அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட மெயின் கார்டு கேட் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன்
தொடங்கலாம் வாருங்கள்.
A TEMPLE MADE OF STONES IS BUILT ONE STONE AT A
TIME.
******
நதிக்கரை நகரங்கள் என்ற
தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்
பகுதிகளுக்கான சுட்டி கீழே!
1. நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு.
2. நதிக்கரை நகரங்கள் - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.
3. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள்.
4. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி.
5. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி.
6. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.
7. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - காலை உணவு.
8. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.
9. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும்
ராமேஷ்வர் dhதாம்.
10. நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்.
சக்கரத் தீர்த்தம் குறித்த தகவல்களை சென்ற பகுதியில்
பார்த்தோம். இந்தப் பகுதியில், வனமே (ஆரண்யமே) திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கும் இந்த
நைமிசாரண்யம் எனும் ஊரில் உருவாகி வரும் ஒரு கோவில் குறித்து பார்க்கலாம்
வாருங்கள். ஏற்கனவே பல கோவில்கள் இருந்தாலும் தொடர்நது மேலும் மேலும் பல கோவில்கள்
உருவாகி வருகின்றன. அப்படி உருவாகிவரும் ஒரு சிறப்பான கோவில் அஹோபில மடம் சார்பில்
கட்டப்பட்டு வரும் நவ நரசிம்மர் கோவில். அகோபில மடத்தின் 43 ஆவது ஜீயர் ஸ்ரீ வீரராகவ சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் இங்கே யாத்திரை வந்த போது பரமபதம்
பதித்தார் (நவம்பர் 24, 1957). சுவாமிகளின் பிருந்தாவனம் இங்கே அமைந்து உள்ளது.
நாங்கள் அங்கே சென்றபோது மதிய நேரம். தற்போது இருக்கும் பாலாலயம் மூடி இருந்தாலும்
அங்கே இருந்தவர் சென்று Bபட்டரை அழைத்து வந்தார்.
Bபட்டரின் பெயரும் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மன்! நின்று
நிதானித்து தரிசனம் செய்து வைத்தார். அவரது இல்லத்தரசி, வினியா - மத்தியப் பிரதேசத்தில் பிறந்த தமிழர். “எங்கேயிருந்து வருகிறோம், கோவில்கள்
பார்த்தாயிற்றா?” போன்ற வழக்கமான உரையாடல்கள். எனக்கும் திருவரங்கத்திற்கும் இருக்கும் தொடர்பினை சொன்னபோது, Bபட்டரின்
முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி. அவரது இல்லத்தரசி, சில விஷயங்களை
பேசியபோது திருவரங்கம் குறித்து சொல்ல, தான் பெரும்பாலும் வடக்கில் தான் வாசம்
என்பதால் “தமிழ் பேசுவேன் என்றாலும் தமிழகம் குறித்து அவ்வளவாகத் தகவல்கள்
தெரியாது” என்று சொல்லிக் கொண்டார். “பத்து நிமிடம் காத்திருந்தால் சுடச்
சுட சாதம் வைத்து விடுகிறேன், மதிய உணவு இங்கேயே சாப்பிடலாம்” என்று சொன்னார்.
முன்கூட்டியே நாங்கள் வருவதை தெரிவிக்காத காரணத்தினால் அவருக்கு தொந்தரவு தர
வேண்டாம் என்ற எண்ணத்தோடு, அவரிடம் மறுப்பு சொல்லி, அவருக்கு நன்றி சொல்லி கோவில்
குறித்த தகவல்களை அறிந்து கொள்ள பேசிக் கொண்டிருந்தோம்.
அகோபில மடத்தின் 43வது ஜீயர் தனது விஜய யாத்திரையை
அஹோபிலம் மலையிலிருந்து தொடங்கி பத்ரிநாத் வரை சென்று ஸ்ரீ அஹோபிலத்திற்கு
திரும்பிச் சென்று தனது விஜய யாத்திரையை முடித்துக் கொள்ள சங்கல்பம் செய்து
கொண்டிருந்தார். ஆனால் பத்ரிநாத் தரிசனம் முடித்துக் கொண்டு திரும்பி வரும்
வழியில் நைமிசாரண்யம் பகுதியிலேயே அவர் பரமபதித்து விட, அங்கேயே பிருந்தாவனம்
அமைத்தார்கள். அகோபிலத்திற்குச் சென்று சேர முடியாததால், நைமிசாரண்யத்தில் நவநரசிம்மர்
கோவில் அமைத்தால் ஜீயர் அவர்களின் சங்கல்பமும் நிறைவேறும் என்பதால் இப்படி ஒரு
கோவில் அமைக்க முடிவு செய்தார்களாம். அது மட்டுமல்லாது நைமிசாரண்யத்தில் தேசிக
சம்ப்ரதாய கோவில் இல்லாததால் இங்கே ஒரு கோவில் அமைத்து உத்தர அகோபிலம் என்று
பெயரிட முடிவு செய்தார்களாம். நவ நரசிம்மர் கோவில் வேலைகளும் சிறப்பாக நடந்து
வருகிறது.
12 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்தக் கோவில்
விரைவில் அமைந்தால் நல்லது. கோவில் தவிர தங்குமிடம், பாராயணக் கூடம்
போன்றவையும் அமைக்கப் போவதால் பலருக்கும் உதவியாக இருக்கும். வேத பாராயணம், சமய
சொற்பொழிவுகள் போன்றவை நடக்க இந்த கூடம் உதவியாக இருக்கும். தற்போது போதிய அளவு பணவரவு இல்லாத காரணத்தினால் வேலை மெதுவாகவே நடந்து
வருகிறது. விரைவில் இந்தக் கோவில் அமையட்டும் என பிராரத்தனை செய்து கொள்வோம். இதே
இடம் முன்பு எப்படி இருந்தது என்பதை நீங்கள் பார்க்க விரும்பினால் நமது துளசி
டீச்சர் இங்கே சென்றபோது எடுத்த சில படங்களையும் தகவல்களையும் அவரது தளத்தில் இந்தப் பதிவில் பார்க்கலாம்! மொத்தமாக எல்லாம் மாறி விட்டது.
கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது - அதனை படம் எடுத்தபோது “படம் எடுக்க
வேண்டாம், உங்களுக்கு வேண்டுமானால் எங்கள் இணைய தளத்தில் சில படங்களுண்டு என்று
சொன்னார் வினியா. இந்தப் பதிவில் இணைத்திருக்கும் படங்கள்
Uttara Ahobilam at Nymisaranyam தளத்திலிருந்து தான்!
கோவில் அமைக்க ஆகும் செலவினங்கள் குறித்தும் அவர்களது
தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். யாருக்கேனும் கோவில் அமைவதில் பங்கு
கொள்ள விருப்பம் இருந்தால் இந்தத் தளத்தில் தகவல்களைக் காணலாம். கோவில் கட்டுவது
என்பது ஊர் கூடி செய்யக்கூடிய ஒரு விஷயம். ஊர் மக்கள் அனைவருடைய பங்கும் கோவில்
கட்டுவதில் இருந்தால் நல்லது தானே! தஞ்சை பெரிய கோவில் பிரதான மேற்கூரை
அமைந்த கல் எடுக்கப்பட்ட இடம் மோர் விற்கும் ஒரு பெண்மணியின் வீட்டு வாசலிலிருந்து
தான் என்ற தகவல்கள்/கதைகள் கூட நாம் படித்திருக்கிறோமே! விருப்பம் இருப்பவர்கள் மேலே கொடுத்த தளம் வழி சென்று தங்களால் இயன்ற
உதவியை செய்யலாம். இந்தக் கோவில் பார்த்த பிறகு தொடர்ந்து எங்கே சென்றோம், அங்கே
பார்த்தது என்ன, அனுபவங்கள், தகவல்கள் என அனைத்தும் வரும் பகுதியில் சொல்கிறேன்.
அடுத்த பகுதியில் சந்திக்கலாம். தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள்
நண்பர்களே.
*****
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
நல்ல தகவல்கள். துளசிதளம் சென்று பார்த்தேன். படித்திருக்கிறேன் என்று தெரிந்தது!
பதிலளிநீக்குஎங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விடயம் ஜி.
பதிலளிநீக்குஇவர்களை நைமிசாரண்யத்தில் சந்தித்திருக்கிறேன். புதிய கோவில் படம், நிறைவுற்றது போன்ற காட்சி தருகிறது. இன்னும் பல வருடங்கள் ஆகும் எனத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குநைமிசாரண்யம் போன்ற ஊரில் அவர்களுக்கு பொழுது போவதும் கடினம்.
தகவல்கள் அருமை...
பதிலளிநீக்குதகவல்கள் முழுவதும் மிக நன்று வெங்கட்ஜி,
பதிலளிநீக்குதுளசி கோபால் அக்காவின் தளத்திலும் வாசித்த நினைவு வந்தது. அப்போது அது பழைய கோயில்.
ஆனால் அங்கு கருத்து போட்டிருக்கவில்லை. படங்களை மீண்டும் பார்த்துக் கொண்டேன்.
மாபெரும் மாற்றம் பழைய இடத்திற்கும் இப்போதையதற்கும்.
கீதா
அருமை
பதிலளிநீக்குபலகோடி ரூபா செலவில் அமையும் கோவில் விரைவில் நிறைவேற வேண்டுகிறோம்.
பதிலளிநீக்கு