அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்தத் தொடரின் முதல் பகுதியை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.
செங்குருவி செங்குருவி!
சென்ற பகுதியில் கோவை ஜங்ஷனிலிருந்து மீட்டர் ஆட்டோவில் பயணித்த கதையை உங்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன்! இரவு 10 மணி சுமாருக்கு தான் மாமா வீட்டிற்கு சென்றடைந்தோம்! இரவு உணவை ரயிலிலேயே எடுத்துக் கொண்டுவிட்டதால் எல்லோரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு படுத்தது தான் தெரியும்! நல்லதொரு ஆனந்தமான தூக்கம் கண்களைத் தழுவியது!
திருச்சி வெயிலில் புழுங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு கோவையின் சிலுசிலு காற்று சுகமோ சுகம் தானே! கூடவே ‘எங்க ஊரைப் பார்த்தீங்களா! எப்படியிருக்கு! என்று என்னவரிடமும் மகளிடமும் சற்று பெருமை பேசிக் கொள்ளலாம்!’ வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா…:) சரி! சரி! காலையில் சீக்கிரம் எழுந்து எங்கள் குளுகுளு பயணத்தை வேறு துவக்க வேண்டுமே!
கோவையில் உறவினர் திருமணம் என்று சொல்லியிருந்தேனே! நாங்கள் கோத்தகிரிக்கு கிளம்பும் நாளன்று தான் அவர்கள் வீட்டிலும் முகுர்த்தக் கால் நடும் வைபவம் இருந்தது! காலையில் எழுந்து எங்கள் பயணத்துக்காக நாங்கள் தயாரானதும் அங்கும் சென்று ஒரு அட்டெண்ட்ஸை போட்டு விட்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டோம்!
கோவையின் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்! வெளியூருக்கு செல்லும் பேருந்துகள் எல்லாம் இங்கிருந்து தான் செல்லும்! பேருந்துகள் முன்னும் பின்னுமாக நகரும் போது அடிக்கும் ஹாரன் சப்தங்கள் அப்போது சின்னஞ்சிறு பெண்ணான என்னை மிகவும் மிரள வைக்கும்! என்ன எங்கேயும் விட்டுட்டு போயிடாதப்பா! என்று அப்பாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டு நடந்து சென்ற நினைவுகள் நிழலாய் பின் தொடர்ந்தன!
மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்து ஒன்றில் ஏற முயன்ற போது, ‘இந்த வண்டி கிளம்ப நேரமாகுங்ணா! ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணினீங்ணா GPT வந்துருவான்! என கொங்குத் தமிழில் மணக்க மணக்க வழிநடத்திச் சொன்னார் ஒரு கண்டக்டர்! சிறிது நேரத்தில் அவர் சொன்ன பேருந்தும் வந்துவிடவே மேட்டுப்பாளையத்தை நோக்கிய எங்கள் பயணமும் துவங்கியது!
துடியலூர், LMW, Teachers colony, LIC colony, காரமடை, பெரிய நாயக்கன் பாளையம் என்ற வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தது எங்கள் பேருந்து! ஒரு மணிநேரப் பயணம்! டவுன் பஸ் போல எல்லா நிறுத்தங்களிலும் நின்று நின்று பயணித்தது! காரமடையை கடந்து செல்லும் போது காரமடை ரங்கநாதரை தரிசித்ததை விட காதுக்குள் ‘செங்குருவி செங்குருவி காரமட செங்குருவி’ என்ற திரைப்பாடல் தான் ஏனோ நினைவுக்கு வந்து சென்றது…:)
அப்போது மாதம் ஒருமுறை காரமடையிலிருந்து மஞ்சள் உடையுடுத்தி வந்து குறி சொல்பவர்கள் எல்லோரின் வீட்டின் முன்பு நின்று ஏதேனும் வாக்கு சொல்வார்கள்! அவையெல்லாம் சிலநேரங்களில் நிஜமாக இருந்ததும் உண்டு! இதையெல்லாம் சங்கிலித் தொடர் போல நினைத்துக் கொண்டு பயணித்தேன்!
இயற்கையின் எழில்!
எங்கள் பேருந்து பயணத்தில் கடந்து செல்லும் பாதைகளில் சிக்கிக் கொண்ட என் நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகிறேன்! காரமடையைப் பற்றி சொன்னது போல் பெரிய நாயக்கன் பாளையம் என்ற பகுதியை கடந்து செல்லும் போதும் என் மனதில் பொதிந்திருந்த பசுமை நிறைந்த பொதிகளை என்னருகில் அமர்ந்திருந்த என்னவரிடம் பகிர்ந்து கொண்டு சென்றேன்!
அப்பா பல ஊர்களில் பணியாற்றிய பின் இறுதியாக டிரான்ஸ்வர் ஆனது என்றால் அது கோவை தான்! கோவைக்கு வந்த பின் அவருக்கு வேறு எங்கேயும் நகரத் தோன்றவில்லை! உலகில் இரண்டாவது சுவையானத் தண்ணீர் சிறுவாணி என்பதில் தொடங்கி பல சிறப்புகளை எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருப்பார்! அப்படி அப்பாவும் அம்மாவும் கோவையில் செட்டிலான முதல் இடம் என்றால் அது இந்த பெரிய நாயக்கன் பாளையம்!
இரண்டு வருடங்கள் இங்கே வசித்த பின் தான் ஹவுசிங் யூனிட்டில் குடியேறினாராம்! இந்த பெரிய நாயக்கன் பாளையத்தில் அப்பா அம்மாவுடன் வசித்த மனிதர்களும் எனக்கு நினைவுக்கு வந்தனர்! ஒரு பகுதி என்றால் வீடு வாசல் மட்டுமல்லவே! மண்ணோடு மனிதர்களும், செடி கொடிகளும், கால்நடைகளும் என பின்னிப் பிணைந்தது தானே நம் வாழ்க்கை முறை!
சரி! ஒருவழியாக இப்போது எங்கள் பேருந்தும் நினைவுகளைச் சுமந்து கொண்டு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டது! பயணப் பொதிகளைச் சுமந்தபடி நாங்களும் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்! நண்பர் மோகன் எங்களுக்காக தன் காருடன் அங்கே காத்துக் கொண்டிருந்தார்! இனி! அவருடன் தான் நாங்கள் கோத்தகிரிக்கு பயணிக்கப் போகிறோம்!
சுகமான பயணம்! வழிநெடுக இயற்கை எழில் கொஞ்சும் விதமான காட்சிகளில் கண்கள் நிறைந்தன! கொஞ்சம் கொஞ்சமாக வெப்பம் குறைந்து கொண்டே வருவதும், மரங்களும், செடிகளும் சாலையின் இருபுறமும் அரணாக காவல் காப்பதும், வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில் ஒருவித த்ரில்லுடன் பயணிப்பதும் என மெல்ல மெல்ல மனதில் அமைதியும், உற்சாகமும் ஒருசேர தாக்கி எங்களை பயணிக்க வைத்தது!
வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி எங்களை இறங்கச் சொன்னார்! அங்கிருந்து கீழே பார்த்த போது பரந்து விரிந்த இயற்கையும், சிறுசிறு பெட்டிகளாகத் தெரிந்த நகரும் என கண்களுக்கு ரம்மியமான காட்சியாக இருந்தது! அந்த இடத்தில் நம் முன்னோர்கள் சிலர் குடும்ப சகிதமாக அமர்ந்திருந்தனர்! அவர்களை எங்கள் அலைபேசியின் கண்கள் வழியாக சிறைபிடித்துக் கொண்டோம்!
கோத்தகிரியில் எங்கே எல்லாம் சென்றோம்?? என்ன அனுபவங்களை பெற்றோம்? மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன். பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
18 ஜூலை 2025
'முன்னால் கிளம்பும் பஸ் அது' என்று சொல்லி விட்டு, நாம் அதில் ஏறிய சில நிமிடங்களில் நாம் முன்னர் அமர்ந்திருந்த பஸ் கிளம்பிவிடும் அனுபவங்கள் எனக்கு உண்டு! அது தஞ்சை, மதுரைக்கதை!
பதிலளிநீக்குபடங்கள் குளுமை.
பேஸ்புக்கிலிருந்து இங்கே காபி செய்து போடும்போது 'சென்ற பதிவில் இப்படி சொல்லி இருந்தேன்' என்று தொடங்கும் வரியை எடுத்து விடலாம்!
ஆமாம் சார். இங்கும் அப்படி உள்ளூர் பேருந்துகளில் மாறி மாறி ஏறி இறங்கிய அனுபவங்கள் உண்டு.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
பெரியநாயக்கன் பாளையம், காரமடை என்று எல்லாம் நீங்கள் எழுதியிருப்பதை வாசிக்கும் போது எனக்கும் பழைய நினைவுகள் அலைமோதின. அப்போதிருந்த பெரியநாயக்கன்பாளையம் இப்ப நிறைய மாற்றங்கள்.
பதிலளிநீக்குபடங்கள் அருமை. கேட்கணுமா கோத்தகிரி போகும் வழி எல்லாம் பற்றி. குளு குளு உடம்புக்கும், காட்சிகள் மனதிற்கும் குளு குளு.
எனக்குப் பல சமயங்களில் தோன்றும் குறிப்பாக இந்த ஹிமாச்சல் இருக்கு பாருங்க அது என்னை மிகவும் கட்டிப் போட்ட ஒன்று. இப்படி மலைப்பகுதியில் இருந்துவிடமாட்டோமா என்று...
அட்லீஸ்ட் கோத்தகிரி மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமாச்சும்னும் தோன்றும்.
கீதா
எல்லா இடங்களிலுமே நிறைய நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. பயணக் கட்டுரை நன்றாக உள்ளது. சென்ற பதிவையும் படித்து விட்டேன். நான் கோவையின் பல இடங்களுக்கு சென்றதில்லை. எங்கள் அண்ணாவின் திருமணம் அந்த ஊரில்தான் நடைபெற்றது. அதற்குப் பின் இரு தடவைகள் கோவைக்கு சென்றுள்ளேன். அதன் பின் என் திருமணத்திற்கு பின்னரும் ஒரு தடவை சென்றுள்ளேன். பிறகு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
துடியலூர், LMW, Teachers colony, LIC colony போன்ற இடங்களை நீங்கள் கூறியதும் அப்போதைய என் கோவை பயணங்களும் நினைவுக்கு வந்தன. LIC காலனியில்தான் மன்னியின் அண்ணா குடும்பம் நீண்ட வருடங்கள் இருந்தார்கள்.
நல்ல இயற்கை எழில் கொஞ்சம் ஊர்தான் கோவை மாநகரம். நீங்கள் விவரிக்க விவரிக்க இடங்கள் ரம்மியமாக இருந்தது. படங்கள் அருமை. மேலும் உங்கள் பயணத்துடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அனுபவங்களும் அருமை. வருடங்கள் பல கடந்தாலும் மனதில் பசுமையாய் பதிந்து போன நினைவுகள்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஜி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குபயணத்தொடர் அருமை.
கோவையில் நான் படித்த போது இருந்த மாதிரி குளுமை இல்லை என்றாலும்.
மதுரையை விட கோவை மகிழ்ச்சியை தந்தது உண்மை. இப்போது நானும், மகனும் கோவை போய் வந்தோம். உறவினர்கள் மற்றும் கங்கா மருத்துவமனைக்கு போய் வந்தேன்.கோவையின் குளுமையை உண்ர்ந்தேன்.
உண்மை தான் அம்மா. ஒவ்வொரு முறையும் மாற்றம் கண்டு வருகிறது! வியர்வையே அறியாத கோவை! சிலுசிலுவென காட்சி தரும் கோவை! இப்போது மாறி விட்டது!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
உங்கள்பயணத்தில் நாங்களும் கோவைக்கு பயணித்தோம். காட்சிகளும் கண்டோம்.
பதிலளிநீக்குசேலம் சென்று இருக்கிறோம். கோவை சென்றதில்லை.
எங்கள் ஊருக்கு ஒருமுறை சென்று பாருங்கள்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.