தொகுப்புகள்

புதன், 7 பிப்ரவரி, 2024

இயற்கை அன்னையின் மடியில் - எங்கே அடுத்த சுற்றுலா - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கடவுள் உங்களுக்கென்று கொடுக்க நினைக்கும் எதையும், யாராலும், எவராலும் தடுக்க முடியாது.  

 

*******



இயற்கை எழில்…


நிலவும் நதியும்…

உத்தராகண்ட் மாநிலம் என்னை மட்டுமல்ல, பலரையும் எப்போதும் கவர்ந்து இழுக்கும் சக்தி கொண்ட, இந்தியாவின் வட பகுதி மாநிலங்களில் ஒன்று. புனிதமான கங்கை நதி பிறக்கும் மாநிலம், பல புனிதத் தலங்களை தன்னகத்தே கொண்ட மாநிலம் என்பது மட்டுமின்றி பலருக்கும்  தெரிந்த மற்றும் தெரியாத குளிர் பிரதேசங்களை தன்னுள் அடக்கியுள்ள மாநிலமும் கூட.  இங்கே செல்ல வேண்டும் என எப்போது நினைத்தாலும் மனதுக்குள் உற்சாக ஊற்று பீறிட்டுக்கொண்டு, கொப்பளிக்க ஆரம்பித்து விடும் எனக்கு. சென்ற வருடத்தின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு முறை சென்று வந்தேன் என்றாலும், மீண்டும் நவம்பர் மாதத்தில் மீண்டும் ஒரு பயணம் - உத்தராகண்ட் மாநிலம் நோக்கி!

 

எங்கே இந்த பயணம்? 



என்னடா நடக்குது இங்கே?


வித்தியாசமான பூ ஒன்று…


பராட்டா - காலை உணவாக…
 

25-27 நவம்பர் 2023 ஆகிய மூன்று நாட்களும் அரசு விடுமுறை என்பதால் எங்கேயாவது பயணிக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தேன்.  தனியாகச் செல்லவே திட்டமிட்டு இருந்தாலும், இந்த முறை சென்ற பயணம் தனியாகச் சென்ற பயணம் அல்ல.  எனது பயணத் திட்டம் குறித்து தெரிய வந்த நண்பர்கள், தாங்களும் வரவேண்டும் என்று சொல்ல, அவசரகதியில் திட்டம் தயாரானாது. மூன்று தினங்கள் விடுமுறை என்றாலும், இரண்டு நாள் மட்டுமே பயணம் செல்வது என முடிவு செய்து, நண்பர் சுப்ரமணியன் அவர்களும் நானும் முன்னேற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம். எந்த இடத்திற்கு பயணம் என பேசிக்கொண்டிருந்த போது, ராஜஸ்தானில் சில இடங்கள், உத்திராகண்ட் மாநிலத்தில் சில இடங்கள் என யோசித்துக் கொண்டிருந்தோம். கடைசியாக முடிவானது உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் லான்ஸ்(d)டௌன் என்கிற இடம். உத்திராகண்ட் மாநிலத்தில் இருக்கும் மாவட்டங்களில் ஒன்று போ(d)டி கட்வால் (Pauri Garhwal).  இம்மாவட்டத்தில் பல பிரபலமான இடங்கள் உண்டு - ரிஷிகேஷ், கோட்(dh)த்வார், தேவ் ப்ரயாக்(g), கிர்சு என வரிசையாகச் சொல்லிக் கொண்டு வரும்போது, அந்த வரிசையில் லான்ஸ்(d)டௌன் என்கிற இடமும் நிச்சயம் சேர்ந்து விடும். இந்த லான்ஸ்(d)டௌன் நோக்கியே எங்களது பயணம் அமைந்தது.  

 

லான்ஸ்(d)டௌன் - சில தகவல்கள்:



பைன் மரக்காடு ஒன்றில் நான்…


நண்பருடன் நான் - நதியொன்றின் ஓரத்தில்…


அப்படியே தியானத்தில் அமரலாமா?
 

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த லான்ஸ்(d)டௌன் பகுதி ஒரு மலைப்பகுதி என்பதால், பெரும்பாலான நகரங்களில் இருக்கும் மாசுத் தொல்லை, அதீத மக்கள் நடமாட்டம் போன்ற தொல்லைகளிலிருந்து சற்றே விலகி இருக்க ஒரு தோதான இடம் இந்த இடம்.  சிலருக்கு மலைப்பகுதிக்கு பயணிப்பதில் சிக்கல்கள் இருக்கலாம் - வளைவுப் பாதைகளில் பயணிக்கும் போது வாந்தி, பிரட்டல் போன்ற தொல்லைகள் இருக்கலாம்! ஆனால் இந்த லான்ஸ்(d)டௌன் வருவதற்கு, கோட்(dh)த்வார் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவு மட்டுமே மலைப்பகுதியில் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால் அப்படியானவர்களுக்கும் இந்த இடம் தகுந்த இடமாக இருக்கும்.  தில்லியிலிருந்து பயணிக்கும்போது பெரும்பாலான தொலைவு சமவெளிப் பகுதி தான் என்பதால் கவலையில்லை. அது மட்டுமின்றி, மற்ற சுற்றுலாத்தலங்கள் போல இந்த இடம் அதிக சுற்றுலா பயணிகள் வருவதில்லை! கூடுதலாக இந்த இடம் இராணுவத்தின் பராமரிப்பில் இருப்பதால் எங்கேயும் சுத்தமாகவே இருக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் விஷயம்! சுத்தமான இடமும், இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருப்பதால் நகரத்தின் தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்க ஏற்ற இடம் இந்த இடம். 

 

லான்ஸ்(d)டௌன் - பெயர்க்காரணம்:



நதிக்கரையில் - ஒரு சிறு காணொளி…
 

தற்போது வழங்கப்பெற்று வரும் பெயர் ஆங்கிலேயர் காலத்தில் தான் மாற்றப்பட்டது - நம்மை ஆண்ட ஆங்கிலேயர் காலத்தில் 1888 ஆண்டு முதல் 1894 வரை இங்கே வைஸ்ராய் ஆக இருந்த லார்ட் லான்ஸ்(d)டௌன் என்பவரின் பெயரால் இந்த நகரம் அழைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது. இங்கே தான் 1887-ஆம் ஆண்டில் தான் இங்கே ஆங்கிலேயர்கள் தங்களது இராணுவத்தின் பாசறை ஒன்றை இங்கே அமைக்கத் தொடங்கினார்கள்.  அந்த இடத்திற்கு அப்போதைய வைஸ்ராய் அவர்களின் பெயராலேயே “லான்ஸ்(d)டௌன்” என்ற பெயரையும் வைத்தார்கள்.  இந்தியாவின் பிரபலமான இராணுவப் பிரிவுகளில் ஒன்றான Garhwal Rifles பாசறையை அமைத்து இருக்கிறது.  தற்போதும் இங்கே Garhwal Rifles பாசறை இருப்பதால் மிக அழகாகவும், சிறப்பாகவும் பராமரிக்கப்பட்டு வரும் இடங்களில் ஒன்று தான் லான்ஸ்(d)டௌன்.  

 

Black Forest - ஐஸ்க்ரீம் அல்ல!



வளைந்து நெளிந்து போகும் பாதை…


ஒரு view point அருகே நான்…


வளைந்து நெளிந்து போகும் பாதை… - தூரப் பார்வை…

1887-ஆம் ஆண்டில் லான்ஸ்(d)டௌன் என்ற பெயர் வைக்கப்பட்டாலும், இந்தப் பகுதி முன்பு “காலூ (d)டாண்(d)டா” என்ற பெயரில் தான் உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டு வந்தது.  இந்தப் பகுதியில் பேசப்பட்டு வரும் மொழியான (g)க(d)ட்வாலி (Garhwali) மொழியில்  காலூ என்றால் கருப்பு, (d)டாண்(d)டா என்றால் மலை/காடு, அதாவது கருப்புக் காடு (Black Forest!) என்ற பெயரில் தான் இப்பகுதி அழைக்கப்பட்டு வந்தது.  ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை மாற்றி மீண்டும் பழைய பெயரான “காலூ (d)டாண்(d)டா” என்ற பெயரிலேயே இப்பகுதி அழைக்கப்படலாம் என்பதும் கூடுதல் தகவல். இல்லை இல்லை இந்தப் பகுதிக்கு வேறு பெயர் வைக்கலாம் என Lansdowne Cantonment Board யோசித்து, கடந்த (2023) ஜூலை மாதத்தில் ஒரு தீர்மானமும் எடுத்தார்கள் - அந்தத் தீர்மானம் - லான்ஸ்(d)டௌன் பகுதிக்கு, 1962-ஆம் ஆண்டு தற்போதைய அருணாச்சலப் பிரதேசத்தில் நூராநங்க் எனும் பகுதியில் நடந்த சீனப் போரில் சிறப்பாக போராடி, உயிர்நீத்த, Garhwal Rifles வீரரான Rifleman Jaswant Singh Rawat அவர்களது பெயரால் Jaswantgarh என்ற பெயரை வைக்கவேண்டும் என்பது தான். 




மலைகளும் மரங்களும்…


பைன் மரக்காட்டில்….
 

லான்ஸ்(d)டௌன் பகுதியில் என்ன இருக்கிறது, நாங்கள் தங்கிய இடம், சாப்பிட்ட உணவு, எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன, போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அதுவரை பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே.

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ் 

திருவரங்கத்திலிருந்து…

26 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான படங்கள்.  இலையை பனி மூடி இருப்பது போல இருக்கிறது.  பரோட்டாவைப் பார்த்தால் போளி மாதிரி இருக்கிறது.  உங்கள் போஸ்களும் பிரமாதம்.  கருப்புக்காட்டின் பெயர் மாற்றுவது நல்ல விஷயம்தான்.  அதுவும் நம் நாட்டுக்காக போராடியவர் பெயர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நம் நாட்டிற்காக போராடியவர் பெயரை கறுப்புக் காட்டிற்கு வைப்பது நல்ல விஷயம் தான். இன்னும் மாற்றம் செய்யவில்லை. விரைவில் மாற்றுவார்கள் என நம்புவோம்.

      //பராட்டா போளி போல தெரிகிறது// - ஹாஹா… அங்கே இருப்பவை பெரிய, தடிமனாக இருக்கும் பராட்டா. இப்போது தமிழகத்தில் கடைகளில் கிடைக்கும் போளிகள் மிக மிக மெலிதாக இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஜி அருமையன இடம்! படங்கள் அட்டகாசம். நீங்கள் எடுத்துக் கொண்ட படங்களும். நதியின் பாறைக்கற்களின் மீது நின்று கொண்டு ஆஹா.....ரொம்பப் பிடிக்கும்.

    என்னை எப்போதுமே ஈர்க்கும் இடங்கள் ஹிமாச்சலபிரதேசம், உத்ரகான்ட் மாநிலம் மற்றும் வடகிழக்குப் பகுதி (நாங்கள் திட்டமிட்டுப் போகமுடியாமல் ஆன பகுதி). அதுவும் உங்கள் பதிவுகள் வாசித்ததும் ஏக்கம் கூடியது.

    இமயமலைகளின் அடியிலும் மலைகளிலுமான இந்த இடங்கள்!! நான் இணையத்தில் ஏக்கத்துடன் பார்த்து ரசித்து அதுவும் உங்கள் நண்பர் ப்ரேம் (B)பிஷ்ட் பயணக் காணொளிகள் பார்த்து.....மகன், ஹிமாச்சலிலும் நிறைய இடங்கள் இருக்கு இன்னும் என்றாலும் அடுத்து நாம் சேர்ந்து போறப்ப உத்ரகான்ட் பகுதிதான் மனதில் இருக்கு என்று அவன் சொன்னதும் எனக்கு மகிழ்ச்சி. கூடவே சொன்னான் நீங்க ரெண்டு பேரும் உங்க ஆரோக்கியத்தை நன்றாகப் பராமரித்து வைச்சுக்கோங்கன்னு.

    மீண்டும் பதிவுக்கு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. ஹிமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட்,வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் பிடித்தவை தான். உங்களுக்கும் இந்தப் பகுதிகளுக்கு சில பயணங்கள் அமைய வாழ்த்துக்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஜி.

    தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தது.

    காணொளி இரவு நேரமோ... ? (மாலை ஏழு மணி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள், தகவல்கள் மற்றும் காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. காணொளி மாலை ஆறு மணி அளவில் எடுக்கப்பட்டது ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அந்தநிலவும், நதியழகும் படம் மிக அற்புதம்.

    எல்லா இடங்களிலும் தாங்கள், மற்றும் தங்கள் நண்பர் என எடுத்த புகைப்படங்களும் நன்றாக உள்ளது.

    இயற்கை அழகு, மற்றும் அழகான மலைத்தொடர்களை ப்பற்றிய இந்தப் பயணத்தொடர் ஆரம்பித்திருப்பது சந்தோஷம். நீங்கள் பயணம் செய்த இடத்தைப் பற்றி விபரமாக சொல்லியிருக்கிறீர்கள். அனைத்தும் படித்து தெரிந்து கொண்டேன். தொடர்ந்து பயணத்துடன் வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வெங்க்ட்ஜி இடம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டாயிற்று. இடத்தையும் குறித்து வைத்துக் கொண்டுவிட்டேன். ஹிந்தியில் காலா இல்லையா? இந்த மொழியில் காலு.

    மலைகள் படம் பார்த்துப் பார்த்து ரசித்தேன் ஜி. மலைகளும் மரங்களும் அதன் இடையில் சாலையும் ரொம்பவே கவர்கின்றன.

    காணொளியையும்ம் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன். சூரியன் மறையும் நேரம் என்று தெரிகிறது, அந்த ஒளியிலும் காட்சி நன்றாக வந்திருக்கிறது. மலைகள் கீழே நதி வெகு அழகு. மேலே ஒரு பெரிய பாலம் தெரிகிறது. மிக அழகான நதி. பதிவில் விரிவாகச் சொல்லும் போது என்ன நதி என்று தெரியவரும் என்று நினைக்கிறேன். ரொம்ப அழகான இடத்துக்குப் போய் வந்திருக்கிறீர்கள். இடத்தைப் பார்த்தாலேயே அங்கேயே அமர்ந்துதியானம் செய்யலாம் அளவிற்கு அமைதி இயற்கையின் ஒலி மாத்திரமே இருக்கும் என்றும் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தியிலும் சில இடங்களில் காலு என்று சொல்வதுண்டு - குறிப்பாக கருப்பான மனிதர்களை காலு என்று அழைப்பதுண்டு.

      படங்களும், காணொளியும் உங்களுக்கும் பிடித்திருந்ததால் மகிழ்ச்சி. மேலும் தகவல்கள் வரும் பகுதிகளில் வரும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. சுத்தமான இடமும், இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருப்பதால் நகரத்தின் தொல்லைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்க ஏற்ற இடம் இந்த இடம். //

    பார்ப்பதற்கு மிகவும் அழகான இடமாக அமைதியான இடமாக இருந்தது, நீங்களும் சொல்லி விட்டீர்கள். காணொளி மிக ருமை, மலைமுகடும், முழுநிலவும், நிலவின் பிதிபலிப்பு நீரில் தெரிவதும் அழகு. நீரின் சல சலப்பு மட்டும் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாலம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பாலம் போன்று பல இடங்களில் உத்திராக்கண்ட் மற்றும் ஹிமாச்சலில் நதிகளுக்கு குறுக்கே பார்க்க முடியும் அம்மா. இந்தப் பாலம் மிகவும் பழமையானது என்பதால் அதைப் பயன்படுத்த தடை இருக்கிறது - ஆனாலும் மனிதர்கள் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. வளைந்து நெளிந்து போகும் பாதை…, பாடலை நினைக்க வைத்தது.
    நிறைய பாடல்கள் நினைவுக்கு வந்தன
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வளைந்து நெளிந்து போகும் பாதை பாடலும் வேறு சில பாடல்களும் நினைவுக்கு வந்தது - எனக்கும் முதல் பாட்டு நினைவுக்கு வந்தது.

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. கடவுள் கொடுக்க நினைக்காத ஒன்றை எவ்வளவு முறை கேட்டும் என்ன செய்தும் கொடுக்கச்செய்ய முடியாது...... எல்லாம் அனுபவம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கடவுள் கொடுக்க நினைக்காத ஒன்றை எவ்வளவு முறை கேட்டும் என்ன செய்தும் கொடுக்கச்செய்ய முடியாது.......// - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  9. படங்கள் மிக அழகு.. அதிலும் வேகமாக ஓடும் ஆற்றின் பின்னணியில் பாறையில் சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  10. பைன்மரக் காடு கொடைக்கானலை நினைவுபடுத்தியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான மலைப்பகுதிகளில் இது போன்ற பைன் மரங்களும், தேவதாரு மரங்களும் இருக்கின்றன. நிறைய இடங்களில் இது போன்று பார்த்திருக்கலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  11. பைன் மரக்காடுகளின் புகைப்படம், பொன் ஒளியில் மின்னும் நதி, இடத்தைப் பற்றிய வரலாறு எல்லாம் இனி வரும் காட்சிகளைக் காணும் ஆவலை அதிகரிக்கிறது. பெயர் மாற்றங்கள் ஒரு சிலருக்குச் சற்று வருத்தம் தரும் என்றாலும் இவை எல்லாம் காலத்தின் கட்டாயங்கள் ஆகிவிட்டன. தொடர்கிறோம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் - மேலும் சில தகவல்கள் இருக்கின்றன.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  12. லான்ஸ்(d)டௌன் அழகான இடம் என்பதை படங்களே எடுத்துக்காட்டுகின்றன. கண்டு களிப்புற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  13. அவசரமா படிச்சுட்டு ஓடிட்டேன். இப்பதான் நிதானமா வாசிக்க ஆரம்பிச்சேன். பயணக்கட்டுரைகளை விடமுடியாது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பயணக் கட்டுரைகளை விடமுடியாது// உண்மை. நிதானமாக வந்தாலும் சில பகுதிகளை படித்து கருத்துக்களை பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....