வியாழன், 17 ஜூலை, 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******




வீட்டுச்சூழல், பரபரப்பு, டென்ஷன், படிப்பு, வகுப்புகள் என்று எல்லாவற்றையும் மூட்டை கட்டி ஒருபுறம் வைத்து விட்டு ஒரு நாலு நாளைக்கு எங்கேயாவது போய் நிம்மதியா இருக்கணும் என்று தோன்றிவிட்டது எங்கள் மூவருக்குமே! இதுபோன்ற சூழல் எல்லோர் வீடுகளிலுமே உருவாகும்! அப்போது சட்டென்று ஒரு பயணத்திற்கோ, சினிமாவுக்கோ, கோவில்களுக்கோ சென்று வந்தால் மனதும் ரிலாக்ஸாகி விடும்! இது உடல்நலத்தோடு மனநலமும் காப்பதற்கு ஒரு வழி என்று எடுத்துக் கொள்ளலாம்!


சரி! வாங்க! நாங்க அப்படி எங்கேயெல்லாம் போனோம்! நான்கு நாட்களை எப்படி உயயோகமாகவும், இனிமையாகவும் செலவிட்டோம் என்று சொல்கிறேன்! எங்களுக்கு பிடித்த வகையில் நேரத்தை செலவிட்டோம்! அது உங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உபயோகமாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி! இப்படி பகிர்ந்து கொள்வது எனக்குப் பிடித்திருப்பதால் மட்டும் தான் எழுதுகிறேனேத் தவிர லைக்ஸ் கமெண்ட்ஸ் என்பதற்காக அல்ல!


ரொம்ப நாளா கோத்தகிரியிலிருந்து நம்ம பதிவர் Amutha Krishna   அமுதாக்காவும், நண்பர் மோகனும் வாங்க! வாங்க! என அன்புடன் எங்களை கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்! கோவையிலும் உறவினர் திருமணம் ஒன்று இருந்தது! அதனால் இரண்டையும் ஒன்றிணைத்து ஒரு ட்ரிப் ப்ளான் பண்ணிக் கொண்டு நாங்கள் மூவரும் கிளம்பி விட்டோம்! 


இந்தப் பயணத்தில் உறவினர்கள் சந்திப்பு, நண்பர்கள் சந்திப்பு, குளுகுளு பயணம், வண்ண வண்ண மலர்கள், இயற்கை காட்சிகள், தேநீர் உலா என்று பல விஷயங்களின் தொகுப்பாக இந்த குறுந்தொடர் இருக்கும்! பரீட்சை சமயமாக இருக்கிறது பிறகு எழுதலாம் என்று தான் நினைத்தேன்! ‘ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ என்ற வாக்கை எடுத்துக் கொண்டு சூடாகவே உங்களுக்கு தரலாம் என்று முடிவெடுத்து விட்டேன்..🙂


திருச்சி ஜங்ஷனிலிருந்து மாலை 5:10க்கு‘ஜன்சதாப்தி’ ரயிலில் ஏறி கோவைக்குச் சென்று விடலாம் என்று நாங்கள் முன்பதிவு செய்திருந்தோம்! மயிலாடுதுறையிலிருந்து வரும் இந்த ரயிலில் திருச்சியில் ஏறினால் கரூர், ஈரோடு, திருப்பூர் என்ற வழித்தடத்தில் நான்கே மணிநேரத்தில் கோவையை எட்டி விடலாம்! சுகமான பயணமாக இருந்தது! 



இரவு கோவையில் இறங்கியதும் மீட்டர் ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு மாமா வீட்டிற்கு சென்றுவிடலாம் காத்திருக்க வேண்டாம் என்று ஈரோடு வரும் போதே ஆட்டோவுக்குச் சொல்லி வைத்திருந்தேன்! சமீபத்தில் கல்லூரி சந்திப்புக்காக கோவைக்கு வந்த போது கல்லூரித்தோழி கீதா தான் இந்த மீட்டர் ஆட்டோ எண் தந்திருந்தாள்! அப்போது கல்லூரிக்கு, ஜங்ஷனுக்கு என சென்று வர உதவியது! மீண்டும் கோவைக்கு செல்வேன் என்று அப்போது நான் யோசிக்கவே இல்லை!!?


மீட்டர் ஆட்டோ!




மீட்டர் ஆட்டோவுக்கு நாங்கள் புக் செய்திருந்தோம் அல்லவா? ரயிலை விட்டு நாங்கள் இறங்கிய போதே மணி 9:30 ஆகி விட்டது! ப்ளாட்ஃபார்மில் நடந்து, சப்வேயில் இறங்கி, படிகளில் ஏறி என்று ஜங்ஷனின் முக்கிய நுழைவாயிலுக்கு நாங்கள் வருவதற்குள் அந்த குறிப்பிட்ட ஆட்டோ டிரைவர் எனக்கு ஃபோன் செய்திருப்பார் போலிருக்கிறது! Handbagல் இருந்ததால் அடித்ததே எனக்குத் தெரியவில்லை!


கோவை இத்தனை வருடங்களில் எத்தனையோ மாறுதலுக்கு உள்ளாகி இருக்கிறது என்று கடந்த சில பயணங்களில் உணர முடிந்தது! எங்கும் பரபரப்பான சாலைகளும், பெருகிப் போன கட்டிடங்களும், வாகன நெரிசலும் என தான் பார்க்க முடிகிறது! அப்படியொரு சாலையாக மாறியிருந்த ஜங்ஷன் பகுதியில் ஆட்டோக்களை நிறுத்த கட்டுப்பாடு விதித்திருப்பதால் நாம் புக் செய்த ஆட்டோவை காக்க வைக்க முடியாதாம்!


நாங்கள் எங்கு இருக்கிறோம் என கேட்பதற்காக எனக்கு இரண்டு முறை ஃபோன் செய்து பார்த்த ஆட்டோ டிரைவர் நான் எடுக்காததால் அந்த புக்கிங்கை கேன்சல் செய்து விட்டாராம்! இதை நுழைவாயில் அருகே வந்த பின் நான் ஃபோன் செய்து கேட்ட போது சொன்னார்! அங்க ஆட்டோவ நிக்க விட மாட்டேங்கிறாங்க! நீங்க திரும்ப புக் பண்ணிக்கோங்கக்கா! என்று சொல்லி வைத்து விட்டார்!


சரி! நாம திரும்ப புக் பண்ணுவோம்! என்று முயற்சித்ததும் வேறு டிரைவர் உடனேயே கிடைத்தார்! ‘அந்த பச்சை காருக்கு பின்னாடி வருது பாருங்க! வண்டி நம்பர்….. போட்டிருக்கு பாருங்க! என்று அவர் சொன்ன குறிப்புகளை கவனித்துக் கொண்டதில் ஆட்டோவை கண்டுபிடித்து விட்டேன்! அவரும் வண்டியின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு ‘சீக்கிரம் ஏறுங்க! சீக்கிரம்!’ என்று கையை அசைத்து கூப்பிட்டுக் கொண்டிருந்தார்!


நாங்கள் மூவரும் எங்கள் லக்கேஜ்களை ஒன்றன் பின் ஒன்றாக வைத்துக் கொண்டு ஏறி அமர்ந்ததும், அப்பாடா! என்று சொல்வதற்குள் அங்கே காவல் அதிகாரி ஒருவர் எங்கள் வண்டியை வழிமறித்து நின்றார்! கைய நீட்டி எதுக்காக உள்ளே ஏத்துனீங்க? யூனிஃபார்ம் ஏன் போடல? என்று எங்கள் ஆட்டோ டிரைவரிடம் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்!


ஃபங்ஷனுக்கு போயிட்டு வந்தேன் சார்! என்று இவர் சொன்னதும், நானும் அப்படி வந்து நிக்கட்டுமா? ஒத்துப்பீங்களா? யூனிஃபார்ம் போடாததுக்கு, கைய காமிச்சு வண்டில ஏத்துனதுக்குன்னு 700+300 ஆயிரம் ரூ ஃபைன் போட்டுருக்கேன்! ஆன்லைன்ல கட்டிடுங்க! என்று சொல்லி விட்டு நகர்ந்தார்! ஒவ்வொரு பணியிலுமே எவ்வளவோ சவால்கள் இருக்கின்றன! ஏனோ நாம சீக்கிரம் ஏறியிருந்தா ஃபைன் கட்டுவதிலிருந்து இவர் தப்பியிருப்பாரோ என்று தோன்றியது!


மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

17 ஜூலை 2025



1 கருத்து:

  1. காதலும் கடனும் புன்னகைக்க வைத்தது.  கடன்கார காதல்.

    குடும்பத்துடன் உல்லாசப்பயம் கிளம்புவது Gift.  அந்த ரயில் படம் ஆசையைத் தூண்டுகிறது.

    பாவம் ஆட்டோ டிரைவர்.  ஆனாலும் அவர் பேரிலும்தான் தவறு இருக்கிறது இல்லையா?

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....