திங்கள், 28 ஜூலை, 2025

குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்பது - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபத்தி எட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்.  முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஆறு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஏழு


குளுகுளு பயணம் போகலாமா - பகுதி எட்டு


Campfire:




சென்ற பகுதியில் மலை ரயிலில் உதகையிலிருந்து குன்னூர் வரை பயணித்த கதைகளைச் சொல்லியிருந்தேன்! அழகான பயணம்! இயற்கையையும் பசுமையையும் ரசித்துக் கொண்டு வந்தோம்! நான்கு ஸ்டேஷன்களைக் கடந்ததும் குன்னூர் வந்துவிட்டது! ரயிலை விட்டு இறங்கி அங்கு ஸ்டேஷனில் அமைத்திருந்த சில விஷயங்களையும் புகைப்படமெடுத்துக் கொண்டு வெளியே வந்தோம்!


நண்பர் மோகனும் அங்கு வந்துவிடவே அவருடன் காரில் ஏறி கோத்தகிரியை நோக்கி பயணித்தவாறே எங்கள் ரயில் அனுபவங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டோம்! காலையிலிருந்து சுற்றிக் கொண்டே இருப்பதால் தூக்கம் கண்களைத் தழுவ நன்கு தூங்கிவிட்டேன்! காரிலும் நல்ல வேகம்! மலைப்பாதையில் வாகனத்தை செலுத்துவது சவாலான விஷயம்! மோகன் லாவகமாக ஓட்டிக் கொண்டிருந்தார்! 


கோத்தகிரியை நெருங்கும் வேளையில் எனக்கு ஏதோ செய்வது போல இருக்கவே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கிவிட்டேன்! வேறு என்ன! துளசி டீச்சரின் மொழியில் டேஷ் தான்! ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக மலைப்பகுதி என்பதால் வீசிங்கும் சேர்ந்து கொண்டது போலும்! மேலே போன மூச்சு கீழே வரவே இல்லை! ரொம்பவே திணறிப் போய்விட்டேன்! உடன் இறங்கிய என்னவருக்கும் எனக்கு என்ன செய்கிறது என்று புரியவில்லை! சற்று நேரம் ஆச்சு! நிலைமை சரியாக!


இந்த அவஸ்தையால் குரல்வளையில் ஏதோ டிஸ்டர்ப் ஆகியிருக்கும் போலிருக்கிறது! என்னுடைய குரலே வரவில்லை! செய்கையால் தான் புரிய வைத்துக் கொண்டிருந்தேன்..🙂 இதுவும் ஒரு அனுபவம்! நண்பர் மோகனுக்கு மிகவும் சங்கடமாகி விட்டது! தான் வேகமாக வந்ததால் தானோ இப்படி என்று சொல்லிக் கொண்டிருந்தார்..🙂 வீட்டிற்கு வந்ததும் அமுதாக்கா எங்கள் எல்லோருக்கும் இரவு உணவாக சுவையான சப்பாத்தியும் சப்ஜியும் தயாரித்து வைத்திருந்தார்! அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டோம்!


அன்று கோத்தகிரியிலும் குளிர் சற்று கூடுதலாக இருக்கிறது என்று வாசலில் campfire ஏற்பாடு செய்து எல்லோரும் அதில் சற்று குளிர் காய்ந்தோம்! பொதுவாக campfire என்றால் DJ போட்டு அலற விட்டுக் கொண்டு ஆடுவார்களாம்! இங்கு நாங்கள் அமைதியாக பேசிக் கொண்டிருந்தோம்! நான் சற்று நேரத்தில் உறங்கச் சென்றுவிட்டேன்! பொதுவாக புதிதாக ஒரு இடத்தில் எனக்கு தூக்கமே வராது…:) ஆனால் இங்கு இருந்த இரண்டு நாட்களுமே ஆனந்தமான தூக்கம்!


மறுநாள் காலையில் கீச் கீச்சென்று பறவைகளின் ஒலியில் விழிப்பு தட்டியது! அன்று தான் நாங்களும் கோத்தகிரியிலிருந்து கிளம்ப வேண்டும்! நண்பர் மோகன் எங்களை குன்னூருக்கு அழைத்துச் சென்று SIMS park, Dolphin nose போன்ற இடங்களை சுற்றிக் காண்பித்து பின் கோவைக்கு அனுப்புகிறேன் என்று சொன்னார்! நாங்கள் தான் இன்னொரு முறை வரும் போது பார்த்துக் கொள்கிறோம்! எங்களுக்காக அவர் வீணாக அலைய வேண்டாம்! நாங்கள் இங்கிருந்தே கோவைக்கு சென்று விடுவதாக சொல்லி விட்டோம்! ஆனால்!!! நடந்தது வேறு!


அன்பு சூழ் உலகு:









நண்பர் மோகன் எங்களை குன்னூருக்கு அழைத்துச் செல்கிறேன் என்று தான் சொன்னார்! ஆனால் நாங்கள் தான் அவரை எங்களுக்காக வீணாக அலைய விட வேண்டாம் என பிறிதொரு சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம் எனச் சொல்லி விட்டோம்!


ஆனாலும் அவரின் மனம் கேளாமல் எங்களை கோத்தகிரியிலேயே இன்னும் சில இடங்களுக்குச் அழைத்துச் சென்று காண்பித்து விட்டு கோவைக்கு பேருந்து ஏற்றி விடுகிறேன் என்று சொன்னார்! எல்லோரும் குளித்து விட்டு தயாரானோம்! எங்கள் உடமைகளையும் எடுத்துக் கொண்டே சென்று விடலாம் என்று எல்லாவற்றையும் பேக் செய்து எடுத்து வைத்தேன்!


அமுதாக்கா அன்றைய தினம் காலை உணவாக எல்லோருக்கும் தோசை வார்த்துக் கொடுத்தார்! சாப்பிட்டு முடித்ததும் அக்காவுடன் ஒரு ஃபோட்டோ கூட எடுத்துக்கலையே என்று வாசலில் இருந்த அவகாடோ மரத்தின் நிழலில் நின்று எடுத்துக் கொண்டோம்! அக்காவிடம் ‘ரெண்டு நாள் ரொம்ப நிம்மதியா இங்க இருந்தேங்க்கா!” என்று சொன்னேன்! அக்காவும், “வெங்கட் வந்தா தான் வரணும்னு இல்ல ஆதி! நீங்களா வாங்க! வந்து எங்கேயும் போக வேண்டாம்! இங்க ரிலாக்ஸா இருங்க! என்றார்!


உண்மை தான்! வேலை, பரபரப்பான சூழல், பதட்டம் என்று எதுவும் இல்லாமல் ரொம்பவே அமைதியான சூழலில் பறவைகளின் கீச் கீச் ஒலி, வண்டுகளின் ரீங்காரம், வண்ண வண்ண பூக்கள், எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென்ற தேயிலை தோட்டங்கள் என்று மனதுக்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்வையும் உற்சாகத்தையும் உணர முடிந்தது! அன்பு சூழ் உலகில் எங்கள் நலனில் அக்கறை செலுத்தும் மனிதர்கள்! வேறு என்ன வேண்டும் இல்லையா!


அக்காவிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம்! கோத்தகிரியை நாங்கள் வலம் வரத் துவங்கினோம்! வாகன நெரிசல், புகை மண்டலம் என்று எதுவும் இல்லாத மேடு பள்ளங்கள் கொண்ட சாலைகள்! காலை நேரக் கதிரவன் வெளியே வரலாமா! வேண்டாமா! என்று தயக்கத்துடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க எங்கள் காரும் சாலையில் நெளிந்தும் வளைந்தும் சென்று கொண்டிருந்தது!


அன்றைய நாளில் நாங்கள் முதலில் சென்ற இடமாக john sullivan memorialக்கு சென்றோம்! இவர் தான் நீலகிரி மலைத்தொடரில் பல விஷயங்களை உருவாக்கியவர் என்று சொல்லப்படுகிறது! நாங்கள் சென்ற அன்று புதன்கிழமை என்பதால் மூடியிருந்தது! சரி! அடுத்து எங்கே செல்லலாம் என்று யோசித்து நாங்கள் சென்ற இடம் ஜான் சல்லிவன் பூங்கா! சமீபத்தில் தான் இந்தப் பூங்காவை திறந்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது! அங்கே என்னவெல்லாம் பார்த்தோம்???


மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

28 ஜூலை 2025


3 கருத்துகள்:

  1. ஆதி, கோத்தகிரி போன்ற இடங்கள் அதிக உயரம் இல்லாத இடம் என்றலௌம் கூட இனி இப்படி மலையில் பயணம் செய்ய நேர்ந்தால், கையில் பச்சைக்கற்பூரம் வைத்துக் கொள்ளுங்கள். Uneasiness வந்தால் உடனே இதை எடுத்து முகர்ந்துவிடுங்கள். தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்க. சில் காலநிலை என்றாலும் கூட ஃப்ளாஸ்கில் குடிக்கும் சூட்டில் கொஞ்சம் சூடு தண்ணீர் வைத்துக் கொண்டு அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமாக நாவினை நனைத்துக் கொண்டே இருங்க. hydrated ஆக இருந்தால் நல்லது. மலையில் வளைந்து வளைந்து போறப்ப சிலருக்கு நேரலாம்.,

    அடுத்த முறை இப்படி முயற்சி செய்து பாருங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அழகு. உங்கள் அனுபவங்களும் சுவாரசியம். நீங்கள் சொல்லியிருப்பது போல் மலைப்பகுதில் சுற்றவில்லை என்றாலும் அந்தக் காலநிலையில் சும்மா காலாற நடந்து மலைப்பகுதியை பார்த்தாலே அக்காற்றைச் சுவாசிச்சாலே ஆஹா அனுபவம் தான் எனர்ஜி நிறைய கிடைத்துவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....