அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி பதினான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
Reduce! Reuse! Recycle - 10 அக்டோபர் 2024:
நம் வீட்டை சுத்தம் செய்வது என்று முடிவெடுத்தால் அதற்கு இந்த மூன்று RRR வார்த்தைகள் மிகவும் ஏற்றது என்று சொல்லலாம்! இதே வார்த்தைகளை நம் மனதை சுத்தம் செய்யவும் எடுத்துக் கொள்ளலாம்! தேவையில்லாத எண்ணங்களையும் குறைத்து நற்சிந்தனைகளை மீண்டும் மீட்டெடுத்து அதை அடுத்த தலைமுறைக்கும் பரப்புதல் என்று எவ்வளவு பெரிய சிந்தனை இது!
சமையல் செய்தவாறே வானொலி பண்பலையில் என் கவனத்தை செலுத்திய போது அதில் ஒலித்த இந்த மூன்று வார்த்தைகளும் வேறுவிதமான உண்மைகளை எனக்கு உணர்த்தியது! இன்றைய நாளில் இது குறித்து நாம் எல்லோருமே சிந்திப்போம்!
நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!
******
தாய்ப்பாசம் - 10 அக்டோபர் 2024:
நவராத்திரி நேரம் என்பதால் எங்கு நோக்கினும் கண்கவரும் கொலு பொம்மைகள் வியாபாரம்! தள்ளுவண்டிகளில், டெம்ப்போக்களில் எடுத்து வந்து சுற்றி சுற்றி கூவி கூவி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்! சமீபத்தில் அப்படி எங்கள் குடியிருப்பு வாசலில் ஒரு டெம்ப்போ நிறைய அழகான கொலு பொம்மைகள்!
இந்த வருடத்துக்கு தான் நிறைய வாங்கியாச்சே! சும்மா போய் வேடிக்கை பார்த்துட்டு முடிஞ்சா ஃபோட்டோ எடுத்துட்டு வரலாம் என்று தான் சென்றிருந்தேன்! அக்கா! இங்க பாருங்க கருடசேவை, அன்னபூரணி, ரங்கநாதர், மீனாட்சி சொக்கர், அறுபடை வீடு முருகன் செட் என்று வரிசையாக காண்பித்துக் கொண்டிருந்தார் அந்த வியாபாரி!
வண்டியின் பின்புறம் அவரின் மனைவி அமர்ந்து கொண்டும், வேட்டியால் வண்டியின் இருபுறமும் கட்டி விடப்பட்ட தூளியில் அவர்களின் குழந்தை ஒன்றும் உறங்கி கொண்டிருந்தது! என்னருகே நின்றிருந்த பெண்மணி ஒரு குறிப்பிட்ட பொம்மையை எடுத்துக் காண்பித்து “இது என்ன பொம்மைன்னு சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டிருந்தார்!
ஒரு அம்மாவின் மடியில் குழந்தை இருப்பது போல் இருந்தது அந்த பொம்மை! உடனே பொம்மை வியாபாரியின் மனைவி அதற்கு ‘தாய்ப்பாசம்’ என்று தாங்கள் பெயரிட்டிருப்பதாக சொன்னதும்…. சட்டென்று என் கண்கள் வேட்டி தூளியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையையும் அதன் அம்மாவையும் தான் சந்தித்தது!
வேடிக்கை பார்க்கப் போன நான் கடைசியில் அவரிடம் அறுபடை வீடு முருகன் செட் ஒன்று வாங்கினேன்! திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என்று முருகனின் அறுபடை வீடுகளில் அவன் அழகுற காட்சி தருவது போன்று இந்த வருடம் எங்கள் வீட்டு கொலுவிலும் ஒரு படி முழுவதும் நிறைந்து அழகுற காட்சி தருகிறான்!
******
இனிமையான சந்திப்புகள் - 10 அக்டோபர் 2024:
அக்கம்பக்கம் உள்ள நட்புகளோடு மட்டுமல்லாமல் இந்த நவராத்திரி சமயத்தில் எனக்குத் தெரிந்த இணைய நட்புகளையும் நான் அழைப்பது வழக்கம்! அந்த அழைப்பை ஏற்று வருகை புரிந்து நேரத்தை இனிமையாக்கிய நட்புகளான Uma Sundar, Rajeswari Periyaswamy மற்றும் அவரது மகள் சியாமளா.
நேற்றைய பொழுதில் Geetha Sambasivam மாமியின் அழைப்பை ஏற்று அவரது இல்லத்திற்குச் சென்று எங்கள் வீட்டு தாம்பூலத்தையும் சுண்டலையும் கொடுத்து மாமியிடமிருந்து தாம்பூலம் பெற்றுக் கொண்டு மாமா மாமியிடம் ஆசிகளும் பெற்றேன்! மாமி என்னிடம் கொடுத்தனுப்பிய குணுக்கை எங்கள் வீட்டில் மூவரும் ருசித்தோம்! ஜோராக இருந்தது மாமி!
அடுத்து உமாவின் இல்லத்திற்கும் சென்று சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரிடமிருந்தும் தாம்பூலம் பெற்றுக் கொண்டேன்! நேற்றைய மாலைப் பொழுதில் எங்கள் வீட்டுக்கு வருகை தந்திருந்த ரிஷபன் சாரையும் மேடமையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. சற்று நேரம் அவர்க்ளுடன் இனிமையாக பேசிக் கொண்டிருக்க முடிந்தது!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
5 நவம்பர் 2024
இந்த வருடம் எங்கள் மருமகளால் நாங்கள் ஆரம்பித்த முதல் கொலுவில் அறுபடை முருகன் செட் இடம்பெற்றிருந்தது. தாய்பபாசம் எண்ணம் அருமை.
பதிலளிநீக்குகீதா அக்கா வீட்டு கொலுவுக்கு சென்று வந்தீர்களா? சூப்பர்.
புதுவரவு அறுபடைவீடாகத்தான் இருக்கும் என்று ஊகித்தேன் அதுதான் நீங்க வாங்கியிருக்கீங்க ஆதி!!!
பதிலளிநீக்குதாய்ப்பாசம் பெயர் சூப்பர்...
கீதாக்கா வீட்டுக்குச் சென்று வந்தீர்களா! சூப்பர்!!
கொலுவுக்குப் பொம்மைகள் வாங்க வேண்டாம் என்று சென்றாலும் கூட சில சமயம் சில நம்மை ரொம்ப ஈர்த்து வாங்க வைத்துவிடும். நான் இப்போது கொலு வைப்பதில்லை என்றாலும் கூட வாங்கி தங்கைகளுக்குக் கொடுக்கலாம் என்று நினைப்பதுண்டு.
வாசகம் சூப்பர்!
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. தாய் பாசம் என அந்த பொம்மைக்கு பெயரிட்டது பொருத்தம் தான்.
புதிதாக கொலு பொம்மை வாங்கியதற்கும் நட்புகளின் கொலுவுக்கு சென்று வந்தமைக்கும் வாழ்த்துக்கள். இந்த மாதிரியான விஷேட தினங்களில் சந்திப்புகள் மனதிற்கு மகிழ்வைத் தரும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நட்புக்களின் கொலுவுக்கு சென்று வந்தது மகிழ்வாக இருந்தது தொடரட்டும் நட்புகள்.
பதிலளிநீக்கு