வெள்ளி, 11 ஜூலை, 2025

மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி நான்கு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே…


மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி ஒன்று


மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி இரண்டு


மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி மூன்று



பணம், பதவி, பின்புலம் போன்ற எதையும் எதிர்பாராமல் இன்பத்திலும், துன்பத்திலும் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று நல்லதொரு பக்கத்துணையாகவும், வழிகாட்டியாகவும் நம்முடன் உடனிருப்பவனே நல்ல தோழன்! நட்புக்கு மட்டும் தான் உலகில் அப்படியொரு பலமும் மதிப்பும்!


கல்லூரியைச் சுற்றிப் பார்க்க கிளம்பிய நாங்கள் நிகழ்வு ஆரம்பித்து விடப் போகிறதே என ஒருவழியாக கல்லூரியின் மையக் கட்டிடத்துக்கு வந்து சேர்ந்தோம்! அங்கே உள்ள ஒரு அறையில் தான் நிகழ்வு நடக்கப் போகிறது! சரியாக நண்பர்களும், தோழிகளும் ஒவ்வொருவராக அங்கே குழுமத் துவங்கவும் விழா களைகட்டத் துவங்கியது! 


ஆண்களும் பெண்களுமாக முதலில் வரவேற்பில் வைக்கப்பட்டிருந்த விண்ணப்பத்தில் ரெஜிஸ்டர் செய்த பின்னர் ஒவ்வொரு துறைக்கும் எனத் தனியே ஒதுக்கப்பட்ட வண்ணங் கொண்ட பேட்ஜை எடுத்து போட்டுக் கொண்டோம்! பின்னர் அங்கே வைக்கப்பட்டிருந்த பெரிய பதாகை ஒன்றில் அவரவரின் கையெழுத்தை பதிவு செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம்!


எல்லோருக்குள்ளும் அன்று அளவில்லா மகிழ்ச்சியைக் காண முடிந்தது! எல்லோருமே இன்று சமூகத்தில் நல்லதொரு பதவியில் இருப்பவர்கள்! பல வருடங்களுக்குப் பிறகு பார்த்துக் கொண்டாலும் ஏதோ கொஞ்சம் நேரம் முன்பு பேசிக் கொண்டிருந்ததை விட்ட இடத்திலிருந்து தொடர்வது போல் சகஜமாக பேசிக் கொண்டது தான் ஆச்சரியம்! 


ஆதி! என்னைத் தெரியுதா? ஆதி! என்ன ஞாபகம் இல்லையா? ஆதி! உன்ன எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு! உன்னோட எழுத்து ரொம்ப அழகா இருக்கு! சூப்பரா எழுதற! எப்ப ஊருக்கு வந்த ஆதி! இப்ப எந்த ஊர்ல இருக்கே? எங்கே தங்கியிருக்க? இது யாரு உன்னோட பொண்ணா? உன்ன மாதிரியே சைலண்ட்டா இருக்கா! என்று அங்கே குழுமியிருந்த நண்பர்கள், தோழிகள் என்று அத்தனை பேரும் தேடி வந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டு விசாரித்தது மனதில் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஒருசேர தந்து திக்குமுக்காட வைத்தது!


அன்பு சூழ் உலகு இது என்ற உண்மையை ஆணித்தரமாக உரக்கச் சொல்லியது! எத்தனையோ வருடங்கள் ஆனாலும் எல்லோரின் நினைவிலும் நான் இருக்கிறேன் அதுவும் தனித்து தெரிகிறேன் என்றால் அந்த அன்புக்கு என்ன சொல்வது! என்னால் தான் அத்தனை பேரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்று என்மேல் எனக்கே கோபம் வந்தது அன்று!!?






ஒரு தேசமோ அல்லது அது நம் வீடோ எங்கும் திட்டமிடல் என்பது மிகவும் அவசியமானதாகும்! பக்குவமாக அதேசமயம் பதட்டமில்லாமல் செயல்பட திட்டமிடல் என்பது பாதை வகுக்கும்! ஒரு விழாவை ஏற்பாடு செய்வது என்றால் பல மாதங்கள் முன்பே இதற்கான திட்டமிடலில் இறங்க வேண்டியிருக்கும்! செயல்பட வேண்டியிருக்கும்!


எல்லோரும் நிகழ்வு நிகழுப் போகும் அறையில் குழுமத் துவங்கவும் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிமையாகத் துவங்கியது! எல்லோரும் அவரவரின் இருக்கையில அமர்ந்ததும் விழாக் கமிட்டியினர் தங்களின் செயல்பாடுகளைத் துவங்கினர்! முன்னாள் மாணவர் சங்க கமிட்டியினரை கெளரவிப்பது, இந்த நிகழ்வுக்காகவே வெளியூரிலிருந்து வருகைத் தந்திருந்த பேராசிரியர்களைக் கெளரவிப்பது, அவர்களை எங்களிடையே சில வார்த்தைகள் பேசச் சொல்வது என்று விழா சிறப்பாக செல்லத் துவங்கியது!


ஓய்வு பெற்ற பேராசிரியர்களும் மலர்ந்த முகத்துடன் எங்களிடையே உற்சாகமாக உரையாற்றி விழாவை சிறப்பித்தனர்! வணக்கம் சார்! நான் உங்க கிட்ட படித்த மாணவி! இயந்திரவியல் துறை! அந்த பேட்ச்சில் நாங்கள் மூன்றே பெண்கள் தான் இருப்போம்! எனக்கும் என் தோழி கீதாவுக்கும் Differential ,Calculus எல்லாம் ட்யூஷன் கூட எடுத்திருக்கீங்க சார்! என்றெல்லாம் அறிமுகம் செய்து கொண்டு பகிர்ந்து கொண்டேன்! அவருக்கும் நினைவு இருந்ததோ என்னவோ சிரித்துக் கொண்டார்! 


சார்! இவ தான் என் பொண்ணு! நீ சொல்லவே வேண்டாம்மா! பார்த்தாலே தெரியுது! என்றதும் மகிழ்ந்தேன்! வருடாவருடம் எத்தனையோ மாணவர்களை மெருகேற்றி வாழ்வில் உயர்த்த வழிநடத்தும் பேராசிரியர்கள்! அதுவும் 25 வருடங்களைக் கடந்த பின்னும் நாம் அவர்களின் நினைவில் இருப்போம் என்று எதிர்பார்க்க முடியாது! நம்முடைய மகிழ்வுக்காகவும், நன்றிக்காகவும் அவர்களிடம் நம்மைப் பற்றி சொல்லிக் கொள்ளலாம்!


அடுத்து என்ன எங்களைப் பற்றிய அறிமுகப்படலம் தான்! விருப்பமிருப்பவர்கள் தங்களைப் பற்றி நண்பர்களிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது! நண்பர்கள் சிலர் தங்களைப் பற்றி பகிர்ந்து கொண்ட தகவல்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! படித்த துறையில் மட்டும் தான் சாதிக்க வேண்டுமா என்ன?? முற்றிலும் மாறுபட்ட துறையிலும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது!!


மீதிக்கதைகளை அடுத்த பகுதியில் சொல்லட்டுமா??


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

11 ஜூலை 2025


14 கருத்துகள்:

  1. நாம் மற்றவர்களை நாடிச்சென்று விசாரிக்காமல், நம்மை நாம் அறிமுகபபடுத்திக் கொள்ளத்தேவை இல்லாமல் எல்லோரும் நம்மை - உங்களை தேடி வந்து தெரியுதா தெரியுதா என்று கேட்டது உங்கள் பெருமையைக் காட்டுகிறது. நீங்கள் அப்போது பிரபலமாக இருந்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரபலம் என்றெல்லாம் இல்லை சார். எங்கள் துறையில் நாங்கள் மூன்றே பெண்கள் தான். அவர்கள் 60 பேர்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. // 25 வருடங்களைக் கடந்த பின்னும் நாம் அவர்களின் நினைவில் இருப்போம் என்று எதிர்பார்க்க முடியாது! //

    முதற்கண் உங்கள் உயரமே அவர்களுக்கு உங்களை நினைவில் நிறுத்தி இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னவோ உண்மை தான் சார்..:) உயரம் தான் சட்டென நினைவுக்கு வரும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. அருமையான அனுபவம். எல்லோருக்கும் கிடைக்காது. சமீபத்தில் திருச்சி சென்றபோது நான் 40 வருடகளுக்கு முன்பு படித்த பிஷப் ஹெபர் கல்லூரிக்கு சென்று நான் படித்த வகுப்பறையை பார்த்து வந்தது மகிழ்ச்சியாக இருத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அனுபவம் அருமை சார். நாம் படித்த கல்லூரிக்கு மீண்டும் செல்வது அலாதியான அனுபவம் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  4. விஜயலஷ்மி சென்னை11 ஜூலை, 2025 அன்று 1:38 PM

    அருமையான அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது இந்த அழகான நாளை மறக்கவும் முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி. நிச்சயம் மறக்க இயலாது.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயலஷ்மி ஜி.

      நீக்கு
  5. ஆதி நீங்க வகுப்பில் டாப் இல்லையா? அதான் எல்லாரும் உங்களை நன்றாக நினைவு வைத்து வந்து கேட்டிருக்காங்க. போட்டிகளிலும் பங்கெடுத்து பரிசு வாங்கினாலும் அப்படி நினைவில் இருப்பது உண்டுதானே!

    மிகவும் நல்ல அனுபவம், ஆதி. உங்கள் எழுத்தையும் பாராட்டியது மிகவும் மகிழ்வான விஷயம்.

    பலருமே பார்த்தீங்கனா படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல் செய்யும் வேலையில் மிளிர்கிறார்கள்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லூரியை பொறுத்தவரை நான் டாப் எல்லாம் இல்லை. நார்மலாக தான் படித்துக் கொண்டிருந்தேன். காரணம் அம்மாவின் உடல்நிலையின் காரணமாக அப்போதே எனக்கு பொறுப்புகள் இருந்தன!

      நட்புகள் என் எழுத்தை பற்றி பாராட்டி சொன்னது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது!

      உண்மை தான். பார்க்கும் வேலைக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இல்லாமலும் மிளிர்கிறார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. இன்றைய வாசகமும் நன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. அருமை ஆதி.பழைய நட்புகள் அனுபவங்கள் எல்லாமே அசை போடவே சுகம்.அதுவும் அந்த.இடங்களுக்குச் சென்று அவர்களைப் பார்ப்பது தனிதான்.நம்மைத் தவிர மீதிப்பேர் ரொம்ப வயதானவர்களாகத் தெரிந்திருப்பார்களே!
    விஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான அனுபவம் கிடைத்தது அக்கா. அது ஒரு அலாதியான சுகம் தான். //மீதிப்பேர் வ்யதானவர்களாக தெரிந்திருப்பார்களே// ஹா..ஹா..ஹா.. நிறைய நிறைய மாற்றங்கள் எல்லோரிடத்திலும்..:)

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜி அக்கா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....