தொகுப்புகள்

திங்கள், 4 ஜூலை, 2022

வாசிப்பனுபவம் - ரிஷபனின் கைவண்ணத்தில் வடம்போக்கித்தெரு வீடு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


To learn to read is to light a fire; every syllable that is spelled out is a spark - Victor Hugo. 


******




 

திருவரங்கம் வந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனபிறகும் பதிவுலக/முகநூல் நண்பர்கள் யாரையும் பார்க்க இயலவில்லை. இத்தனைக்கும் நண்பர் ரிஷபன் அவர்கள் வீடு எங்கள் வீட்டுக்கு வெகு அருகில் இருக்கிறது. அவர் வீட்டு வழியாக பல தடவை சென்றாலும் உள்ளே சென்று அவரைப் பார்க்கவோ, பேசவோ இல்லை.  சில தினங்கள் முன்னர் ஒரு வேலையாக மேல வாசல் பகுதிக்குச் சென்ற போது அவரை அலைபேசியில் பிடித்தேன்! வரலாமா? என்ற கேள்விக்கு லாம்! என்றார்.  பத்து பதினைந்து நிமிடங்களில் அங்கே சென்று விட்டோம் - நானும் இல்லத்தரசியுமாக. 


ரிஷபன் ஜி உடன் பேசிக்கொண்டிருப்பது அலாதியான ஒரு விஷயம்.  அவர் துணைவியும் அப்படியே.  இரண்டு பேரும் சுவாரஸ்யமான விஷயங்களை திறம்பட பேசுபவர்கள்.  பேசுவதை போலவே எழுத்திலும் சிறந்தவர் ரிஷபன் ஜி.  அவரது கதைகளைக் குறித்து பேச நிறைய விஷயங்கள் உண்டு - ஒவ்வொரு கதையும் நம்மை ஏதோ செய்துவிடும்.  1800 கதைகளுக்கு மேல் எழுதியவர், பல பத்திரிகைகளில் அவரது கதைகள் வெளிவந்திருக்கின்றன என்றாலும் சற்று கூட, “தான் ஒரு பிரபல எழுத்தாளர்” என்ற கர்வம் அவர் பேச்சிலும் செயலிலும் என்றைக்கும் இருந்ததில்லை.  இந்த சந்திப்பில் நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம்.  பேசிக் கொண்டிருந்த போது சமீபத்தில் வெளியான ஒரு சிறுகதைத் தொகுப்பினை “அன்புடன் ரி” என அவர் கையொப்பமிட்டு அளித்தார்.  பேச்சு ஸ்வராஸ்யத்தில் அதற்கான தொகையைக் கூட கொடுக்காமல் வந்து விட்டேன்! (இன்னமும் கொடுக்கவில்லை என்பதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்கிறேன்!)


சிறுவாணி வாசகர் மையம், ஓவியர் ஜீவா அவர்கள் வரைந்த ஒரு ஓவியத்தினை அட்டைப்படமாகக் கொண்டு சிறப்பாக வெளிவந்திருக்கிறது. மொத்தம் பத்து கதைகள் - ஒவ்வொரு கதையும் நல்முத்து! அனைத்து கதைகளும் எதோ ஒரு விதத்தில் நம் மனத்தைத் தொட்டு விடும் விதமான கதைகள் தான்.  எதைச் சொல்ல எதை விட?  நூலின் முன்னுரையாக ரிஷபன் அவர்கள் சொல்லியிருப்பது போல….


“படித்ததும் படைப்பு எவ்வகையிலாவது வாசகனைத் தொட வேண்டும். “ஹா” என்ற சிலாகிப்போ… “பேஷ்” என்ற பாராட்டோ… வரியின் கவிதையோ… ஏதேனும் சிறப்பாய். 


இக்கதையில் ஏதாவது ஒன்றில் அது உங்களுக்கு நேர்ந்தால் என் எழுத்துப் பயணம் அர்த்தமுள்ளதாய் இருக்கும். அதற்காகவே கீழே வைத்துவிடாத பேனாவுடன் நான்.”


அவரது பேனாவை கீழே வைத்து விடவே கூடாது என்ற வேண்டுகோள் எனக்கு உண்டு. அவரது கதைகளைப் படித்தால் நீங்களும் இதே வேண்டுகோளை அவரிடம் வைப்பீர்கள் என்பது சர்வ நிச்சயம். 


முதல் கதையே மனதினை ஏதோ செய்து விட்டது. குழந்தை பிறப்பிற்காக காத்திருக்கும் ஒரு தம்பதி…  அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை… “நட்டு வைத்த எல்லா விதைகளும் முளைக்க வேண்டும் என்பதில்லை. தள்ளிப்போயிருக்கு அவ்வளவு தான் என மருத்துவர் மனைவியை பரிசோதனை செய்த பிறகு சொல்ல, நட்ட விதை முளைக்காதபோது கஷ்டப்பட்ட கணவன் - செடி முளைக்காததற்கே ஆடிப்போனவன் இதற்கு எத்தனை மன வேதனை அடைந்திருப்பான்.  துளிர் என்ற கதை வழி ஆசிரியர் தொட்ட விஷயம் நம் மனதினையும் தொடும். 


இரண்டாவது கதை - நூலின் தலைப்பாக இருக்கும் கதை.  பாரம்பரியமான வீட்டினை விற்கத் துடிக்கும் கணவன்.  வாங்குபவர்கள் நம்முடைய வீடை எப்படி வைத்துக் கொள்வார்களோ என்று கலங்கும் மனைவி.  அதுவும் கோவில் நகரத்தில் இருக்கும் வீட்டை விற்று விட்டு வெளிநாட்டில் சென்று எல்லா சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் கணவன் - அவர்களின் வடம்போக்கித்தெரு வீட்டை வாங்க வந்த தம்பதியைப் பார்த்து அதிர்ந்து போகிறார் என்பதை கடைசியில் சொல்லும் விதம்… 


வயிறு கதை - அப்பப்பா - வார்த்தைகளிலேயே கதாப்பாத்திரத்தின் எண்ணங்களை வாசிப்பவர் மனதுக்குள் கடத்தும் திறன் - நண்பர் ரிஷபன் அவர்களின் வார்த்தைகளில் நிறையவே இருக்கிறது.  குழந்தை இல்லா தம்பதிகள், பரிகாரம் செய்வதற்கு ஏதோ ஒரு கோவிலுக்குச் செல்லும் போது நடக்கும் விஷயங்கள், கணவன் - மனைவிக்குள் நடக்கும் சம்பாஷணைகள் என கதையின் ஒவ்வொரு வரியும் வாசிப்பவரின் மனதைத் தொட்டு விடக்கூடியது. 


ஓவியம் கதை விவாகரத்து வாங்கிக் கொண்டு சென்ற ஒரு பெண், தனது கணவரின் இரண்டாம் மனைவியைச் சந்தித்த போது பரிசாகக் கொடுக்கும் ஓவியம் சாட்டையடியாய் அந்தக் கணவனுக்கு இருக்கும் - படிக்கும்போதே நம்மை அந்தக் கதையில் வரும் கணவன் போன்ற பல ஆண்கள் மீது வெறுப்பு வைத்து விடும் விதமாய்.  எத்தனை கோபம், வேதனை இருந்திருக்கும் அந்த ஓவியத்தினை வரைந்த முன்னாள் மனைவிக்கு….  


கோவிலுக்கு என சேர்த்து வைத்து கொடுக்க வைத்திருக்கும் பணத்தினை ஊரில் தன் வீட்டில் வேலை செய்த வேலையாளுக்குக் கொடுக்க நினைக்கும் மனது கொண்ட அம்மா குறித்து சொல்லும் அனுக்ரஹம் கதை - அந்த அம்மாவை நமஸ்கரிக்க வேண்டும் என பரபரக்கும் கதாபாத்திரம் போலவே நம்மையும் அந்த அம்மாவை நமஸ்கரிக்கச் செய்யும் விதமாக! 


பத்து கதைகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல!  அனைத்துமே சிறப்பான கதைகள்.  இந்த சிறுகதைத் தொகுப்பினை நீங்களும் வாசிக்க நினைத்தால் அணுக வேண்டிய முகவரி…


சிறுவாணி வாசகர் மையம்

பவித்ரா பதிப்பகம்,

24-5, சின்னம்மாள் வீதி,

கே.கே. புதூர் (போஸ்ட்)

கோவை - 38. 

மின்னஞ்சல் முகவரி: siruvanivasagar@gmail.com

தொடர்பு கொள்ள: ஜி.ஆர். பிரகாஷ் 9488185920/9940985920

மொத்த பக்கங்கள்: 138

மூன்றாம் பதிப்பின் விலை: ரூபாய் 140/- 


முடிந்தால் நீங்களும் இந்த நூலினை வாசித்து மகிழலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ் 

முகநூலில் 03-06-2022 அன்று திருவரங்கத்திலிருந்து எழுதியது!

10 கருத்துகள்:

  1. // அவரது ஒவ்வொரு கதையும் நம்மை ஏதோ செய்து விடும் //
    ஆம்.  நானும் உணர்ந்திருக்கிறேன்.

    1800   கதைகளுக்கு மேலா?  அம்மாடி..  வாழ்த்துகள் ஸார்..  

    கதைகள் சிறப்பாகவும் நெகிழ்வாக மனதைத்தொடும்படியும் இருக்கும் என்பதில் ஐயமே இல்லை.

    பதிலளிநீக்கு
  2. நல்ல நூல் அறிமுகம். ரிஷபன் சார் கதைகள் நன்றாக இருக்கும். கிட்டத்தட்ட இரண்டாயிரம் கதைகளா.. அம்மாடியோவ்.

    பதிலளிநீக்கு
  3. விமர்சனம் நூலை வாசிக்கத் தூண்டுகிறது.
    விரைவில் அவர்களை தொடர்புகொள்கிறேன் சார்.

    பதிலளிநீக்கு
  4. விமர்சனம் மிகவும் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  5. தங்களது விமர்சனம் அழகு.. அருமை..

    பதிலளிநீக்கு
  6. அருமையான பகிர்வுக்கு நன்றி. 1800 கதைகளுக்குப் பின் இருக்கும் அபார உழைப்பு போற்றுதலுக்குரியது. திரு ரிஷபன் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. வெங்கட்ஜி, இதுவரை வந்த நூலறிமுகம், மற்றும் விமர்சனங்களில் இதை அட்டகாசம் எனலாம்! மிகவும் அனுபவித்து நீங்கள் எழுதியிருப்பது வரிகளில் தெரிகிறது. ரிஷபன் அண்ணாவின் கதைகள் என்பதாலோ!!

    // அவரது ஒவ்வொரு கதையும் நம்மை ஏதோ செய்து விடும் //

    அதே அதே. எபியில் வந்த அவரது கதைகளிலேயே அதை உணர்ந்திருக்கிறேன். ரிஷபன் அண்ணா எவ்வளவு கதைகள் எழுதியிருக்கிறார்!! ஹப்பா. வியப்பு! அண்ணாவிற்கும் வாழ்த்துகள்,

    அருமையான விமரிசனத்திற்கும் வாழ்த்துகள் வெங்கட்ஜி. உங்கள் விமரிசனமே புத்தகத்தை வாசிக்கத் தூண்டுகிறது. முகவரி மற்றும் விவரங்களைக் குறித்துக் கொண்டுவிட்டேன். மிக்க நன்றி வெங்கட்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ரிஷபன் அவர்களின் கதை எப்போதுமே எனக்கு பிடித்தமானது நல்லதொரு நூல் அறிமுகத்தை தந்துள்ளீர்கள் ரிஷபன் அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....