செவ்வாய், 8 ஜூலை, 2025

மீண்டும் கல்லூரிக்குப் போகலாம் - பகுதி ஒன்று - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட தோழமைகளைக் காண ஒரு இரயில் பயணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******










கல்லூரிப்பருவம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் பசுமையாக நினைத்துப் பார்த்து மகிழக்கூடிய பருவம்! அவர்களிடையே அந்த வயதில் எவ்வித வேறுபாடும் இருக்காது! பங்கிட்டுக் கொள்ளும் தேநீரில் வாழ்நாள் நட்புகளை உருவாக்கிக் கொள்ளும் பருவமும் அது தான்! சமுதாயத்தில் புரட்சிகரமான பலப்பல மாற்றங்களை உருவாக்கும் வலிமை கல்லூரியில் பயிலும் இளைஞர்களிடம் உண்டு என்று நாம் அனைவரும் அறிந்ததே!


சரி! கல்லூரிப் பருவத்தை கடந்து 25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அந்த நாளுக்கு செல்வது என்பது நிதர்சன வாழ்வில் சாத்தியமா என்றால் ஆமாங்க நிச்சயமாக அது சாத்தியமே என்று 1997 - 2000 ஆம் ஆண்டில் கோவை அரசு பாலிடெக்னிக்கில் கற்றுத் தேர்ந்த எங்களால் ஆணித்தரமாக சொல்ல முடியும்! 


அன்றைய மாணவர்கள் இன்று தங்கள் துறைகளில் சாதனைகள் பல செய்து உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்! உலகின் பல பகுதிகளில் வசிக்கும் அன்றைய மாணவர்களை ஒன்று திரட்டி இப்படியொரு மிகப்பெரிய நிகழ்வை உருவாக்குவது என்றால் அது லேசுபட்ட விஷயமல்ல!


அதை ஒரு வேள்வியாக நினைத்து அதற்கான செயல்களில் இறங்கி ஒவ்வொருவரையும் முதலில் ஒரு குழுவில் திரட்டி பின்பு அதை மிகப்பெரிய விழாவாக ஏற்பாடு செய்து என்று பல மாதங்களாக இதற்காக உழைத்தனர் நண்பர்கள்! அந்த குறிப்பிட்ட நாளும் வந்தது!


25 வருடங்களுக்குப் பின் நாம் கற்றுத் தேர்ந்த கல்லூரிக்கு மீண்டும் செல்வது என்பதே எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! அடுத்து நம்மோடு கற்றுத் தேர்ந்த  நட்புவட்டத்தை மீண்டும் சந்தித்து பேசுவது என்பது உற்சாக ஊற்றை உண்டு செய்யும்! ‘மாதா பிதா குரு தெய்வம்’ என்ற வாக்குக்கு ஏற்ப நம்மைப் படைத்த இறைவனுக்கும் மேலான குருவுக்கு மரியாதை செலுத்துவது என்பது எத்தகைய உயர்ந்த செயல்!


இவை அனைத்தையும் நாங்கள் உணர்வுப்பூர்வமாக உணர்ந்தோம்! மகிழ்ந்தோம்! என்று சொன்னால் அது மிகையாகாது! இப்படியொரு வாய்ப்பும் எல்லோருக்கும் கிட்டுமா! என்றால் அது சந்தேகமே! இந்த நாளின் அனுபவங்களை இன்னும் சற்றே விரிவாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்! வாங்களேன்! 


இந்தியாவிலேயே முதன்முதலில் துவங்கிய பாலிடெக்னிக் என்ற பெருமை எங்கள் கல்லூரியைச் சேரும்! ஆமாங்க! 1945 ஆம் ஆண்டு பல்வேறு துறைகளுக்கான பயிற்சிக்கூடமாக அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடு அவர்களால் துவங்கப்பட்டது! முதலில் ‘ஆர்தர் ஹோப்’ அவர்களின் பெயரில் ‘ஹோப் காலேஜ்’ என்றும் பின்பு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி என்ற பெயரும் கொண்டது!


எங்கள் கல்லூரி 52 ஏக்கர்களைக் கொண்ட மிகப்பெரிய வளாகம்! ஒவ்வொரு துறைகளுக்கும் தனித்தனியே வகுப்பறைகள், ஆய்வகங்கள், பணிமனைகள், ஆண்கள் பெண்களுக்கென தனித்தனியே விடுதிகள், நூலகம், பேராசிரியர்களுக்கான குடியிருப்புகள் என்று நீண்ட நெடிய வளாகம்! ஒரு பேட்டரி காரில் பயணம் செய்து சுற்றிப் பார்க்கலாம் எனச் சொல்லும் படியான தோற்ற அமைப்புக் கொண்டது! இந்நாளைய கல்லூரிகள் அத்தனை விரிவானதாக இருப்பதில்லை!


கோவையின் பீளமேடு பகுதியில் civil aerodrome அருகே அமைந்துள்ளது எங்கள் கல்லூரி! ஒருபுறம் அரசினர் மருத்துவக்கல்லூரி, அருகே CIT (Coimbatore institute of technology), எல்லோராலும் ‘சித்ரா’ என்று சொல்லக்கூடிய SITRA (The South India textile research association) PSG arts and science college என்று பல்வேறு துறைகளின் அமைப்புகளுக்கு அருகே அமைந்துள்ளது எங்கள் கல்லூரி!


இத்தனை சிறப்புமிக்க கல்லூரியில் கற்றுத் தேர்ந்து இன்று பல்வேறு நிலைகளில் சாதனை படைத்து வரும் முன்னாள் மாணவர்களின்  சந்திப்பு என்றால் அதுவும் 25 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் சிறப்பான நிகழ்வு என்றால் சும்மாவா! உலகின் பல பகுதிகளில் இருந்தும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக எல்லோரும் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்தார்கள்! அதற்கான ஏற்பாடுகளும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தது!


மே மாதத்தின் மத்தியில் ஒரு நாளை தேர்ந்தெடுத்து அன்றைய மாணவர்களான எல்லோருக்கும் தகவல் தரப்பட்டது! எங்களது பேராசிரியர்களும் இப்போது பணியிலிருந்து ஓய்வு பெற்று இருப்பார்களே! தன் ஓய்வுக்காலத்தில் பல்வேறு ஊர்களில் வசித்த அவர்களையும் தேடிச் சென்று இந்த நிகழ்வில் வந்து சிறப்பிக்க அழைப்பு விடுத்தார்கள்!


கல்லூரி வாட்ஸப் குழுவில் அவரவர் தன்னிடம் உள்ள உடன் பயின்ற நண்பர்களின் தகவல்களையும், அன்றைய பொக்கிஷப் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்! இந்த நிகழ்வில் பங்குபெற தங்கள் வரவை உறுதி செய்தார்கள்! இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக சிறப்புமிக்க நிகழ்வுக்கான நாளும் நெருங்கிக் கொண்டே வந்தது!






இந்த சிறப்பான நிகழ்வைப் பற்றி தினமலர், மாலை முரசு, கோவை டைம்ஸ் போன்ற நாளிதழ்களிலும் ராஜ் நியூஸ், மெகா டிவி போன்ற சேனல்களிலும் வெளியானது என்ற சிறப்பான தகவலையும் மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன். அடுத்த பகுதியில் மீதிக்கதைகளைப் பார்க்கலாம்!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

8 ஜூலை 2025


8 கருத்துகள்:

  1. என்ன ஒரு உணர்வுபூர்வமான சந்திப்பு..   செய்தித்தாள்களிலும் வந்திருப்பது சிறப்பு.  எத்தனைபேரை அடையாளம் காண முடிந்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலரை புகைப்படத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது! சிலரை நேரில் பார்த்த போது! எங்கள் வகுப்பில் 60 மாணவர்கள் ஆச்சே!

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. மிகப் பெரிய சந்திப்பு கூடவே செய்தித்தாள்களிலும் வந்திருக்கிறதே! உங்கள் எழுத்தே உங்கள் மகிழ்ச்சியை சொல்கிறது. ரொம்பவே எஞ்சாய் செய்திருக்கின்றீர்கள் என்று தெரிகிறது.

    CIT யில் அலுமினி என் கணவர். B.E. படித்த கல்லூரி.

    பீளமேட்டில்தான் இருந்தோம். பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்கள் குடியிருப்பில் இருந்தோம். ஹோப்ஸ் காலேஜ் ஸ்டாப். நீங்கள் சொல்லியிருக்கும் இடங்கள் எல்லாமே சுற்றிய இடங்கள்.

    அப்போது மகன் கோவை அரசு மருத்துவமனைக்கும் CIT (சித்ரா) வுக்கும் நடுவில் இருந்த GRNMS பள்ளியில் தான் மகன் 3 வருடங்கள் படித்தான்.

    கோயம்புத்தூர் நினைவுகள் வந்தன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். உண்மையில் மிகவும் எஞ்சாய் செய்தேன்!

      நீங்களும் அப்பகுதியில் வசித்தது குறித்து மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  3. வணக்க்ம், நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் அனுபவங்களை வாசிக்க தொடங்கி இருக்கின்றேன். அருமையான நினைவுகள். 25 வருடங்க;ளுக்கு பின் நண்பர்கள் சந்திப்பு என்பது மிகப்பெரிய சந்தோஷம் தரும் நிகழ்வு. மகிழ்ந்திருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நண்பர்களை மீண்டும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சியடைந்தேன்!

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க நிஷா.

      நீக்கு
  4. விஜயலஷ்மி சென்னை9 ஜூலை, 2025 அன்று 8:47 PM

    25 வருடங்களுக்கு பிறகு நீண்ட அருமையான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்ததா பள்ளி கல்லூரி வாழ்க்கை அந்த நாட்கள் திரும்ப கிடைக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் வாராத நாட்கள். நினைவுகளை மட்டும் தான் மீட்டெடுக்கலாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயலக்ஷ்மி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....