செவ்வாய், 11 நவம்பர், 2025

முகநூல் இற்றைகள் - நிழற்பட உலா - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


நான் இந்தப் பக்கத்தில் பதிவுகள் எழுதி பல நாட்கள் ஆகிவிட்டன.  இந்த இடைபட்ட நாட்களில் சில நிகழ்வுகள், வேதனையான சூழல்கள், சில மகிழ்வு தரும் மாற்றங்கள் என கலந்து கட்டி இருந்தது.  சற்றேறக்குறைய 35 வருட தலைநகர் தில்லி வாழ்க்கைக்குப் பிறகு தற்போது திருவரங்கம்/திருச்சி நகரில் வாழ்க்கை.  புதிய அலுவலகம், புதிய அனுபவங்கள் என சில வாரங்கள் கடந்துவிட்டன.  நீண்ட பதிவுகள் எழுதும் வாய்ப்பு குறைவு என்றாலும் அவ்வப்போது எழுத முயற்சிக்கிறேன்.  இன்றைக்கு, கடந்த சில நாட்களாக முகநூலில் வெளியிட்ட இற்றைகள், நிழற்படங்கள் இங்கே ஒரு உலாவாக உங்கள் பார்வைக்கு!


*******


திருவரங்கத்து வீதிகளில் நடைப்பயிற்சி:









காலை நேர நடைப்பயிற்சி உடலுக்கும் மனதுக்கும் நல்லது.  அந்த காலை வேளைகளில் கண்ணில் படும் காட்சிகள், அந்த காட்சிகள் உருவாக்கிய சம்பாஷணைகள் என சிறப்பாக இருந்தது.  நடுவே மழை காரணமாக தடைபட்ட நடை மீண்டும் தொடங்க வேண்டும்.  ஒரு மழை நாளில் முழுவதும் நனைந்தபடியே வீடு திரும்ப நேர்ந்தது! மழையில் நனைந்த சிறு வயது நினைவுகள் - “கடங்காரா, மழைல நனைஞ்சுண்டே வரணுமா? எங்கேயாவது ஓரமா நின்னுட்டு வர வேண்டியது தானே?” என்று பாசமாகத் திட்ட அம்மா இப்போது இல்லை :( 


நடை பயண சமயங்களில் எடுத்த சில நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு.


*******


தில்லை நகரும் சாக்கடையும்:





தில்லை நகர் - திருச்சி மாநகரின் Posh Colony என்று கருதப்படும் இடங்களில் ஒன்று. பெயருக்குத் தான் Posh Colony.  சில நிமிடங்கள் மழைபெய்தாலே போதும், சாக்கடை நீரும் மழைநீரும் கலந்து மொத்தமாக சாலையே சாக்கடையாக மாறிப் போகிறது.  அப்படி ஒரு மழை நாளில், அலுவலகம் விட்டு வீடு திரும்பிய அனுபவம்…


தில்லை நகர் திருச்சி பிரதான சாலை தற்போதைய மழையில்..... பெயருக்குத் தான் Posh Colony.....  சாக்கடை நீரும் மழை நீரும் கலந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அதில் Pant ஐ முட்டி வரை இழுத்து நடந்து வந்து பேருந்தில் பயணம்..... 🙁


மொத்தமாக போக்குவரத்து ஸ்தம்பிக்க, எங்கேயும் வாகனங்கள் எழுப்பும் ஒலி, அதில் பயணிக்கும் மனிதர்கள் விடாது எழுப்பும் ஹாரன் சப்தங்கள், அவசர ஊர்திகள் எழுப்பும் தொடர் ஒலி… போக்குவரத்து ஸ்தம்பித்திருக்க, அதில் மாட்டிக்கொண்ட அவசர ஊர்தி - அதில் இருக்கும் நோயாளி என்ன ஆவார் என்ற மனக்கவலையும் தொற்றிக்கொண்டது…  மழை சில காட்சிகளும் காணொளிகளும்…


*******



காய்கறி சந்தையும் சில காட்சிகளும்:



திருச்சி பகுதிகளில் வாழைப்பூவை அழகாக ஆய்ந்து விற்பனை செய்வதுண்டு...... இன்று காலை சந்தையில் அப்படி ஒரு உழைப்பாளி விற்பனை செய்த வாழைப்பூ உங்கள் பார்வைக்கு.....

 

வாழைப்பூவை மடல் மடலாகப் பிரித்து, கள்ளப்பயலை நீக்கி, பொடிப்பொடியாக நறுக்குவது சல்லியம் பிடித்த வேலை..... இப்படி கிடைத்தால் சுலபமாக இருக்கும் என்பதால் தைரியமாக வாங்கலாம்.....


சந்தை இருக்கும் வீதியில் பார்த்த ஒரு தள்ளுவண்டி. என்ன சொல்ல வருகிறார் இந்த வண்டிக்காரர்? யாராவது vim போட்டு விளக்குங்களேன்.....


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

11 நவம்பர் 2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....