தொகுப்புகள்

சனி, 22 ஏப்ரல், 2023

காஃபி வித் கிட்டு - 168 - அழுமூஞ்சி சுப்பன் - கால ஓட்டம் - SHE CAN CARRY BOTH - குடைக்கம்பிகள் எழுதும் கதைகள் - STATUE - வெளியே தெரியாத வேர்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

To exist is to change, to change is to mature, to mature is to go on creating oneself endlessly. - Henri Bergson.

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி : அழுமூஞ்சி சுப்பன்


 

2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - அழுமூஞ்சி சுப்பன் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

”என்னப்பா இது தலைப்பே இப்படி இருக்கே?” அப்படின்னு யோசிக்காதீங்க! பொதுவா பெண்களைத் தான் இப்படி ”அழுமூஞ்சி சுப்பி”ன்னு கிண்டல் பண்ணுவது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக ”அழுமூஞ்சி சுப்பன்” அப்படின்னு எதுக்கு தலைப்பு?

 

ஒரு சிலரைப் பார்த்து இருக்கீங்களா? எப்போதும் எதுக்காகவாது புலம்பிக்கிட்டே இருப்பாங்க! என்னவோ உலகத்துல இருக்கற எல்லாக் கஷ்டங்களும் அவங்களுக்கு மட்டும் தான் இருக்கற மாதிரி எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே இருக்கும். எதையுமே நேர்மறையா யோசிக்க மாட்டாங்க. கடையில போய் சாப்பிடும்போது, சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தாலும், ”இவ்வளவு நல்லா இருக்கே, ஏதாவது கலந்து இருக்குமோ?” அப்படின்னு தான் யோசிப்பாங்க.

 

இந்த மாதிரி ஒரு ஆளைத்தான் இன்னிக்கு பார்க்கப் போறோம். என்னுடைய அலுவலகத்தில் ஒரு நபர் – அவர் தான் இந்த அழுமூஞ்சி சுப்பன். காலையில அலுவலகத்துக்கு வரும்போதே ஏதோ ஒரு விஷயத்துக்கு அழுதுட்டே தான் வருவார். நேற்றைக்கும் அப்படித்தான் – வீட்டிலிருந்து அவர் புறப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு அவர் வருவதற்கும் அலுவலகத்திற்குச் செல்லும் பேருந்து புறப்பட்டுச் செல்வதற்கும் சரியாக இருந்திருக்கிறது. அதன் பிறகு வந்த பேருந்தில் கும்பல் அதிகமாக இருக்க, ”ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்தேன். எனக்கு மட்டும் தான் இப்படி நேர்கிறது” என்றார்.

 

முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!

 

******

 

இந்த நாளின் எண்ணங்கள் - வேகமாக ஓடும் நாட்கள் :  

 

தில்லியில் நான் இருந்த (Dh)தில்ஷாத்(dh) Gகார்டன் பகுதியில் நிறைய நண்பர்கள் எனக்குண்டு. அந்த இடத்தினை விட்டு வெளியேறி 12 வருடங்கள் ஆகிவிட்டாலும் இப்போதும் அங்கே இருந்த நட்பு வட்டத்தில் தொடர்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதே அளவில் இருக்கிறது.  நான் பார்த்த பல சிறுவர்கள், சிறுமிகள் இன்றைக்கு திருமணம் ஆகி அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து விட்டார்கள்.  சமீபத்தில் அப்படி ஒரு நண்பரின் மகன் திருமண நிழற்படம் பார்த்தபோது காலம் எத்தனை வேகமாக ஓடுகிறது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்கு சிறுவனாக வந்து, “மாமா, மாமி - அங்கே பாருங்க புடா, புடா” என்பான்.  அவனுக்கு “ற” என்ற எழுத்து உச்சரிக்க வராது! எப்போதும் அவன் இப்படிச் சொல்லும் போதும், அவனது மழலையில் சிரித்து மகிழ்வோம். அந்தச் சிறுவனுக்கு இப்போது திருமணம்! நாட்கள் வேகமாக ஓடுகிறது என்பதற்கு இன்னுமொரு விஷயமும் சொல்ல இருக்கிறது!   இப்போது தான் தில்லி சென்ற மாதிரி இருக்கிறது! ஆனால் 32 வருடங்கள் தில்லி வாழ்க்கை முடிந்து விட்டது. இதே நாளில் தான் 1991-ஆம் ஆண்டு தில்லி நோக்கிய எனது பயணத்தினைத் தொடங்கினேன். 24-ஆம் தேதி காலை தில்லியை அடைந்து வேலையில் சேர்ந்து விட்டேன்!    

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : SHE CAN CARRY BOTH

 

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக நாம் பார்க்க இருப்பது PREGA NEWS விளம்பரம்  ஒன்று. இவர்களது சில விளம்பரங்கள் நான் முன்னரும் இங்கே பகிர்ந்து உண்டு.  இந்த விளம்பரம் ஒரு வருடத்திற்கு முன்னர் ஒரு மகளிர் தினம் சமயத்தில் வெளியிடப்பட்ட ஒன்று.  வேலை பார்க்கும் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய விளம்பரம் இது.  நீங்களும் பார்க்கலாமே! 


 

மேலே உள்ள சுட்டி வழி பார்க்க இயலவில்லை என்றால், கீழே கொடுத்திருக்கும் YOUTUBE சுட்டி வழி நேரடியாக பார்க்கலாம்! 

 

She Can Carry Both - Prega News - Women's Day - YouTube 

 

*****

 

இந்த வாரத்தில் படித்த ஒரு கவிதை - குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் : 

 

இந்த வாரம் படித்து ரசித்த ஒரு கவிதை. நீங்களும் ரசிக்கலாம்! 

 

மழை தாண்டி வந்ததும்

திண்ணையில் விரித்து

வைக்கப்பட்டிருந்தது குடை

தரை தொடும் அதன் ஒவ்வொரு

கம்பிகளும் தரையில்

விழிநீர் வழிய எழுதிக்கொண்டிருந்தது

தன் கதைகளை...

யாரும் வாசிப்பதற்க்காக இல்லை எனினும்

தன்னை சுருட்டி ஓரமாய் வைக்கையில்

சோகங்கள் மறந்து

தன் கனவின் மடிப்புகளுடன்

அடுத்த மழைவரைக்கும்

நிம்மதியாக தூங்கும்படிக்கு

 

-     கலாசுரன்

 

******

 

இந்த வாரத்தின் ராஜா காது கழுதை காது  - STATUE  :

 

மார்ச் மாதம் சதுரகிரி மலையேற்றம் மேற்கொண்டேன். பல்வேறு வயதுகளில் சகமலையேற்றம் செய்தவர்கள். வழியெங்கும் ஏதேதோ கேட்கக் கிடைத்தாலும், கேட்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்த விஷயம் கீழ்க்கண்ட விஷயம்…  

 

ஒரு சிறுவன் அவனது அப்பாவுடன் மலையேற்றம் செய்து கொண்டிருந்தான்.  அவனது உற்சாகம் அந்த இடத்தில் இருந்த அனைவரையும் தொற்றிக்கொள்ளும் விதமாகவே இருந்தது.  நடுவில் ஒரு இடத்தில் அவன் சொன்னது! “எனக்கு எப்ப கால் வலிக்குதோ அப்போ நான் ‘STATUE’ சொல்வேன்! அப்ப நீங்க கொஞ்ச நேரம் நிக்கணும் சரியா! 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த ஓவியமும் ஓவியர் குறித்த தகவலும் - வெளியே தெரியாத வேர்கள் :

 

முகநூலில் திரு தாணப்பன் கதிர் என்பவர் அவர் பார்த்த ஒரு ஓவியர் குறித்தும் அவர் வரையும் ஓவியங்கள் குறித்தும் எழுதி இருந்தார். அழகான ஓவியம் - மாதிரிக்கு ஒரு ஓவியம் இங்கே இணைத்திருக்கிறேன்.  ஓவியரிடம் பேசியபோது ஓவியர் சொன்னது மட்டும் இங்கே! முழு இடுகையும் திரு தாணப்பன் கதிர் பக்கத்தில் பாருங்களேன். 


 

நாரோல்ல மணிமேடை தெரியுமா.. நல்லாத்தெரியும். நம்ம பூர்வீகம் அங்ஙனதான்...அங்கதான் நாம தாமசிக்கிறது (இருக்கிறது) போலீஸூமாரெல்லாம் நல்ல சிநேகம்… எதுவுஞ்சொல்லாது.. கன்னியாமரி, நாரேல் பஸ் ஸ்டாண்டு என வரைஞ்சிட்டு அங்ஙன படுத்திருவேன்... இப்பதான் இங்க… பின்ன மதுரை. கோயமுத்தூர் வழியா திருச்சூர் போணும்… பின்ன எர்ணாகுளம்… எப்பம் இவிட வரும்..? சொல்ல முடியாது சாரே... நேரம் கிடைக்கின் திருச்சு இவிட ஒரு ரவுண்டு வர்லாம்...

 

பேச்சினூடே வரைதலும் டச்சப் செய்யும் வேலையையும் பார்த்தார்… நிப்பாட்டவேயில்ல... பேரு என்னான்னு கேட்டதும் ராஜூன்னார்… ராஜூன்னா அருமையா வரையுதீய இந்தாங்க ஒரு நூறு ரூவா வைச்சிங்கோங்கன்னு சட்டைப்பையில திணிச்சேன்.... மெல்லிய புன்கையொன்றை வீசி வரைய ஆரம்பிச்சிட்டார்…

 

   இவரைப்போல் எத்தனையோ இயல் ஓவியர்கள் முகவரியற்று கிடக்கிறார்கள்.. இவர்களுக்கு ஓவியம் ஒரு தவம் ..மூச்சு... உண்ணும் உணவு இப்படி எல்லாமே...

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

5 கருத்துகள்:

  1. பலருக்கு அளவிடமுடியாத திறமைகள் இருந்தும் பிரகாசிப்பதில்லை. பூர்வ புண்ணியம் குறைவோ?

    பதிலளிநீக்கு
  2. ​நானே இன்னொரு வகையில் அழுமூஞ்சி சுப்பானாக மாறி வருகிறேனோ என்று சமீபத்தில் எனக்குத் தோன்றியது! நாட்கள் வேகமாகத்தான் ஓடுகின்றன. இந்த இரண்டு மூன்று வருடங்கள்தான் மெதுவாக ஓடுகின்றன!​ கவிதை ஓகே. விளம்பரம் ரசித்தேன். சிரிக்க வைத்த சிறுவன்! நெகிழ வைத்த ஓவியர்.

    பதிலளிநீக்கு
  3. கதம்பமான பதிவு அருமை.
    ஓவியர் நிலைக்கு என்ன சொல்வது?..

    பதிலளிநீக்கு
  4. அழுமூஞ்சி சுப்பன் இனிதான் வாசிக்கணும் ஜி, வாசிக்கிறேன்..

    காணொளி ரொம்ப ரசித்தேன்.

    அட! ஜி நீங்க சதுரகிரி ஏறினீங்களா!! ஆஹா! ஹையோ எங்கள் லிஸ்டில் இருக்கும் மலை. இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறுவன் - ஹாஹாஹா...சிரித்துவிட்டேன்.

    சத்தியமாக ஜி ஓவியர் பற்றி வாசிக்கும் முன்னரே ஓவியர் முகம் டக்கென்று பரிச்சயம் போலத் தோன்றியது! (ஆனால் பார்த்தது எல்லாம் இல்லை)

    கடைசில பாத்தா ஆ நம்ம ஊர் சைடு!!!

    ரொம்ப திறமையானவர்! ஆனால் பாருங்க...அவர் பொழப்பை! பாவம்..

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....