அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட Dடார்ஜிலிங் நோக்கி ஒரு சாலைப் பயணம்
பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த
அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
“ALTHOUGH WE TRY TO CONTROL IT IN A MILLION DIFFERENT WAYS, THE ONLY
THINGS YOU CAN EVER REALLY DO TO TIME ARE ENJOY IT OR WASTE IT. THAT’S IT.” - A.J. COMPTON.
******
பாடல் பெற்ற ஸ்தலங்கள் குறித்து இங்கே எழுத
ஆரம்பித்து இருப்பது நினைவில் இருக்கலாம். இரண்டு நாட்கள் முன்னர் அப்படி எழுதிய ஒரு பதிவு - மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோவில். அதைத் தொடர்ந்து பாடல் பெற்ற ஸ்தலங்கள் வரிசையில் நாம்
இன்றைய தினம் பார்க்க இருப்பது கும்பகோணம் நகரிலுள்ள நாகேஸ்வரர் திருக்கோவில்
குறித்து தான்.
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் 27-ஆவது
ஸ்தலம் (பாடல் பெற்ற ஸ்தலங்களில் 90-ஆவது ஸ்தலம்) இந்த நாகேஸ்வரர் ஆலயம். திருநாவுக்கரசர் (அப்பர்) அவர்களால் பாடப்பெற்ற
ஸ்தலம்.
அவர் இக்கோவில் குறித்து எழுதிய ஒரு தேவாரப் பாடலை முதலில் பார்த்து விட்டு பிறகு
கோவில் குறித்து பார்க்கலாம்.
நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்
நிலாஅலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொன் தோளும்
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையர் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலும்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.
பொழிப்புரை:
குடந்தைக் கீழ்க் கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் திருநீறு பொருந்திய தம்
திருவுருவத்தையும், நெற்றிக் கண்ணினையும், பிறையொடு பாம்பும் நீர் நிறைந்த
கங்கையும் பொருந்திய சடைமுடியையும், அழகிய பொன்நிறத் தோள்களையும் அடியவர்க்குக்
காட்டி அருள்புரிவாராய், இடபம் பொறித்த கொடியை உயர்த்தியவராய், ஏழுலகங்களும்
வணங்கும் திருவடிகளை உடைய ஈசராய்த் தம் இடப்பங்காய் இடம் பெற்ற மலைமகட்குக்
கொழுநராயும் திகழ்பவர் .
குறிப்பு:
பாடலும் பொழிப்புரையும் தேவாரம் தளத்திலிருந்து - அவர்களுக்கு நன்றியுடன்.
மார்ச் மாதத்தின் 25-ஆம் நாள் (2023) இந்தக்
கோவிலுக்கு நண்பர்களுடன் சென்று வந்தேன். மிகவும் அழகான கோவில். சூரியனின் கிரணங்கள் சித்திரை மாதத்தின் 11, 12
மற்றும் 13-ஆம் தேதிகளில் நேரடியாக சிவனின் மீது படும்படியாக அமைக்கப்பட்டு
இருக்கிறது என்பது இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்று. நாங்கள் சென்ற அன்று கோவிலில் நடக்க இருக்கும் திருவிழாவிற்காக
எல்லா இடங்களையும் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள் என்பதால் கொஞ்சம் கவனமாகவே
நடக்க வேண்டியிருந்தது.
கோவிலில் திருவிழா சமயத்தில் மட்டும் சுத்தம் செய்யாமல் எல்லா நாட்களிலும்
உழவாரப்பணியாக சுத்தம் செய்யலாம் என்பது என் சிந்தனையில் உதித்தது. முடிந்தவரை
இப்படியான பணிகளை உள்ளூர் வாசிகள் தான் செய்ய முடியும். அந்தந்த ஊரில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில்
இங்கே சென்று தங்களால் முடிந்த வேலைகளைச் செய்யலாம்.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 06.00 மணி முதல் மதியம் 12.30 வரை மற்றும் மாலை 04.30 முதல் இரவு 09.00 மணி
வரை.
சுயம்பு மூர்த்தி: இங்கே கோவில் கொண்டிருக்கும் இறைவன் சுயம்பு
மூர்த்தியாகச் சொல்லப்படுகிறது.
இறைவன் பெயர் நாகநாதர் மற்றும் நாகேஸ்வரர். இறைவியின் பெயர் பெரியநாயகி அல்லது Bபிருஹன் நாயகி.
தீர்த்தம் - மஹாமகக் குளம் மற்றும் சிங்கமுகக் கிணறு (தீர்த்தம்).
தல வரலாறு:
நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒரு காலத்தில் பூமியை தாங்கிக் கொண்டிருக்க,
இப்புவியில் வாழ்ந்த மக்கள் செய்த பாவங்களின் சுமை அதிகரித்துக் கொண்டே இருந்ததால்
அவனால் பூமியை சுமக்க இயலாமல் உடல் சோர்வு ஏற்பட்டதாம். ஆகவே அவன் திருக்கயிலாயம்
சென்று, இந்த உலகைத் தாங்குவதற்குத் தேவையான சக்தியைத் தரும்படி சிவபெருமானை வேண்டினானாம். ஆதிசேஷனின் இந்த முறையீட்டுக்கு மனம் இரங்கிய
சிவபெருமான், எவ்வளவு காலமானாலும் ஒரே ஒரு தலையினால் இந்த உலகை தாங்கும் சக்தியைத்
தந்து அருளினாராம். அதன் பிறகு ஆதிசேஷன் பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்து
வில்வம் விழுந்த இடமான கும்பகோணத்தின் ஒரு பகுதிக்கு வந்து ஒரு லிங்கம் பிரதிஷ்டை
செய்து பூஜித்ததாகவும் அத்தலம் தான் தற்போதைய நாகேஸ்வரர் கோவில் என்றும் நாகராஜன்
பூஜித்ததால் இறைவனுக்கு நாகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள்.
நடராஜ சபை: கோவிலின்
உள்ளே சென்றால் பதினாறுகால் மண்டபமும் நடராச சபையும் உள்ளன. நடராஜ மண்டபம் ஒரு
தேர் (ரதம்) போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது - பார்க்க மிகவும் அழகாக
இருக்கிறது இந்த மண்டபம். கற்களால் ஆன சக்கரங்கள் இரண்டு புறமும் இருக்க,
குதிரைகள் மற்றும் யானைகள் அந்த ரதத்தினை இழுப்பது போன்று அமைந்திருக்கும் இந்த
அமைப்பில் விதானத்தில் அழகான ஓவியங்கள் இருக்கின்றன. நாங்கள் அங்கே சென்ற
சமயத்தில் பெரிய குழாய்கள் மூலம் தண்ணீர் அடித்து எல்லாவற்றையும் சுத்தம் செய்து
கொண்டிருந்தார்கள் என்பதால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. வெளியிலிருந்த
மண்டபத்தின் அழகை ரசிக்க முடிந்தது. சில பல படங்களும் எடுத்துக் கொண்டோம். இந்தப் பகுதியில் ராமாயணக் காட்சிகள் Miniature
சிற்பங்களாக இருப்பதாக நாங்கள் கோவிலுக்குச் சென்ற பின்னரே தெரிந்து கொள்ள
முடிந்தது. கோவிலில் சுத்தம் செய்யும் வேலைகள் நடந்து கொண்டிருந்தபடியால் எங்களால்
அந்த அழகான சிற்பங்களைப் பார்க்க முடியவில்லை என்பதில் வருத்தமே. அதைப் போலவே,
நடராஜப் பெருமான் நடனம் புரிய சிவகாமி அம்மையார் தாளம் போடுவது போலவும் விஷ்ணு
புல்லாங்குழல் ஊதுவது போலவும் நடராஜ சபையில் இருக்கிறது என்றும் தெரிந்தது.
அதையும் இப்பகுதியினைச் சுத்தம் செய்து கொண்டிருந்ததால் பார்க்க முடியவில்லை.
ப்ரளயகாலருத்ரர்:
இந்தக் கோவிலில் நாங்கள் பார்த்து அதிசயத்த ஒரு சிலை பிரளய கால ருத்ரர் உடையது. இது வரை நான் பார்த்த கோவில்களில் இப்படியான ஒரு
சிலையை பார்த்தது கிடையாது. ஒரு கையில் உடுக்கையுடனும் மற்றொரு கையில்
எலும்புக்கூட்டினையும் வைத்திருப்பதாக கோவிலில் இருந்த அர்ச்சகரிடம் கேட்டுத்
தெரிந்து கொண்டோம்.
இந்தச் சிலை குறித்தான வேறு விளக்கங்கள் எங்களுக்கு அவரிடமிருந்து கிடைக்கவில்லை.
சிற்பங்கள்:
கோவில் வளாகத்தில் எங்களுக்குப் பார்க்கக் கிடைத்த மற்ற சிற்பங்களும் வெகு அழகாகவே
இருந்தன.
நிறைய சிற்பங்களைப் பார்க்கவும் போது பல்வேறு காலகட்டங்களில் இந்தச் சிற்பங்கள்
வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் என்று தோன்றியது. இங்கே இன்னுமொரு சிறப்பாக எனக்குத்
தெரிந்தது - ஸ்ரீவள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணியர் சன்னதி வாசலில்
இருந்த இரு த்வாரபாலகர்கள் சிலை தான். பொதுவாக இந்தச் சிலைகள் கைகளில் ஏதேனும் ஒரு
ஆயுதத்துடன் இருந்தே பார்த்திருக்கிறேன். இந்தச் சன்னதியின் வாசலில் தலையில் ஒருவர்
வாழைத்தாருடனும் மற்றவர் பலாப்பழத்துடனும் காட்சி அளித்தது போல வேறு எங்கேயும்
பார்த்தது இல்லை. கோவிலில் நிறைய இடங்களில் கல்வெட்டுகள் நிறைந்திருக்கின்றன. அவற்றைப் படிக்க முடிந்தால் பல செய்திகளைத் தெரிந்து
கொள்ள முடியும் என்று தோன்றியது.
மொத்தத்தில் கோவில் மிகவும் அழகான கோவில் - நிச்சயம்
பார்க்க வேண்டிய கோவில் என்பதிலும் சந்தேகமில்லை. கும்பகோணம் செல்லும் வாய்ப்பு அமைந்தால் நிச்சயம்
இந்தக் கோவிலுக்கும் சென்று இறைவன் நாகேஸ்வரரையும் அம்மன் பெரிய நாயகியையும்
தரிசித்து அருள் பெற வேண்டுகிறேன். மீண்டும் வேறு பாடல் பெற்ற ஸ்தலம் குறித்து
பகிர்ந்து கொள்ளும் வரை…
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை
பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
கோவில் விவரங்கள், படங்கள் , பாடல் பகிர்வு அருமை. பாடலை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா. நலமே விளையட்டும்.
நீக்குஅழகான கோவில்... அருமை...
பதிலளிநீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி தனபாலன். நல்லதே நடக்கட்டும்.
நீக்குகோயில் பற்றிய விவரங்கள் அருமை.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருப்பது போல் அந்தந்த ஊர் மக்கள் தங்கள் ஊரின் கோயில் மற்றும் சுற்றுப் புறத்தை நன்றாக வைத்திருந்தால் ரொம்ப நல்ல விஷயம். கூடி இழுத்தால்தானே தேர் நகரும்.
படங்கள் அனைத்தும் அழகு குறிப்பாக சிற்பங்கள் படம் யானை மற்றும் குதிரை இழுக்கும் நடராஜர் சபை ரொம்ப அழகு ரசித்துப் பார்த்தேன்
கீதா
கும்பகோணத்தில் குறிப்பிடத்தக்க கோயில் இது..
பதிலளிநீக்குநான் பல முறை சென்றிருக்கின்றேன்..
பதிவும் படங்களும் அழகு.. அருமை ..
இப்படி ஒவ்வொரு கோவில், இடம் பற்றி எல்லாம் படிக்கும்போது பார்க்கும் ஆர்வம் வருகிறதுதான்.. எப்போதோ?!
பதிலளிநீக்குகும்பகோணம் என்னுடைய கிராமத்தில் இருந்து இரண்டு மணி நேரமே இருந்தாலும் இந்த புகழ்வாய்ந்த கோயிலை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
பதிலளிநீக்குகோயில் படங்கள் , சிற்பங்கள் அழகு.
பதிலளிநீக்கு