செவ்வாய், 18 நவம்பர், 2025

VERDANT சத்சங்கம் நிகழ்வுகள் - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட முகநூல் இற்றைகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


விஜி வெங்கடேஷ் தனது குடியிருப்பு வளாகத்தில் நடந்த சத்சங்க நிகழ்வுகள் குறித்த தனது அனுபவங்களை நம்முடன் இன்று பகிர்ந்து கொள்கிறார் - வெங்கட், திருவரங்கம். ஓவர் டு விஜி வெங்கடேஷ். 


******


VERDANT சத்சங்கம் - 23 அக்டோபர் 2025



ஓம் சாந்தி துவக்கத்திலேயே வந்தது கதைத்தவர்களை சாந்தியடையச் செய்ய...🤫


அமைதிப் படுத்த வேறு வழியில்லையே என்ன செய்ய??🤐


அழகான பழனி மலை ஆண்டவனை அழைத்து ஆரம்பம்..


வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா கோஷம் சிறு பூகம்பம்..


தாமோதர மாதம் ஆதலால் தாமோதரனின் லீலை மொட்டவிழ..


பார்வதி தேவி தாமோதரனாகவே மாறித் தவிழ,


அதைக் கண்ணாரப் பருகி நாம் மகிழ...


வயிற்றில் கயிற்றால் கட்டுண்டான் தாமோதரன்..


பக்திக் கயிற்றில் கட்டுண்டோம் நாம்..


கீதையின் பதினைந்தாம் அத்தியாயம் படிக்கப் பட்டது...


பக்தியோகத்தின் சிறப்பு மனதில் பதிக்கப்பட்டது..


அபிராமி நம்மைப்  பாட வைத்து மகிழ...


பொருளுணர்ந்து நாமும் நெகிழ..


65 பாடல்கள் வரை அன்று பாடப் பெற்றாள்..


நாம் கேட்கும் பேறு பெற்றோம்..


சஷ்டி விழாவானதால் கந்தனின் புகழ் நினைக்கப்பட்டது...


பாம்பன் சுவாமிகளுக்கு குகன், மயிலாய் வந்தான்...


உடைந்த கால் எலும்பை இணைத்து வைத்தான்..


சண்முகக் கவசம் அவரால் உருவானது...


பக்தர்கள் மனதில் பதிந்து உருவேறியது..


வயலூர் கோவில் குடமுழுக்கும், வடலூர் கோவில் குடமுழுக்கும் நடந்தது அற்புதம்;


அது முருகன், கிருபானந்த வாரியார் சுவாமிகள் மூலம் நிகழ்த்திய அதிசயம்...


அத்தினத்துக்கும் ஓட்டை கைக்கும் ஆயிரம் காதம்; ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்..


திரௌபதி வஸ்திர அபஹரணம் நிகழ்வு இரு வரித் தமிழில்...


தமிழின் அழகு அதன் வார்த்தைகளில்..


அதை போற்றி ரசிக்கும் உள்ளங்களில்..


வியந்து, நெகிழ்ந்து ரசித்த சபை மெல்லக் கலைந்தது....


ஓம் சரவண பவாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******


VERDANT சத்சங்கம் - 13 நவம்பர் 2025



கைத்தல நிறைக்கனி சபையை நிறைக்க சத்சங்கம் ஆரம்பம்.


கீதையின் ஸ்லோகங்கள் பொருளுடன் வாசிக்கப்பட மனத்திரையில் போர்க்களம் தோன்றியது; பலரின் சங்கநாதம் ஒலித்தது ;


அபிராமி 75 பாடல்கள் வரை நம்மை அழைத்துச் சென்றாள். மின்னல் கொடியாய் மனதில் மின்னி மறைந்தாள்;


ஆஞ்சநேயர் கடல் தாண்டி இலங்கை செல்ல ஜாம்பவான் கருவியானார்;


அளப்பறியா ஆற்றல் கொண்ட ஆஞ்சநேயரும் அதனால் தனை உணர்ந்தார்;


நாமும் முன்னேற யாரோ ஒரு ஜாம்பவான் இருக்கவேண்டும்; 


யாராவது முன்னேற நாமும் ஜாம்பவானாய் இருக்க வேண்டும்!


Smt.பார்வதியின் சொல்லாற்றல் சிந்திக்க வைத்தது;

அக்கருத்தை அது மனதில் தைத்தது;


திருச்செந்தூர் முருகனின் அற்புதங்கள் பேசப் பட்டன..

முருகனின் கருணை உணரப்பட்டது;


முருகாவெனும் நாமம் இடையறாது

ஓதப்பட்டது...

மனமதில் வேலும் மயிலும் நடமிட்டன;


உலகில் சாந்தி நிலவ வேண்டுகோளுடன் சத்சங்கம் நிறைவுற்றது...


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

18 நவம்பர் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....