தொகுப்புகள்

சனி, 1 ஜூலை, 2023

காஃபி வித் கிட்டு - 176 - நல்ல மனம் வாழ்க - அம்மா - Bபப்ரு… - பூலோக ரம்பை - குழலிசை - இன்னொரு வானம் - முதல் அடி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி ஆறு பதிவினை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



நல்ல மனம் வாழ்க : அந்தரி இல்லு, கொத்தபெட் 


ஆந்திர தேசத்தின் தலைநகர் ஹைதையில் வசிக்கும் ஒரு மருத்துவர் தம்பதிகள் செய்து வரும் ஒரு பொதுநல சேவை தான் “அந்தரி இல்லு” என்கிற விஷயம்.  தெலுகு மொழியில் இந்த வாக்கியத்தினை தமிழில் சொல்வதென்றால் “அனைவருக்குமான வீடு” என்று அர்த்தம் சொல்லலாம்.  ஹைதை நகருக்கு தேர்வு எழுதவோ, வேறு வேலையாக வந்தாலோ நேரடியாக இந்த இடத்திற்குச் சென்று அங்கே குளித்து, சாப்பிட அங்கே வைத்துள்ள பொருட்களை வைத்து சமைத்து, இருக்கும் புத்தகங்களை படித்து அங்கிருந்து புறப்படலாம்! அங்கே பாதுகாப்பிற்கு ஒரு காவலாளி கூட இருக்க மாட்டார்.  ஒரு கேள்வியும் உங்களிடம் கேட்கப்பட மாட்டாது! இதனை நடத்தும் மருத்துவ தம்பதியர் மற்றும் சேவை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! தகவல் மூன்று வருடம் பழையது என்றாலும் இந்தச் செய்தியும் இப்படியான ஒரு விஷயத்தைச் செய்து வரும் நல்ல மனம் வாழ்க என்று வாழ்த்துவோம்.  ஆங்கிலத்தில் இருக்கும் இந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்களேன்.


https://ummid.com/news/2020/december/11.12.2020/andari-illu-a-house-for-all-in-hyderabad.html


******


இந்த வாரத்தின் ரசித்த பாடல்: அம்மா…


அமலா நடித்த “கணம்” என்கிற படத்திலிருந்து சித் ஸ்ரீராம் பாடிய ஒரு பாடல். சமீபத்தில் கேட்டு ரசித்த பாடல்! அந்தப் பாடல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கேட்டுப் பாருங்களேன்.


மேலே உள்ள காணொளியைக் காண முடியவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாமே!


Amma Song - Full Video | KANAM | Sharwa, Ritu Varma | Jakes Bejoy | Sid Sriram | Shree Karthick - YouTube


******


இந்த வாரத்தின் ரசித்த உணவு : Bபப்ரு…



இந்த வாரத்தின் ரசித்த உணவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பது Bபப்ரு என்ற பெயரில் அழைக்கப்படும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் உணவு.  வட இந்தியாவின் தில்லி போன்ற நகரங்களில் கிடைக்கும் கச்சோடி(ரி) போலவே தோற்றம் அளித்தாலும் அதன் உள்ளே வைக்கப்படும் பொருட்கள் வேறு.  கோதுமை மாவில் பூரி போல தயாரித்து அதன் உள்ளே கருப்பு உளுந்தால் ஆன ஸ்டஃபிங் வைத்து செய்யப்படும் இந்த Bபப்ரு, பொதுவாக குளிர்காலங்களில் செய்யப்படும் ஒரு வகை உணவு.  இனிப்பு சட்னி மற்றும் தேநீருடன் சுவைக்கப்படும் இந்த உணவை சமீபத்தில் சாப்பிட்டேன்.  நன்றாகவே இருந்தது.  உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் சுவைத்துப் பார்க்கலாம்.  செய்முறை குறிப்புகளும் யூட்யூபில் இருக்கிறது - ஒன்று மட்டும் இங்கே!.  முடிந்தால் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.  ஒரு சிலர் இனிப்பாகவும் செய்கிறார்கள் - அப்படியான குறிப்புகளும் ய்ட்யூபில் இருக்கிறது. 


******


பழைய நினைப்புடா பேராண்டி : பூலோக ரம்பை


2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - பூலோக ரம்பை - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


சாதாரணமாக ரம்பை, ஊர்வசி, மேனகை எல்லாமே மேலுலகில் அதாவது இந்திரலோகத்தில் இருப்பார்கள் எனச் சொல்வார்கள். புவியில் இருக்கும் சில அழகான பெண்களையும் பூலோக ரம்பை எனக் கவிஞர்கள் வர்ணிப்பதுண்டு.....  அப்படி ஏதோ பூலோக ரம்பை ஒருத்தியைப் பற்றிய பதிவு இது நினைத்துக்கொண்டு ஓடோடி வந்தவர்களுக்கு..... அப்படி என்னங்க உங்களுக்கு ஒரு ஆசை!


உங்கள் மனைவி, சௌபாக்கியவதி பவானி, பதிபக்தி-யோடு “அன்பே தெய்வம்”, நீங்கள் என் “குலதெய்வம்” என இருக்கும்போது, நீங்க என்னடான்னா “பூலோக ரம்பை”ன்னு ஓடி வரீங்க! அவங்களுக்கு உங்க மேலே இருக்கிற பக்தியை நீங்க புரிஞ்சிக்கலையே! உங்க முதலாளி, “தாய்க்குப்பின் தாரம்”-ன்னு சொன்னதையும் கேட்காம இருந்துட்டீங்களே!   வேற வழியே இல்லை! உங்களை “ராஜா தேசிங்கு” கிட்ட புடிச்சு கொடுத்துட வேண்டியது தான்!


முழுப்பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


******


இந்த நாள் இனிய நாள் : பிறந்த தினம்… 



உங்கள் மனதில் ஏதேனும் கஷ்டம், அமைதியின்றி தவித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுமே இல்லை.  கண்களை மூடிக்கொண்டு குழலிசை கேளுங்கள் - அதும் பண்டிட் ஹரிப்ரசாத் சௌராசியா அவர்களின் குழலிசையில் ஆழ்ந்துவிடுங்கள்.  சில மணித்துளிகள் அந்த இசையில் திளைத்துக் கொண்டிருந்தால் உங்கள் மனதில் இருக்கும் கிலேசங்கள் அனைத்தும் விலகி ஒரு தெளிவு பிறக்கும்.  நானும் இதை பல முறை இந்த இசை கேட்டு பல பிரச்சனைகளை விட்டு விலகி இருக்கிறேன்.  சிறப்பான குழலிசைக் கலைஞரனான ஹரிப்ரசாத் சௌராசியா அவர்களின் பிறந்த நாள் இன்று. இதே நாளில் 1938-ஆம் ஆண்டு இன்றைக்கு ப்ரயாக்ராஜ் என்று அழைக்கப்படும் திரிவேணி சங்கம நகரத்தில் பிறந்தவர் பண்டிட் ஹரிப்ரசாத் சௌராசியா அவர்கள். அவரது கலைத்திறமைக்கு வாழ்த்துகள் சொல்வதோடு பிறந்த நாள் வாழ்த்துகளையும் சேர்த்துச் சொல்வோமே!


******


இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை - இன்னொரு வானம் :  


கல்கி ஆன்லைனில் இந்த வாரம் படித்த ஒரு சிறுகதை - இந்த வாரத்தின் ரசித்த சிறுகதையாக - சில வரிகள் இங்கே உங்கள் பார்வைக்கு.  



“இன்னொரு வானம் இருக்கிறது.......உனக்காக.  

எப்பொழுதும் அமைதியாக அழகாக

அப்புறம் இன்னொரு சூரிய வெளிச்சமும் இருக்கிறது.

நீ எப்பொழுது வேண்டுமானாலும் இளைப்பாற வரலாம்.”


இப்படி ஆரம்பிக்கும் இந்தக் கவிதை. இந்தக் கவிதையின் சாராம்சம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ரஞ்சனி. அந்த கவிதை எழுதிய எமிலி தன் சகோதரனை தான் இருக்கும் ஊருக்கு அழைக்கிறாள். வந்துவிடு சகோ, நீ வாழும் இடத்தில் இருள் இருக்கலாம்,  நீ வாடலாம்.. அப்போ நினைவு கொள், இங்கே எப்பொழுதும் உனக்கான வெளிச்சம் இருக்கு. அன்பான இந்தத் தங்கையின் அன்பு இருக்கு. அது உனக்கு இன்னொரு வானம் மாதிரி என்கிறாள். அன்பான ஒரு இன்விடேஷன். நல்லாயிருக்கு இல்லே? அப்பா சொல்வார், உனக்கும் நான் அதைத் தான் சொல்வேன் மகளே.  நீ எங்கெங்கோ போய் வாழலாம். அங்க உன்னை சோகம் சூழலாம். அப்ப......உனக்காக இந்த அப்பா இன்னொரு வானமாக இருப்பார்.....இளைப்பாற நீ வந்துவிடலாம். நியாபகம் வச்சுக்கோ என்பார். அதனாலேயே எனக்கு வானமும் அதன் நீல நிறமும் ரொம்ப பிடிக்கும். ரஞ்சனி......எனக்கு எப்பவும் அப்பா இன்னொரு வானமாக இருந்திருக்கிறார்.”


முழுக்கதையும் படிக்க சுட்டி கீழே…


இன்னொரு வானம்... (kalkionline.com)

******


இந்த வாரத்தின் ரசித்த வாசகம் - முதல் அடி : 


இந்த வாரத்தின் ரசித்த வாசகமாக கல்லூரி தோழி அனுப்பி வைத்த வாசகம் ஒன்று உங்கள் பார்வைக்கு…




*****


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


17 கருத்துகள்:

  1. ஆம்.  முதல் செய்தி பழசுதான்!

    அமலா நடித்த இந்தப் படம் பார்த்திருக்கிறேன். 

    பாடும் இளைஞனும் அமலா கையில் இருக்கும் சிறுவனும் ஒரே ஆள்.  புரிகிறதா?  கால யந்திரத்தில் மறுபடி வந்து அம்மாவைக் காப்பாற்ற வருகிறான் மகன்!

    பப்ரு பார்க்கக் கவர்ச்சியாக இருக்கிறது.  கைநீட்டி எடுத்துப் பார்த்தேன். வரவில்லை!

    பதிலளிநீக்கு
  2. பழைய பதிவில் இருக்கும் படங்களில் தாய்க்குப்பின் தாரம் படம் டிவியில் அவ்வப்போது கொஞ்சம் பார்த்திருப்பேன்.  மற்றவை தெரியும், ஆனால் பார்த்ததில்லை.  தஞ்சாவூர் ராஜேந்திரா தியேயட்டரில் பூலேகரம்பை படம் வந்தபோது சின்னதாய் சதுரமாய் வண்ணங்களில் போஸ்டர் அடிப்பார்கள்.  அதில் இடமில்லாததால் முதல் வரியில் பூலோ என்றும் இரண்டாவது வரியை மடக்கி கரம்பை என்றும் பிரிண்ட் செய்திருந்தார்கள்.  நான் அதை பூலோ கரம்பை என்றே படித்து வந்தேன்.  என் அம்மா திருத்தினார்.

    பதிலளிநீக்கு
  3. ஹரியின் குழலோசை ஓரிருமுறை கேட்டதுண்டு.

    கதை பின்னர் படிக்கவேண்டும்.

    வாசங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல மறந்தது  -  சில்சிலா படம் பார்த்த நேரம் அதன் இசையமைப்பார்கள் இரட்டையர் என்று தெரியும்.  சில காலம் கழித்து தான் இரட்டையரில் ஒருவர் இவர் - ஹரிப்ரசாத் சௌராசியா - என்று தெரியும். அதே போல சமீபத்தில் நான் க்ரூப்பில் பகிர்ந்திருந்த சாஹிபா பாடலும் இவர்கள் இசைதான்.

      நீக்கு
  4. ஆந்திர தம்பதியர்களின் செயல் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய காஃபி வித் கிட்டு தொகுப்பு நன்றாக உள்ளது. ஆந்திர தம்பதியின் நல்ல செயல் பற்றி முன்பே படித்த நினைவு வந்தது. இப்போதும் படித்தேன். நல்ல மனம் கொண்டவர்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும்.

    அமலா நடித்த இந்த தெலுங்குப் படம் வந்த புதிதில் பார்த்துள்ளேன். நன்றாக இருக்கும். பாடல் நினைவுக்கு வரவில்லை. பிறகு கேட்கிறேன்.

    பப்ரு செய்முறையுடன் நன்றாக உள்ளது. புதிதான வித்தியாசமான திண்பண்டம். நல்ல சுவையாகவும் இருக்குமென நினைக்கிறேன்.

    சிறந்த கலைஞரான பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்துகள்.இவரின் குழலோசை இதுவரை கேட்டதில்லை. இனி கேட்கிறேன்

    கதையையும் பிறகு படித்துப் பார்க்கிறேன். இங்கு பகிர்ந்த வாசகங்கள் முழுக்கதையையும் படிக்கத் தூண்டுகின்றன. அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. பாடல் இனிமை...

    Bபப்ரு - அதிரசம் போல உள்ளது...

    பதிலளிநீக்கு
  7. ஆந்திரத்தில் மருத்துவத் தம்பதியர்களின் செயல் சிறப்பானது. பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  8. இசையால் வசமாகா
    இதயம் எது!..

    இன்றைய தொகுப்பு அருமை..

    பதிலளிநீக்கு
  9. வாசகம் ரொம்பப் பிடித்தது,

    அந்தரி இல்லு - கொத்தபெட் - அட! போட வைக்கிறது ஆமாம் பழைய செய்தி ஆனால் அருமையான விஷயம் எத்தனை வருடங்களாக நடக்கிறது!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அம்மா - பாடல் நல்லாருக்கு. காட்சிகள்தான் புரியவில்லை. படம் பார்த்தால்தான் புரியும் போல...

    ஓ Bபப்ரூ எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பெயர் பார்த்ததும் டக்கென்று மனதில் பிடிபடவில்லை....இது சாப்பிட்டுருக்கிறேன்.

    கச்சோடி(ரி) வெங்காயம் கச்சோடி, பருப்பு கச்சோடி இரண்டும் செய்ததுண்டு இது செய்ய வேண்டும் என்று நினைத்து செய்து பார்க்கலை. செய்துவிடுகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பொக்கிஷப் படங்களில் எதுவுமே பார்த்ததில்லை ஜி.

    ஆனால் இப்படிப் பெயர்களைக் கோர்த்து கதை எழுதுவதுண்டு அப்போது....அப்போது வந்த படங்களின் பெயர்களையும் உட்படுத்தி (பள்ளி, கல்லூரி சமயங்களில்)....அது போல வள்ளியூரில் இருந்த போதும் ஊரில் இருந்த போதும் புதுப்படம் வெளிவரும் போதும் படம் கடைசி நாள் என்றும் சொல்லிக் கொண்டே ஒரு அகலமான வண்டியில் படம் ஒட்டியிருக்க அதைத் தள்ளிக் கொண்டு வருவாங்க. கொட்டு அடித்துக் கொண்டே.

    பண்டிட் ஹரிப்ரசாத் சௌராசியா - எனக்கு மிக மிக மிகப் பிடித்த கலைஞர். உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன். ஆமாம் இவர் வாசிப்பதைக் கேட்டால் அப்படியே கரைந்து...அது ஒரு சொல்ல முடியா அனுபவம். இப்போது கூட அவரது brindabani sarang - நம்ம பிருந்தாவன சாரங்கா....கேட்டுக் கொண்டேதான் தட்டச்சுகிறேன். அவரது பிறந்தநாள் இன்று என்பது தெரியாது...
    யுட்யூபில் கூட இப்போது காணொளிகளுக்குப் பின்னணியில் கொடுக்கும் பாடல்களில் இவரது குழலிசையும் இருக்கிறது. எங்கள் வீடியோக்களில் ஒன்றில் சின்ன காணொளி ஒன்றில் இவ்ரது குழலிசைதான் சேர்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கல்கி இந்தச் சிறுகதை இன்னும் வாசிக்கவில்லை. வாசிக்கிறேன் ஜி.

    கடைசி வாசகம் சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இன்னொரு வானம் - கதை அருமையா எழுதியிருக்கிறார் சங்கரி அப்பன். ரசித்து வாசித்தேன். மிக்க நன்றி ஜி. இடையிடையே தான் கல்கி பக்கம் போவதால் விட்டுப் போய்விட்டது. நேரமும் சரியாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வாசகம் சூப்பர். ஹைதராபாத் டாக்டர் தம்பதியினரின் அந்தரி இல்லு பற்றி முன்பே படித்திருந்தால் என்ன? நல்ல செய்திகளை மீண்டும் வாசிக்கலாம். பப்ரு.. நன்றாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. கல்கி ஆன் லைன் கதை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. பண்டிட் ஹரிப்ரசாத் சௌராசியா அவர்களுக்கு பிறந்த நாள் வணக்கம், வாழ்த்துக்கள். கணம் பாடல் நன்றாக இருக்கிறது.பழைய அமலாவை தேடியது கண்கள்.
    இன்னொரு வானம் படிக்கிறேன். பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  16. அந்தரி இல்லு, புதுமையான ஆச்சரியமான சேவை. கணம் பாடல் இனிமை. Bபப்ரு புது அறிமுகம். பண்டிட் ஹரிப்ரசாத் சௌராசியாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! கதைப் பகிர்வுக்கு நன்றி.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....