புதன், 9 ஜூலை, 2025

மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி இரண்டு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******





ஒரு திருவிழாவோ திருமணமோ தனியொருவரால் அதை ஏற்பாடு செய்து நிகழ்த்த இயலாது! ஊர்கூடி இழுத்தால் தான் தேர் நிலையிலிருந்து நகரும்! அதுபோல எந்தவொரு நிகழ்வும் சிறப்பாக நிகழ வேண்டுமென்றால் அனைவரின் திட்டமிடலும், பங்களிப்பும், ஒத்துழைப்பும் இங்கு அவசியம்! 


நண்பர்கள் இணைந்து இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக நிகழ்த்தி விட பெரும் முயற்சி செய்தார்கள்! அந்த ஒருநாள் முழுவதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி மட்டுமே கிடைக்க வேண்டுமென்று நினைத்து உழைத்தார்கள்! கல்லூரி வளாகத்திலேயே இந்நிகழ்வு நடைபெற வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள்! இன்றைய கல்லூரி முதல்வரிடமும் அனுமதி பெற்றிருந்தார்கள்!


வாட்ஸப் குழுவில் உள்ள எல்லோரிடமும் ‘ஒரு நிமிட காணொளி’ பெற்று அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டதன் மூலம் விழாவிற்கு வருவதற்கு சற்றே யோசித்துக் கொண்டிருக்கும் சிலரும் மகிழ்வோடு இதற்கு வந்துவிடலாமே என்று நினைத்தார்கள்! இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கூட சிரத்தையோடு உழைத்தார்கள்!


வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதே நம் பாரத நாட்டின் பண்பு! நம்மில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்று தான் பள்ளிகளில் சீருடைக் கலாச்சாரம் என்பது உருவானது! அதுபோல இந்த நிகழ்விலும் எல்லோரும் ஒன்று போல இருக்கணும் என்று நினைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே Dress code முடிவு செய்யப்பட்டது! ஊரோடு ஒத்து வாழ்வதே என்றும் சிறந்த பண்பு!


நம் சிறுவயதில் பெற்றோர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு எந்தவொரு செயலையும் செய்தோம் இல்லையா! இப்போதும் நாம் பெரியவர்களாகி விட்டாலும் தனித்து எந்தவொரு முடிவையும் எடுத்து விட இயலாது! நம் குடும்பம் என்ற கட்டமைப்பில் சிறு கீறலும் வந்து விடாத படி மிகவும் கவனத்துடன் தான் செயல்படுவோம்! திருவரங்கத்தில் வசிக்கும் இல்லத்தரசியான நானும் சட்டென்று எங்கேயும் கிளம்பி விட இயலாது!


குடும்பச் சூழலையும் யோசிக்கணும்! பொறுப்புகளையும் தட்டி கழிக்க இயலாது! வயதான வீட்டு பெரியவர்களின் நிலையை எண்ணி இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியுமா? நண்பர்களை பார்க்க முடியுமா?? என்றெல்லாம் தான் நினைத்துக் கொண்டே இருந்தேன்! அப்படி தவிர்க்க முடியாத காரணங்களினால் வர முடியவில்லை என்றால் நிகழ்வை நேரலையிலும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது!


வானில் கார் கால மேகங்கள் திரண்டிருந்தால் நல்லதொரு மழை பெய்து அங்கே நில வளமும் நீர் வளமும் மேம்படும்! அந்த இடத்தில் குளுமையான சூழல் உருவாகும் என்று நாம் சொல்வதைப் போல நண்பர்கள் ஓரிடத்தில் ஒன்று கூடியிருந்தால் அங்கு மகிழ்ச்சி அலை உருவாகி அது பரவி அந்தச் சூழலையே இனிமையானதாக மாற்றும்!


நிகழ்வுக்கான ஏற்பாடுகள் எல்லாம் முழுவதும் செய்யப்பட்டு விட்ட நிலையில் குறிப்பிட்ட நாளும் வந்தது! எல்லோருக்கும் இருக்கை வசதிகள், உணவுக்கான ஏற்பாடுகள், புகைப்படங்கள் மற்றும்  காணொளிக்கான ஏற்பாடுகள், வெளியூரிலிருந்து நிகழ்வில் கலந்து கொள்ள வருபவர்களுக்கான தங்கும் வசதிகள் என்று காலை முதல் மாலை வரை எல்லோரும் மகிழ்வுடன் நேரத்தைச் செலவிடுவதற்கான அத்தனை வசதிகளும் செய்யப்பட்டு விட்டது!


வீட்டுச்சூழலை எண்ணி யோசித்துக் கொண்டிருந்த என்னிடம், “என் மேல நம்பிக்கை இருக்கு தானே! வீட்டுப் பெரியவர்களை நான் பார்த்துக்கறேன்! நீ போயிட்டு வா!” என்று என்னவர் க்ரீன் சிக்னல் கொடுத்து விட, பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு நாங்களும் புறப்பட்டு விட்டோம்!


திருச்சி ஜங்ஷனிலிருந்து ரயிலில் கோவைக்கு பயணம் செய்த இற்றைகளை(updates) நீங்கள் எல்லோரும் வாசித்து விட்டதால் மீண்டும் இங்கு அதை பகிர வேண்டாமென நினைக்கிறேன்! அப்புறம் என்ன! நேரே கல்லூரிக்குள் சென்று விடுவோம்! நண்பர்களை பார்ப்போமா!! வாங்க! வாங்க!


நிகழ்வில் முன்னாள் மாணவர்களும், பேராசிரியர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று சொன்னாலும் எனக்கு ஸ்பெஷல் பர்மிஷனில் மகளை அழைத்து வர அனுமதி தரப்பட்டது என்று தான் சொல்லணும்! நான் மூன்றாண்டுகள் வலம் வந்த  கல்லூரியை மகளுக்கும் காண்பிக்கணும் என்று நினைத்தேன்! அனுமதித்த நண்பர்களுக்கு என் நன்றிகள்!


நுழைவாயிலேயே தோழி ஒருவரோடு அளவளாவிய பின்னரே உள்ளே சென்றோம்! ஆதி! உன்னோட சித்திரைத் தேர் பதிவை என்னோட அம்மாவுக்கு வாசித்து காண்பித்தேன்! ரொம்ப அழகா இருந்தது! நானே நேரில் பார்த்த மாதிரி இருந்தது! என்றாள் தோழி. தோழியின் கருத்துரை மனதுக்கு உற்சாகத்தைத் தந்தது.


சரி! நிகழ்ச்சித் துவங்குவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு! அதுக்குள்ள காலேஜை சுத்தி பார்த்துட்டு வரலாம் என்று சொல்லி மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினேன்! ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே சென்றதில் இத்தனை வருடங்களில் எங்களிடம் தான் மாற்றங்கள் இருக்கே தவிர கல்லூரி அப்படியே தான் இருந்தது!

சரி! அடுத்த பகுதியில் மீதிக்கதைகளை சொல்லட்டுமா..🙂


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

9 ஜூலை 2025


6 கருத்துகள்:

  1. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வெங்கட் உங்களுக்கு உறுதியளித்து உங்களையும் ரோஷ்ணியையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுப்பியது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்! அதனால் தான் சென்று வர முடிந்தது! நினைவுகளை மீட்டுக் கொள்ளவும் முடிந்தது!

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. என் மேல நம்பிக்கை இருக்கு தானே! வீட்டுப் பெரியவர்களை நான் பார்த்துக்கறேன்! நீ போயிட்டு வா!” என்று என்னவர் க்ரீன் சிக்னல் கொடுத்து விட, பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு நாங்களும் புறப்பட்டு விட்டோம்!//

    சூப்பர்! ஆதி. வெங்கட்ஜி கிரேட்! சிறப்பான விஷயம்.

    கல்லூரியை ரோஷ்னிக்குச் சுற்றிக் காட்டியதும் மகிழ்வாக இருந்திருக்கும்.

    பொறுப்புகள் இருக்கும் போது நாம் முடிவெடுத்துச் செல்வது கடினம் தான். இங்கும் எனக்குப் பச்சை விளக்கு கிடைத்தாலும் வேறு சில காரணங்களால் பயணம் செய்வது முடியாமல் போகிறது.

    தொடர்கிறேன் ஆதி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். பொறுப்புகளை தட்டிக் கழிக்க முடியாதே! ரோஷ்ணிக்கும் நான் படித்த கல்லூரியை காண்பித்ததில் மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. விஜயலஷ்மி சென்னை9 ஜூலை, 2025 அன்று 8:59 PM

    தோழர் வெங்கட் கிரேட் உங்களுடைய விருப்பத்தை செயல்படுத்த துணையாக இருக்கிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்! இக்கட்டான நிலைகளில் அவரின் துணை கொண்டு தான் சமாளிக்க முடிகிறது!

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயலக்ஷ்மி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....