வெள்ளி, 28 நவம்பர், 2025

அப்பா - 15 ரூபாய் தரணுமா? - அக்கப்போர் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பீட்ரூட் துருவல் - கோணங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******





துலா ஸ்னானத்திற்குப் பிறகான கொள்ளிடம்! :(

தலைநகர் தில்லியிலிருந்து திருச்சி மாநகரம் (திருவரங்கம்) வந்து சற்றேறக்குறைய இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.  தலைநகர் வாழ்க்கை போல இல்லை என்றாலும், இங்கேயும் நிறைய அனுபவங்கள் கிடைத்தவண்ணமே இருக்கின்றன.  அங்கே வட இந்தியர்களுடன் வாழ்க்கை என்றால் இங்கே நம்மவர்களுடன்! அங்கேயிருப்பவர்களுடன் இங்கேயிருப்பவர்களை ஒப்பீடு செய்யாமல் இருக்க முடிவதில்லை.  நிறைய மாற்றங்கள் உண்டு.  அவை நல்லவையும் அல்லவையுமாகவே இருக்கின்றன.  பல விஷயங்களில் வடக்கர்களை சேர்த்துக் கொள்ளலாம்.  நம்மவர்களை சில விஷயங்களில் சேர்த்துக் கொள்ளலாம்!  அங்கே இருக்கும் நபர்களின் மனப்பாங்குடன் இங்கே இருப்பவர்களை ஒப்பீடு செய்தால் இங்கே ஒரு மாற்று குறைவு என்றே சொல்வேன்.  உதாரணங்கள் என எத்தனையோ சொல்ல முடியும் என்றாலும் சொல்லப்போவதில்லை!  இந்த இரண்டு மாதங்களில் பார்த்த விஷயங்கள் பலவும் இங்கே எழுதப் போவதில்லை! ஒரு சில விஷயங்கள் பார்க்கும்போது கோபம் மட்டுமே மிஞ்சுகிறது! அவ்வப்போது சில விஷயங்களை, ஒப்பீடுகளை எழுதுகிறேன்.   


அப்பா - காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை: 



சென்ற வருடத்தின் இந்த நாட்களில் அப்பாவின் உடல் நிலை காரணமாக தமிழகத்தில் தான் இருந்தேன்.  ஒவ்வொரு நாளும் அப்பாவின் உடல் நிலையில் நிறைய மாற்றங்கள்.  தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிறைய கஷ்டங்கள். சரியாக ஒரு வருடம் முன்னர், இதே நாள் மருத்துவமனையில் இருந்தபோதே ஆக்ஸிஜன் அளவு குறைந்தபடி இருக்க, அறையிலிருந்து, ICU-வில் அனுமதிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.  நிறைய நாட்கள் உள்ளே வெளியே என்று மாற்றி மாற்றி, கிட்டத்தட்ட இருபது, இருபத்தி இரண்டு நாட்கள் மருத்துவமனையில் வாழ்க்கைப் போராட்டம்…  பார்க்கவே பரிதாபமாக இருந்தது - ”என்னை வீட்டுக்குக் கூட்டிண்டு போடா” என்று வருத்தத்துடன் கேட்க ஆரம்பித்த பிறகு எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று வீட்டுக்கு அழைத்து வந்த நான்காம் நாள், டிசம்பர் 7 ஆம் தேதி தான் அப்பா, இந்தப் பூவுலகை விட்டுச் சென்றார். காலம் தான் எத்தனை வேகமாக ஓடுகிறது. காலம்/நேரம் யாருக்காகவும்  காத்திருப்பதில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம், இதோ நேற்றைய முன் தினம் அப்பாவின் வருஷாப்தீகம் நடந்து முடிந்தது! அதற்குள் வருஷாப்தீக திதி வந்து விட்டது.  மூன்று நாட்கள் தொடர்ந்து வருஷாப்தீக காரியங்கள் நடந்து முடிந்தன.  அப்பா மறைந்து ஒரு வருடம் ஆவதற்குள் அம்மாவும் போட்டி போட்டுக்கொண்டு மறைந்து விட்டார்! அம்மாவிற்கான மாதாந்திர காரியங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  நல்லதே நடக்கட்டும்! வேறெந்த சிந்தனையும் இப்போதைக்கு இல்லை!


*******


15 ரூபாய் தரணுமா?:


அப்பாவின் காரியங்கள் காரணமாக வாராந்திர  சந்தைக்குச் செல்ல முடியவில்லை.  காலை நேரத்தில் தினம் தினம் கீழ வாசலில் போடும் காய்கறிச் சந்தைக்கு தான் செல்ல வேண்டியிருந்தது.  அங்கே நிறைய மூதாட்டிகள் கடை போடுவார்கள்.  ஒவ்வொருவரையும் பார்க்கும்போது ஏதேதோ எண்ணங்கள் தோன்றும். இளமையில் எப்படியெல்லாம் இருந்திருப்பார்கள் இந்த மூதாட்டிகள் என்று தோன்றும். ஒரு சிலரை பார்க்கும்போதே, அவர்களிடம் தான் காய்கறி வாங்க வேண்டும் என்று தோன்றிவிடும் - அவர்களின் உழைப்புக்குத் தரும் மரியாதை இது தான் என்றும் தோன்றும்.  ”இன்னிக்கு காயெல்லாம் கொஞ்சம் விலை சாஸ்தி சாமி!”  என்று சொல்லிக் கொண்டு இருந்த மூதாட்டியிடம் சில காய்கறிகளை வாங்கினேன்.  நான்கு விதமான காய்கறிகள் வாங்கிய பிறகு 100 ரூபாய் கொடுக்க, ஒவ்வொன்றாகக் காண்பித்து 20, 40, 60, 85 என கணக்கு போட்டு, “நான் 15 ரூபாய் தரணுமா சாமி?” என்றார் அந்த மூதாட்டி! 


தள்ளாத வயதில், மார்க்கெட்டிலிருந்து காய்கறி வாங்கிக் கொண்டோ அல்லது அவரது தோட்டத்திலிருந்து எடுத்து வந்தோ விற்பனை செய்கிறார்.  அவர் போன்ற மூதாட்டிகளிடம் பேரம் பேசுவது எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை.  சற்றே அவர்களிடம் பேசினால் போதும், அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.  வேண்டுமென்றே அவர்களிடம் ”எனக்காக குறைவா கொடேன்” என்று வம்பு செய்வேன் - சிரித்தபடி அவர்களும், “உனக்கில்லாததா… எடுத்துக்கோ சாமி!” என்பார்கள்.  சில சமயங்கள் எதுவும் பேசாமல் கேட்கும் காசு கொடுத்துவிடுவேன்.  எத்தனையோ செலவு செய்கிறோம் - உழைப்புக்கு மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எப்போதும் எனக்குத் தோன்றும்.  பார்க்கும்போதே வில்லங்கமாக இருப்பவர்களிடம் நான் செல்வதே இல்லை - முதல் பார்வையிலேயே அப்படி தோன்றிவிடுவதுண்டு. எனது பார்வை தவறாக இருக்கலாம் என்றாலும் எப்போதும் அதனை மாற்றிக் கொள்ள முயல்வதில்லை! நேரடியாக இது போன்ற மூதாட்டிகளிடம் தான் செல்லத் தோன்றுகிறது.  


*******


அக்கப்போர் :



தாழ்தளப் பேருந்து என்ற பெயரில்  இங்கே சில மாதங்களாக பேருந்துகளை இயக்குகிறார்கள்.  தாழ்தளப் பேருந்து என்பதைத் தவிர வேறு எந்த விதத்திலும் இவற்றில் பயணிக்கும் நபர்களுக்கு வசதிகள் இல்லை.  ஆனால் இவற்றை Deluxe என்ற பெயரில் இயக்கி, கட்டணமும் இரண்டு மடங்கு அளவில் வசூலிக்கிறார்கள். மகளிருக்கு இலவசமும் இல்லை.  இலவசப் பேருந்து என்ற பெயரில் இயக்கப்படும் பேருந்துகளில் உண்டாகும் நஷ்டத்தை இப்படியான பேருந்துகள் கொண்டு ஈடுகட்டுகிறார்கள் என்று தோன்றுகிறது.  ஒரு முறை பயணித்துவிட்டால் பயணிகளுக்கு இவர்கள் அதிகம் வசூலிப்பது தெரிந்து விடுகிறது. அதன் பிறகு அந்தப் பயணிகள், இது போன்ற பேருந்துகளை பயன்படுத்துவதில்லை. இலவசப் பேருந்து, இந்தப் பேருந்து என இரண்டுமே ஒரே வண்ணத்தில் இருப்பதால் நிறைய குழப்பங்கள்.  பேருந்து நடத்துநரும் அதிகக் கட்டணம் குறித்து ஒன்றும் சொல்வதில்லை.  ஆனால் தெரியாமல் ஏறிக்கொண்ட பிறகு, இரண்டு மடங்கு கட்டணம்  கேட்கும்போது தான் பிரச்சனை ஆகிறது.


அன்றைக்கு சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தில்லை நகர் வரை செல்ல வேண்டிய ஒரு மூதாட்டி கட்டணம் 12 ரூபாய் என்றதும், அப்படி ஒரு புலம்பல்! “6 ரூபாய் தான, நீ ஏன் 12 ரூபாய் கேட்கிற! ஒரே அக்கப்போரா இல்லை இருக்கு! ”  பேருந்திலிருந்து இறங்கும் வரை அக்கப்போர், அக்கப்போர் என்று ஐம்பது முறையாவது சொல்லி புலம்பியிருப்பார். தில்லை நகரில் இறங்கியபோது அங்கே காத்திருந்த பயணிகளிடம், “இந்தப் பஸ்ஸுல போகாதே, கொள்ளை அடிக்கறான்!” என்று சொல்லிச் சென்றார் அந்த மூதாட்டி.  தில்லியில் இருக்கும் அனைத்து அரசுப் பேருந்துகளுமே தாழ்தளப் பேருந்துகள் தான் - எல்லா பேருந்துகளிலும் ஒரே மாதிரி கட்டணம் தான்.  தாழ்தளப் பேருந்து என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பதில்லை! சாதாரண பேருந்துகளில் நகரில் எங்கே சென்றாலும் 5/10/15 ரூபாய் என மூன்றே நிலைகளில் தான் கட்டணம்.  குளிரூட்டப்பட்ட பேருந்துகள் எனில் நான்கு நிலைகளில் அதாவது 10/15/20/25 ரூபாய் கட்டணம் தான்.  சில இடங்கள் 30 கிலோமீட்டர் தொலைவில் கூட இருந்தாலும் அதிக பட்ச கட்டணமே 15/25 மட்டுமே!  அங்கேயும் இங்கேயும் என ஒப்பீடு செய்யாமல் இருக்க முடியவில்லை!  சரி கடைசியில் ஒரு Disclaimer போட்டு விடுகிறேன் - இது அரசியல் பதிவல்ல! 🙂


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

28 நவம்பர் 2025


4 கருத்துகள்:

  1. அப்பாவின், அம்மாவின் நினைவுகளுக்கு வந்தனம்.  அப்பாவும் உயரம் என்று நினைக்கிறேன்.  அவர் ஜீன்தான் உங்களுக்கு வந்திருக்கிறது போலும்.  அப்பா அம்மா ஆசியில் தனித்தனியாக இருந்த குடும்பம் ஒன்று சேர்ந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. ஆமாம்..  வில்லங்கமான ஆட்கள் என்று பார்த்தாலே தெரிந்துவிடும்.  ஆட்டோக்காரர் முதல் காய்கறிக்காரர் வரை!  நான் கூட அவர்களிடமிருந்து ஒதுங்கி விடுவேன்.

    பதிலளிநீக்கு
  3. அரசு செய்யும் இந்த வகை ஊழல் நெடுங்காலமாக நடப்பது.  மக்கள் இதற்கெல்லாம் பொங்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை.  மக்களும் அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுகிறார்கள்.  சமீபத்து பேட்டி ஒன்றில் இதைதான் தமிழக ஆளுநர் இங்கு வித்தியாசமான, வினோதமான அணுகுமுறையில் அரசியல் என்று சொல்லி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  4. ஆர். ரெங்கராஜன்28 நவம்பர், 2025 அன்று 8:42 AM

    உங்களின் இந்த பதிவை படிக்கும் போது, நானும் கடந்த வருடம் டெல்லி வாழ்க்கையை விட்டு சென்னைக்கு வந்து அங்குள்ளதையும் இங்குள்ளதையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் நிறை எதுவும் புலப்படவில்லை, மாறாக முறைகள் தான். வேறு வழியில்லை, அம்மா அப்பா இருந்திருந்தால் இந்த குறை தெரிந்திருக்காதோ என்னவோ! வாழ்க்கை வாழ்வதற்க்கே!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....