வெள்ளி, 25 ஜூலை, 2025

கதம்பம் - மின்னூல் வெளியீடு - ஸ்பெஷல் டே - சமஸ்க்ருதம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஏழு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



மின்னூல் வெளியீடு - 24 ஜூன் 2025: 



25 வருடங்களுக்குப் பிறகு எங்கள் கல்லூரி நண்பர்களை சந்தித்த நிகழ்வைத் தொடராக எழுதியிருந்தேன்! அதை இப்போது அமேஸான் கிண்டிலில் புத்தக்மாகவும் வெளியிட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!


இது என்னுடைய 11வது மின்னூல்! புத்தகத்தை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே!


மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்


******


ஸ்பெஷல் டே - 27 ஜூன் 2025:



இவரைப் பற்றி நான் சொல்லாமல் யார் சொல்லுவாங்க சொல்லுங்க! வாழ்வின் எந்த நிலையிலும் தன்னலம் தவிர்த்து பிறர் நலனில் அக்கறை செலுத்தும் ஒரு மனிதர்! பணத்தின் பின்னே செல்லும் உலகில் இவர் சற்று வித்தியாசமானவர்! நெறி தவறாத வாழ்வில் கடமையின் பின்னே செல்பவர்! அப்பா அம்மாவுக்கு ஏற்ற பிள்ளை! நேர்மையான அரசு அதிகாரி! பயணக்காதலன்! பரோபகார குணம் கொண்டவர்! தயாள குணம் கொண்டவர்! உழைப்பாளி! என்று சொல்லிக் கொண்டே போகலாம்!


திருமணமாகிய இந்த 23 வருடங்களில் இவரைப் பற்றி தெரிந்து கொண்டதும், புரிந்து கொண்டதும் நிறையவே! இப்போது இவரின் மைண்ட் வாய்ஸைக் கூட என்னால் கேட்ச் பண்ண முடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்..🙂 ஒரு விஷயத்தைப் பற்றி என்ன நினைப்பார்! என்ன சொல்வார்! எது பிடிக்கும்! எது பிடிக்காது! எதற்கு சிரிப்பார்! எதற்கு கோபம் கொள்வார்! என்று சொல்லிக் கொண்டே போகலாம்..🙂 சரி! எதுக்கு இதெல்லாம் சொல்றம்மா! என்று நீங்கள் சொல்ல வருவதும் எனக்குப் புரிகிறது…:)


இன்றைய நாள் இவருக்கான நாள்! ஆமாம்! இன்று என்னவரின் பிறந்தநாள்! இவரைப் பற்றி உருகி உருகி பக்கம் பக்கமாக புத்தகத்திலும் பதிவுகளிலும் நிறைய எழுதியிருக்கிறேன்! அதில் எல்லாம் எந்த மாற்றுக் கருத்துகளும் இல்லை! உயரத்தால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்த இந்த மனிதரின் வாழ்வில் எங்களால் எந்தவித கஷ்டங்களும் வந்துவிடக்கூடாது என்பதில் என்றுமே கவனமாக இருப்பேன்!


மன நிம்மதி மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக நீண்ட நெடுங்காலம் வாழ என்றும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! அலைபேசியில் வாழ்த்து சொன்னாலும் உங்களோடு சேர்ந்தும் என் அன்புக் கணவருக்கு ஒருமுறை வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்!


******


சமஸ்க்ருதம் - 9 ஜூலை 2025: 



அன்றாட வேலைகள், மாலைநேர நடைப்பயிற்சி, தினந்தோறும் ஒரு பகுதியாக நான் தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் தொடர் என்று தான் செல்கிறது! ஏறக்குறைய ஒரு மாத விடுமுறைக்கு பிறகு திங்கட்கிழமை முதல் என்னுடைய அடுத்த நிலை  சமஸ்கிருத வகுப்புகளும் துவங்கிவிட்டது! இரண்டாம் நிலையை முடித்து சான்றிதழும் வாங்கி விட்டேன்!


மூன்றாம் தேர்வான 'வி(bh)பவா'வுக்கு சென்றுவிட்டேன்! என்னுடைய ஆசிரியரின் பெயர் ராமலக்ஷ்மி! தேனியிலிருந்து எங்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்! புத்தகமும், சான்றிதழும் கையில் கிடைத்தவுடன் முதலில்  இறைவனிடம் தான் வைத்து பிரார்த்தித்துக் கொண்டேன்! 


நெருக்கடியான வீட்டுச்சூழலில் பெரியவர்களின் Hallucinations களுக்கு மத்தியில் வகுப்புகளை அட்டெண்ட் செய்வதற்கும், பாடங்கள் மனதில் பதிவதற்கும் உண்டான தைரியத்தையும் தெம்பையும் கடவுள் தான் தரணும்! மனதும், மூளையும் நன்றாக இருக்கணும்!


முதல் பாடமே 'ஸ்ரீ ராமோ தன்தம்' என்ற 'ராமரின் கதை' தான்! 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரமேஷ்வர கவி என்பவரால் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது! ராமாயணத்தில் உள்ள 24000 பாடல்களை இவர் 200 பாடல்களாக இயற்றியுள்ளார்! அதில் எங்களுக்கு சில பாடல்கள் தரப்பட்டிருக்கிறது! அந்தப் பாடலின் தாத்பர்யம், இலக்கணம், உரைநடை என்று வார்த்தைக்கு வார்த்தை அதை பிரித்து மேய வேண்டும்..🙂 பார்க்கலாம்! சமாளித்து விடுவேன் என்று நம்புகிறேன்!


******



இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

25 ஜூலை 2025


10 கருத்துகள்:

  1. அருமை 👏
    வாழ்த்துக்கள் 💐
    விடுபட்ட பகுதிகளை புத்தகம் மூலமாக படிக்க முடியும் 👍
    நேரத்தை அருமையாக பயன்படுத்துகிறீர்கள்.
    மீண்டும் வாழ்த்துக்கள் 💐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். தொடரை தொடர்ந்து வாசிக்க இயலாமல் போனவர்கள் புத்தகத்தில் வாசிக்கலாம்! இது எனக்கான சேமிப்பாகவும் இருக்கும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிர்மலா ஜி.

      நீக்கு
  2. என் முகம் எது என்று எனக்கே தெரியவில்லை என்பது போல நான் கூட ஒரு கவிதை (!) எழுதி இருந்தேன் முன்பு! அது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. ஓ..  மின்னூலாகவே வெளியிட்டு விட்டீர்களா?  வாழ்த்துகள்.

    வெங்கட்டின் பிறந்தநாள் (தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட்) பற்றிய நிலைத்தகவலில் நீங்கள் சொல்லியிருந்தது/சொல்லியிருப்பது நன்றாக இருந்ததது/இருக்கிறது

    சமஸ்கிருதம் - மூன்றாவது நிலையிலும் முத்திரை பதிக்க வாழ்த்துகள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். இம்முறை உடனேயே வெளியிட்டு விட்டோம்! கல்லூரி நட்புகளுக்கு ஒரு சேமிப்பாக இருக்கட்டுமே என்று நினைத்தேன்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. மின்னூலுக்கு வாழ்த்துகள் ஆதி! கலக்கறீங்க!

    வெங்கட்ஜி பற்றிய உங்கள் வரிகள் உண்மை. நல்லா சொல்லியிருக்கீங்க! எங்களுக்கே தெரியுதுனா உங்களுக்குத் தெரியாமலா!!!!!

    இவ்வளவு தூரம் வந்து இரண்டாம் நிலை வெற்றி பெற்றவங்க அடுத்ததையும் செஞ்சுடமாட்டீங்களா என்ன! கண்டிப்பாக சமாளிக்கமட்டுமில்ல வெற்றி கொள்வீங்க ஆதி! வாழ்த்துகள், All The Best!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமாளிக்க வேண்டும்! பாடச்சுமை சற்று கூடுதலாகத் தான் இருக்கிறது! கொஞ்சம் ஆழ்ந்து படிக்க வேண்டும்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. மின்னூலுக்கு வாழ்த்துகள்.

    வெங்கட்ஜி அவர்களுக்கு ஃபேஸ்புக்கில் வாழ்த்து சொல்லியிருந்த நினைவு. இப்பவும் மீண்டும் வாழ்த்துகள்!

    சமஸ்கிருதம் இப்படியான வகுப்புகள் புதியதாகக் கற்பவற்றில் உங்களுக்குப் பல விஷயங்களைக் கற்க முடிவதோடு, இப்படி எங்களிடம் பகிர்ந்து எழுதுவதற்கும் உதவும். வாழ்த்துகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். ஃபேஸ்புக்கிலும் தெரிவித்து இருந்தீர்கள்.

      உண்மை தான் சார். புதிதாக கற்பவற்றில் நன்மைகள் உண்டு.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....