செவ்வாய், 25 நவம்பர், 2025

துலா ஸ்னானம் - 2000 ரூபாய் மிச்சம் - கரப்பான்பூச்சி - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - நிழற்பட உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


முகநூலில் எழுதிய சில இற்றைகள் இன்றைக்கு ஒரு தொகுப்பாக இங்கே - எனக்கான சேமிப்பாகவும் முகநூலில் என்னை தொடராத நண்பர்களின் வசதிக்காகவும்!


2000 ரூபாய் மிச்சம் - கடை முழுக்கும் முடவன் முழுக்கும்...... - 17 நவம்பர் 2025:



துலா மாசம் என்று சமஸ்கிருத மொழியில் அழைக்கப்படும் ஐப்பசி மாதம் காவிரி நதியோடும் மாநிலங்களில் மிகவும் விசேஷம். திருவரங்கம், திருப்பராய்துறை என சில இடங்களில் துலா மாதத்தில் காவிரியில் நீராடுவதற்காகவே பலரும் வருவதுண்டு...... துலா மாதம் முழுவதும் பாபங்களைப் போக்கும் கங்கை போன்ற புனித நதிகள் காவிரி ஆற்றில் சங்கமிப்பதாக ஐதீகம். அதனால் அந்த மாதத்தில் காவிரியாற்றில் நீராடுவது சிறப்பு. 


உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது பல இடங்களிலிருந்தும் மக்கள் திரளாக வந்து காவிரியாற்றில் நீராடுவார்கள். அப்படி இருக்க, நேற்றைய துலா மாத கடைசி தினம் வரை, உள்ளூரில் இருந்துகொண்டே நான் காவிரியாற்றில் நீராடச் செல்லாமல் இருந்தேன் என்பதை உணர்ந்து உடன் புறப்பட்டேன். காலை நேர நடை முடிந்து வீடு திரும்பி பிறகு மேலூர் அருகே உள்ள அய்யனார் படித்துறைக்குச் சென்று திருப்தியாக நீராடி வந்தேன். ஆகா..... என்னவொரு ஆனந்தம் ஆற்றில் குளிக்க...... இடுப்பு வரை இருந்த ஆற்று நீரில் முங்கி முங்கி குளிக்க உடல் எங்கும் புத்துணர்வு பொங்கி எழுந்தது..... கடை முழுக்கு நாளில் நீராட முடிந்ததில் மகிழ்ச்சி…


பெரிய பெரிய மீன்கள் அவ்வப்போது  உள்ளங்கால்களை  கடித்து குறுகுறுக்க வைத்து குதிக்க வைத்தது. அந்த சிறிய படித்துறையில் குறைந்தது ஐம்பது பேர்களாவது குளித்துக் கொண்டு இருந்தார்கள். முடிந்தவரை உள்ளே சென்று தனியாக நின்று நன்கு குளிக்க முடிந்தது. மீன்கள் எல்லோரையும் கடிக்க,  பழக்கம் இல்லா நகரத்துப் பெண்கள்,  "மீன் கடிக்குது" என்று துள்ளினர்.... அப்போது அவர்களுடன் வந்த ஒரு பெரியவர், "நமக்கு ஒரு ஆளுக்கு 2000/- ரூபாய் மிச்சம் தெரியுமா? பெங்களூர்ல காலில் மீன்களை கடிக்க வைக்க 2000 ரூபாய் வாங்குகிறார்கள்" என்று சொல்லி சிரிக்க, அனைவரும் புன்னகைத்தனர்....


மனதே இல்லாமல் ஆற்றிலிருந்து வெளியே வந்து, வண்டியில் வீடு திரும்பினேன்...... காவிரி ஆற்றில் நீர் வரத்து இருக்கும் வரை தினம் தினம் ஒரு எட்டு சென்று அங்கே குளித்து வரலாம் என்று தோன்றியது...... இன்றைக்கு வீட்டினர் உடன் சென்று முடவன் முழுக்கு என்று சொல்லப்படும் நாளில் செல்லலாம் என்று சொன்னேன். கடை முழுக்கு நாளில் நீராட முடியாத ஒரு மாற்றுத்திறனாளி நபருக்கு, கார்த்திகை மாத முதல் நாளில் துலா மாத நீராடல் பலனையே தந்ததாக ஒரு கதை...... ஆனால் அந்த எண்ணத்தில் கல் விழுந்தது ஒரு கரப்பான்பூச்சியால் 😀


அலைபேசி எடுத்துச் செல்லாததால் மூன்று வருடங்கள் முன்னர் எடுத்த படம் ஒன்று இணைத்திருக்கிறேன்.


*******


பாதி பேர் கரப்பான்பூச்சியை கடிச்சதா சொல்றாங்களே...... - 18 நவம்பர் 2025:



கடை முழுக்கு பற்றி எழுதியபோது,  முடவன் முழக்கு நாளான நேற்று காவிரியாற்றில் குளிக்க நினைத்தும் முடியாமல் போனதற்குக் காரணமாக இருந்தது ஒரு கரப்பான்பூச்சி என்று சொல்லியிருந்தேன். 

இரவு நல்ல உறக்கத்தில் இருந்த போது முதுகில் யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல ஒரு உணர்வு...... என்னடா இது என்று கையை வேகமாக ஆட்டி காற்றில் கம்பு சுற்றினேன்.... ஆனாலும் குறுகுறுப்பு நிற்கவில்லை. கைகளை முதுகுப் பக்கம் கொண்டு சென்றால் ஒன்றும் இல்லை. மீண்டும் குறுகுறுப்பு..... இம்முறை கையை விட்டு வேகமாகத் தள்ள ஏதோ பறந்து சென்றது போல தோன்றியது....


இரண்டு அறைகளிலும் விளக்கைப் போட்டு கண்களைச் சுழற்றினேன்..... ஹாலில் இருந்த நாற்காலி அருகே இருந்த கரப்பு, ஹி ஹி என்று சிரித்தபடி என்னைப் பார்த்து "என்ன பார்க்கற, உன்னை நோண்டி எழுப்பிட்டேன் பார்த்தியா" என்று கேலி செய்தது போல இருந்தது...... எனக்கு அந்த இரவிலும் மொழி பட பிரம்மானந்தம் நினைவுக்கு வந்தார்...... "பாதி பேருக்கு மேல் நீங்க கரப்பான்பூச்சியை கடிச்சதா சொல்றாங்களே" என்று சொல்லி சிரிப்பதை நினைத்து சிரிப்பு வந்தது.... கூடவே தூக்கம் கெட்டதே என்று கோபமும் வந்தது..... எங்கே அந்த துடப்பம்...... எடுடா அதை.....


துடப்பம் கொண்டு ஓங்கி அடித்து, துடப்பத்தை மீண்டும்  மேலே தூக்கியபடி நின்றபோது இல்லாள் சரியாக கண்விழித்துப் பார்த்தாள்.... 😀 மீண்டும் கண்களை மூடி நித்திரையில் ஆழ்ந்தாள்......  "என்ன ஆச்சு இவருக்கு..... இந்த ராத்திரியில துடப்பத்த தூக்கிண்டு நிக்கறார்..... இவருக்கு வேற வேலை இல்லை" என்று நினைத்திருக்கலாம் என்று தோன்றியது எனக்கு..... ஆனால் எனக்கு தூக்கம் போச்சு..... அடித்த கரப்பை வெளியே தள்ளி விளக்குகளை அணைத்து மீண்டும் படுத்தபோது மணி இரவு இரண்டு.... கரப்பினால் தூக்கம் போச்சு...... தூங்காமல் நான்கு மணி வரை புரண்டு கொண்டே இருந்தேன். பின்னர் தான் உறங்கினேன். எப்போதும் போல காலை விழிப்பு வரவில்லை.  அப்படி ஒரு உறக்கம்..... காலை நேர நடையும் போச்சு..... காவிரி நீராடலும் முடியாம போச்சு.....


ஒரு சின்ன கரப்பு கூட நம் திட்டங்களில் தடங்கல் செய்ய முடியும் என்று எனக்கு உணர்த்திய நாள்...... காலைல இல்லாள், மகளிடம் சொல்லிக்கொண்டு இருந்தார்.....  "நடு ராத்திரி துடப்பத்த தூக்கிண்டு நிக்கறார் அப்பா...... பார்க்கவே சிரிப்பா இருந்தது...... கதவை திறந்து வெளியே பார்த்து தெரிஞ்சுண்டேன்..... ராத்திரி கரப்பு வேட்டையாடி இருக்கார்னு" என்று சொல்லி சிரிப்பதை தொடர்ந்தார்கள் இருவரும்......  கீழுள்ள படத்தில் இருக்கும் பிரம்மானந்தம் போல முகத்துடன் நானும் இருந்தேன்....... 


ஏதோ நம்மால நாலு பேரு சிரிக்கட்டும் என்று இங்கேயும் பகிர்ந்து கொண்டேன்..... எல்லோரும் மகிழ்வாக இருக்க எனது பிரார்த்தனைகள்.....


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

25 நவம்பர் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....