திங்கள், 7 ஜூலை, 2025

தோழமைகளைக் காண ஒரு இரயில் பயணம் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இருபத்தி ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இரயில் பயணம் - 17 மே 2025:



25 வருடங்களுக்குப் பிறகு கல்லூரித் தோழமைகளைக் காண ஒரு பயணம்! நிகழ இருக்கும் ஒரு நிகழ்வில் பங்குபெறும் ஆவலுடன் தற்சமயம் திருச்சி ரயில்நிலையத்தில்  இருந்து புறப்பட்டோம் - நானும் மகளுமாக!


ரயிலில் ஏறி  அமர்ந்தாச்சு! புது கோச் போல! சுத்தமாகவும், இருக்கைகள் நல்ல வசதியாகவும் உள்ளது! எதிரெதிர் இருக்கைகளுக்கு நடுவில் காலை சற்று நீட்டி அமரலாம் என்பது போலவும் இடம் தாராளமாக உள்ளது! தண்ணீர் பாட்டில் வைத்துக் கொள்ள இருக்கைக்கு அடியில் வசதி தரப்பட்டுள்ளது! 



இடம் சற்று தாராளமாக இருப்பதால் குழந்தைகள் இருவர் அங்கே உறங்கிக் கொண்டிருக்கின்றனர்! அதைப் பார்த்ததும் என் சிறுவயது நினைவுக்குச் சென்று விட்டேன்! அம்மா அப்பாவோடு கோவையிலிருந்து சென்னைக்குச் செல்வதென்றால் ஒன்று சேலம், விழுப்புரம், சென்னை என்று பேருந்தில் மாறி மாறிச் செல்வோம்!


ரயில் என்றால் blue mountain express என்று சொல்லப்படுகிற நீலகிரி எக்ஸ்பிரஸில் செல்வோம். இரவில் பயணம் செய்து காலையில் சென்னையை சென்றடைவோம். அதில் ஒருமுறை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! அரை டிக்கெட் என்பதாலா என்று தெரியவில்லை! தம்பியும் நானும் இப்படி கீழே படுத்து உறங்கியிருக்கிறோம்...🙂 அன்று எங்களுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை...🙂


தீப்பெட்டி போலான பெட்டிகளும் அதில் நிறைந்திருக்கும் மனிதர்களும்! இந்த பெட்டியில் பயணம் செய்ய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும்! அவர்களின் பெட்டி படுக்கைகளோடு அவர்களின் உணர்வுகளும், கனவுகளும் கூட பயணித்துக் கொண்டிருக்கிறது!



இந்த ரயிலை நம்பி பிழைக்கும் வியாபாரிகளும், கையேந்தும் மனிதர்களும், எவ்வளவு குப்பையிருந்தாலும் அவ்வப்போது அதை சுத்தம் செய்து அகற்றும் மனிதர்களும் என ஒவ்வொருவரின் வாழ்வும் கூட ரயில் பயணத்தை நம்பி தான் இருக்கிறது!


பார்க்கும் பசுமை போர்த்திய காட்சிகளும் சட்டென்று மாறும் குளுமையான சூழலும் என நம்மை கடந்து செல்கிறது! நிலையில்லாத வாழ்வில் இந்த இனிமையான தருணம் மட்டுமே நிச்சயம் என்பது மனதில் உணர வைக்கிறது! இதுவும் கடந்து போகும்!


ஈரோடு:



அப்பாவை அலுவல் விஷயமாக மாதம் ஒருமுறை ஈரோடு வரை போகச் சொல்வார்கள்! அப்பா ஈரோடு செல்கிறார் என்றால் அம்மா தவறாமல் அங்கேயிருந்து வெண்ணெய் வாங்கி வரச் சொல்வாள்! பாக்கு மட்டையில் கட்டித் தரும் தரமான வெண்ணெய் அது! நெய்யாக காய்ச்சிய பின் அந்த நெய் ஜாடியை தலைகீழாக கவிழ்த்தாலும் நெய் கீழே விழாது! மணல் மணலாகவும் சுவையாகவும் இருக்கும்!


அப்பாவுக்கு ஒருநாள் தான் அங்கு வேலை இருக்கும்! இரவுக்குள்ளாக திரும்பி விடுவார்! ஆனாலும் அப்பா செல்லமான இந்த மகள் அப்பா வரும் வரை வாசலையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பேன்! ஒருநாள் கூட அப்பாவை பிரிய நினைக்காதவள் இவள்! ஆனால் அப்பா காற்றோடு கலந்து 17 வருடங்கள் ஆகிவிட்டன!


ஈரோட்டை கடந்து செல்லும் இவ் வேளையில் அதனோடு பிணைந்த நினைவுகளும் கூடவே வருகிறது! காதுகளில் spotifyல் ஜேசுதாஸ் அவர்களின் குரலில் 'எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே'...



மிடில் சீட் கிடைத்துள்ள ஒரு பெண்மணி விண்டோ சீட் தனக்கு வேண்டும் என்று தன்னுடையது விண்டோ சீட் என்று மிகவும் கெத்தாக சொல்லிக் கொண்டிருக்கிறார்...🙂 


எதிர் சீட் தாத்தா தன் பேத்தியிடம் லோகமான்ய திலக், ஜிடி நாயுடு பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்!


ஹெட் செட், சார்ஜர் .. வியாபாரம்.


இட்லி வட, இட்லி வட. ..

சமோசா, சமோசா, மசால் வட, மசால் வட  மெதுவடை மெதுவடை...

Bag bag...வெளியே எடுத்துட்டு போக bag bag…


அன்றாட வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஏதேனும் ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும்!


ஜன்னலோர இருக்கையில் எதிர்காற்று முகத்தில் ஸ்பரிசிக்க காதுகளில் spotifyல் 'தென்றல் வந்து என்னைத் தொடும்...' என்ற பாடல் இனிமையாக ரீங்காரமிடுகிறது!


இந்தப் பயணம் எதற்காக? 25 வருடங்கள் கழித்து கல்லூரி தோழமைகளைச் சந்திக்க ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தார்கள். கல்லூரி நண்பர்களைச் சந்தித்த போது கிடைத்த அனுபவங்கள் விரைவில் இங்கே ஒரு தொடராக வரும் (முகநூலில் ஏற்கனவே எழுதியது, இங்கேயும் ஒரு சேமிப்பாக!). மின்னூலாகவும் வெளியிட்டு விட்டேன் என்றாலும் முகநூலில் படிக்காத நண்பர்களுக்காகவே இங்கேயும் பதிவிடுகிறேன். வாசிக்க தயாராக இருங்கள் நண்பர்களே.


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

7 ஜூலை 2025


17 கருத்துகள்:

  1. ஒரு பொது இடத்தில் கவலை இல்லாமல் தூங்கும் அந்த கள்ளமற்ற குழந்தைகளை பாருங்கள்.  அப்பா அம்மா கூட இருக்கிறார்கள் என்பதால் எந்தக் கவலைவியுமின்றி எப்படி நம்பிக்கையுடன் உறங்குகிறார்கள்...  நாமும் கடவுளின் குழந்தைகள்தானே?  ஏன் அந்த பத்திர உணர்வும், நம்பிக்கையும் வளர்ந்த மனிதர்களிடம் இல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயமான சிந்தனை தான். பெரியவர்களான பின் நமக்கு அந்த சிந்தனை வருவதில்லை என்பது உண்மை தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. ரயிலில் செல்லும்போது எங்கிருந்தோ ஒரு பசி உணர்வு வரும்.  அதை பசி என்று சொல்ல முடியாது.  நாவின் சுவை நரம்பு செய்யும் அடம்!  விற்பதை எல்லாம் வாங்கிச் சுவைக்கும் ஆர்வம், ஆசை வரும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு பயணங்களில் பொதுவாக சாப்பிடவே தோணாது...:) முடிந்தவரை வயிற்றை காலியாக வைத்திருக்கவே நினைப்பேன்..:)

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. All comments under moderation Published...

      நீக்கு
    2. ஆங்..  வந்து விட்டது.  ஒன்று மட்டும் வந்து கொஞ்ச நேரமாகியும் இன்னொன்றைக் காணோமே என்றதும் தாய் தன் குழந்தையைத் தேடுவது போல தேடினேன்.  ஹிஹிஹிஹி...

      நீக்கு
  4. விஜயலஷ்மி சென்னை7 ஜூலை, 2025 அன்று 1:33 PM

    அந்த குழந்தைகளை போல நாமும் குழந்தையாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது எந்த கவலையும் இல்லாமல் அடுத்த பதிவுகள் வாசிக்க தயாராக இருக்கிரேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி. நிறைய சந்தர்ப்பங்களில் எனக்கு தோன்றும் எண்ணம்..:)

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயலஷ்மி ஜி.

      நீக்கு
  5. முகப்புப் படம் நன்றாக இருக்கு ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. ரயிலில் கீழே தூங்கும் குழந்தைகள் எனக்கும் என் சிறு வயது அனுபவத்தை நினைவூட்டியது. என் சிறு வயதில் என்னையும் இப்படித்தான் அழைத்துச் செல்வார்கள் என் பாட்டி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும் போலிருக்கிறது.பேருந்திலும் கூட இப்படி தூங்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. ஆனாலும் அப்பா செல்லமான இந்த மகள் அப்பா வரும் வரை வாசலையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பேன்! //

    எனக்கு ஏக்கத்தை வரவழைத்த வரி. இப்படி எல்லாம் நான் இருந்ததே இல்லையே என்று. பெற்றோருடனான Bonding என்பது தனி. எனக்குக் கிடைக்காத ஒன்று.
    அதனாலேயே என் மகனுக்கு வாரி வாரிக் கொடுத்தேன். கொடுக்கிறேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டுக் குடும்பங்களில் பெற்றோருடனான நெருக்கம் என்பது இருக்காது இல்லையா! உங்கள் நிலையை உணர்ந்து கொள்ள முடிந்தது.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. கல்லூரி, பள்ளி நட்புகள் வாட்சப் குழுவில் இருக்கிறார்கள். ஏனோ நான் அதில் சேர விரும்பவில்லை. ஒன்று வாட்சப் குழு மெசேஜ்களை எனக்கு மேனேஜ் செய்யும் திறன் குறைவு என்பதோடு ஒரு சின்ன தயக்கம் (தாழ்வுமனப்பான்மை??) என்னை நான் எங்கேயோ உயரத்தில் (திறமையால்) இருப்பேன் என்று நினைத்தவர்கள் என்பதாலோ என்னவ் அவர்கள் எல்லோருமே மிக மிக நல்ல உயர் பதவிகள் வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்.... இப்பவும் இருப்பவர்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்து கொள்ள முடிந்தது. நானும் கூட அதே நிலை தான். எனக்கான அடையாளம்??

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....