சனி, 5 ஜூலை, 2025

கதம்பம் - சித்திரைத் தேர் - வீதி பிரதட்சணம் - திருவரங்க இற்றைகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட உக்கடம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சித்திரைத் தேர் - 26 ஏப்ரல் 2025: 





அரங்கத்தில் இன்று ஆடி வரும் சித்திரைத் தேரின் அழகைக் காண என்னோடு எழுத்தின் வழியே வாருங்களேன்! தகிக்கும் வெயிலைப் பற்றி இன்று இங்கு யாருக்கும் லட்சியமே இல்லாதது போல் இடிபட்டாலும், நசுங்கினாலும் அரங்கன் அசைந்து வரும் தேரில் கொலுவிருக்கும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும் என்று திரளாக திரண்டிருந்தனர்!


சுற்றுப்புற கிராம மக்களுக்கெல்லாம் ரங்கநாதர் தான் குலதெய்வம்! வருடத்துக்கு ஒருமுறை இந்த நாளில் வண்டி கட்டிக் கொண்டு வந்து சாலையோரங்களிலும், மரத்தடியிலும் படுத்து அரங்கனை தரிசிப்பார்கள்! 


தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வது, மாடு கன்றுகளை கோவிலுக்கு காணிக்கையாக கொடுப்பது, பிள்ளை குட்டிகளுடன் மொட்டையடித்துக் கொள்வது, தங்கள் வயலில் விளைந்த பொருட்களை கோவிலுக்கு அர்ப்பணிப்பது, ஆடி பாடி தங்கள் பக்தியை மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என்று மக்கள் லட்சக்கணக்கில் இன்று திரண்டிருந்தனர்!


கோவிந்தா! கோவிந்தா! எனவும் ரங்கா! ரங்கா! எனவும் எங்கும் அதிர்வலைகள்! பக்தி என்பது எல்லாவற்றையும் மறந்தும், துறந்தும் இறைவனிடம் சரணாகதி அடைவது! அவரை எப்படியெல்லாம் மகிழ்விக்கலாம் என்ற சிந்தனையில் இறங்கி விடுவது! இப்படி தங்களைச் சுற்றி என்ன நிகழ்கிறது! யாரெல்லாம் நம்மைப் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் ஏதும் இல்லாமல் ஆடிப்பாடும் மக்களைப் பார்த்த போது நம்மைப் பற்றி சற்றே யோசித்த போது கூச்சம் வந்தது!


திருவிழா என்றால் ஆங்காங்கே புதிதாக முளைக்கும் பலதரப்பட்ட கடைகள், சாலையோர வியாபாரிகள், தங்களால் இயன்ற நீர்மோர், பானகம், ஸ்நாக்ஸ், சாப்பாடு, தண்ணீர், விசிறி என்று மற்றவர்களுக்கு உபகாரம் செய்து கொண்டிருக்கும் மக்கள் ஒருபுறம்! ஜனத்திரளை கட்டுக்குள் வைக்க பாடுபடும் காவல்துறை வாகனங்கள் ஒருபுறம்! பத்திரிக்கைத் துறை, ஊடக கேமிரா நண்பர்கள் ஒருபுறம்! என்று கோலாகலமாக திருவரங்கம்!


கூட்ட நெரிசலென பார்க்காமல் சின்னஞ்சிறு குழந்தைகளையும் தூக்கி வந்திருந்த பெற்றோர்! ஆண்டாள், லஷ்மி என கோவில் யானைகளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் மக்கள்! பெரிய விசிறி கொண்டு கூட்ட நெரிசலில் விசிறி விடும் மனிதர்கள்! கூட்டநெரிசலில் பாதுகாப்பு இல்லை எனத் தெரிந்தும் தகதகவென நகைகளை அடிக்கிக் கொண்டு வந்திருந்த பெண்கள்!


இப்படி பார்க்க நிறைய காட்சிகளும், மனிதர்களும் இருக்கவே நேரம் போனதே தெரியவில்லை! எல்லோரையும் காத்து ரட்சிக்கணும்! நல்லதே நடக்கணும்! நாடும் வீடும் செழிப்புடன் இருக்கணும்! மழை பெய்து வெப்பம் குறையணும்! என்ற பிரார்த்தனையோடு வீடு திரும்பினோம்!


மழையே மழையே வா வா!

மண்ணை நனைக்க வா வா!


******


வீதி பிரதட்சணம் - 27 ஏப்ரல் 2025:





தேரோடிய சித்திரை வீதிகளில் நேற்று மாலை அப்படியே ஒரு உலா வந்தோம்! காலையில் கம்பீரமாக ஆடி அசைந்து வந்த அழகிய தேர் மாலையில் கிழக்கு சித்திரை வீதியில் தன்  நிலையில் நின்று கொண்டிருக்க அங்கே மக்கள் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர்!


அதற்காக அங்கே நெய் தீபங்களை நிறைய பேர் விற்றுக் கொண்டிருந்தார்கள்! ஒரு திருவிழா என்றால் அதையொட்டி எத்தனை பேருக்கு வாழ்வாதாரமும் மேம்படுகிறது இல்லையா! அந்தத் தெரு முழுவதும் பலவிதமான சாலையோரக் கடைகள் போடப்பட்டு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது!


உணவுப் பொருட்கள், உடைகள், பாத்திரங்கள், காதணிகள், வளையல்கள், பல வண்ணங்களில் இயற்கை மற்றும் செயற்கை மலர்கள், பீங்கான் ஜாடிகள் என்று பார்த்து ரசிக்கவும், தேவைபட்டதை வாங்கிக் கொள்ளவும் இங்கு நிறைய விஷயங்கள் இருந்தது! மாலை நேரத்தில் வீதியுலா வந்தால் நேரம் போவதே தெரியாது என்று சொல்லலாம்!


ஓரிடத்தில் குறிப்பிட்ட நபரைப் பார்த்ததும் சட்டென்று சிறுவயதிற்கு சென்ற உணர்வு ஏற்பட்டது! ஜவ்வு மிட்டாய்! டிசைன் டிசைனாக வாட்ச், நெக்ல்ஸ் என்று செய்து தருவார்களே...🙂 கூடவே கன்னத்தில் ஒரு கொசுறு வேறு ஒட்டி விடுவார்களே..🙂 மகளுக்கும் அதைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்! 


எல்லா இடங்களைப் போலவே இங்கே இருந்த வியாபாரிகளில் பெரும்பான்மையானவர்கள் வட இந்தியர்கள் தான்! ராஜஸ்தான், பீஹார், அஸ்ஸாம், மதுரா என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலிருந்து வந்தவர்கள்! 


ஒரு சிலரிடம் என்னவர் பேசிப் பார்த்ததில் மூன்று வருடங்கள் பழனியிலும், ஈரோட்டிலும் தங்கி விடுவார்களாம்! அங்கே இருந்து எங்கெல்லாம் திருவிழா நடைபெறுகிறதோ அந்த  இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்து சம்பாதிப்பார்களாம்!


நமக்கான வாய்ப்புகளை நாம் தான் தேவையில்லாத அரசியல் பேசிக் கொண்டு தவற விடுகிறோம் என்பது ஒவ்வொரு முறையும் தெளிவாகிறது!


இப்படி அங்கிருந்த மக்கள் வெள்ளத்தில் நாங்களும் மெல்ல மெல்ல நீந்தி விண்டோ ஷாப்பிங் செய்து தேவையானப் பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு, நிறைய நிறைய புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு ஒரு சிலரிடம் பேசிப் பார்த்து கதைகளை கேட்டுக் கொண்டு என எங்களுக்கான நேரத்தை இனிமையாக செலவிட்டோம்.


******


திருவரங்க இற்றைகள் - 14 மே 2025: 




ஒவ்வொரு நாளும் நேரம் எப்படி இவ்வளவு வேகமாக கடந்து செல்கிறது எனத் தெரியவில்லை! குடும்பச் சூழலும் வேலைகளும் என்னை நெருக்கி பிடித்துக் கொண்டிருக்க ஏதேனும் எழுதணும் என்ற எண்ணமும் உடன் வந்து கொண்டே தான் இருக்கிறது!


பக்குவம்!


யாராவது சொல்லும் ஒரு சில விஷயங்களை கேட்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்சனையா? இதற்காகவா பிரச்சனை?  என்று தான் ஆச்சரியப்படுகிறேன்! இத்தனை வருடங்களில் வாழ்வில் கடந்த பாதைகளில் எவ்வளவோ ஏற்றங்களும் இறக்கங்களும், பிணக்குகளும் பார்த்திருக்கிறேன்! சரி! நாம் பக்குவமாக தான் இருக்கிறோம்...🙂 என்று என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொள்கிறேன்!


அனகோண்டா!


அனகோண்டா வயிறு! அவனுக்கே பத்தாது!! 

என்னது அனகோண்டாவா!!!


இந்த வாரக் காய்கறி சந்தைக்குச் சென்ற போது ஒரு வயதான பெண்மணி யாரைப் பற்றியோ இன்னொருவரிடம் இப்படிக் சொல்லிக் கொண்டிருந்தார் ...🙂 அதைக் கேட்டதும் என்னுள்ளே சிரிப்பு கொப்பளித்தது! அனகோண்டாவை நேர்ல பார்த்திருக்காங்களா!! அவர் குறிப்பிடுபவர் நிறைய சாப்பிடுவாங்க போல! அதற்காக அனகோண்டாவையா உதாரணம் சொல்லுவாங்க.. :))


Deodorant!


ஒருநாள் என்னவருடன் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குச் சென்றிருந்தேன்! அங்கே தேவையானப் பொருட்களை எடுத்துக் கொண்டு பில்லிங் கவுண்ட்டருக்கு வந்ததும் தான் deodarant எடுக்க மறந்து விட்டேன் என்று தெரிந்தது! அங்கே வேலையில் இருந்த பணியாளரிடம் என்னவர் deodorant எல்லாம் எங்கே இருக்கு என்று கேட்டார்!


உடனே அந்த பணியாளர், சார்! என்ன purposeக்காக கேட்கிறீங்க என்று தெரிஞ்சுக்கலாமா என்று வினவ எங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை...🙂 எதற்காக கேட்போம்...🙂


பின்பு கையை உயர்த்தி பிடித்து என்னவர் சைகையால் அந்த மனிதருக்கு உணர்த்தினார்...🙂 


இப்படியும் மனிதர்கள்...🙂


பைனான்ஸ்!


என்னங்க! ஸ்கூல் திறக்கப் போறாங்க!


போன வருஷ ஸ்கூல் பேக், லஞ்ச் பாக்ஸ் எல்லாம் இருக்குமேம்மா! அதையே இந்த வருஷமும் யூஸ் பண்ணிக்கச் சொல்லு! ஸ்கூல் ஃபீஸ் கட்ட தான் பணம் இருக்கு!


இல்லங்க! நம்ம பையனை சமாதானமே செய்ய முடியலை! 


கவலையே படாதீங்க உங்களுக்கு உதவ தான் நாங்க இருக்கோம்! என்று குறிப்பிட்ட பைனான்ஸின் விளம்பரம்...🙂


வானொலி பண்பலையில் இப்படியொரு விளம்பரத்தை கேட்ட போது இன்றைய காலகட்டத்தை எண்ணி கோபமும் வந்தது! கவலையும் வந்தது! எல்லாவற்றுக்கும் EMI என்றால் எப்படி! சூழலை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எப்போது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப் போகிறோம்!;;??


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

5 ஜூலை 2025


2 கருத்துகள்:

  1. இதுபோன்ற பாமர மக்களின் கள்ளமற்ற பக்தியினால்தான் இந்துமதம் தழைக்கிறது.  இந்த கொண்டாட்டங்கள் பற்றி படிக்கும்போது எனக்கு மதுரை சித்திரைத் திருவிழாவும் நினைவுக்கு வருகிறது.

    அந்த டியோடரண்ட் சோப்புக்கு நான் ஒரு கமெண்ட் இட்டேன் முன்பு.  இங்கா?  பேஸ்புக்கிலா?

    பதிலளிநீக்கு
  2. திருவிழாவில் கலந்து கொண்டது போல் இருக்கிறது.படங்களும் அருமை.நான் போயிருந்தால் பாதி பாசிமணி என் வீட்டிற்கு வந்திருக்கும்!
    அனகோண்டா படம் வந்த.புதிதில் வந்த joke.
    மாப்பிள்ளை: ஐயையோ தீபாவளிக்கு ஹீரோ ஹோண்டா வேணும்னு சொன்னதை உங்கப்பா தப்பா புரிஞ்சிக்கிட்டார் என்று (அவன் கழுத்தில் மாலையாக அனகோண்டா!)
    Deodrant ஐ சேல்ஸ்மேன் எப்படி உபயோகப் படுத்துவார் என்று கேட்டிருக்கலாம்! நல்ல வேளை சேவிங் cream வாங்கவில்லை அவனிடம்!
    ஆதியின் தமிழும் சரளமான எழுத்தும் வாழ்க்கையைப் பார்க்கும் கண்ணோட்டமும் நன்றாக இருக்கின்றன.
    விஜி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....