அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு
பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
REAL
RICHNESS IS WHEN YOU ARE SO EXPENSIVE THAT NO ONE CAN BUY YOUR CHARACTER.
******
அன்பின் நண்பர்களுக்கு, இந்த நாளில் நண்பர் அரவிந்த் அவர்களின்
வாசிப்பனுபவம் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாருங்கள் அவரது வாசிப்பனுபவத்தினை வாசிக்கலாம்! - வெங்கட் நாகராஜ், புது
தில்லியிலிருந்து.
******
இன்றைய
காந்திகள்: தேசப்பிதாவின் பொருளியல் ஞானத்தின் சாட்சிமனிதர்கள்
மானுட வாழ்வின் நிலைப்புத்தன்மைக்கும், முன்னேற்றத்திற்குமான அடிப்படையான
காரணியாகப் பொருளாதாரமே எப்போதும் இருந்து வருகிறது.
அத்தகைய பொருளாதாரத்தின் செழிப்பிற்கு, சுதந்திர சந்தை என்னும் திறந்த
பொருளாதாரம் தேவையா? அல்லது அரசின் கட்டுப்பாடு அவசியமா என்னும் விவாதம் எப்போதும்
இருந்து வருகிறது.
மேற்குறிப்பிட்ட பொருளியல் வடிவங்கள் அனைத்தும், பொதுமக்களை வெறும்
நுகர்வோராகவே பார்ப்பதால், சுரண்டல், ஏற்றத் தாழ்வுகள், பணவீக்கம் போன்ற
பிரச்சனைகள், தீராத நோய்களாக அச்சுறுத்துவதோடு, கலவரங்களும்,
போர்ச்சூழலும் மிகுவதை நம் அண்டை நாடுகளிலேயே காண முடிகிறது.
இவற்றிற்கு மாற்றாக, அடித்தட்டு மக்களின் பங்கேற்பு என்னும் காந்தியப்
பொருளாதார அடிப்படையில், தொலைநோக்குப் பார்வையுடன், நம் தேசத்தில் பல
அரும்பணிகளாற்றி, எண்ணற்ற சாதனைகள் புரிந்த பதினோரு ஆளுமைகளின் வாழ்வனுபவங்களே,
திரு பாலசுப்ரமணியம் முத்துசாமி அவர்களின் 'இன்றைய காந்திகள்' நூல்.
தமிழகத்தின் பழம்பாடல் சொல்லும் கருத்து ஒன்று உண்டு. “வரப்புயர நீர்
உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயரக் குடி உயரும்; குடி உயரக் கோன்
உயர்வான்’.
அதற்கேற்ப, விடுதலை இந்தியாவின் எழுபத்தைந்து வருட சரித்திரத்தில்,
அனைத்துத் தரப்பினரின் பங்கேற்போடுக் கூட்டுறவு நிறுவனங்களை உருவாக்கி,
அரசாங்கத்தின் பெரும்பாலான மக்கள் நலத் திட்டங்கள் உருவானதன் பின்னுள்ள இந்த
பதினோரு ஆளுமைகளின் எளிய உயரிய சிந்தனைகளே, நூலின் தலையாய அம்சங்கள் ஆகும்.
“இந்த உலகில் அனைவரின் அடிப்படைத் தேவைகளுக்கான அனைத்தும் உள்ளன” எனும்
காந்தியடிகளின் சொல்லிற்கேற்ப, வறண்ட ராஜஸ்தானின் ஆர்வரி நதியில் வற்றாத
நீரோட்டத்தை உருவாக்கிய ராஜேந்திர சிங் அவர்கள், மலை உச்சியில் சூரிய சக்தியால்
இயங்கும் பள்ளியை உருவாக்கிய சோனம் வாங்ச்சுக் அவர்கள் போன்ற காந்தியர்கள்
குறித்து நூல் அளிக்கும் அதிசயத் தகவல்கள், வாசகர்களுக்குப் பிரம்மிப்பையும்,
தன்னம்பிக்கையையும் அளிப்பவை.
மேற்கத்திய பொருளாதார மாதிரியின் அடிப்படைகளான இலாபம், புதிய
கண்டுபிடிப்புகள், உற்பத்திப் பெருக்கம் போன்ற உலகியல் தேவைகள், காந்தியப்
பொருளியலில் சாத்தியம் இல்லாததாகவும், நடைமுறைக்கு பொருத்தமற்றதாகவும் வாதிடுவோர்
உண்டு.
பொருளியல் அறிஞர்கள் போற்றும் ‘அசெம்ப்ளிலைன்’ (உற்பத்திச்சங்கிலி)
முறையில், தரமான கண் சிகிச்சையை ஏழைகளுக்கும் கொண்டு சேர்த்ததோடு, அதிக
செயல்திறனோடு கூடிய இலாபத்தையும் ஈட்டிக் காட்டிய காந்தியரான அரவிந்த் கண்
மருத்துவக் குழும நிறுவனர் திரு டாக்டர் வெங்கிடசாமி அவர்களின் செயல்கள்,
மேற்சொன்ன வாதத்தின் முதல் பகுதிக்குப் பதிலளிப்பவை.
பனி உருகுதல் என்னும் உலகளாவியப் பிரச்சனைக்குத் தீர்வாக உருவான திரு சோனம்
வாங்ச்சுக் அவர்களின் ‘பனி ஸ்தூபி’ கண்டுபிடிப்பு, எருமைப் பாலிலிருந்து பால்
பவுடர் தயாரித்த அமுல் நிறுவனத்தின் இந்தியத் தொழில்நுட்பம் உள்ளிட்டவை, மேற்சொன்ன
வாதத்தின் இரண்டாம் பகுதிக்குப் பதிலளிப்பவை.
‘Operation Flood’ திட்டங்களால், அரசாங்க மானியம் இன்றியே, இந்தியப் பால்
உற்பத்தியை ஏழு மடங்காகப் பெருக்கிய டாக்டர் திரு வர்கீஸ் குரியன் அவர்களின்
உத்திகள், மேற்குறிப்பிட்ட வாதத்தின் மூன்றாம் பகுதிக்கும் பதிலளிப்பவை.
பணவீக்கத்தையும், வேலை இழப்புகளையும் கட்டுப்படுத்த திணறிக்கொண்டிருக்கும்
இன்றைய பொருளாதாரச் சிக்கலுக்கான தீர்வை, கிட்டத்தட்ட ஐம்பத்து ஆறு ஆண்டுகளுக்கு
முன்பே திரு லக்ஷ்மி சந்த் ஜெயின் அவர்கள், தில்லி சூப்பர் பஜாரில் நிகழ்த்திக்
காட்டியிருக்கிறார்.
வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வெளிப்படைத் தன்மையை, அரசு
நிறுவனங்களிலும், தகவலறியும் சட்டத்தால் ஏற்படுத்திய பெருமை, காந்தியரான திருமதி
அருணா ராய் அவர்களையே சாரும்.
இன்றைய பெரும் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மாணவர்களை உற்பத்தி
செய்யவே போராடிக் கொண்டிருக்கின்றன பெரும்பாலான கல்விக்கூடங்கள்.
இந்நிலையில், படைப்பாற்றல் மிக்க மாணவர்களை உருவாக்கவல்லவை, எண்பத்தோரு
நாடுகளுக்கு வழிகாட்டவல்ல மாமனிதர்களை உருவாக்கிய BARE FOOT கல்லூரி நிறுவனர் திரு
பங்கர் ராய் அவர்கள், அறிவியல் ஆய்வுகளைக் குழந்தைகளுக்கும் சாத்தியப்படுத்திய,
திரு அரவிந்த் குப்தா அவர்கள் உள்ளிட்டோரின் காந்தி வழியிலான கல்விச் சிந்தனைகள்.
இங்ஙனம், அடிப்படைக் கல்வி முதல், அரசு நிர்வாகம் வரை, தெளிவான
வழிகாட்டுதல்கள் நிறைந்த காந்தியப் பொருளியல் அறிஞர்களின் சுவாரசியமான சாதனைகளை
முன்வைக்கும் இந்நூலை, பின்வரும் சுட்டியில் வாசித்து மகிழலாம்.
“நுகர்வோரின் தேவையை அறிந்துகொண்டு, அதை மிகச்சிறப்பாக, விரைவாக, குறைந்த
செலவில் பூர்த்திசெய்வதே ஒரு நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்க முடியும். லாபம்
என்பது, அது அந்த நிறுவனம் மிக நலமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம்
மட்டுமே” என்பது தலைசிறந்த மேலாண் சிந்தனையாளரான ‘பீட்டர் ட்ரக்கர் அவர்களின்
கூற்று. அதற்கேற்ப, அனைத்து தரப்பு மக்களின் பங்கேற்போடு, ஆரோக்கியமான வளர்ச்சியை
உறுதி செய்யும் நிறுவனங்கள் அடங்கிய செழிப்பான மானுடம் படைப்போம்.
நட்புடன்,
இரா.
அரவிந்த்
******
இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக
தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும்
வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
நல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்குவிமர்சனம் சிறப்பாக இருக்கிறது
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.
நீக்குநல்ல விமர்சனம்...
பதிலளிநீக்குஇன்றைக்கு அந்த கட்டமைப்பு அனைத்தும் சீரழிக்கப்பட்டு வருகிறது...
ஆம் ஐய்யா. அக்கட்டமைப்புகளின் அவசியத்தை மக்கள் விரைவில் உணர்வர் என நம்புவோம்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
விமர்சனம் அருமை. அவசியம் படிக்க வேண்டிய நூல்
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐய்யா.
நீக்குநல்ல விமர்சனம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி மாதேவி மேடம்.
நீக்கு