அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட VERDANT (CGV) விளையாட்டுத் திருவிழா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
மூன்று மந்திரங்கள் - 30 அக்டோபர் 2025:
உணர்வு, உணவு, உடற்பயிற்சி என்ற மூன்று மந்திரங்கள் நம் உடலையும் மனதையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதாக சமீபத்தில் மூத்த மருத்துவர் ஒருவர் சொல்லக் கேட்க முடிந்தது! மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது! இரு வேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது! அன்றாடம் அரைமணி நேரமாவது நடைப்பயிற்சியோ உடற்பயிற்சியோ செய்ய நேரம் ஒதுக்குவது என்று அவர் வரிசையாகச் சொன்ன போது மூன்றும் முத்தான மந்திரங்கள் எனத் தோன்றியது!
கடந்த மூன்று மாதங்களாக நான் Intermittent fasting உணவுமுறையை பின்பற்றி வருவதாக முன்பே ஒரு பதிவில் பகிர்ந்திருந்தேன்! அன்றாடம் இரு வேளை மட்டுமே உணவு எடுத்துக் கொள்கிறேன்! 15 அல்லது 16 மணிநேர fasting முறையை பின்பற்றி வருகிறேன்! இயந்திரம் போன்று சென்று கொண்டிருக்கின்ற தினசரி வாழ்க்கையில் இன்றைய காலைப்பொழுதில் எனக்கு கிடைத்த நற்செய்தியாக இரண்டு வருடங்களுக்குப் பின் என்னுடைய எடை குறைந்திருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ந்தேன்!
உயரத்திற்கு ஏற்ற எடை தான் இருப்பதாகச் சொன்னாலும் கடந்த இரண்டு வருடங்களாக நடப்பதற்கும் படிகள் ஏறுவதற்கும், low floor பேருந்திலும், ஆட்டோவிலும் ஏறுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த osteoarthritis, உயர் இரத்த அழுத்தம், செரிமானக் கோளாறுகள், மூச்சு வாங்குதல் என்று உடல் உபாதைகள் தொடர்ந்து தான் கொண்டிருந்தது! பலநாள் யோசனைக்குப் பின் துவங்கியது தான் இந்த Intermittent fasting முறை!
இதற்காக எந்த மெனக்கெடல்களும், ஏற்பாடுகளும் தேவையில்லை! மூன்று வேளை உணவுமுறை என்பதை சற்றே சீரமைத்துக் கொள்ள வேண்டும்! அவ்வளவு தான்! இந்த fasting முறையில் வயிறு காலியாக இருக்கும் போது கூட என்னிடம் எந்த களைப்போ, டென்ஷனோ ஏற்படுவதில்லை! சுறுசுறுப்புடன் என்னுடைய வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறேன்! முன்பிருந்த உடல் உபாதைகளும் சற்றே குறைந்திருப்பதாக தான் உணர்கிறேன்!
அவசியமற்ற உணவுகளை தவிர்ப்பதைப் போல் நம்மிடம் இருக்கும் தேவையில்லாத டென்ஷன்களையும் தவிர்த்தால் நம் உடலைப் போல் மனதையும் மகிழ்வாக வைத்துக் கொள்ளலாம்! இதனுடன் உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் பின்பற்றினால் அதுதான் மூன்று மந்திர வாழ்க்கைமுறை! இப்படி ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான வழிமுறைகளை பின்பற்ற முயல்வோம்!
******
ஹெர்பல் ஆயில் - 13 நவம்பர் 2025:
கண்ணா! வாசல்ல இருக்கிற வேப்பமரத்திலிருந்து ரெண்டு ஆர்க்கு மட்டும் உடைச்சிண்டு வா! இன்னிக்கு எண்ணெய் காய்ச்சிடலாம்னு இருக்கேன்!
ரெண்டு ஆர்க்குன்னா என்னம்மா???
அதுவா! பழைய கால ரெசிபீஸ்ல எல்லாம் கறிவேப்பிலை எல்லாம் ஒரு ஆர்க்குன்னு போட்டுருப்பாங்க கண்ணா! இப்ப எல்லாமே கப், டீஸ்பூன், டேபிள் ஸ்பூன் இல்லையா! நீ ரெண்டு குச்சி இனுக்கிண்டு வா! நான் ஆர்க்குன்னா எவ்வளவுன்னு காமிக்கிறேன்! சரியா!
வழக்கம் போல் நெல்லிக்காய், ரோஜா இதழ்கள், செம்பருத்தி இதழ்கள், வெந்தயம், கருஞ்சீரகம், கறிவேப்பிலை இவற்றுடன் இம்முறை சிறிது வேப்பிலையும் சேர்த்து தயாரித்தேன்! பள்ளிநாட்களிலிருந்து தொடரும் பேனின் பந்தம்..🙂 யாரிடமிருந்தாவது ஒட்டிக் கொண்டு விடுகிறது..🙂
******
நேரம் - 13 நவம்பர் 2025:
ஒவ்வொரு நாளும் பரபரப்பாகவே மின்னல் வேகத்தில் கடந்து சென்று கொண்டிருக்கிறது! அதிகாலை ஐந்து மணிக்கு துவங்கும் நாள் நடைப்பயிற்சி, சமையல், வகுப்புகள் பாடங்கள், fastingஐ break செய்தல், சற்றே ஓய்வு மாலையில் வழக்கமான வேலைகள் என்று இடையறாது கடக்கின்றன!
இன்று மகள் தன் தோழியிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.
ஆமாண்டி! உன் பர்த்டே இந்த தடவை சண்டேல வருது தெரியுமா! ஜாலியா தூங்கி எழுந்திரு! ரிலாக்ஸா இரு! எங்க அம்மாவுக்கு தான் அன்னிக்கு எக்ஸாம் இருக்கு!! என்கிறாள்....🙂
ம்ம்ம்!! நானே மறந்தாலும் என்னை நினைவூட்ட ஒரு ஆள்...🙂 மகளுக்கு இப்போது study leave! என்னவருக்கு ஆஃபீஸ்! எனக்கு கிளாஸ் எனச் செல்கிறது! சில நாட்கள் அவர்கள் இருவருக்கும் விடுமுறை என்றாலும் கூட எனக்கு வகுப்புகள் இருக்கின்றன! யூனிட் டெஸ்ட், செமினார், ஹோம்வொர்க் என்று சென்று கொண்டிருக்கிறது!
வரும் மாதத்தில் வரும் முதல் வார இறுதியில் பரீட்சை நடக்கவுள்ளது! அதிகாலையோ இரவோ நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்துக் கொண்டே இருக்கிறேன்! Grammar தான் கணக்குப் பாடம் போல் என்னை பயமுறுத்துகின்றது…:) ஆறுமாதத்திற்கு ஒரு கோர்ஸ் என்பதால் திரும்பிப் பார்ப்பதற்குள் யூனிட் டெஸ்டுகளும் இறுதித் தேர்வுமாக செல்கிறது! syllabusம் மிகவும் அதிகம்! நிறைய மெனக்கெட்டால் தான் நல்லமுறையில் பாஸாக முடியும்!
******
ரோஷ்ணிகார்னர் - 13 நவம்பர் 2025:
மகளின் கைவண்ணத்தில் ஒரு ஓவியம் - உங்கள் பார்வைக்கு!
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
14 நவம்பர் 2025




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....