தொகுப்புகள்

திங்கள், 4 நவம்பர், 2024

காத்திருப்பு - சருகுகள் - நடை நல்லது - பகுதி பதினான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பதினான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு அடுத்த பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம்.  எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!


காத்திருப்பு - 20 செப்டம்பர் 2024:


இன்றைய நடை திருவரங்கத்தில் சித்திரை வீதிகளில் - வீட்டிலிருந்து புறப்பட்டு மேட்டுக்கோவில் வழியாக மேலச்சித்திரை வீதிக்குள் நுழைந்து அப்படியே ப்ரகாரமாக சுற்றி வந்து வீடு திரும்பினேன்.  இந்த நடை மொத்தம் 4.2 கிலோமீட்டர் என்கிறது  Google Fit App.  வீதி வழி செல்லும்போது அந்தக் கால வீடுகளில் இருக்கும் இன்றைய மாற்றங்கள் நிறையவே தெரிகிறது.  சில வீடுகள் பழமையினை இன்னும் பறைசாற்ற, பல வீடுகள் மொத்தமாக மாறி இருக்கின்றன.  ஓட்டு வீடுகள் போய் குடியிருப்புத் தொகுப்புகளாக சில வீடுகள் மாறி இருக்கின்றன.  இன்றைக்கும் பழமையும் புதுமையும் கலந்து சில வீடுகள் இருக்கின்றன.  அவற்றை எல்லாம் பார்த்தபடியே வீதிகளில் நடந்து வந்தேன்.  எனது எதிரே ஒரு மூதாட்டி - கழுத்து ஏதோ நரம்புப் பிரச்சனை காரணமாக கீழே நோக்கியபடியே இருக்கிறது. மேலே நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை அவரால். கண்களை மட்டும் மேலே தூக்கி பார்க்கிறார்.  இந்த வயதிலும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை கைகளில் தூக்கிக்கொண்டு செல்வதை பார்க்க முடிந்தது.  


அவர் யார், அவர் குடும்பத்தில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது என்றாலும், இந்த நிலையிலும் அவர் வந்து தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு போகிறார் என்றால் வீட்டில் நிச்சயம் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே தோன்றியது. இங்கே பல வீடுகளில் பிள்ளைகள் அனைவரும் வெளியூர், வெளி நாடு என்று சென்று விட தனியாகவே இருக்கிறார்கள்.  தங்களது வேலைகளை முடிந்தவரை பார்த்துக்கொண்டு யாருடைய உதவியும் இல்லாமல் இருப்பவர்களையும் பார்க்கிறேன்.  இன்னொரு அடுக்கு மாடிக்குடியிருப்பில் 97 வயது பாட்டி இருக்கிறார் - தனியாக.  பிள்ளைகள், பேரன், பேத்திகள் என அனைவரும் வெளி நாட்டில்! சமைப்பதற்கும் உதவி செய்யவும் ஒரு பெண்மணி, வீடு சுத்தம் செய்ய ஒரு பெண்மணி, துணி தோய்த்து தர வேறு ஒரு பெண்மணி, இரவு நேரங்களில் கூடவே தங்குவதற்கும் பகல் நேரத்தில் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வதற்கும் ஒரு பெண்மணி என நிறைய உதவியாளர்கள்.  அவர் வீட்டில் பாத்திரம் கழுவும் பெண்மணி அவரைப் பற்றிய complaint செய்தார் - “பாத்திரம் இல்லைன்னா மேல பரண்ல இருக்கற பாத்திரம் எல்லாம் எடுத்துப் போட்டு கழுவச் சொல்வாங்க அந்த பாட்டி!” என்பது அவரது குற்றச்சாட்டு! 


இப்படியே அந்தப் பாட்டியை பற்றி யோசித்துக் கொண்டே நடக்கும்போது ஒரு வீட்டின் வாயிலில் இன்னுமொரு பாட்டி - பார்த்ததும் தெரிந்தது அவருடையவர் இல்லை என்பது.  அவரைப் பார்த்ததும், பக்கத்து வீட்டு பெண்மணி, “என்ன பாட்டி, எப்படி இருக்கீங்க, என்ன விசேஷம், வாசல்ல உட்கார்ந்து என்ன பார்த்ததுண்டு இருக்கீங்க? என்று வரிசையாக கேள்விகள்!  அந்தப் பாட்டியின் பதில் எல்லா கேள்விகளுக்கும் சேர்த்து ஒன்றாக வந்தது - “பெருமாள் எப்ப வந்து என்னை அழைத்துப் போவான் என்று அவனுக்காக காத்திருக்கிறேன்!” மிகவும் சுலபமாக ஒரு பதிலைச் சொல்லி விட்டார் பாட்டி.  அவரது குரல் அந்த வீட்டைத் தாண்டிச் சென்றுவிட்டாலும் என் காதுக்குள் ரீங்கரித்துக் கொண்டே இருந்தது. காத்திருப்பதைத் தவிர நம்மிடம் என்ன வழி இருக்கிறது.  வருவதும் போவதும் நம் கையில் இல்லையே என்று அந்த விஷயத்தினைப் பற்றியே யோசித்துக் கொண்டே நடந்தேன்.  நாம் வர வேண்டும் என்று விரும்பினால் வந்து விடுவதற்கும், போக வேண்டும் என்று நினைத்தால் போய்விடவும் நம்மில் யாருக்குமே கொடுப்பினை இல்லையே! காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை!  இந்தச் சிந்தனைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது…  நடை முடிந்து வீடு திரும்பியதும் அந்தச் சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.  இந்த விஷயங்கள் குறித்த உங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.


*******


சருகுகள் - 28 செப்டம்பர் 2024:



உங்களில் எத்தனை பேர் வாழைச் சருகுகளை அறிவீர்கள்?  அந்தச் சருகில் சுடச்சுட சாதம் போட்டு ரசம் விட்டு பிசைந்து சாப்பிட்டு இருக்கிறீர்கள்?  என்னதான் வாழை இல்லை காய்ந்து சருகாகி விட்டாலும் அதனை சில வீடுகளில் உணவு உண்ண இலையாக பயன்படுத்துவது உண்டு. முன்பெல்லாம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது ஒரு சில ஊர்களில் மட்டுமே இதன் பயன்பாடு இருக்கிறது.  திருவரங்கத்தில் இன்றைக்கும் சருகுகள் மாலை நேரச் சந்தையில் (தெற்கு சித்திரை வீதியில்) கிடைக்கிறது. கட்டுக்கட்டாக விற்பனைக்கு வைத்திருப்பார்கள்.  விற்பனையும் நடக்கிறது என்பதால் தானே வைத்திருக்கிறார்கள்.  பலரும் foam தட்டுகளுக்கு அல்லது பாக்கு மட்டை தட்டுகளுக்கு மாறி விட்டாலும், வாழைச் சருகுகளை இன்னமும் வாங்கும் சில வாடிக்கையாளர்களேனும் திருவரங்கத்தில் இருக்கிறார்கள்.  நேற்றைக்கு மாலை நடைப்பயணத்தின் போது இப்படியான சருகுகளை விற்பனை செய்வதை பார்க்க முடிந்தது.  


ஒன்றுக்கும் பயனில்லை என்று கருதப்படும் உதிர்ந்த சருகுகளைக் கூட விற்பனை செய்யமுடியும் எனும்போது, உதிரக் காத்திருக்கும் சில சருகுகளுக்கு மதிப்பில்லை என்று பார்க்கும்போது மனதில் வலி.  முன்பெல்லாம் திருவரங்கத்தில் இப்படி பார்த்தது இல்லை.  திருவரங்கத்து வீதிகளில் பல்வேறு மடங்கள், சத்திரங்கள், பாடசாலைகள் என்று தான் பார்த்திருக்கிறேன்.  ஆனால் சமீப காலங்களில் வேறு ஒரு விஷயம் பார்க்க முடிகிறது.  அது முதியோர் இல்லங்கள்.  திருவரங்கத்து வீதிகளில் தற்போது சில முதியோர் இல்லங்களை காண நேரும்போது மனதில் எதோ ஒரு வித வலி! அவர்களைச் சார்ந்தவர்கள் எங்கேயோ வெளி நாடுகளில்/மாநிலங்களில் இருக்க, இங்கே பார்த்துக் கொள்ள யாரும் இல்லாமல், தனியாக இருக்கவும் முடியாமல் இப்படி முதியோர் இல்லங்களில் இருக்க நேர்ந்துவிடுகிறது.  


இவர்களுக்கு அரங்கனின் காலடியில் இருப்பதே பிடித்திருக்கிறது என்பதும் ஒரு காரணமாக இருந்தாலும், இப்படியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதால் தானோ என்னவோ முதியோர் இல்லங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக திருவரங்கத்தில் முளைக்க ஆரம்பித்து விட்டது.  எனது வீட்டின் அருகிலேயே மேலூர் சாலையில் ஒரு முதியோர் இல்லம், தெற்கு சித்திரை வீதியில் ஒரு முதியோர் இல்லம், அம்மா மண்டபம் சாலையில் ஒரு முதியோர் இல்லம் என மூன்று முதியோர் இல்லங்களை இந்த முறை பயணத்தில் பார்க்க நேர்ந்தது. இன்னமும் கூட இருக்கலாம். வாசலில் அந்தோ பரிதாபமாக அமர்ந்து சாலையில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு மூத்தகுடிமகன். தன்னிச்சையாக நடக்க முடியாது என்பது அவர் முன்னர் வைத்திருந்த Walker சொன்னது.  இப்படியான முதியோர் இல்லங்களில் கவனிப்பு எப்படி இருக்கும் என்பதை அறியேன். ஆனாலும் வீட்டில் வைத்து பார்த்துக்கொள்வதை போல இருக்காது என்றே என் புத்திக்கு எட்டுகிறது.  


இந்த உதிரக் காத்திருக்கும் சருகுகள் எதற்காக இங்கே இன்னும் காத்திருக்கின்றன என்பதை ஆண்டவனே அறிவான்.  எத்தனை எத்தனை பிரச்சனைகளுடன் யாரும் இல்லாமல் இப்படியான இல்லங்களில் வாழ்வது ஒரு விதத்தில் சாபம்! சமீபத்தில் காத்திருப்பு என்ற தலைப்பில் எழுதியதை போல, இப்படியானவர்கள் காலனின் பாசக்கயிறு எப்போது தங்கள் கழுத்தை இறுக்கும் என்று காத்திருக்கிறார்கள். ஆனால் அந்த ஆண்டவனோ, “உன் நேரம் இன்னும் வரவில்லை!” என்று விட்டு வைத்திருக்கிறார். எப்போது நேரம் வரும், எப்போது உதிரலாம் என பல சருகுகள் இங்கே காத்திருக்கின்றன.  இப்படி எல்லாம் இருப்பதை பார்க்கும்போது எதிர்காலம் பற்றிய பலத்த சிந்தனைகள் மனதில் அலைமோதுகிறது.  எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்ற நம்பிக்கை உண்டு என்றாலும் சில காட்சிகள் நம்மை கலங்கடிக்கின்றன.  அவற்றில் முதியோர் இல்ல காட்சிகளும் ஒன்று!


மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

4 நவம்பர் 2024

11 கருத்துகள்:

  1. இன்றைக்கு என்ன மனதைக் கனக்க வைக்கும் பதிவுகள்?

    பதிலளிநீக்கு
  2. திருவரங்கத்து வீதிகளில் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் எனப் பல்வேறு மாற்றங்கள் கடந்த பத்து இருபது ஆண்டுகளாக. பழமை விலகி வருகிறது. 90ல் நான் கோயிலினுள் ஆளுயரப் புற்கள் வளர்ந்திருக்கும் (வயல் போன்று) இடங்களைப் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. முந்தைய மற்றும் இனி வரும் தலைமுறைக்குத் தனிமை தவிர்க்க முடியாது. ஓரிரு குழந்தைகள், பலரும் வெளிமாநிலம், நாட்டில் வாழ்க்கை, பணத்திற்குக் குறைவில்லை ஆனால் பெற்றோருக்குத் தனிமை...

    முதியோர் இல்லம் அல்லது ரிடையர்மென்ட் ஹோம் (கொஞ்சம் பணமுள்ளவர்களுக்கு)... தனிமையில் வாழ்வின் இறுதியை நோக்கும் நிலை. தூரத்தில் இருக்கும் மகன்/மகளுக்கு நன்றாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை.. ஆனாலும் அவரவர் வாழ்க்கையை அவரவர்தானே வாழ்ந்து தீர்க்கணும்? ,

    பதிலளிநீக்கு
  4. 97 வயதுப் பாட்டி அதுவும் தனியாக...   என்ன நேரமோ...  என்ன விதியோ...  பாவம்.

    பதிலளிநீக்கு
  5. உதிரக்காத்திருக்கும் சருகுகள்..   

    அந்த சருகுகளையாவது பயன்படுத்துபவர் இருக்கிறார்கள்..  வயதானவர்களை இப்படி விட்டிருக்கிறார்கள் என்று சொல்லும்போது, அவர் மூலமாக நான்கு பணி செய்பவர்கள் பிழைக்கிறார்களே என்று தோன்றியது.  

    பதிலளிநீக்கு
  6. சருகுகள் விற்பனையை தஞ்சையில் இருந்தபோது பார்த்திருக்கிறேன், உபயோகித்திருக்கிறேன்.   சமீபத்தில் பார்க்கவும் இல்லை, உபயோகிக்கவும் இல்லை! 

    இதோ..  கடந்த ஐந்து நாட்களாக குடந்தையில் இருந்தேன்.  அங்கும் பார்க்கவில்லை!

    பதிலளிநீக்கு
  7. சருகுகள் தையல் இலை போன்றவை புதிய வாழையிலை இல்லாதபோது பெரியவர்களுக்கு உபயோகப்படும். பலர் தட்டில் சாப்பிடுவதை விரும்புவதில்லை

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கையே காத்திருத்தல்தான் என்று தோன்றும், பல விஷயங்களுக்கும், இறுதிப் பயணம் வரை!

    தனிமை என்பது வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளை விடுங்கள், இங்கிருக்கும் பெற்றோரோ அல்லது ஒருவரோ, வயிற்றுப் பிழைப்புக்காக, அல்லது குழந்தைகளின் பள்ளிக்காக என்று மற்றொரு ஏரியாவில் இருக்கும் அல்லது மற்ற ஊரில் அல்லது மாநிலத்தில் இருக்கும் குழந்தைகளோடு கூட இருக்க மாட்டேன் தன் இடத்தை விட்டு வீட்டை விட்டு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் போது என்ன செய்ய முடியும்? இளைய தலைமுறைக்குப் பல சவால்கள் இருக்கின்றனவே! ஒரு சிலருக்கு மட்டும்தானே அருகில் இருக்க முடிகிறது. எனவே தனிமை பல குடும்பங்களில் தவிர்க்க முடியாமல் ஆகிவிடுகிறதுதான்.

    என் சிறு வயதிலேயே கூட என் பாட்டி சில வருஷங்கள் தனியாகவே இருந்தாங்க கிராமத்தில், என் அப்பாவின் வேலையால் நாங்கள் வேறு ஓர் இடத்தில். 2 1/2 மணி நேரப் பயண வித்தியாசத்தில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. சருகுகள் - இவற்ற நம் வீட்டில் பயன்படுத்தியிருக்கிறோம். சாப்பிட்டும் இருக்கிறோம். இப்போது இங்கு பார்க்கவில்லை. ஸ்ரீரங்கத்தில் பார்த்திருக்கிறேன். வேறு எங்கும் பார்க்கலை, இங்கு இலை தொன்னைகள் நிறைய கிடைக்கின்றன கோயில்களில் பிரசாதமே இலை தொன்னைகளில்தான் சிறிதும் பெரிதாக என்பதால் கடைகளில் நிறைய கிடைக்கின்றன.

    இனி வரும் தலைமுறைக்கும் முதியோர் இல்லம் தவிர்க்க முடியாத ஒன்றுதான். வாழ்வியலே மாறியிருக்கிறதே, ஜி!

    ஒரு சிலர் இதை இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

    இன்றைய வாசகம் சூப்பர்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. எனக்கொரு டவுட்டூஊஊஊ .. எங்களை நாங்களே சந்தேகப்படுவது சரியா தப்பா??:)...

    வாழைச்சருகுகளும் விற்பனையாவதை முதன் முறையாக அறிகிறேன்.

    அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    முதியோர்களைப்பற்றிய செய்திகள் மனதை கனக்க வைக்கிறது. வயதான பின் குழந்தைகளின் ஆதரவு முழுமையாக கிடைக்காவிடில் கஸ்டந்தான். சிலர் சமாளிக்க கற்றுக் கொண்டு விடுவார்கள்.அவ்விதம் நேராத போது பலர் அடையும், மனகஸ்டங்களை சொல்லி ் அடக்க முடியாது.

    வாழை சருகுகள் விற்பனை செய்திகளும் படமும் இடம் பெற்றிருப்பது நன்று. முன்பு இது போல் பக்குவப்படுத்தி விற்பனைக்கு என்று வந்ததில்லை.

    எங்கள் பாட்டியும் எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து தட்டுக்களில் சாப்பிட மாட்டார்கள். சமயங்களில் கடைகளில் வாழை இலை கிடைக்காவிடில், கடை வீதிகளில் பல இடங்களில் தேடித் தேடி வாங்கி வருவார்கள். சிலசமயம் வாழை சருகு கூட வீட்டிலும் இருக்காது. அப்போது எதுவும் சாப்பிடாது உபவாசத்துடன் அன்றைய ஒரு நாளை கழிப்பார்கள். என்ன ஒரு வைராக்கியம் என நான் எண்ணுவதுண்டு.

    தங்களின் நடை பதிவுகள் தொடரட்டும். இன்றைய பதிவின் கனத்த மனதோடு நானும் தொடர்கிறேன். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....