தொகுப்புகள்

வெள்ளி, 7 ஜூலை, 2023

கோமரத்தாடி! - பகுதி ஒன்று - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தினம் தினம் தில்லி - ப்யார் வாலி தாலி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


அன்பின் நண்பர்களுக்கு, எனது தில்லி நண்பர் பத்மநாபன் அவர்கள் பணி ஓய்வு பெற்று தமிழகம் திரும்பியவர், அவ்வப்போது பதிவுகளை இங்கே எழுதி வந்தார் என்றாலும் தமிழகம் திரும்பிய பிறகு அவ்வளவாக எழுதுவதில்லை.  கடைசியாக இப்பக்கத்தில் ஃபிப்ரவரி மாதம் தான் அவர் ஒரு பதிவு எழுதினார் - புருஷா மிருகமும் சிவாலய ஓட்டமும் - என்கிற பதிவு -  அதற்குப் பிறகு மீண்டும் இடைவெளி! இதோ இப்போது ஒரு சிறப்பான பதிவுடன் மீண்டும் வந்திருக்கிறார். சற்றே பெரிய பதிவு என்பதால் இரண்டு பகுதிகளாக - இன்றும் நாளையும் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  வாருங்கள் அவரது பதிவின் முதல் பகுதிக்குச் செல்வோம் - Over to பத்மநாபன் அண்ணாச்சி - வெங்கட் நாகராஜ், புது தில்லி.


*&*&*&*&*&*&


கோமரத்தாடி


அப்போ நான் சின்னப்புள்ள. ஊர் அம்மன் கோயிலில கொட்டுச் சத்தம், அதான் அந்த தவுலும் அந்த ரெட்டை மேளமும் நாதஸ்வரத்தோட 'பீ பீ பிப்பீ' ஓசையோட  சேர்ந்து 'டொட்டனக்கு, டொட்டனொக்கு' ன்னு (எங்காதுல 'தொட்டு நக்கு, தொட்டு நக்கு' ன்னு கேக்கும்) கேட்டதுமே 'எம்மா! சாமியாட்டம் ஆரம்பிச்சிரும், சீக்கிரம் கோயிலுக்கு போவோம், கோயிலுக்கு போவோம்'னு எங்கம்மையை நச்சரிக்க ஆரம்பிச்சிருவேன். 


கோவிலில் முத்தாரம்மனும் முத்து வைரவரும் கம்பீரமாக இருக்கும் அழகோ அழகு. எங்கம்மைக்கும் கோயிலிலே சாமியாட்டம் பாக்கதுன்னா புடிக்கும். அதனால அப்பாகிட்ட சொல்லிக்கிட்டு கோவிலுக்கு பக்கத்துல இருக்கும் கமலம் சித்தி வீட்டுக்கு போயிருவோம். அந்த சித்தி வீட்டு திண்ணையில இருந்து பாத்தா கோவில் சாமியாட்டம் நல்லா தெரியும். அதுவும் சாமியாட்டம் துவங்குகதுக்கு முன்னால அங்க கூடியிருக்கும் அம்மணிகளின் அரட்டை இரட்டையாயிருக்கும். எனக்கு அவங்க அரட்டை அரைகுறையாத்தான் மனசிலாகும். அப்போ நான் சின்ன பையனுல்லா! ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மேல உள்ள சாமியாட்டத்துக்கு ஊரே கூடி இருக்கும். சாமியாட்டமும் தத்தர தரிகிடன்னு சூடு பிடிக்கும்.



சாமியாடியை நாங்க கோமரத்தாடின்னு சொல்லுவோம். கோமரத்தாடி அவருக்குரிய சலங்கை கட்டிய அரையாடையை உடுத்தி கருவறையின் முன்னே குவித்து வைத்திருக்கும் வேப்பம் தழைகளும், மலர்களும், கம்பம்பூவும் நிறைந்த பூப்படையின் முன் நின்று அம்மனையும் வைரவரையும் வணங்கி நிற்பார். ஒருபுறம் எங்கள் ஊர் ஆஸ்தான வில்லிசை கலைஞர் செல்லம்பிள்ளை பாட்டா 'வேப்பமரம் தோப்படிக்க, தேவி முத்தாரம்மா!' என்று தாளம் தப்பாமல் பாட உடனே குடமடிக்கும் நடராசப்பாட்டா "ஹோய்! ஹோய்!" என்று சேர்ந்து குரலெழுப்ப, மறுபுறம் ஆஸ்தான பூதப்பாண்டி நாதஸ்வர மேளக் குழு மேளங்களை கீழ்ஸ்தாயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேல்ஸ்தாயிக்கு கொண்டு வர கோமரத்தாடியின் மேல் அம்மன் இறங்கி வருவாள். அதன்பின் ஓ..ஓ… என்ற முழக்கத்துடன் ஆக்ரோஷத்துடன் முன்னால் இருக்கும் பூப்படையை தூக்கி தலைமேல் வைத்து தன் ஆட்டத்தை துவக்குவார். 


தொடர்ந்து தீப்பந்தம் சுமந்து ஆடுவார். பற்ற வைத்த தீப்பந்தத்தை தலைக்கு மேல் தூக்கி கோவில் திண்டில் ஓங்கி இரண்டு அடி அடித்ததும் பந்தம் கொழுந்து விட்டு எரியும். உடனே பந்தத்தை ஒரு புன்முறுவலுடன் நெஞ்சோடு அணைத்து ஆட ஆரம்பிப்பார். தீ ஜ்வாலைகள் அவருடைய எண்ணெய் தோய்ந்த முரட்டு மீசையை உரசிச் செல்லும். அப்போது எண்ணெய் தோய்ந்த  முகமும் தீ ஜ்வாலையில்   பளபளவென பிரகாசிக்கும்.  அதுவும் அந்த நடுராத்திரியில் அந்த கொட்டுச் சத்தமும் இடை இடையே கோமரத்தாடியின் ஓ...ஓ... என்கிற உறுமல் சத்தமும் ஒருவித பயத்தை ஏற்படுத்தும். ஆனாலும் அம்மாவின் அணைப்பில் மிரட்சியுடன் சாமியாட்டத்தை பார்ப்பது ஒருவித சுகமே. கோமரத்தாடி ஒருவித வீறுடன் ஆட ஆட எங்கள் ஈச்சு மாமா எண்ணெய் பாத்திரத்துடன் கோமரத்தாடியைத் தொடர்வார். இப்போது எனது நண்பன் சிவா அந்தப் பணியை உற்சாகமாக செய்து கொண்டிருக்கிறான். சென்னையில் குடியேறி விட்டாலும் ஊர்த் திருவிழா என்றால் ஓடோடி வந்து முன் நின்று நடத்துபவன். 


கோமரத்தாடி வெட்டுக்குத்தியுடன் ஆட ஆரம்பித்தால் அவர் உடல் முழுக்க சந்தனம் பூசவும் வேண்டும். ஆவேசமாய் ஆடியபடி கோமரத்தாடி அவர் முதுகில் வெட்டும்போது சாதுர்யமாய் தடுத்து வேகத்தைக் குறைக்க வேண்டும். அதையும் மீறி கோமரத்தாடியின் முதுகில் வெட்டுப்பட்டு ரத்தம் வரவே செய்யும்.  உடனே வெட்டுப்பட்ட இடத்தில் அரைத்த சந்தனத்தை அப்பி ரத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும். இப்படி கோமரத்தாடியின் ஆவேசத்துக்கு ஈடு கொடுத்து சாந்தப்படுத்த சிவாவும் மேலும் சிலரும் கண்ணும் கருத்துமாய் இருப்பர்.  இந்த சாமியாட்டம் நடக்கும் சமயம் ஊரே பயபக்தியுடன் திரண்டிருக்கும். கூடவே சில கோணக்கிளி கிண்டும் பார்ட்டிகளும் ஒரு வித மிதப்புடன் சுற்றி வருவர்.


சின்ன வயசுல எங்க அப்பாவும் கோயிலு கொடையுன்னு கொண்டாடுனவருதான். எனக்கு நிறைய எங்க ஊர் சாமியாடி கதையெல்லாம் சொல்லியிருக்காரு. ஆனா ஒரு கட்டத்துக்கு அப்புறம் வீட்டிலேயே சாமி கும்பிடுகதோடு சரி. அவர் கோமரத்தாடிகள் மாறும் காலகட்டங்களை கதையாக சொல்வார்.


என்னுடைய சின்ன வயசுல இருந்த கோமரத்தாடி பெரிய மீசை வச்சிருப்பாரு. அவருக்கு ஊருல நல்ல மரியாதை உண்டு.    அவரு ஒரு பெரிய செல்வச் செழிப்பான குடும்பத்தை சார்ந்தவரு. அரசுப் பணியிலும் இருந்தவரு. அம்மன் அவர் மேல் இறங்கிட்டா அப்படி தேஜஸா ஜொலிப்பாரு. அப்புறம் அம்மன் மலையேறுகது வரை அவருக்கு தனிப்பட்ட சொந்த பந்தம் கிடையாது. அம்மனாகவே மாறி நிப்பாரு. சாமியாட்டத்தின் இடையிலே அவர் அருள்வாக்கு சொல்லும்போது சில பெண்கள் அதிக உரிமை எடுத்துக் கொண்டு, "எத்தான்!" என்று ஆரம்பித்து தன் குறைகளை சொல்ல ஆரம்பிக்கும் போதே, "அத்தான், கித்தான்ல்லாம் பொறகு வச்சுக்கோ. இப்போ நான் முத்தாரம்மனாக்கும்" என்று கர்ஜிப்பார்.


இந்த கோமரத்தாடி குறித்து அப்பா சொன்ன கதையை அடுத்த பகுதியில் சொல்லட்டா… நாளை வரை காத்திருங்கள்! 


பத்மநாபன்


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


20 கருத்துகள்:

  1. சுவாரஸ்ய நிகழ்வுகளின் வர்ணனை. ஆவேசத்தில் தன்னை மறந்து ரத்தம் வருமளவு வெட்டிக் கொள்வார் என்பது திகில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்கள் பிரமிப்பு தருபவை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பார்த்த அணுபவத்தை சிறப்பாக எழுத்தாக்கியிருக்கிறார் அன்னாச்சி.
    கதையைப் படிக்க ஆர்வமாக இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

      நீக்கு
  3. நாம வடிவேலுவோ இல்லை கவுண்டமணியோ சீன்ல வந்தவுடனேயே சிரிக்கும் மனநிலைக்கு மாறிவிடுவோம். பத்னாபன் அண்ணாச்சி பதிவுகளும் அப்படித்தான்.

    தொட்டுநக்கு தொட்டுநக்கு, அரட்டை இரட்டை... எழுத்து ரசனையானது. பதிவு நீண்டாலும் நல்லாருக்கும். அதைப்போய் பிரிச்சுட்டீங்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சியின் எழுத்துக்கு உங்களைப் போலவே பல நண்பர்கள் ரசிகர்கள். சற்றே நீண்ட பதிவு என்பதால் பிரித்திருக்கிறேன். நாளையே அடுத்த பகுதி வெளியாகும் நெல்லைத்தமிழன். தங்கள் அன்பிற்கு நன்றி.

      நீக்கு
  4. சொல்லிய விதம் வழக்கம் போல சுவாரஸ்யமாக இருந்தது அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாச்சியின் பதிவு உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்தது அறிந்து மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பதிவு வழி பக்ர்ந்த விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. மீண்டும் ரசிக்க காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பகுதி நாளையே வெளிவரும் தனபாலன். தங்கள் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  7. வாசகம் அருமை.
    உங்கள் நண்பர் பத்மநாபன் அவர்கள் பதிவு மிக நன்றாக இருக்கிறது. அடுத்த பகுதியை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நண்பர் பத்மநாபன் அவர்களின் இந்தப் பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. தங்கள் நண்பரின் எழுத்து லாவகம் எப்போதுமே அருமை. இன்றைய பதிவும் நன்றாக உள்ளது. கோவில் சாமியாடியின் சில பொழுது செயல்கள் கொஞ்சம் திகிலை ஏற்படுத்துவதுதான். அதைக் குறித்து தங்கள் நண்பரின் தந்தை சொல்லிய கதைகளை ஆவலுடன் தங்கள் நண்பரின் எழுத்துக்களின் வாயிலாக படிக்க காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  9. அட பப்பு அண்ணாச்சி!

    நேற்று கருத்து அடித்து வைத்தும் எப்படியோ இங்கு இட விட்டுப் போய் விட்டது ஜி.

    வாசகம் அருமை.

    சாமியாடி/கோமரத்தாடி பற்றி அண்ணாச்சியின் விவரிப்பில் சுவாரசியமாக இருக்கிறத நாகர்கோயில் ஊர் வழக்கு....ரசித்து வாசித்தேன்.

    எங்கள் கிராமத்தில் சாஸ்தா பூஜையின் சமயம் நடக்கும்...ஒருவருக்கு வரும். சாமி தணியும் போது உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றுவார்கள்...அது பற்றி சொல்ல நினைதுள்ளேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றுவது குறித்து சொல்லுங்கள். சில இடங்களில் நானும் பார்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. காணொளி பார்த்தேன்...இது வித்தியாசமாக இருக்கிறது.
    கொடை விழா என்றாலே எனக்கு வள்ளியூர் தான் நினைவுக்கு வரும் அங்குதான் நான் முதன் முதலில் பார்த்த அனுபவம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வள்ளியூர் கொடை விழா குறித்து எழுதுங்கள் கீதா ஜி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் திருவிழாக்கள் பார்க்க ஆசையுண்டு. வடக்கிலும் இப்படியான சில திருவிழாக்கள் உண்டு - குறிப்பாக மலைப்பகுதிகளில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....