தொகுப்புகள்

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

தமிழக கோவில் உலா - திவ்ய தேசங்கள், பாடல் பெற்ற ஸ்தலங்கள், வைப்புத் தலங்கள் - மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோவில்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட விஸ்தாராவில் பயணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“NEVER FEAR SHADOWS. THEY SIMPLY MEAN THERE’S A LIGHT SHINING NEARBY.” - RUTH E. RENKEL.

 

******

 

ஜனவரி முதல் ஏப்ரல் மாத முதல் வாரம் வரை தமிழகத்தில் இருந்த போது நான் சென்று வந்த கோவில்கள் ஏராளம்.  அந்தக் கோவில்கள் குறித்து இங்கே எழுத வேண்டும் என நினைத்தாலும் தொடர்ந்து மற்ற பதிவுகள் வந்து கொண்டிருந்தன என்பதால் எழுத இயலவில்லை.  கோவில்கள் குறித்து எழுதி வைத்துக் கொண்டால், எனக்கான நினைவூட்டலாகவும், இந்தப் பதிவுகளை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் நிச்சயம் இருக்கும் என நம்புவதால் இங்கே எழுத விழைந்தேன்.  பொதுவாக வைணவ வழிபாட்டுத் தலங்களில் 108 தலங்களை திவ்ய தேசங்கள் என்று அழைப்பதுண்டு.  வைஷ்ணவர்கள் இந்த திவ்ய தேசங்களில் 106-உம் தங்களது வாழ்நாளில் (கடைசி இரண்டான திருப்பாற்கடல் மற்றும் வைகுந்தம் எனப்படும் பரமபதம் அதன் பிறகு தான்!) தரிசிக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். இந்த திவ்ய தேசங்கள் எனப்படுபவை 12 ஆழ்வார்களால் நாலாயிர திவ்யப்ரபந்தத்தில் மங்களாசாசனம் செய்யப்பட்டவை. நமது வலையுலக நண்பர்களில் சிலர் இந்த திவ்ய தேசங்கள் முழுவதும் சென்று வந்திருக்கின்றனர்.  எனக்கும் செல்ல வேண்டும் எனும் ஆசை உண்டு.  இந்த தமிழகப் பயணத்தில் இதை நோக்கிய முதல் படியை எடுத்து வைத்திருக்கிறேன்.  

 

தில்லி (தற்போது சென்னை வாசி) நண்பர் திருச்சியில் இருக்கும் ஆறு திவ்ய தேசங்களையும் ஒரே நாளில் தரிசிக்க வேண்டும் என வந்திருந்தார்.  அவர் வந்த போது அவரை அழைத்துச் சென்றதோடு நானும் எனது திவ்ய தேச பக்தி உலாவை தொடங்கி இருக்கிறேன்.  இந்த வாழ்நாளில் மற்ற திவ்ய தேசங்களையும் அங்கே அருள்பாலித்துக் கொண்டிருக்கும் எம்பெருமானையும் இலக்குமி பிராட்டியுடன் தரிசிக்க ஆவலுண்டு.  நீங்கள் வைஷ்ணவரா என்று கேட்டு விடலாம். ஆனால் எனக்கு சிவனும் பிடிக்கும் விஷ்ணுவும் பிடிக்கும். அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு” என்பதில் எனக்கு அலாதியான நம்பிக்கை உண்டு.  நாம் வணங்கும் கடவுளுக்கு தான் எத்தனை எத்தனை ஸ்வரூபங்கள்.  அதனால் விஷ்ணுவாக இருந்தால் என்ன சிவனாக இருந்தால் என்ன இரண்டு கோவில்களுக்கும் செல்வதில் சம அளவு மகிழ்ச்சியும் ஈடுபாடும் கொண்டவன் நான்.   அதனால் திவ்ய தேசங்களை தரிசிக்க எண்ணும் அதே வேளையில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் (274) மற்றும் வைப்புத் தலங்கள் (147)  ஆகியவற்றுக்கும் சென்று இறைவனை தரிசிக்க எண்ணி இருக்கிறேன்.  


இன்றைய பதிவில் அப்படி நாம் பார்க்கப் போகும் ஒரு கோவில் திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் சாலையில் மாந்துறை எனும் சிற்றூரில் அமைந்திருக்கும் பாடல் பெற்ற ஸ்தலமான, ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ ஆம்ரவனேஸ்வர ஸ்வாமி திருக்கோவில்.  காவிரியின் வடகரையில் அமைந்திருக்கும் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 58-ஆவது திருத்தலம்.  திருஞானசம்பந்தர் (தேவாரம்) மற்றும் அருணகிரிநாதர் (திருப்புகழ்) ஆகிய இருவரும் இத்திருத்தலம் பற்றி பாடி இருக்கிறார்கள். 

 

நீலமாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி

ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை

மாலும் நான்முகன் தேடியுங் காண்கிலா மலரடி யிணைநாளும்

கோல மேத்திநின் றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.


  • திருஞானசம்பந்தர் (தேவாரப் பாடல்) . 

 

பொழிப்புரை: நீல மணிகளையும், முத்துக்களையும், மலர்களை யும் அடித்து வரும் காவிரி வடகரை மாந்துறையில் திருமாலும் பிரமனும் தேடிக் காணமுடியாதவாறு எழுந்தருளிய இறைவனின் திருவடிகளைப் பாடி வழிபடுங்கள். நம்மைக் கூற்றுவன் நலியான்.

 

செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் செருந்திசெண் பகமானைக்

கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி

அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைகின்ற

எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே.


  • திருஞானசம்பந்தர் (தேவாரப் பாடல்) . 

 

பொழிப்புரை: வேங்கை, ஞாழல், செருந்தி, செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும், சந்தனமரம், மாதவி மலர், சுரபுன்னை மலர், குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம்.


குறிப்பு: பாடலும் பொழிப்புரையும் தேவாரம் தளத்திலிருந்து - அவர்களுக்கு நன்றியுடன். 

 


















இந்தத் தலத்தின் சிறப்புகளென குறிப்பிடப் படுபவை கீழே! 



  • ஆம்ரம் என்றால் மாமரம்.  மாமரங்கள் அதிகம் இருந்ததாலும், மாமரத்தை இறைவன் இருப்பிடமாகக் கொண்டதாலும் இந்தக் கோவிலில் உறையும் ஈசன் ஆம்ரவனேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.  ஸ்தல விருக்ஷம் மாமரம்.
  • திருவண்ணாமலையில் சிவ பெருமானின் அடிமுடியைக் கண்டுவிட்டதாக பிரம்மா பொய் கூறியதால் கிடைத்த சாபத்தினை நீக்கிய ஸ்தலம் இந்த மாந்துறை ஸ்தலம். 
  • ம்ருகண்டு முனிவர் கடும் தவம் இயற்றி உத்தம குணம் நிறைந்த புதல்வனாக மார்க்கண்டேயனை பெற்ற இடம்.  மார்க்கண்டேயன் 16 வயது அடைந்தும் மரண பயம் இல்லாமல் இருக்க தவம் மேற்கொண்ட இடமும் இத்தலமே!
  • பரிகார ஸ்தலம் - மூலா நக்ஷத்திரக்கான கோவில் இக்கோவில். மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தத் திருக்கோவிலில் அர்ச்சனை, ஆராதனை செய்தால் எல்லா தோஷங்களும் நீங்கி திருமணம் கைகூடும் என்பதும் ஒரு நம்பிக்கை. 
  • தாயை இழந்த மான் குட்டிகளுக்காக, இறைவன் மான் வேடம் தரித்து அக்குட்டிகளைக் காப்பாற்றியதாகவும், சோழ மன்னன் ஸ்வேதகேது இக்கோவிலை கட்டியதாகவும் கூறப்படுகிறது.  
  • கஹோலர் பிள்ளை மருதாந்தன் அடைந்த மாத்ருகன தோஷம் இத்தலத்தில் வழிபட நீங்கியது என்பதும் இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்று. 
  • கௌதம முனிவரின் வடிவம் கொண்டு இந்திரன் கௌதம முனிவரின் மனைவியைத் தீண்டியதால், கௌதம முனிவர் இந்திரனுக்கு கொடுத்த சாபம், இந்தக் கோவிலில் வழிபட்ட பின்னரே தீர்ந்தது என்பதும் இங்கே இருக்கும் பதாகை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  (தீய செயல் செய்துவிட்டு அதற்கு இறை வழிபாடு செய்து விட்டால் போதும் என்று அர்த்தம் கொள்ள வேண்டியது இல்லை. இப்படிச் செய்வது தவறு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்!)
  • சிவனை அழையாமல் தக்ஷன் நடத்திய யாகத்திற்கு சென்று வந்த சூரியன், தனது பாவம் தீர, வந்து வழிபட்ட திருத்தலம் இந்த மாந்துறை.
  • தனது கணவன் சூரிய தேவனின் ஒளியை பொருத்துக் கொண்டு, தான் இழந்த சக்தியைத் திரும்பப் பெற சம்ஞா தேவி வழிபட்டு பலன் அடைந்த தலம் மாந்துறை. 
  • செவ்வாய்க் கிழமையும் சதுர்த்தி திதியும் சேரும் நாளான அங்காரக சதுர்த்தி அன்று, மாந்துறை நகரின் புண்ணிய தீர்த்தமான காயத்ரி நதியில் நீராடி மாந்துறை உறை ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நற்கதியும் சகல நன்மைகளும் உண்டாகும். 
  • ஆதி சங்கரர் இந்தக் கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார் என்று தெரிகிறது. கோவில் வளாகத்தில் அவருக்கு ஒரு தனி சன்னதி இருக்கிறது. 

 

பல சிறப்புகள் இந்தக் கோவிலுக்கு உண்டு என்கிறது கோவில் வளாகத்தில் இருக்கும் ஒரு பதாகை.  கோவிலுக்கு நான் சென்றிருந்த சமயம் அப்படி ஒன்றும் கூட்டம் இல்லை.  ஏகாந்தமாக இறைவன் வீற்றிருக்க, அவருடன் நிம்மதியாக நாம் மனதோடு மனதாக பேசிக் கொண்டிருக்கலாம்.  ஒன்றிரண்டு வெளியூர் பக்தர்கள் வந்திருந்தார்கள் என்றாலும் அவர்களால் நமக்குத் தொல்லை இல்லை.  நின்று நிதானித்து இறைவனை வழிபடலாம்.  நான் சென்றிருந்த சமயம் ஒரு குழந்தைக்கு மொட்டை அடிக்க அங்கே வந்திருந்தார்கள். குழந்தையின் அப்பா, பாட்டி போன்றவர்கள் குழந்தையுடன் இருக்க, அம்மா இருந்தால் குழந்தை அழுதுவிடுவாள் என மறைந்து இருக்கச் சொல்லி விட்டார்கள் போலும்! பாவம் அந்தக் குழந்தையின் அம்மா தவித்துப் போய் விட்டார்.  அங்கும் இங்கும் ஓடி மறைந்து மறைந்து குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  பார்க்கவே பாவமாக இருந்தது. 

 

கோவிலுக்கு 2014-ஆம் ஆண்டில் தான் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது என்றாலும் கோவிலின் பல பகுதிகள் பரிதாபகரமான நிலையில் இருந்தது. சரியான பராமரிப்பு இல்லாதது நம் ஊர் புராதனமான கோவில்களின் சாபக்கேடு.  உழவாரப் பணிகள் செய்ய பக்தர்கள் முன்வரவேண்டும் என்பதோடு கோவிலை நிர்வகிக்கும் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையும் சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும்.  கோவிலிலிருந்து வரும் வருமானத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கோவிலுக்கான பணிகளை சரி வரச் செய்யாமல் இருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. ஆட்சியில் இருப்பது இந்தக் கட்சியாக இருந்தாலும் கோவில் வருமானத்தை சரியான வழியில், மற்ற நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்பது நியாயமானது தான் என்றாலும், கோவிலின் பராமரிப்பிற்கும் இரண்டில் ஒரு பகுதியையேனும் நிச்சயம் செலவு செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து கொள்வதில்லை என்பது வேதனையான உண்மை.  

 

கோவில் வளாகத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி உண்டு.  சூரிய பகவான் தனது இரு மனைவியர்களான சம்ஞா தேவி மற்றும் CHசாயா தேவி ஆகிய இருவருடன் இருக்க, மற்ற நவக்ரங்கள் சூரிய தேவனை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.  கோவில் வளாகம் முழுவதும் நிறைய கிறுக்கல்கள்.  கோவிலுக்கு வரும் இளைஞர்கள் தங்களது காதலை இங்கே வந்து கிறுக்கி வைத்துச் சென்றிருக்கிறார்கள்.  நேரடியாக பெண்ணிடம் சொல்லி இருந்தாலாவது காதல் கைகூடியிருக்கலாம்! கோவில் சுவர் என்னவோ தகவல் பதாகை போல மாற்றி இருக்கிறார்கள் என்பது வேதனை. ஒரு குதிரை வாகனம் கோவிலின் பின் பகுதியில் இருந்தது - பார்க்கவே வேதனையாக இருந்தது.  பாழடைந்த நிலையில் இருந்த அந்த குதிரை வாகனத்தினை ஒன்று சரி செய்ய வேண்டும் இல்லையெனில் அதை எடுத்து விட்டு வேறு புதிய வாகனம் செய்ய வேண்டும் - இப்படி வெய்யிலிலும் மழையிலும் வெட்ட வெளியில் போட்டு வைத்திருப்பதில் என்ன பலன் என்று புரியவில்லை.

 

கோவில் வளாகத்தின் வெளியே கருப்பசாமி கோவிலும் இருக்கிறது.  பெரிய மரத்தின் கீழ் அமைந்திருக்கும் கருப்பசாமி கோவிலுக்கும் சென்று அங்கேயும் பிரார்த்தனை செய்து கொண்டேன்.  பக்கத்திலேயே ஒரு குளம் (காயத்ரி தீர்த்தம்?) - பாழடைந்த நிலையில் பாசி பிடித்துக் கிடக்கிறது குளம். பராமரிப்பு இல்லை என்பது கண்கூடு.  கோவில் அமைந்திருப்பது ஒரு அழகான கிராமம்.  வழியில் ஒரு பாட்டி காலை நீட்டி அமர்ந்து கொண்டு அவர்கள் வீட்டு மரத்தில் காய்த்த புளியங்காய்களை காய வைத்துக் கொண்டிருந்தார்.  பார்த்தவுடன் நாக்கில் அப்படி ஒரு ஊற்று! கேட்டு வாங்கிச் சாப்பிடலாம் என்றால் ஏனோ வெட்கம் - நெய்வேலி நகரில் நாங்களிருந்த சமயம் வீட்டிலேயே மரம் இருந்தது என்பதால் புளியங்காயை பல விதமாக - பச்சையாக, கொஞ்சம் இளம் பழமாக, பழமாக, காயுடன் மிளகாய் சேர்த்து இடித்து, என பல விதங்களில் ருசித்ததுண்டு.  அந்த நினைவுகள் மனதில் பசுமையாய் இருக்க, பாட்டி வைத்திருந்த புளியைக் கேட்டு ருசிக்க எண்ணியது நியாயம் தானே. 

 

திருச்சிக்கு வந்தால் நிச்சயம் இந்தக் கோவிலுக்கும் சென்று இறைவனை தரிசிப்பதோடு, கோவிலில் இருக்கும் சிற்பங்களையும் பார்த்து ரசிக்கலாம். திருச்சியின் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி செல்லும் மாநகரப் பேருந்துகள் (சில பேருந்துகள் தவிர) மாந்துறை வழியாகவே செல்லும். மாந்துறையில் இறங்கிக் கொண்டு சில அடிகள் நடந்தால் கோவிலுக்கு வந்து விடலாம். சொந்த வாகனத்தில் சென்றாலும் கோவிலுக்கான பாதையைக் கண்டு பிடிப்பது  சுலபமே.  இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்தக் கோவில் அருகிலேயே ஒரு பெருமாள் கோவிலும் (வரதராஜ பெருமாள் ஆலயம்) இருக்கிறது. அங்கேயும் நீங்கள் சென்று வரலாம். கோவில் குறித்து இதைப் பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கும் தகவல்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கலாம் என்று நம்புகிறேன். மாந்துறை உறையும் எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.  மீண்டும் வேறு ஒரு பாடல் பெற்ற தலம் குறித்து பார்க்கும் வரை…  

 

******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

22 கருத்துகள்:

  1. கோவில் பற்றிய விவரங்களும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் பற்றிய விவரங்களும் தகவல்களும் சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே ஸ்ரீராம். பதிவு தங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  2. கோவிலில் பக்தர்கள் கூட்டம் கூடி காசு வந்தால் அறநிலையத்துறை கவனிக்கும். இல்லாவிட்டால் அதற்கேது அக்கறை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தாலும் கவனிக்காது. இந்த அரசு எல்லாவற்றையும் பணவரவுக்கான இடங்களாகப் பார்க்குது

      நீக்கு
    2. காசு வந்தால் அறநிலையத்துறை கோவிலை கவனிக்கும்! இல்லையேல் இல்லை! - வேதனையான உண்மை. இதனை சரி செய்ய ஒருவரும் இல்லை என்பதும் வேதனையான உண்மை. தங்கள் கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. வந்தாலும் கவனிக்காது - உண்மை. அப்படியும் சில பிரபல கோவில்களையும் அங்கே இருக்கும் குறைபாடுகளையும் பார்க்கும்போது மனது வருத்தம் தான் கொள்கிறது நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  3. கோவில் பற்றிய விவரங்கள் அருமை.

    ஆம்ரவனூஸ்வர்ர்.... பதிவர் வை கோபாலகிருஷ்ணன் சார் சம்பந்தப்பட்ட ஊர். அவ்கு அவர் சகோதர்ர் ஶ்ரீகண்டன் அவர்களின் அதிஷ்டானமோ இல்லை வேறொருவரின் அதிஷ்டானமோ இருக்கிறது. காஞ்சு பரமாச்சாரியார் சம்பந்தப்பட்டது.

    உங்களதிருஷ்டம்... அந்தக் கோவில் தரிசனம் கிடைத்திருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வை.கோ. அவர்களின் ஊர் தான். நல்ல கோவில். அடுத்த திருச்சி பயணத்தில் முடிந்தால் சென்று வாருங்கள் நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. நல்ல தரிசன படங்கள் நன்று.

    விவரங்கள் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரிசனம் குறித்த படங்களும் தகவல்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை மகிழ்ச்சியைத் தந்தது தனபாலன்! மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. திருமாந்துறை தரிசனம் செய்யவேண்டும் என்று மிகவும் ஆவல்..

    என்றைக்கு ?..

    அழகான படங்கள்..

    சிறப்பான பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமாந்துறை உறையும் ஈசனை நீங்கள் தரிசிக்கும் வாய்ப்பு விரைவில் அமைய எனது பிரார்த்தனைகள். பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  7. கோவில் படங்களும் அதைப்பற்றிய விவரங்களும் வழக்கம் போல் அருமை.

    இப்ப கிராமங்கள் ஊர்கள் பெயர்கள் எல்லாம் தமிழில் அடித்த போது, இந்தப் பெயரும் உண்டு. திருமாந்துறை. ஆங்கிலத்தில் இருந்ததை கூகுளில் பார்த்து சரியா என்று பார்த்த போது இக்கோயில் படம் வந்தது. பெயரும்.

    பெயரே அருமை ஊர்ப் பெயரும் இறைவன் பெயரும்! திரு என்று சேத்து ஊரின் பெயர் வரும் போதே ஒரு ஈர்ப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. பதிவு குறித்த தங்கள் கருத்துரையை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. நாம் வணங்கும் கடவுளுக்கு தான் எத்தனை எத்தனை ஸ்வரூபங்கள். அதனால் விஷ்ணுவாக இருந்தால் என்ன சிவனாக இருந்தால் என்ன இரண்டு கோவில்களுக்கும் செல்வதில் சம அளவு மகிழ்ச்சியும் ஈடுபாடும் கொண்டவன் நான்.//

    என் கருத்தும் இதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கருத்தும், தங்களது கருத்தும் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. // திவ்ய தேசங்களை தரிசிக்க எண்ணும் அதே வேளையில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் (274) மற்றும் வைப்புத் தலங்கள் (147) ஆகியவற்றுக்கும் சென்று இறைவனை தரிசிக்க எண்ணி இருக்கிறேன். //

    இறைவன் உங்கள் ஆசையை பூர்த்தி செய்வார். முடியும் போது எல்லாம் பார்த்து வாருங்கள். சார் பல ஆண்டுகள் பார்த்தார்கள். வைப்பு தலங்களையும் திவய தேசம், பாடல் பெற்ற தலங்கள் பார்க்கும் போது இடை இடையே பார்த்து விடுவார்கள்.
    மாந்துறை தல வரலாறு, அங்கு நீங்கள் கண்ட காட்சிகள். உங்கள் நெய்வேலி நினைவுகள் என்று பதிவு அருமை.

    கோவில் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. தரிசனம் செய்த நிறைவு.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஆசிகளுக்கு நன்றி கோமதிம்மா. சார் கோவில்களுக்குச் சென்று வந்தது குறித்த தங்களது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. முடிந்த வரை இப்படி பயணிக்க ஆசை - ஆசைகளை நிறைவேற்றுவது ஈசன் கையில்! படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  10. திருமாந்துறை இறை தரிசனம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....