செவ்வாய், 15 ஜூலை, 2025

மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி ஆறு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே…


மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி ஒன்று


மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி இரண்டு


மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி மூன்று


மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி நான்கு


மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி ஐந்து




சிரிப்பு, மகிழ்ச்சி, புன்னகை என்று எத்தனை வார்த்தைகளால் அதைப் பற்றி வர்ணித்தாலும் நம் உடலும் மனமும் ஒரு செயலால் மிகவும் இலகுவான நிலைக்கு செல்லும் என்றால் அது நிச்சயமாக புன்னகை பூக்கும் போது தான்! ஆமாங்க! உங்கள் கவலைகளையும், வேதனைகளையும் ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு அவ்வப்போது கொஞ்சம் வாய் விட்டு சிரித்துப் பாருங்களேன்! இந்த நாளும் இனிய நாளாகும்!


நிகழ்ச்சி நிரலில் நண்பர்கள் தங்களைப் பற்றி பேசிய பின்னர் நாங்கள் எல்லோரும் மதிய உணவுக்கு சென்று விட்டதாக சொல்லியிருந்தேன் அல்லவா! அதில் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டேன்! இந்த விழாவின் முக்கிய நிகழ்வே அதுதான்! அப்படியொரு வாய்ப்பு எல்லோருக்கும் கிட்டுவதில்லை! பள்ளிநாட்களில் கூட அரிது தான்! ஏன்! எங்கள் கல்லூரி நாட்களில் கூட எங்கள் வகுப்பில் எடுத்ததில்லை! அப்படியொரு வாய்ப்பு என்றால் சும்மாவா!


க்ரூப் ஃபோட்டோ! அதுவும் எல்லாத் துறை மாணாக்கர்களும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படம்! பள்ளிநாட்களில் எடுத்துக் கொண்ட க்ரூப் ஃபோட்டோ என்றால் என்னிடம் மூன்று அல்லது நான்கு தான் இருக்கும்! ஏனோ அப்போதெல்லாம் வருடாவருடம் எடுத்ததும் இல்லை! அப்படியே எடுத்திருந்தாலும் பெற்றோர் அதற்கு பணம் தந்திருப்பார்களா என்பதும் கேள்விக்குறி தான்..🙂 அன்றைய காலகட்டம் அப்படி!


சரி! நிகழ்வின் கதைக்கு வருவோம்! க்ரூப் ஃபோட்டோ எடுத்து கொள்வதற்காக எல்லோருமாக ஆடிட்டோரியத்துக்கு சென்று சேர்ந்தோம்! ஆண்களும் பெண்களுமாக முதலில் அங்கிருந்த படிகளில் நின்றோம்! பின்பு புகைப்பட கலைஞரின் அறிவுறுத்தலின் படி முதலுரிமை பெண்களுக்கே வழங்கப்பட்டு பின்பு பெண்கள் எல்லோரும் அமர்ந்து கொண்டோம்!


புன்னகை பூக்கும் முகத்துடன் ஃபோட்டோவில் இருப்பதற்காக எல்லோருமாக சேர்ந்து ‘இட்லி’ என்று குரல் எழுப்பினோம்..🙂 நம் வீடுகளில் அம்மாவோ, மனைவியோ காலைச் சிற்றுண்டிக்கு ‘இட்லி’ செய்திருந்தால், சோர்ந்து போன முகத்துடன் ‘இன்னிக்கும் இட்லியா!’ என்ற குரல் நம்மிடமிருந்து எழும்பும்..🙂 ஆனால் இங்கு ‘இட்லி’ என்ற சொல்லால் அனைவரும் இன்முகத்துடன் காட்சி தந்தோம்..🙂

எல்லாத் துறையும் சேர்ந்தும், பின்பு துறை வாரியாகவும் என நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி மையக் கட்டிடத்துக்கு வந்து சேர்ந்தோம்! ஐஸ்க்ரீமுடன் நல்லதொரு மதிய உணவை எடுத்துக் கொண்ட நிறைவுடன்  எல்லோரும் வகுப்பறைக்குச் சென்றோம்! எதற்காக!






வகுப்பறை என்றாலே நம் நினைவில் நிறைய பசுமையான காட்சிகள் தோன்றும்! சின்னஞ்சிறு வயதில் பள்ளிக்குச் சென்றது முதல் கல்லூரி வரையில் ஆசிரியர் வகுப்பறையில் பாடங்களைக் கற்றுத் தந்தது முதல் நட்புகளுடன் மகிழ்ந்த நேரங்கள், ஆசிரியரிடம் பிரம்பால் அடி வாங்கியது வரை அதன் தொடர்பான காட்சிகள் அனைத்தும் கண்முன்னே திரையிடப்பட்டு காட்சிப்படுத்தப்படும்!


நிகழ்வின் ஒரு பகுதியாக மதிய உணவுக்குப் பின் எல்லோரும் ஒரு வகுப்பறைக்குச் சென்றோம்! அங்கே எங்களின் ஒரு ஆசிரியரும் இருந்தார்! எதற்காக? எங்கள் கல்லூரி நாட்களின் நினைவுகளை மீட்டெடுப்பதற்காக! எல்லோரும் அவரவரின் இருக்கையில் அமர்ந்ததும் ஆசிரியர் ஒவ்வொரு பெயராக அழைக்க, யெஸ் சார்! ப்ரசன்ட் சார்! அவன் வரல சார்! சார்! அவன் வெளியே போறான் சார்! என்று சொல்லி மகிழ்ந்தோம்!


நிஜமாகவே அன்று எங்கள் கல்லூரி நாட்களுக்கே சென்று விட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது! வழக்கமாக எங்கள் இருக்கைக்குப் பின்னே அமரும் நண்பர்களை அன்றும் அமரச் சொல்லி மகிழ்ந்தோம்! ஏ! நீங்க ரெண்டு பேரும் இங்க தான உட்காருவீங்க! இவ பேப்பர்ல பாட்டு வரியெல்லாம் எழுதித் தருவா! நீயும் பின்னாடி உட்கார்ந்து பாடுவியே! ஞாபகம் இல்ல! ஒருநாள் சார் கிட்ட கூட மாட்டினோம்! என்று அன்றைய நாளின் நினைவுகளில் சுழன்று சற்று நேரம் அசைப் போட்டுக் கொண்டிருந்தோம்!


என் ஆரம்பகால எழுத்துகளில் கூட கல்லூரி கலாட்டாக்களைப் பற்றி எழுதியிருப்பேன் என்று நண்பர்களிடம் பெருமையாக  சொல்லிக் கொண்டிருந்தேன்! கேலியும் கலாட்டாவுமாக கழிந்த பொன்னான நாட்கள் அவை! வீட்டில் என்ன சூழலாக இருந்தாலும் கல்லூரிக்குச் சென்றால் எல்லாம் மறந்து விடும்! அதுபோல் அன்றைய நாளிலும் எல்லாவற்றையும் மறந்து மீண்டும் கல்லூரிப் பருவத்துக்குச் சென்று விட்ட உணர்வு உண்டானது!


சிறிதுநேரம் வகுப்பறையில் பசுமையான நினைவுகளை மீட்டெடுத்த பின் மீண்டும் நிகழ்வு நடக்கும் அறைக்கே சென்றோம்! அங்கே விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த நண்பர்களை பாராட்டி நினைவுப்பரிசு தருதல்! நன்றி கூறுதல்! என்று எல்லாம் முடிந்ததும் நண்பர்கள், தோழிகள் என எல்லோரும் கூடி DJ உடன் நடனம் ஆடத் துவங்கினர்!


ஒலிக்கும் பாடலுக்கேற்ற படி அவரவருக்கு தெரிந்த நடனங்களை மகிழ்வுடன் அங்கே ஆடிக் கொண்டிருந்தனர்! எல்லோரின் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி! நான் அங்கே பார்வையாளராக தான் இருந்தேன்..🙂 அப்படியே சிறிது நேரம் நண்பர்களின் நடனங்களைக் கண்டு மகிழ்ந்த பின் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டோம்!


அருமையான இந்த நிகழ்வில் ஒருநாள் முழுவதும் கல்லூரியைச் சுற்றி வந்து ஆசிரியர்களைச் சந்தித்து, நட்புவட்டத்தோடு அளவளாவி என்று அன்றைய நாள் மிகவும் இனிமையாகவே சென்றது எனலாம்! சில்லென்ற கோவையிலேயே வளர்ந்தவள் என்பதாலோ என்னவோ அன்றைய நாளும் மழையோடு துவங்கி குளுமையான சூழலுக்குச் சென்றது மனதுக்கு இணக்கமாக உணர முடிந்தது!


இந்த அருமையான சந்திப்பில் கலந்து கொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்கிறேன்! வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நண்பர்களுக்கு என் நன்றிகள்! நிகழ்வை தவற விட்டிருந்தால் நிச்சயமாக வருந்தியிருப்பேன் என்று மட்டும் உணர முடிந்தது! எல்லோருக்கும் இப்படியொரு வாய்ப்புக் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான்! இப்படியொரு வாய்ப்பு உங்கள் வாழ்விலும் கிடைக்குமானால் நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! 


மாலைநேரம் நிகழ்வில் கலந்து கொண்ட மன நிறைவுடன் இனிமையான பொழுதுகளை அசை போட்டுக் கொண்டே தோழியுடன் அங்கிருந்து கிளம்பி விட்டேன்! 25 வருட இடைவெளியில் எங்களிடம் மட்டும் மாற்றமல்ல! கோவையும் நிறையவே மாறிவிட்டது! பெருகிப் போன கட்டிடங்களும் எங்கு சென்றாலும் வாகன நெரிசலும் என மாறிவிட்டது! வழியில் அம்மன் கோவில் ஒன்றிலிருந்து பால்குடங்கள் வரிசையாக சென்று கொண்டிருக்க அதை பார்த்துக் கொண்டே கடந்து சென்றோம்!


அடுத்த நாள் காலையிலேயே கோவையிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு கூட்டை நோக்கி புறப்பட்டு விட்டேன்! இனி! செய்யவேண்டிய பணிகள் கண்முன்னே என்பது போல் மீண்டும் அன்றாடப் பணிகளோடு பிணைத்தும் கொண்டேன்! இதுவரை இந்தத் தொடரை வாசித்து வந்த அனைவருக்கும் என் நன்றிகள்! என் கல்லூரி நினைவுகளில் நீங்களும் உங்கள் நினைவுகளை மீட்டெடுத்திருக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இந்தத் தொடரை இத்துடன் நிறைவு செய்து கொள்கிறேன்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

15 ஜூலை 2025


3 கருத்துகள்:

  1. இந்த நிகழ்வின் சிறப்பாக எனக்குத் தெரிவது வருகைப்பதிவேடு நிகழ்வுதான். அதில்தான் இன்னும் அதிகமாக அந்தக் கால நினைவுகள் வரும். அந்த செல்ஃபி எடுக்கும் நண்பர் முகம் 25 வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நானும் கற்பனை செய்து பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த செல்ஃபி எடுக்கும் நண்பர் முகம் 25 வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று நானும் கற்பனை செய்து பார்த்தேன்// எனக்கும் அதேதான் தோன்றியது.

      நீக்கு
    2. கோவையிலும் வாகன நெரிசலா? Re union, டெக்னாலஜியால் சாத்தியமாகியிருக்கும் நல்ல விஷயம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....