செவ்வாய், 1 ஜூலை, 2025

கதம்பம் - முதுமை - Immunity Cubes - பிறந்தநாள் - World Health Day


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


முதுமை - 1 ஏப்ரல் 2025: 



காலையிலேயே பல் தேய்ச்சு காஃபியெல்லாம் குடிச்சாச்சே பெரியம்மா! இப்ப திரும்ப எதுக்கு பல் தேய்ச்சுண்டு இருக்கேள்?


இரவு 12.20


புவனா! என் கைய பிடிச்சு யாரோ இழுக்கிறா! இதோ ஓடறான் பாரு!வந்து பாக்கிறியா!


யாருமே இல்லையே பெரியம்மா! நான் உங்க பக்கத்துலயே படுத்துக்கிறேன்! யார் வரான்னு பாக்கிறேன்! சரியா!


அதிகாலை 3:30


இதோ இந்த அம்மாவும் பொண்ணும் வரா பாரு! இவா அம்மா பொண்ணா? அக்கா தங்கையா? 


அங்க யாருமே இல்லையே பெரியம்மா! அங்க வாசல் எதுவும்  இல்லையே! Curtain தான் இருக்கு!


தெரியலடி! இங்க தான் நின்னா!


இப்படித் தான் கடந்த ஒரு மாதமாக ஒரே ஊரில் இரண்டு இடங்களில் வீட்டுப் பெரியவர்கள் இருவரையும் ஆளுக்கொருவராக பார்த்து வருகிறோம்! வயோதிகத்தினால் ஏற்படும் தூக்கமின்மை, மறதி, illusion இவற்றினால் இருவருமே மிகவும் அவதிப்படுகிறார்கள்!


இதுவும் கடந்து போகும்! It's a part of life! நல்லதே நடக்கும்! இது போன்ற வார்த்தைகளை மட்டுமே பற்றிக் கொண்டு காட்டாற்று வெள்ளத்தில் பாதை தெரியாமல் பயணிப்பது போன்ற உணர்வு ஒவ்வொரு நாளும் எங்களுக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது!

 

வயோதிகத்தினால் வீட்டுப் பெரியவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் போது அதை நிதானத்துடன் நாம்  சமாளிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம்! பலவிதமான Illusions உடன் ஒவ்வொரு நாளும் கடந்து செல்கிறது! அவர்களின் தூக்கமும் தொலைந்து நம்முடைய தூக்கமும் தொலைந்து என பயணித்துக் கொண்டிருக்கிறது வாழ்க்கை!


இதெல்லாம் எதனால் ஏற்படுகிறது? ஏன் ஏற்படுகிறது?? என்பதற்கு எல்லாம் ஒரே பதில் முதுமை! அவர்களின் கற்பனையில் தோன்றும் விஷயங்களையெல்லாம் நம்மால் நிச்சயம் ஒத்துக் கொள்ளவும் முடியாது! மறுத்து சொல்லி அதை பொய்யென சொல்லவும் முடியாது! அந்த நேரத்தில் சமாதானம் செய்து கொண்டு கடந்து வருகிறோம்!


எல்லாம் சரியாயிடும்! பகவான் இருக்கார்! பார்த்துப்பார்! என்ற நம்பிக்கை வார்த்தைகளில் கடந்து சென்று கொண்டிருக்கிறது நாட்கள்!


******


Immunity Cubes - 3 ஏப்ரல் 2025:



சில விஷயங்களை விருப்பத்துடன் செய்யும் போது மனதும் சற்று ரிலாக்ஸாகி விடுகிறது! அப்போது புதுப்புது ஐடியாக்களும் கூட நமக்குள் தோன்றும்! அப்படித்தான் சில நாட்களுக்கு முன் இணையத்தில் பார்த்து சில முயற்சிகளை செய்தேன்! அதைப் பற்றி இங்கேயும் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம்!


ABC ஜூஸ் கியூப்ஸ்! நெல்லிக்காய் கறிவேப்பிலை இஞ்சி சேர்த்த ஜூஸ் கியூப்ஸ்! என இரண்டுக்குமே எங்கள் வீட்டில் நல்ல வரவேற்பு இருந்தது! உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் வயிற்றுக்கும் கூட சில்லென்ற உணர்வை உண்டாக்குகிறது! இன்று நெல்லிக்காய் கியூப்ஸ் அடுத்த பேட்ச் அரைத்து ஃப்ரீசரில் செட் செய்ய வைத்திருக்கிறேன்.


Immunity cubes!


பசுமஞ்சள் வீட்டில் சிறிது இருக்கவே வாடி விடுவதற்குள் அதை ஏதேனும் முயன்று பார்க்கலாமே என்று செய்து பார்த்தேன்! பசுமஞ்சளில் ஊறுகாய் செய்திருக்கிறேன்! பொடியாக அரைத்தும் வைத்துக் கொள்வேன்! இல்லையென்றால் குழம்பில் மஞ்சள்தூளுக்குப் பதிலாக பசுமஞ்சளை நசுக்கி சேர்ப்பேன்!


ஆரஞ்சு பழங்களின் சாறுடன், பசுமஞ்சள், இஞ்சி, கேரட், சிறிதளவு மிளகு சேர்த்து அரைத்து வடிகட்டி கியூபாக செய்திருந்தேன்! பசுமஞ்சளுடன் மிளகும் சேர்ந்த ஃப்ளேவரில் நன்றாகவே இருந்தது! விருப்பப்பட்டால் இதில் சிறிதளவு உப்பும், எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொள்ளலாம்!


கொளுத்தும் கோடைக்கேற்ற ஆரோக்கியமான ஜூஸ் இது! வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் செய்து பார்க்கலாம்! இதுபோல வேறு முயற்சிகளும் செய்து பார்க்கலாம்!


******


ரோஷ்ணி கார்னர் - பிறந்தநாள் - 4 ஏப்ரல் 2025: 


பிறந்து சில வருடங்கள் தான் ஆகிறது என்று நினைப்பதற்குள் இருபது பிராயங்களை கடந்து வந்து விட்டாய் கண்ணா! ஆச்சரியமாக தான் இருக்கிறது! உன் மழலை மொழியில் இன்னும் நான் பிதற்றிக் கொண்டிருக்க காலம் தான் எத்தனை வேகமாக கடந்து செல்கிறது! 

இத்தனை வருடங்களில் உன் வயது பிள்ளைகளைப் பார்க்கையில் அவர்களிடமிருந்து நீ தனித்து தான் தெரிகிறாய் கண்ணா! நம் வாழ்வில் கிடைக்கும் அனுபவங்கள் தானே நம்மை பக்குவப்படுத்துகின்றன! அப்படி எதையும் சமாளிக்கும் குணம்! எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம்! என்று வளர்த்துக் கொண்டு வருகிறாய்! அதை தொடர்ந்து எதிர்வரும் வாழ்விலும் கடைபிடித்தால் என்றும் நல்லது உண்டாகும்!


பிடித்த துறையில் கல்வி கற்று வரும் நீ அதில் மேலும் பல சாதனைகள் படைத்திட பெற்றோரான எங்களின் ஆதரவு என்றும் உனக்கு உண்டு! மற்றவர்களுக்கு உதவும் குணம், குருதிக்கொடை செய்யும் எண்ணம் என்று இந்த சமுதாயத்துக்கு தேவையான அனைத்து குணங்களையும் கொண்டிருக்கிறாய் என்பதில் எங்களுக்கு என்றும் பெருமையே!


இனி வரும் காலங்களில் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு உனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் கண்ணா! உன்னுடைய தனித்திறமைகளையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் மெருகேற்றிக் கொள்ளணும்! 


என்றும் நேர்மறையான சிந்தனைகளுடன் ஆரோக்கியமான பெண்ணாக சமுதாயத்தில் சவால்களை துணிச்சலுடன் கடந்து வரும் தைரியமான பெண்ணாக வலம் வர அன்றாடம் இறைவனிடம் உனக்காக பிரார்த்தித்துக் கொள்கிறேன்! உன் பிரியமான ‘கணேஷா’ என்றும் உன்னுடனேயே துணை இருப்பார்.


******

World Health Day - 7 ஏப்ரல் 2025: 



நான்கு நாட்களுக்கு முன்பு பெரியம்மாவை வீட்டில் தனியே விட முடியாதென்று அவரையும் அழைத்துக் கொண்டு மீட்டர் ஆட்டோ ஒன்றில் மருத்துவமனைக்கு பயணம் செய்தேன்! மூன்றாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் மாமியாரை பார்த்து வரலாம் என்று! இது போன்ற சூழலெல்லாம் சகஜமாகி விட்டது எங்களுக்கு!


ஆட்டோ ட்ரைவர் என்னிடம் பேசிக் கொண்டு வந்தார்! நான் போகும் மருத்துவமனை எப்படியிருக்கிறது  என்று கேட்டுக் கொண்டு வந்தார்! பண்டைய காலங்களில் மருத்துவமும், கல்வியும் மக்களுக்கு இலவசமாக கிடைத்ததாம்! நாமே விரும்பி வைத்தியருக்கும், குருவுக்கும் தட்சணை கொடுப்பது தான் வழக்கமாம்! இப்போது இவை இரண்டும் தான் மிகப்பெரிய அளவில்  பிசினஸ் ஆயிற்றே!


அன்றாடம் கேட்கும் FMல் கூட நிமிடத்துக்கு ஒருமுறை மருத்துவமனைகளுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் தான் ஏகப்பட்ட விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன! இன்றைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது! நோய் என்று எதுவும் வந்துவிடக்கூடாது! அப்படி வந்துவிட்டால் நம் கையில் எதுவும் இல்லை...🙁 நம் தலையெழுத்து எப்படியோ! அப்படித்தான் என்றேன்!


உண்மை தான் அக்கா என்றார்! அந்த ஆட்டோ ட்ரைவர் சில வருடங்களுக்கு முன் தனக்கு நிகழ்ந்த விபத்து ஒன்றைப் பற்றியும், அன்றைய சூழலில் 19 லட்சம் கட்டினால் மட்டுமே தன்னைக் காப்பாற்ற முடியும் என்று மருத்துவமனையில் சொன்னதாகவும்  முன்பின் அறியாத மனிதநேயம் கொண்ட மனிதர்களால் தான் காப்பாற்றப்பட்டதாகவும் சொன்னார்! 


சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு தகப்பனான இவர் இன்று ஆட்டோ ஓட்டி சம்பாதிப்பதாகவும் முன்னைப் போல் என்னால் கடினமாக உழைக்க முடியாது! சட்டென்று எழுந்து ஓட முடியாது! ஆனாலும் என் பொண்டாட்டி பிள்ளைங்களுக்காக உழைக்கிறேன் அக்கா! என்றார்! நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மீட்டரை கட் பண்ணச் சொல்லி விட்டு எவ்வளவு வந்திருக்கு என்றேன்!


121 வந்திருக்குக்கா என்றார்! அவர் சொன்ன தொகையுடன் மேலும் 100 ரூபாயைத் தந்து பிள்ளைங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் குடுங்க! என்று சொல்லி இறங்கினேன்! அவரின் கதையைக் கேட்டதும் மனது பாரமாகிப் போனது! சாதாரண மக்கள் இதுபோன்ற சூழல்களை எப்படி எளிதில் கடக்க முடியும் என்பது கேள்விக்குறி! 


இன்று உலக சுகாதார தினம் என்று சொல்கிறார்கள்! நாம் முடிந்தவரை உடலையும், மனதையும்  ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம்! ஆரோக்கியமான உணவுமுறையுடன், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா என்ற வாழ்க்கைமுறையை கடைபிடிப்போம்! அதற்கு மேல் இறைவன் விட்ட வழி!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

1 ஜூலை 2025


10 கருத்துகள்:

  1. வயோதிகத்தின் துன்பங்களை பார்க்கும்போது நமக்கும் அந்நிலை வருமோ என்கிற அச்சம் வருகிறது.  சில இன்ப நிலைகள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், சில துன்ப நிலைகள் உடனே மாறிவிட வேண்டும் என்றும் விரும்புகிறோம்.  இரண்டுமே நடப்பதில்லை. 

    சில சமயங்களில் கடவுளரோ, மறைந்த மனிதர்களோ 'உங்கள் கண்ணுக்கு மற்றும்தான் தெரிவேன்' என்று சொல்வார்கள் என்று சொல்வதும் உண்மையோ, இல்லை அதுவும் மனிதனை ஏமாற்ற சொல்லப்பட்ட புனைவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அதைத் தான் யோசிக்கிறேன் சார். இப்படியெல்லாம் நானும் செய்வேனோ என்று தான் தோன்றுகிறது. அப்போது இந்த சமூகம் என்னை எப்படிப் பார்க்கும்!

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. விதம் விதமாக முயற்சி செய்யும் உங்கள் ஆர்வம் பிடித்திருக்கிறது.  சிலர் கற்பனையே இல்லாமல் ஒரே மாதிரி சமைப்பார்கள்.  நீங்கள் ஏற்கனவே எழுதி இருந்த நெல்லிக்காய் இஞ்சி கறிவேப்பிலை கியூப்ஸ் நானும் முயன்று பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டது மறுபடி நினைவுக்கு வருகிறது. 

    நெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டால் பற்கள் கூசுகின்றன!  எனவே அதை நீர் நெல்லிக்காய் போட்டு சாப்பிடுவேன்.  இப்படியும் முயற்சிக்க வேண்டும். 

    எல்லாம் ஐந்தாண்டு திட்டம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லிக்காய், இஞ்சி, கறிவேப்பிலையோடு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து க்யூப்ஸ் செய்வதால், ஜூஸ், மோர், ரசம் என்று செய்து வருகிறேன். நான்கைந்து பேட்சுகள் செய்து விட்டேன். நீங்களும் அப்படி செய்து பாருங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்

      நீக்கு
  3. ரோஷ்ணியின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

    ஆட்டோ டிரைவருக்கு நீங்கள் அதிகம் பணம் கொடுத்ததை நான் பாராட்ட மாட்டேன்.  அவர் உழைப்பை ஊக்குவிக்கும் வகையில் பேசலாம். அவருக்கு ஒரு தவறான எதிர்பார்ப்பை மற்ற பயணிகளிடமும் எதிர்பார்க்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். பணம் தந்து ஊக்குவிப்பது சரியான முறையல்ல தான். ஆனால் அன்று எங்கள் மகளின் பிறந்தநாளாகவும் இருந்தது! அதனாலும் கொடுத்தேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. ஜூஸ் க்யூப்ஸ் சூப்பர், ஆதி!

    இப்படியானவை நம் வீட்டிலும் நடக்கும் ஆனால் க்யூப்ஸ் போட்டு வைப்பதில்லை. சில் வேண்டாம் என்று. பெங்களூர் வந்த பிறகு, அதும் கொரோனாவிற்குப் பிறகு குளிர்ச்சியாகச் சாப்பிடுவதை நிறுத்தியாச்சு.

    ரோஷ்ணிக்குத் தாமதமான வாழ்த்துகள்! தனக்கான அடையாளத்துடன் நிச்சயமாக வாழ்வார்!

    வயதாகும் சிலருக்கு இப்படி Dementia வருவதும் அதை சமாளிப்பதும் சவாலான விஷயம். நிறைய பொறுமை தேவைப்படும்.

    நிச்சயமாக உடல் நலம் மன நலம் இரண்டுமே ரொம்ப ரொம்ப முக்கியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் , வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. வயோதிகம் சிரமங்கள்..சொல்லிச் சென்ற விதம் சிறப்பு...அதனால் உணர முடிந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....