ஊரினை அடுத்து ஒரு பகுதியில் ஒரு சாலை சந்திப்பு. அங்கிருந்து ஒரு பாதை ருபின் பாஸ் மலையேற்றத்தின் தொடக்கப்புள்ளியான தௌலா சென்று சேரும். அந்தப் பாதையில் பயணித்து சுமார் ஒன்பது மணி நேரப் பயணத்தில் ருபின் ஆற்றங்கரையில், தௌலா கிராமத்தினைச் சென்றடைந்தோம். அங்கிருந்து பயணிக்க, நடுவில் ஒரு மரப்பாலம். அந்த மரப் பாலத்தைக் கடந்தால் ஒரு சிறு கடை - அங்கே தேநீர் அருந்தி புத்துணர்ச்சி அடைந்தோம்.
தொடர்ந்து பயணித்த போது முதல் ஒரு மணி நேரப் பயணம் எளிதாகவும் நேராகவும் இருந்ததோடு கீழே ஓடிக் கொண்டிருக்கும் ருபின் நதியின் பாதையின் ஓரமாகவே அமைந்திருந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எங்கள் பயணம் அத்தனை சுலபமாக இல்லை. மலையேற்றம் செங்குத்தாக இருந்ததோடு, பாறைகள் மிகுந்த பகுதியாக இருக்கவே பயணம் சிரமமாகவே இருந்தது. பாதையில் தொடர்ந்து ருபின் பாஸ் நதியும் பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தோம். ஆற்றின் இருபுறங்களிலும் அழகான கிராமங்கள் இருந்தன. அப்படி இருந்த ஒரு கிராமத்தின் பெயர் (D)டாண்டாதார்! நாங்கள் சென்ற மலைப் பாதையில் இருந்து கீழே பார்த்தால் இந்த கிராமத்தினைக் காண முடிந்தது.
காலை சுமார் 11.30 மணிக்கு, வழியில் அமைந்துள்ள ஒரு (DH)தாபா (உணவகம்)வில் மதிய உணவு சாப்பிட முடிவு செய்தோம். பாரம்பரிய உணவினைச் சாப்பிட்ட பிறகு மதியம் 12.00 மணியளவில், நாங்கள் எங்கள் அடுத்த இலக்கான சேவா கிராமம் நோக்கி முன்னேறினோம். உத்தரகாண்ட் பகுதியில் உள்ள இந்த சேவா கிராமத்தில், கின்னோர் கோயில்களின் பாரம்பரியக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டிருந்த ஒரு கிராமக் கோயிலைப் பார்த்தோம். இந்தப் பகுதியில் ஒரு வழக்கம். கிராமத்தினர் வாங்கிய கோப்பைகள், பதக்கங்கள் போன்றவற்றை இந்த வழிபாட்டுத் தலத்தின் வெளிப்பகுதியில் பார்வைக்கு ஏற்றவாறு வைத்திருக்கிறார்கள். மேலே இருக்கும் படத்தில் இதைப் பார்க்கலாம்.
மேலும் ஒரு மணி நேர நடைப் பயணத்திற்குப் பிறகு, நாங்கள் கீழ்நோக்கிச் செல்லும் பாதையில் பயணத்தைத் தொடங்கி, உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் எல்லையாக அமைந்திருந்த ஒரு ஓடையில் அமைந்திருக்கும் ஒரு மரப்பாலத்தைக் கடந்தோம். கடந்த பிறகு ருபின் ஆற்றின் கரையில், அன்றைய நாள் நாங்கள் முகாம் அமைக்க ஏற்ற தளத்தைப் பார்த்தோம். அங்கு ஏற்கனவே மலையேற்றப் பயணங்கள் நடத்தும் "இந்தியா ஹைக்ஸ்' நிறுவனம் சில கூடாரங்களை அமைந்திருந்தார்கள். நாங்களும் அங்கே முகாமிட்டு, இரவு உணவுக்கான தயாரிப்புகளை தொடங்கினோம். அன்றைய மாலை உணவை முடித்துக் கொண்டு ஓய்வு எடுக்கத் தொடங்கினோம். அடுத்த நாள் பயணம் எப்படி இருந்தது, என்ன செய்தோம் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
ப்ரேம் Bபிஷ்ட்
******
நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம். பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
எனக்கெல்லாம் இது மாதிரி வழிகளில் ஏழெட்டு முறைகள் சென்று வந்தாலும் பாதை நினைவிருக்காது! வழிகாட்டிகள் எப்படிதான் நினைவு வைத்திருப்பார்களோ! நினைவு வைத்திருப்பார்கள் என்று நாம் நம்பவேண்டும்!!
பதிலளிநீக்குவழிகாட்டிகள், ஓட்டுனர்கள் போன்றவர்கள் ஒரே முறை சென்று வந்தாலும் கூட அவர்கள் சென்ற பாதையை நினைவில் வைத்திருப்பார்கள் ஸ்ரீராம். எனது பயணங்களில் இதை கவனித்து இருக்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
கின்னோர் பாரம்பரிய கோவில் சிறியதாக இருக்கிறது. அதென்ன பாரம்பரிய உணவு? என்னென்ன இருக்கும் அதில்?
பதிலளிநீக்குபயணம் செய்பவர்கள் அவர்கள் உணவைத் தயாரிக்க எளிதாக இருக்கும்படி என்னென்ன கொண்டுசெல்வார்கள்?
உத்திராகண்ட் மாநிலத்தில் சப்பாத்தி, சாதம் என இரண்டுமே உண்டு. சில இடங்களில் ராஜ்மா சாவல் கிடைக்கும். பயணத்தில் பெரும்பாலும் மேகி - அதிலும் மலைப்பயணம் எனில் மேகி நிறைய இடங்களில் கிடைக்கும். நண்பர்கள் கிச்சடி, மேகி போன்றவையும், ராஜ்மா சாவல் போன்றவையும் சமைப்பார்கள் என்று சொன்னார்கள் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இனியகாலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குஇப்பகுதியின் முதல் படமே கட்டிப் போட்டுவிட்டது. என் கற்பனைகள் விரிந்தது!!!! அழகான பாலம் ரூபின் நதியின் மேலே. இந்த நதியால்தான் இந்தப் பாதைக்கு இப்படிப் பெயர் ரூபின் பாஸ் இல்லையா. கூடவே வருகிறதே!
இப்படியான மலையேற்றங்கள் பல அனுபவப் பாடங்களைக்கற்றுத் தரும் என்பதில் ஐயமே இல்லை!
கீதா
வணக்கம் கீதா ஜி.
நீக்குபடங்கள் மற்றும் பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வழிகாட்டி இளைஞர் என்பது போன பகுதியிலேயே தெரிந்தது. அதுவும் அப்பகுதியை நன்கு அறிந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்பதும்.
பதிலளிநீக்குஇப்படியான இளைஞர்கள் பல ஊர்களிலும் இருப்பார்கள்.
ஆரம்பமே களை கட்டுகிறது. தௌலா, மண்டாதார் குறித்துக் கொண்டுள்ளேன். இந்தக் கிராமங்களை எல்லாம் நினைத்து ரொம்பவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. உணவு, உடை எல்லாம் எங்கு சென்று எப்போது வாங்கிக் கொள்வார்கள் என்ன தொழில் செய்வார்கள்? பள்ளிகள் எல்லாம் எங்கு இருக்கும் என்று. போக்குவரத்து...ஆனால் அழான இடங்கள். நகரத்தில் இருந்து பழகிய நமக்கு இப்படித் தோன்றும்தான்
கீதா
பக்கத்தில் சில சிற்றூர்கள் உண்டு - அங்கே தான் எல்லாம் வாங்க வேண்டியிருக்கும். பெரிய ஊர்கள் எனில் சற்று தொலைவு பயணிக்க வேண்டும். பேருந்து வசதிகளும் உண்டு என்றாலும் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பேருந்து வசதி இருக்கும். அந்தப் பேருந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் தொடர்ந்து வருவதால் மக்கள் எங்கே கை காண்பித்தாலும் நிறுத்தி ஏற்றிக் கொள்வதோடு தேவையான இடத்தில் நிறுத்தவும் செய்வார்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
இந்தப் பகுதியில் ஒரு வழக்கம். கிராமத்தினர் வாங்கிய கோப்பைகள், பதக்கங்கள் போன்றவற்றை இந்த வழிபாட்டுத் தலத்தின் வெளிப்பகுதியில் பார்வைக்கு ஏற்றவாறு வைத்திருக்கிறார்கள். மேலே இருக்கும் படத்தில் இதைப் பார்க்கலாம்.//
பதிலளிநீக்குஅட நாம் நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்குவது போல!! ஒவ்வொரு கிராமம் பற்றியும் வித்தியாசமான தகவல்கள் கிடைக்கிறது. கின்னோர் கோயில் படம் அழகு!
எத்தனை அனுபவங்கள்! ஆசையைத் தூண்டுகிறது ஒவ்வொரு பகுதியும்.
மலைப் பகுதியில் டென்ட் போட்டு இப்படிச் சமைத்துச் சாப்பிட்டு, இரவு தங்குவது எல்லாம் ரொம்ப த்ரில்லிங்க்!டென்ட் சூப்பர்!
தொடர்கிறோம்.
கீதா
நண்பர் தொடர்ந்து பயணிப்பதால் அவர்களிடமே டெண்ட் போன்றவை உண்டு. சில குழுக்களாக அழைத்துச் செல்லும் நிறுவனங்கள் எனில் அவர்களிடம் நிறைய டெண்ட் போடுவதற்கான வசதிகளை அவர்களிடம் வைத்திருப்பார்கள். இந்த மாதிரி டெண்ட் இல் தங்குவதும் ஒரு வித அனுபவம் தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
கருத்துகள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இங்கு வந்ததும் ரோபோ வரத் தொடங்கிவிட்டது.
பதிலளிநீக்குகீதா
கருத்துரை வந்திருக்கிறது கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
கடினமான பயணம் தான்...
பதிலளிநீக்குகடினமான பயணம் என்றாலும் ஸ்வாரஸ்யமான பயணம் தான் தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மலையில் பயணம் செல்வது எவ்வளவு கடினம் என்பதை உணரமுடிகிறது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி இராமசாமி ஜி.
நீக்குஅருமையான பயணம். ஆனால் பல கடினங்கள் இருக்கும் பயணம். கின்னோர் கோயில் அழகாக இருக்கிறது படங்கள் அனைத்தும் ரசித்தேன். தொடர்கிறோம்,
பதிலளிநீக்குதுளசிதரன்
பயணம் கடினமானது என்றாலும் இம்மாதிரியான பயணங்கள் நமக்கு நிறைய அனுபவங்களைத் தருகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.
வாசகம் மிக அருமை
பதிலளிநீக்குதுளசிதரன்
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குபயணம் சவாலாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குசவாலான பயணம் தான் கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நதி,பாலம் கிராமத்து வீடுகள் என கண்ணுக்கு இனிய காட்சிகள்.
பதிலளிநீக்குகாட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்கு