அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம். முந்தைய பகுதிகளுக்கான சுட்டி கீழே.
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்று
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி இரண்டு
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி மூன்று
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி நான்கு
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஐந்து
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஆறு
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஏழு
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி எட்டு
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி ஒன்பது
குளுகுளு பயணம் போகலாமா - பகுதி பத்து
சுமதியுடன் ஒரு தேநீர் உலா:
சென்ற பகுதியில் கோத்தகிரியில் அமைக்கப்பட்டுள்ள ஜான் சல்லிவன் பூங்காவுக்குச் சென்று வந்த கதைகளைச் சொல்லியிருந்தேன்! அதற்கு அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் Darmona Tea factory! இங்கே Free tea tour என்று போடப்பட்டிருந்த பதாகையை பார்த்ததும் உள்ளே சென்றோம்! முகப்பில் இருந்த அலுவலகத்தில் சென்று சொன்னதும் ஒரு பெண்மணியை எங்களுடன் அனுப்பி வைத்தனர்!
அவரின் பெயர் சுமதி என்று சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு factoryன் உள்ளே அழைத்துச் சென்றார்! நண்பர் மோகனும் ‘இங்கே வந்த நண்பர்களை எல்லாம் பார்த்து வரச் சொல்லியிருக்கேன்! ஆனால் நான் பார்த்ததில்லை!’ என்று சொல்லி அவரும் எங்களுடன் சுற்றிப் பார்க்க உள்ளே வந்தார்!
சுமதி எங்களிடம் அந்த factoryல் நடைபெறும் ஒவ்வொரு வேலைகளைப் பற்றியும் விரிவாகச் சொன்னார்! தேயிலைத் தோட்டங்களில் இருந்து பறித்து மூட்டையாக வரும் இலையிலிருந்து துவங்கி அவை ஒவ்வொரு இயந்திரத்திலும் எப்படி பக்குவப்படுத்தப்பட்டு தேயிலைத் தூளாக பேக்கிங் ஆகி வருகிறது என்பது வரை அழகாகச் சொன்னார்!
அவை எல்லாவற்றையும் ஒவ்வொரு இயந்திரத்திலும் எப்படி வருகிறது என்றும் எங்களுக்கும் காண்பித்தார்! ‘ஃபோட்டோ எடுத்துக்கலாமா என்று நான் கேட்டதும் தாராளமா எடுத்துக்கோங்க! வீடியோ வேண்டுமானாலும் எடுத்துக்கலாம்!’ என்றார்! நானும் அவரிடம் பல கேள்விகளை கேட்டுத் தெரிந்து கொண்டேன்! புன்னகையுடன் எல்லாவற்றுக்கும் பதிலும் தந்தார்!
அந்த factoryல் விறகுகள் மலை போல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது! தேயிலைத் தூள் செய்யும் இடத்தில் இவ்வளவு விறகு எதற்கு?? என்று கேட்டதும், furnace ஒன்றை எங்களுக்கு காண்பித்தார்! செக்கச் சிவக்க இருக்கும் தகிக்கும் அனல் மூலம் தான் மேலே மிஷினில் அரைத்த இலைகள் காய வைக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்! அங்கிருந்த ஊழியர் ஒருவரும் அதைச் சொன்னார்!
இந்த இலைகளுடன் நிறமி சேர்க்கப்படுகிறதா? மசாலாக்களை எந்த பதத்தில் சேர்ப்பீர்கள்? க்ரீன் டீ எப்படி உருவாகிறது? First quality என்று எப்படி சொல்றீங்க? இங்கேயிருந்து எங்கெல்லாம் செல்கிறது? என்ற அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாக புன்னகை ததும்பும் முகத்துடன் பதில் தந்தார் சுமதி! சுற்றிக் காண்பிக்கும் போதும் பார்த்து வாங்க! கீழே குனிஞ்சு வாங்க! இதுல கை வெச்சிடாதீங்க! என்றெல்லாம் சொல்லி எங்களை வழிநடத்தினார்!
Factoryல் மலர்த்தோட்டம்:
நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சுமதி பொறுமையாக பதில் தந்தார்! அந்த தொழிற்சாலையை பொறுத்த வரை அவர்கள் தயாரிக்கும் தேயிலைத்தூளை wholesaleக்கு தருவதாகவும், அங்கு எந்த நிறமியும் சேர்க்காமல் first quality தயாரிப்புகள் தான் செய்வதாகவும் சொன்னார்!
அதன் பின் எங்களை அவர் மாடிக்கு அழைத்துச் சென்றார்! அங்கு ஒரு வெட்டவெளியில் மலர்த்தோட்டமும் புல்வெளியுமாக அழகாக இருந்தது! அதைக் கடந்து சென்றால் ஒரு அறையில் அந்த factory கிடைத்திருக்கும் விருதுகள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன! அதற்கு அடுத்ததாக அவர்களின் தயாரிப்புகளும் அங்கு இருந்தன! அவற்றையெல்லாம் எடுத்து காண்பித்தார் சுமதி!
அவற்றின் விலைகளையும் அவர் சொன்னார்! நேரிடையாக இங்கேயே விற்பதால் விலையும் மிகவும் மலிவாகவே இருந்தது! நான் அதில் எங்கள் வீட்டுக்கென க்ரீன் டீ, மசாலா டீ, சாதா டீ என சிலவற்றை வாங்கிக் கொண்டேன்! நண்பர் மோகன் ‘இந்த டீயை குடிச்சு பழகிட்டால் நாம எப்பவும் வாங்கற டஸ்ட் டீ நமக்கு பிடிக்காது’ என்று சொன்னார்! சுமதியும் அவர்களின் விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்து ‘நீங்க யூஸ் பண்ணி உங்களுக்கு பிடிச்சிருந்தா நாங்க கொரியர் கூட பண்ணுவோம்’! என்று சொன்னார்!
ஊருக்கு வந்த பின் அன்றாடம் வாங்கி வந்த மசாலா டீயைத் தான் உபயோகித்து வருகிறேன்! நன்றாகவே இருக்கிறது என்பதையும் இந்தப் பதிவிலேயே சொல்லி விடுகிறேன்! Factory tour பார்க்க வருபவர்கள் அவர்களின் தயாரிப்புகளை டேஸ்ட் பண்ணிப் பார்க்க ஆசைப்படுகிறார்களாம்! அதுக்காக தான் வெளியே புல்வெளியும், மலர்த்தோட்டமுமாக அலங்கரித்து வருகிறார்களாம்! அங்கேயே இருக்கைகளும் போட்டுவிட்டால் அழகான சூழலில் டீயைப் பருகிக் கொண்டே சற்று இளைப்பாறலாம் என்று ஏற்பாடு செய்வதாக சொன்னார் சுமதி!
நல்ல ஐடியா தான்! விளம்பரமும் ஆச்சு இல்லையா! சுமதியோட ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா என்று கேட்டு எடுத்துக் கொண்டதும், நீங்களும் நில்லுங்க சார்! நான் எடுத்து தரேன்! என்று சொல்லி எங்களை படம் பிடித்துத் தந்தார்! அவரிடம் பேச்சு கொடுத்ததில் சுமதிக்கு சொந்த ஊர் ஊட்டியாம்! திருமணத்துக்குப் பின் இரண்டு வருடமாக இங்கே கோத்தகிரியில் வேலை பார்ப்பதாகச் சொன்னார்! அவருக்கு எங்கள் நன்றிகளைச் சொல்லிக் கொண்டு கிளம்பினோம்!
அடுத்து எங்கே செல்வது?? சார்! போற வழியில ஒரு வ்யூ பாயிண்ட் இருக்கு சார்! அவ்வளவா யாருக்கும் தெரியாது! ரொம்ப சூப்பரா இருக்கும்! அங்கே போகலாம்! அப்புறம் கோத்தகிரிக்கு வந்துட்டு நீங்க எல்லாரும் டீ எஸ்டேட்ல ஒரு ஃபோட்டோ எடுத்துக்க வேணாமா? என்று நண்பர் மோகன் எங்களிடம் சொல்லி எங்களை ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றார்!! அங்கே என்னவெல்லாம் பார்த்தோம்?
மேலும் தகவல்கள் அடுத்த பகுதியில் தொடர்கிறேன். பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
30 ஜூலை 2025
Factory தோட்டம் அழகாக இருக்கிறது. அருமையான புகைப்படங்கள்.
பதிலளிநீக்குதிருமதி சுமதியிடம் நீங்கள் கேட்டுப் பெற்ற பதில்கள் எல்லாம் ரகசியமா?!!! ஒரு கேள்விக்கான பதிலை மட்டுமே சொல்லி இருக்கிறீர்கள்!
// ஊருக்கு வந்த பின் அன்றாடம் வாங்கி வந்த மசாலா டீயைத் தான் உபயோகித்து வருகிறேன் //
பதிலளிநீக்குஅன்றாடம்? 'அங்கு' என்றிருக்க வேண்டுமோ? கூகுள் விளையாடி இருக்கிறதோ!
factory படங்கள் பூந்தோட்டம் சூப்பர் ஆதி.
பதிலளிநீக்குநான் இப்படியான ஒன்றை மாஞ்சோலையில் பார்த்திருக்கிறேன்.
பரவாயில்லையே முதல் கிரேட் டீ மொத்த விலையில் விற்கிறார்களே. சூப்பர்
பொதுவாக நான் அறிந்தது, முதல் தரம், இரண்டாம் தரம் எல்லாம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் இங்கு கிடைப்பவை மூன்றாம் நான்காம் தரம் தான் என்றும்.
அங்கேயே வாங்கினால் நமக்குக் கிடைக்கும்தான் முதல் தரம். ஆனால் கடைகளில் தெரியவில்லை இப்ப இங்கும் முதல் தரம் கிடைக்கும்படி செய்திருக்காங்களா என்று தெரியவில்லை.
கீதா