அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட முகநூல் இற்றைகள் - ஶ்ரீரங்கம் போண்டா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
சில வாரங்களுக்கு முன்னர் ஒரு அவசர பயணம் - பாண்டிச்சேரி வரை செல்ல வேண்டியிருந்தது. அப்படிச் சென்ற போது கிடைத்த அனுபவங்களை அப்போதைக்கு அப்போதே முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த இற்றைகள் இங்கே முகநூலில் இல்லாதவர்கள் படிக்க ஏதுவாகவும், ஒரு சேமிப்பாகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
கொள்ளிடம் பாலம் - ஒரு பார்வை - காணொளி:
இன்றைய காலை (02-11-2025) ஒரு பயணத்துடன் துவங்கி இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து இருக்கிறார்கள்..... காலை நேரத்தில் சிலுசிலுவென்ற காற்றை அனுபவித்தபடி கடந்து இதோ பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருக்கிறேன்...... கொள்ளிடம் பாலம் கடக்கையில் எடுத்த காணொளி ஒன்று...... உங்கள் பார்வைக்கு.....
ஸ்பீக்கர் 🔊 வாயன் ......
என்னடா இது, தலைப்பு கவுண்டமணி வசவு மாதிரி இருக்கே என்று உங்களுக்குத் தோன்றலாம். அப்படித் தலைப்பு வைக்க காரணமாக இருந்தது ஒரு சக பயணி...... ஒரு குழல் ஸ்பீக்கரை முழுங்கி விட்டது போல காலை நேரத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார்..... அவருக்கு வரும் அழைப்புகளும், அவர் அழைக்கும் நபர்களுக்கும் என தொடர்ந்து பேசிக்கொண்டே, இல்லை இல்லை கத்திக்கொண்டே இருக்கிறார்......
திருச்செந்தூரில் இருந்து சென்னை சென்று கொண்டிருக்கிறார், இரவு பத்து மணிக்கு புறப்பட்டவர், திருச்சியைத் தாண்டி பயணிக்கிறார், சென்னையில் ஒரு ரிசப்ஷன் நடக்க இருப்பதால் அதற்காக செல்கிறார் என அவர் செல்லும் நோக்கம் பேருந்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு கத்திக் கொண்டே இருக்கிறார். அதுவும் எனக்கு அதிகமாகவே கேட்கிறது - காரணம் அவர் இருப்பது எனக்கு அடுத்த இருக்கையில்.....
என்னதான் மண் மணம் கமழ பேசுகிறார் என்றாலும் இப்படி காதருகே தொடர்ந்து கத்தினால் அவரை தலைப்பில் சொன்னபடி திட்டத் தோன்றுகிறது..... அடேய்....... ஸ்பீக்கர் வாயா.. கொஞ்சம் அமைதியாக இருடா.....
எனக்குன்னே வந்து சேருதாங்கப்பா....... 😀
ரீல்ஸ் மோகம்....
எங்கே சென்றாலும் இந்த ரீல்ஸ் ரசிகர்கள் தொல்லை தாங்கவில்லை. காலை ஐந்து மணிக்கே பேருந்தில் பயணிக்கையில் கட்டை விரல் மேலே தள்ளித் தள்ளி ரீல்ஸ் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதையும் ஊர் முழுவதும் கேட்கும்படி வைத்து பார்(கேட்)கிறார்கள். ஒரே சமயத்தில் பத்து இருபது பேர் பார்க்க, எல்லா சப்தங்களும் காதுக்குள் ஒலிக்க, ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லையே என்று குழம்பிக்கிடக்கிறது என் காதுகள்.....
இதோ விழுப்புரத்தில் அடுத்த பேருந்தில் ஏறி பயணம் தொடர, பின் இருக்கை இளம்பெண் (காதலனுடன் என்று இங்கே சொல்லத் தேவை இருப்பதாகத் தெரியவில்லை..... 😃) "கிளியே கிளியே....." என ஒரே ரீலை திரும்பத் திரும்ப ஒலிக்க வைக்கிறார்..... ஒரு வேளை, அமைதியாய் வரும் தன் காதலனுக்கு ஏதேனும் சொல்ல வருகிறாரோ என்று ஒரு சம்சயம்..... 🤔 ஏதோ நல்லா இருந்தா சரி.....
குழம்பிய காதுகளுடன் தொடர்ந்து பயணத்தில் நானும்......
அம்மா….
ஒவ்வொருவருக்கும் அவரவர் அம்மா குறித்த அனுபவங்கள் தனிப்பட்டதாகவே இருந்தாலும், அம்மாவின் இழப்பு என்பது யாராலும் தாங்கிக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. பாண்டிச்சேரி வரை செல்ல வேண்டிய சூழல் கல்லூரி கால நட்பு - தோழி ஒருவரின் அம்மாவின் மரணம் காரணமாக ஏற்பட்டது. எனது அம்மா இறந்த போது இந்தத் தோழியும் மற்றுமொரு கல்லூரி காலத் தோழனும் (இருவருமே என்னுடன் கல்லூரியில் படித்தவர்கள்) வந்திருந்தனர். தற்போது தமிழகத்தில் இருப்பதால் தோழியின் அம்மா இறந்த செய்தி தெரிந்தவுடன் அவரது ஈமச் சடங்குகளில் பங்கு கொள்ள பாண்டிச்சேரி சென்று வந்தேன். போகும்போது பார்த்த காட்சிகளைக் கவனித்த அளவுக்கு வரும்போது காட்சிகளை பார்க்க முடியவில்லை. மனதுக்குள் எனது அம்மாவின் நினைவுகளும், தோழி தனது அம்மாவை இழந்ததில் காட்டிய சோகமும் மனதுக்குள் நின்றன. ஒவ்வொருவருக்கும் அம்மாவின் இழப்பு என்பது தாங்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அம்மாவின் இழப்பு தரும் வேதனைக்கு காலம் ஒரு மருந்தாக இருந்தாலும், அம்மாவின் தாக்கம் நம்முடன் என்றைக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
காலையில் புறப்பட்டு, அம்மா - எனது அம்மா மற்றும் தோழியின் அம்மா என அம்மாக்களின் நினைவுகளோடே இந்தக் குறும்பயணம் முடிந்தது. பயணம் குறித்து தொடக்கத்தில் சுவையாகத் தொடங்கினாலும், முடிவு அப்படியானதாக அமைக்க முடியவில்லை! அம்மாவின் நினைவுகள் அப்படி….
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
20 நவம்பர் 2025

பேருந்தில் இப்படி பாட்டு கேட்டுக் கொண்டு...ஹெட் ஃபோன் இல்லாமல் மத்தவங்களுக்கு கேட்கும்படி....கொஞ்சம் எரிச்சல் வரும்தான்.
பதிலளிநீக்குகீதா
அம்மா எப்பவுமே அம்மாதான் அம்மாவின் இழப்பைத் தாக்குவதும் சிரமம்தான். காலம் ஆற்றினாலும். நினைவுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். சில சமயம் மனம் கனத்துவிடும்.
பதிலளிநீக்குஉங்கள் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது.
கீதா
கொள்ளிடம் கடக்கும் காலை நேர பாடல் முகநூலிலும் கேட்டேன்.
பதிலளிநீக்குநிறையபேர் அலைபேசியில் எப்படி பேசுவது என்று தெரியாமல் இப்படிதான் கத்துகிறார்கள். மிக மெதுவாக பேசினாலே எதிராளிக்கு கேட்கும் என்பதை இவர்களுக்கு புரிய வைப்பது யார்? மேலும் நம் வீட்டு விஷயங்கள் பூரா அம்பலத்தில் ஏறுவதையும் உணரமாட்டார்களா?!!
ஆம்.. வெகு சிலரைத்தவிர எல்லோருக்கும் றீல்ஸ் மோகம் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு பாதிப்பில்லாமல் பார்த்துக் கேட்டால் நலம்!
பதிலளிநீக்குவாழ்க்கையின் ஒரு பாதி போனாற்போல இருந்தது அம்மா மறைந்தபோதும், அப்பா மறைந்தபோதும். என் மனதில் எனக்கு அம்மாதான் ஸ்பெஷல் என்று நினைத்திருந்தேன். அப்பா மறைந்தபோது இன்னும் அதிகமாக பாதிக்கப்பட்டேன்.
பதிலளிநீக்குநாட்டில் இந்த ஆல் இண்டியா ரேடியோக்கள் தொல்லை தாங்கவில்லை. 50 ரூபாய் கொடுத்து ஒரு ஹெட்செட் வாங்கத் தெரியாத பிச்சைக்காரர்கள் என்று எனக்குத் தோன்றும். அடுத்தவனுக்கு தொல்லை கொடுப்பதில் இவர்களுக்கு சலிப்பே இல்லை.
பதிலளிநீக்குஅம்மா இழப்பு பெரும் இழப்புதான். என்ன செய்ய?