அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட VERDANT சத்சங்கம் நிகழ்வுகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
தலைநகர் தில்லியில் இருக்கும்போது நடைப்பயிற்சியில் கிடைத்த அனுபவங்களை அவ்வப்போது “நடை நல்லது” என்ற தலைப்பில் இங்கே எழுதியதுண்டு. எழுத நிறைய விஷயங்களும் இருந்தது என்றாலும் கடந்த சில மாதங்களாகவே சூழல்கள் எழுதும்படியானதாக இல்லை. கொஞ்சம் எழுதினால் மீண்டும் மீண்டும் இங்கே எழுதுவதில் இடைவெளி. தவிர்க்க முடிவதில்லை என்பதும் ஒரு செய்தி. தற்போது திருச்சி வாழ்க்கை - வீட்டில் குடும்பத்தினருடன் இருக்கிறேன் என்பது ஒரு புறம் மகிழ்ச்சி. வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள், போக்குவரத்து என Hectic ஆகவே இருக்கிறது. இதில் நடுவே படிப்பதற்கோ எழுதுவதற்கோ சரியான நேரம் அமைவதில்லை. இனிமேல் தினம் ஒரு மணி நேரமேனும் படிக்கவும் எழுதவும் ஒதுக்க முயற்சி செய்ய வேண்டும். சமீபத்தில் மீண்டும் நடை துவங்கியிருக்கிறேன். காலை நேரத்தில் கிடைக்கும் இந்த நேரம் மனதுக்குப் புத்துணர்வு தருகிறது. அவ்வப்போது அந்த அனுபவங்களை முகநூலில் பகிர்ந்து வருகிறேன். தொடர்ந்து இங்கேயும் பகிர வேண்டும். காலை நேர நடை ஒன்றில் பார்த்த ஒரு காட்சி - இதோ கீழே பதிவாக….
ஶ்ரீரங்கம் போண்டா - நடை நல்லது - 27 அக்டோபர் 2025:
உங்க எல்லாருக்கும் மைசூர் போண்டா தெரிந்து இருக்கும்..... ஶ்ரீரங்கம் போண்டா தெரியுமா?
சென்ற வாரம் முழுவதும் மழை. அதனால் காலை நேர நடை தடைபட்டது. இதோ இன்றைக்கு காலை மீண்டும் திருவரங்க வீதியில் நடை..... வீட்டிலிருந்து புறப்பட்டு இல்லாளுடன் பல விஷயங்களை பேசியபடி சென்ற போது எதிரே வீதியோரத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டு இருந்தது. அங்கே தான் ஶ்ரீரங்கம் போண்டா அறிமுகம் ஆனது? மைசூர் போண்டா தெரியும் அது என்ன ஶ்ரீரங்கம் போண்டா? 🙂 ஏதாவது உள்குத்து இருக்குமோ?
யோசித்தபடியே நடை தொடர்ந்தது. காலை நேரத்தில் வீட்டு வாசல் தெளித்து, கோலம் போட்டு மங்களகரமாக நாளை துவக்குகிறார்கள் பல பெண்கள்...... தில்லியில் பார்க்கக் கிடைக்காத காட்சி..... இங்கே இன்னும் சில வீதிகளிலேனும் தொடர்வது மகிழ்ச்சி. இது அடுக்குமாடி குடியிருப்பு காலம் ஆயிற்றே.....
காலையில் வீட்டு திண்ணையில் அமர்ந்து கொண்டு வம்பு பேசிய இரு பெண்மணிகள், ஆந்திரத்திலிருந்து வந்த பக்தர்களிடம் 600/- ரூபாய் கட்டணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், அவர்களிடம் சுந்தரத் தெலுங்கில் மாட்லாடிய பெண்கள், துளசி மாலையை, தமிழ், தெலுகு, ஹிந்தி என பல மொழிகளில் விற்பனை செய்த பெண்மணி என காலை நேர பரபரப்பு ரங்கா ரங்கா கோபுரம் அருகே......
எல்லாவற்றையும் கேட்டபடி, பார்த்தபடி, இல்லாளுடன் பேசியபடியே நானும்..... அதெல்லாம் சரி அந்த ஶ்ரீரங்கம் போண்டா பத்தி சொல்ல மாட்டேன்னு அடம் பிடிக்காம சொல்லலாம்ல..... காலைல ஆசையை(பசியை)க் கிளப்பிவிட்டுட்டு சொல்லாம போனா எப்படி என்போர்களுக்கு...... கீழே படம் பார்க்க.......
ஒரு வேளை அந்த ஆட்டோ ஓட்டுநர் பட்டப் பேரோ? 🤔
*******
படமும் சிந்தனையும்......
இணைத்திருக்கும் இந்தப் படம் உங்களுக்கு என்ன சிந்தனைகளைத் தோன்றுவிக்கிறது..... சொல்லுங்களேன்......
முகநூலில் பகிர்ந்த போது சிலர் தங்களது சிந்தனைகளை பின்னூட்டங்களாக பகிர்ந்து இருந்தார்கள். இங்கே உங்களது சிந்தனைகளைச் சொல்லுங்களேன்! எனது சிந்தனைகள் கீழே தனி இற்றையாக!
இதனால் என்ன பயன்?:
இதனால் என்ன பயன்? என்ற கேள்வி நம்மில் அனைவருக்கும் உண்டு. இது இனிமேல் நமக்குத் தேவையில்லை என்ற போது, ஒன்று குப்பையில் போடுவோம் இல்லை எனில் பழைய பொருட்கள் வாங்குபவர்களிடம் பத்துக்கும் இருபதுக்கும் விற்றுவிட்டு அது என்ன ஆகும் என்ற சிந்தனையின்றி மறப்போம். இது தான் பொது நியதி. ஆனால் ஒரு சிலருக்கு பழைய பொருட்கள் பொக்கிஷம். தேடித் தேடிச் சேர்த்துக் கொண்டே இருப்பார்கள். அப்படியான ஒரு மனிதர் எனக்கு அறிமுகம் ஆகி சில வருடங்கள் இருக்கலாம்.
அம்மனிதர் திருவரங்கத்தில் Bag Repair கடை வைத்திருக்கிறார். அவர் கடை வாசலில் இருந்த நாற்காலியை நான் படம் எடுத்து முந்தைய இடுகையில் இணைத்து இருந்தேன். பயனற்றது என்று நம் மனதில் தோன்றிய அந்த நாற்காலியைக் கூட பயனுள்ளது என்று நமக்குப் புரிய வைப்பது போல, அந்த பழைய நாற்காலி மீது தனது கடையின் பதாகையைச் சாய்த்து வைத்து இருக்கிறார் அவர் (படம் இரண்டும் பார்க்க இங்கேயும் இணைத்து இருக்கிறேன்). சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று சொல்வது வழக்கம். ஆனால் பல் குத்த உதவும் என்று சேகரிக்க ஆரம்பித்தால் எல்லாவற்றையும் வைத்துக் கொள்ள அதிக இடம் தேவையாக இருக்கலாம் என்பது என் எண்ணம்…… அவரும் இப்படி ஒரு விஷயம் சொன்னார்….
பழைய, புதிய நாணயங்கள், தீப்பெட்டிகள், விமான டிக்கெட்டுகள் (போர்டிங் பாஸ்), விளக்குகள், அலைபேசிகள், தபால்தலைகள் என என்னென்னமோ சேகரித்து வைத்து இருக்கிறார் இவர். அவற்றை அவ்வப்போது அல்லது வாய்ப்பு கிடைக்கும் போது கண்காட்சியாகவும் காட்சிப்படுத்துகிறார். சமீபத்தில் திருவரங்கம் பள்ளி ஒன்றிலும், துறையூர் பள்ளி ஒன்றிலும் அப்படி காட்சிப்படுத்தியதின் காணொளியை அவரது அலைபேசி வழி எனக்குக் காண்பித்தார்…. அவற்றை எல்லாம் பாதுகாக்க நிறைய இடம் தேவையாக உள்ளது என்பதை அவர் கடைக்கு சமீபத்தில் சென்றபோது சொல்லிக்கொண்டு இருந்தார். கடையிலும் வீட்டிலும் இப்படியா சேகரித்த பொருட்கள் ஏராளமாக இருக்கிறது என்றும் அதற்கான இடம் தான் பிரச்சனையாக இருக்கிறது என்றும் ஆதங்கத்துடன் சொல்லிக் கொண்டு இருந்தார்.
சரியாக வைத்துக் கொள்ள முடிந்தால், அவற்றை இன்னமும் சிறப்பாகக் காட்சிப்படுத்த முடியும் என்றும், இன்றைய சிறுவர்களுக்கு நம் பழமையை உணர்த்தும் antique பொருட்களை, அவர்களுக்குப் பிடித்த வகையில் காண்பிக்க முடியும் என்றும் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரது சேகரிப்பு குறித்து பேசும்போது அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. அதனால் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும் காட்சிப் படுத்த ஆகும் செலவையேனும் ஏற்றுக்கொள்ள பள்ளிகள் முன்வந்தால் நன்றாக இருக்கும். துறையூர் பள்ளி அப்படி ஏற்பாடு செய்து கொடுத்தது என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இப்படி எத்தனையோ சிந்தனைகள், திறமைகள்…… நமக்கு குப்பையாகத் தெரியும் ஒரு பொருள் இவருக்கு பொக்கிஷமாக இருக்கிறது. சக மனிதர்களே தேவையில்லை என்ற நிலையில் பலரும் இருக்கும் இன்றைய நிலையில், ஜடப் பொருட்கள் மீதும் கூட ஒரு வித காதலுடன் இருக்கும் இவரைப் போன்றவர்களும் இருக்கிறார்கள்…… நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை கதை மாந்தர்கள்…… என்ற சிந்தனையுடன் இன்றைய காலைப்பொழுதை துவங்குவோம் நண்பர்களே....
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
19 நவம்பர் 2025




அடடா... ஸ்ரீரங்கம் போண்டா என்று போட்டு காலங்கார்த்தால நாவின் நரம்புகளை மீட்டி விட்டீர்களே.... இங்கு அதிகாலையிலேயே வடை போண்டா போட்டு சுடச்சுட விற்பனை நடக்கும்.
பதிலளிநீக்குஅடுத்த ஆட்டோவில் சட்னி என்று எழுதி இருந்ததை நீங்கள் பார்க்கவில்லையா?!!!
பதிலளிநீக்குஅதிகாலை நடை எப்போதுமே புத்துணர்ச்சி தரும். எனக்கும் அனுபவம் இருக்கிறது, ஆனால் எதையும் தொடர்ந்து செய்யும் வழக்கம் இல்லாத சோம்பேறி நான்! அதிகாலை நடை பற்றி பல வருடங்களுக்கு முன்பு எங்கள் தளத்தில் 'நடக்கும் நினைவுகள்' என்று ஒரு சிறு தொடரும் எழுதி இருந்தேன்!
பதிலளிநீக்குஅந்தப் படம் பற்றி எனக்குள் எழுந்த முதல் சிந்தனையை இங்கே சொல்ல முடியாது! ஆனால் அதனையும் எப்படி உபயோகிக்கிறார்கள் என்று நீங்கள் பேஸ்புக்கில் எழுதி இருந்ததைப் பார்த்தேன்.
பதிலளிநீக்குஅந்தப் படத்தில் நிழலாக நீங்களும் உங்கள் அலைபேசியும் தெரிகிறீர்கள்!
இப்படி ஆட்டோவில் பெயர் இருப்பது நல்லது. மறந்து வைத்துவிட்டாலோ இல்லை டிரைவர் தவறாக நடந்தாலோ ஆட்டோ அடையாளம் நினைவுகூர்வது எளிது.
பதிலளிநீக்குபழைய உடைந்த சேர்களையோ, இல்லை மிக வயதாகி கஷ்டப்படுபவர்களையோ இல்லை சிதிலமடைந்த வீட்டையோ கண்டால் எனக்குள் ஏற்படும் சிந்தனை ஒன்றே. ஒரு காலத்தில் ஓஹோ என்றிருந்திருக்கைம், எல்லோரும் மகிழ்ந்திருப்பர். இன்று இந்த நிலைமை
பதிலளிநீக்குபழசு எல்லாவற்றையும்(சம்பவங்களையும்) சேகரிப்பது என்பது ஒருவகையான மன நோய் என்பது என் கருத்து. பழையன கழிதல் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.ஆனால் சில நேரங்களில் அது நம்.இளமைக் காலத்தை நினைவு படுத்தும்மனதில் ஒரு சொல்லமுடியாத வேதனையையும்...
பதிலளிநீக்குவிஜி.
அமாவாசையும் அதுவுமா போண்டா பேரை எடுத்ததே தப்பு. படுத்தறியே கிட்டு...
பதிலளிநீக்குவிஜி.
ஹா.. ஹா.. ஹா... அது வெங்காயம் போடாத போண்டாவாக இருக்குமோ என்னவோ...!
நீக்குஅந்த பழைய சேர் குஷன் இல்லாம இருப்பதைப் பார்த்ததும் வீட்டிலிருந்து வெளியில் விரட்டப்படும் முதியவர்கள் ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தார்கள். கூடவே இப்படியான நாற்காலிகளில் நடுவில் மட்டும் ஓட்டை போட்டு வயதானவர்களுக்கும் பயன்படுத்துவதுண்டு பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
ஆட்டொவில் போண்டா என்பதைப் பார்த்ததும், அட ஆட்டோவில் கூட போண்டா விற்கிறார்களா ஒரு வேளை வீடு வீடாக வந்து விற்கிறார்களா என்றும் தோன்றியது. ஆனால் அட அது இல்லையா இது!!!
பதிலளிநீக்குபழசு சேகரிப்பது அதை வேறு விதமாகப் பயன்படுத்துவது என்பது creativity இப்ப பல இடங்களில் அப்படிப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம் குறிப்பாகச் சில உணவகங்கள், கடைகள் ....என்றாலும் சும்மா சேர்த்து வைப்பது என்பது ரொம்பச் செலவ்துதான் வீடில் இடம் வேண்டும், பராமரிப்பு வேண்டும் எல்லாம் கஷ்டம்.
கீதா
அதிகாலை நடை நிஜமாகவே புத்துணர்ச்சி ஆனால் மாலைதான் எனக்கு வசதிப்படுகிறது. காலையில் வேலைகள் முடித்துதான் செல்ல முடியும்.
பதிலளிநீக்குகீதா