தொகுப்புகள்

வெள்ளி, 26 டிசம்பர், 2025

தில்லி போல வராது - குளிரும் நானும் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


கடந்த மாதம் தில்லி போல வராது என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தது நினைவில் இருக்கலாம்.  35 வருட தில்லி வாழ்க்கை குறித்து அவ்வப்போது எழுதுவதாக சொல்லியிருந்தேன்.  ஆனால் அதற்குப் பிறகு அந்த வரிசையில் ஒன்றுமே எழுதவில்லை.  இதோ இன்றைக்கு தில்லி போல வராது தலைப்பில் இன்னுமொரு பகிர்வு.  தலைநகரில் இந்த நாட்கள் குளிர்காலம்.  தில்லி சென்ற புதிதில் இருந்த அளவு குளிர் இல்லை என்றாலும் இப்போதும் தமிழகத்தினை விட அதிக அளவு குளிர் தான் அங்கே.  ஆனால் குளிர் குறித்த கவலை இல்லாமல் அதற்கான உடைகளைப் போட்டுக்கொண்டு அதிக அளவில் ஊர் சுற்றியதும் இந்த குளிர் நாட்களில் தான்.  சனி, ஞாயிறு வந்து விட்டாலே ஊர் சுற்ற கிளம்பிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.  அதுவும் நண்பர் பத்மநாபன் அங்கே இருந்தவரை நானும் அவருமாகச் சேர்ந்து தில்லியில் பல இடங்களில் சுற்றி வந்திருக்கிறோம். 










குளிர் என்றால் அப்படி ஒரு வசதி. குளிருக்குத் தகுந்த உடைகளைப் போட்டுக்கொண்டு எத்தனை சுற்றி வந்தாலும் அலுப்பே தெரியாது. கோடை நாட்களில் ஏண்டா வெளியில போறோம்னு ஒரு ஃபீல் இருக்கும்.  அலுவலகம் சென்று வரவே கஷ்டமாக இருக்கும்.  ஆனால் குளிர்நாட்கள் அப்படியல்ல.  காலை நேரம் குளிர் அதிகம் காரணமாக ரஜாய் எனும் அந்த கம்பளிக்குள்ளிருந்து வெளியே வர சோம்பேறித்தனம் இருந்தாலும் நான் குளிர் நாட்களிலும் சீக்கிரம் எழுந்து வேலைகளை முடித்துக் கொண்டு தயாராகிவிடுவேன்.  தண்ணீர் எத்தனை ஜில்லென்று இருந்தாலும், அதில் பாத்திரங்கள் கழுவி, வீடு துடைத்து என எல்லா வேலைகளும் முடித்துக் கொண்டு வெளியில் புறப்பட்டால் அப்படி ஒரு சந்தோஷமும் உற்சாகமும் நம்மைத் தொற்றிக் கொள்ளும்.  


குளிர் நாட்களில் இன்னுமொரு விஷயம் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது.  அது வெளியே செல்லும் சமயங்களில் சாப்பிடக் கிடைக்கும் விஷயங்கள்.  குளிர் வந்துவிட்டாலே காய்கறிகள் - அதுவும் குளிர் காலத்தில் ஃப்ரெஷ் ஆகக் கிடைக்கும் காய்கறிகள் பார்க்கவே வாங்கிக்கோயேன் என்று அழைப்பதாகத் தோன்றும்.  காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, கேரட், முள்ளங்கி, கடுகுக் கீரை, வெந்தயக்கீரை என பல விஷயங்கள் குளிர்பதனப்படுத்தாமல் நேரடியாக கிராமங்களிலிருந்து கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.  விலையும் குறைவாகவே இருக்கும்.  பச்சைப் பட்டாணி பிரித்தால் ஒவ்வொன்றிலும் பெரிய பெரிய பட்டாணி இருக்கும்.  சும்மாவே சாப்பிடலாம் - ஒரு இனிப்புச் சுவையுடன் இருக்கும் பட்டாணிகளை, உரிக்கும்போதே பாதி சாப்பிட்ட நாட்கள் உண்டு.  


இங்கேயும் பச்சைப் பட்டாணி கிடைக்கிறது - ஆனால் பெரும்பாலானவையில் பட்டாணி இல்லவே இல்லை - அல்லது தட்டையாக, நோஞ்சானாக இருக்கிறது.  ஒரு கிலோ பட்டாணி வாங்கினால் 100 கிராம் கூட பட்டாணி தேறாது இங்கே.  அங்கே நிறைய கிடைக்கும்.  முள்ளங்கி பச்சையாகவே சாப்பிட முடியும்.  நான்காகக் கீறி, நடுவே மசாலா தடவி விற்பனை செய்வார்கள்.  போகிற போக்கில் சாப்பிட்டுக் கொண்டே போகலாம்!  தவிர சப்பாத்தி, பராட்டா என சாப்பிட்டால் சலாட் ஆக முள்ளங்கி நிறையவே தருவார்கள்.  நிறைய சாப்பிடலாம்.  கவலையே இல்லாமல் குளிர் காலங்களில் சாப்பிடுவோம்.  அதுவும் ஆரம்ப நாட்களில் குளிர் நாட்களில் தாபா சென்று சாப்பிடும்போது வரிசையாக ரொட்டி கொண்டு வந்து வைக்க, கணக்கில்லாமல் சாப்பிட்டு, வயிறு போதும் என்று சொல்லும்போது தான் நிறுத்துவோம். இப்போது அப்படிச் சாப்பிட முடியாது - இரண்டு சாப்பிட்டாலே போதும் என்று தோன்றிவிடுகிறது. 


நண்பர்கள் அனைவருமாக சனி அல்லது ஞாயிறு அன்று பக்கத்தில் இருக்கும் பூங்காக்களுக்குச் சென்று கொஞ்சமாக அடிக்கும் வெய்யிலை வாங்கும்விதமாக அமர்ந்து கொண்டு அரட்டை அடிப்போம்.  ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நேரம் போவதே தெரியாது.  யாராவது ஒரு நண்பர் நடுவில் போய் கலேவா, பிகானேர் வாலா என ஏதாவது ஒரு கடையில் சென்று சமோசா, டோக்ளா, Gகாஜர் ஹல்வா (கேரட் ஹல்வா), பீட்ரூட் ஹல்வா, சுடச் சுட ஜிலேபி என ஏதாவது ஒன்று வாங்கி வருவார்கள்.  அதையும் சாப்பிட்டு அரட்டை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.  மனமே இல்லாது அங்கிருந்து புறப்பட்டு அரட்டை அடித்தபடியே வீடு திரும்புவோம்.  எத்தனை எத்தனை விதமான உணவுகள் இந்தக் குளிர்காலத்தில் தான் அதிகமாகக் கிடைக்கும்.  ஊர் சுற்றுவதும், விதம் விதமாகச் சாப்பிடுவதும், பல புதிய இடங்களுக்குச் சென்று வருவதும் என கொண்டாட்டமாக இருக்கும் ஒவ்வொரு குளிர் நாட்களும். 


அது போலவே தில்லி நகரில் குளிர்காலத்தில் தான் நிறைய விழாக்கள் நடத்துவார்கள்.  அந்த விழாக்களுக்குச் சென்று வந்தால் ஒரு தினம் முழுவதும் நன்றாக பொழுதுபோகும்.  எத்தனையோ முறை இப்படியான விழாக்களுக்குச் சென்றதோடு, அந்த நிகழ்வுகள் குறித்தும், அங்கே எடுத்த படங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.  எத்தனை எத்தனை பசுமையான நினைவுகள்.  என்னதான் இங்கேயும் குளிர் இருக்கிறது என்றாலும் அப்படியான அனுபவங்கள் இங்கே கிடைப்பதில்லை என்று தான் சொல்லவேண்டும்.  இங்கே வந்த பிறகு திருச்சியில் சில இடங்களுக்குச் சென்று வந்தாலும் தில்லியில் கிடைத்த Vibe இங்கே கிடைக்கவில்லை.  தில்லி போல வராது என்று சொல்லும் விதமாகவே நிறைய நினைவுகள் மனது முழுக்க!


குளிர் காலங்களில் கிடைத்த அனுபவங்கள் தான் எத்தனை எத்தனை.  ஒரே ஒரு பதிவில் எழுதித் தீர்த்து விட முடியாத நினைவுகள் மனது முழுக்க உண்டு.  இன்றைக்கும் அந்த நினைவுகள் பசுமையாக இருந்து கொண்டே தான் இருக்கும் - உயிர் மூச்சு உள்ளவரை.  ஆரம்ப காலத்தில் குளிர் ரொம்பவே இருக்கும் என்று பயமுறுத்தி தான் அனுப்பினார்கள் என்றாலும், பழகப் பழக எனக்கு கோடையை விட, குளிர் நாட்களே அதிகம் பிடித்தது.  ஆரம்பகாலத்தில் அதிக அளவு குளிர் இருந்தபோது கொஞ்சம் திண்டாடியிருந்தாலும் (போதிய அளவு குளிர்கால உடைகள் வாங்க முடியாத நிலை, காலணி, கையுறை, காலுறை என இல்லாமல் இருந்த நாட்கள்!) போகப் போக எனக்கு மிகவும் பிடித்த நாட்கள் என்றால் குளிர் நாட்கள் தான் என்று அடித்துச் சொல்வேன்.   இந்தப் பதிவினை தட்டச்சு செய்யும்போது மனதில் தோன்றும் எண்ணங்கள் குறையாமல், விரல்கள் வழி தானாகவே இங்கே பதிவு செய்து கொண்டே இருக்கிறேன்.  இடைவெளி இல்லாமல் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்! அப்படி ஒரு இனிய நினைவுகள் - குளிர் காலம் குறித்த நினைவுகள்.  


இன்னும் எத்தனையோ விஷயங்கள் எழுதுவதற்கு உண்டு என்றாலும் இன்றைக்கு தில்லி போல வராது வரிசையில் இவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  மீண்டும் விரைவில் வேறு சில தில்லி நினைவுகளுடன் உங்களைச் சந்திக்கிறேன்.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

26 டிசம்பர் 2025


15 கருத்துகள்:

  1. தில்லி மீதான உங்கள் ப்ரேமையை உணர்ந்தேன்.  காய்கறி படங்கள் மிக பசுமையாய் அழகாக இருக்கின்றன.  உடனே பறித்து அல்லது எடுத்து சமைத்துவிட்டு ஆசை.

    பதிலளிநீக்கு
  2. எந்த ஊராக இருந்தாலும் நாம் பழகிய மனதுக்குப் பிடித்த இடங்கள் எப்போதும் பசுமையாக அந்தக் காய்கறிகளைப் போல் மனதில் இருக்கும்..குளிரும் ஒரு சுகம் தான்.. சுற்ற, சூடாகச் சாப்பிட... எத்தனை சுற்றினாலும் உடல் சோராது.
    விஜி.

    பதிலளிநீக்கு
  3. சூப்பர்! சொர்கமே என்றாலும் நம் ஊரு போல வருமான்னு பாடினாலும் குளிர் காலத்திலே மட்டும் டெல்லி போல வருமான்னு பாட வேண்டியதுதான்.

    பல நினைவுகளை தூண்டியது இந்த பதிவு. அலுவலக மதிய நேர குளிர்கால அரட்டைகளை மறக்க முடியுமா. சனி ஞாயிறு பூங்கா விஜயங்களை மறக்க முடியுமா. Garden of five senses பூங்கா, எங்க வீட்டுப் பக்கம் “Rose Garden”, உங்க வீட்டுப் பக்கம் “Tallkatora Garden” கொஞ்சம் அங்கோட்டு போனா “நேரு பூங்கா” இங்கோட்டு வந்தா “லோதி பூங்கா”. என்ன, கொஞ்சம் கவனமா போகலைன்ன கண்ணு கூசும்.

    பதிலளிநீக்கு
  4. குளிர்காலம் சூப்பர் என்றாலும் கொஞ்சம் குளிர் அதிகமாக இப்போல்லாம் தெரியுது. இதை நம்பி மேற்கொண்ட மதுரை, நெல்லை, காஞ்சீபுரப் பயணங்களில் வெயில் கொளுத்தியது.

    இரண்டு நாட்கள் முன்பு கிலோ 40 ரூ என பச்சைப் பட்டாணி வாங்கி உரித்து எடை போட்டேன். 400 கிராம் வந்தது. ஒரு சில நோஞ்சான்களும் இருந்தன. கொஞ்சம் முற்றியவற்றை மாத்திரம் பறிக்க முடியாதோ என்னவோ என நினைத்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. இதற்காகவே டிசம்மரில் தில்லி ஒரு வாரம் செல்லவேண்டும் என நினைத்திருந்தோம். இந்தத் தடவை கைகூடவில்லை. அடுத்த முறை பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  6. அதுவும் நண்பர் பத்மநாபன் அங்கே இருந்தவரை நானும் அவருமாகச் சேர்ந்து தில்லியில் பல இடங்களில் சுற்றி வந்திருக்கிறோம்.

    பப்பு அண்ணாச்சிய இங்க பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல?!!!!

    நான் ஏதோ ஒரு ஒன்று ஒன்றரை மாசம் இருந்திருப்பேன்.....இரு வருடங்கள் முன் 20 நாட்கள். அது குருகிராமம் என்றாலும் பார்டர்தானே! முன்னெல்லாம் அவ்வப்போது தில்லி, குருகிராமம் பயணம்.... ....என்னவோ எனக்கும் தில்லி மீது ஈர்ப்பு....

    கீதா

    பதிலளிநீக்கு
  7. குளிர் என்றால் அப்படி ஒரு வசதி. குளிருக்குத் தகுந்த உடைகளைப் போட்டுக்கொண்டு எத்தனை சுற்றி வந்தாலும் அலுப்பே தெரியாது. கோடை நாட்களில் ஏண்டா வெளியில போறோம்னு ஒரு ஃபீல் இருக்கும். //

    டிட்டோ. எனக்கும் குளிர் சௌகரியம். வெயில்தான் கடுப்பு.

    எனக்கும் அங்கு குளிர் பிடித்திருந்தது சுற்றவும்...இங்கும் குளிரில் (பெரிய அளவு இல்லை என்றாலும்) சுற்றுவது பிடிக்கும். அலுப்பு தெரியாது.

    காய்கள் நீங்கள் சொல்லியிருப்பது போல் அத்தனை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். பார்க்கவே எல்லாத்தையும் வாங்கிடலாம்னு தோன்றும். விலையும் மிகக் குறைவாக இருக்கும்.

    கீதா



    பதிலளிநீக்கு
  8. ஆமாம் உறவினர் வீட்டுக்குப் போய்ருந்தப்ப நல்ல குளிர்காலம்...தங்கை வீட்டிலும் சரி ..முள்ளங்கி பச்சையாகச் சலாட் நல்லருக்கும்.

    பச்சைப் பட்டாணி நீங்க சொல்லிருக்காப்லதான் இங்க கால்வாசிப்பட்டாணி கூடத் தேறுவதில்லை.

    ஆமாம் அங்கு நடக்கும் விழாக்களை நீங்க பகிர்ந்துகொண்டது நினைவிருக்கு.

    மற்றொன்று தில்லி மீதான ஈர்ப்பு, பக்கத்தில் இமயமலை....வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போய்விடலாம். நிறைய இடங்கள் இருக்கின்றனவே...நீங்களுமே நிறைய பகிர்ந்திருக்கீங்களெ. அதெல்லாம் என்னை ரொம்ப ஈர்க்கும். பட்டியலில் கூட உண்டு.

    வருடக் கணக்காக இருந்த உங்களுக்கு நிறைய இனிய அனுபவங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வாசகம் அருமை.
    சார் இந்த பதிவினை படிக்கும் போது அப்படியே டெல்லிக்கு திரும்பவும் ஓடி விடலாம் என்று தோன்றுகிறது.
    ஏற்கனவே டெல்லியின் நினைவுகள் வாட்டி எடுக்குது.
    நீங்களும் தூபம் போடுகிறீர்கள்.
    அந்த இனிமையான நாட்கள் திரும்ப வரப்போவது இல்லை.

    பதிலளிநீக்கு
  10. வாசகம் அருமை.

    உங்கள் டெல்லி நினைவுகள் அருமை. எவ்வளவு பசுமையான நினைவுகள்.
    நீங்கள் எவ்வளவு பதிவுகள் போட்டு இருக்கிறீர்கள்! அங்கு சென்று வந்த இடங்களை பற்றி.
    குளிர்காலத்தில் சென்று வந்த விழா கடைகளை பற்றி பதிவுகள் போட்டு இருக்கிறீர்கள். நாங்களும் பார்த்து இருக்கிறோம் என்று பின்னூட்டம் போட்டதை நினைத்து கொள்கிறேன்.


    டெல்லிக்கு குளிர்காலத்தில் அடிக்கடி போய் இருக்கிறோம். குருவாயூர் கோயிலில் குளிர்காலத்தில் கச்சேரிகள் கேட்டு இருக்கிறோம். நீங்கள் சொல்வது போல குளிர்காலத்தில் கிடைக்கும் காய்கள் பார்க்கவே அழகாய் இருக்கும். பட்டாணி, காரட், முள்ளங்கி எல்லாம் அங்கு உள்ளது நன்றாக இருக்கும். காரட் சீஸன் எல்லோர் வீடுகளிலும் காரட் ஹல்வா பெரிய பெரிய கிண்ணங்களில் கொண்டு வந்து வைப்பார்கள். எனக்கும் இனிய நினைவுகள் வந்து போகிறது.

    டெல்லி குளிர்கால பதிவுகள் போட்டது மனதில் வந்து போகிறது.

    பதிலளிநீக்கு
  11. எனக்கும் 36 ஆண்டுகால டெல்லி வாழ்க்கையை மறக்க முடியாமல் கடந்த ஒரு வருடமாக உள்ளுக்குள் மருகிப்போய்யுள்ளேன். உங்களின் இந்த பதிவை படிக்கும்போது இதே அனுபவம் எனக்குள்ளும் இருந்தது ஞாபகம் வந்தது. வெள்ளிக்கிழமை அலுவலகம் முடிந்து சந்தோஷமாக வீட்டிற்க்கு வந்து இரவு சாப்பிட்டு இஷ்டம்போல் தூங்கி சனிக்கிழமைகளில் தாமதமாக எழுந்திருக்கலாம் என்று எண்ணி வழக்கம்போல நேரத்தில் எழுந்துவிடுவது சுகமாக இருந்தது அங்கு, அந்த வாழ்க்கை மீண்டும் வராதோ என்று ஏக்கமாக உள்ளது இப்போது.

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் 36 ஆண்டுகால டெல்லி வாழ்க்கையை மறக்க முடியாமல் கடந்த ஒரு வருடமாக உள்ளுக்குள் மருகிப்போய்யுள்ளேன். உங்களின் இந்த பதிவை படிக்கும்போது இதே அனுபவம் எனக்குள்ளும் இருந்தது ஞாபகம் வந்தது. வெள்ளிக்கிழமை அலுவலகம் முடிந்து சந்தோஷமாக வீட்டிற்க்கு வந்து இரவு சாப்பிட்டு இஷ்டம்போல் தூங்கி சனிக்கிழமைகளில் தாமதமாக எழுந்திருக்கலாம் என்று எண்ணி வழக்கம்போல நேரத்தில் எழுந்துவிடுவது சுகமாக இருந்தது அங்கு, அந்த வாழ்க்கை மீண்டும் வராதோ என்று ஏக்கமாக உள்ளது இப்போது.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ரசித்தேன்.

    தில்லி குளிரை பற்றி நீங்கள் சொன்னது படிக்கவே அருமையாக உள்ளது. அந்தக் குளிரை மிகவும் ரசித்திருக்கிறீர்கள் என்பது உங்கள் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.இப்போது இங்கு (பெங்களூரில்) இந்த தடவை அதிகமாக உள்ளது. இது தில்லி குளிரோடு ஒப்பிடலாமா என்பது என்னால் சொல்லத் தெரியவில்லை. ஆனால் தமிழகத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் இங்கு குளிர் அதிகம்.

    அப்போது அங்குள்ள காய்கறிகளின் பசுமை கண்களை கவர்கிறது. பட்டாணியில் நீங்கள் கூறுவது போல்தான். காய்கள் திரட்சியாக எப்போதும் இருப்பதில்லை. பதிவை ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. விஜயலஷ்மி சென்னை28 டிசம்பர், 2025 அன்று 5:37 PM

    உங்களுடைய டெல்லி வாழ்கை பயணகட்டுரை பதிவை பார்த்த உடனே படிக்க ஆர்வம் வந்துவிடுகிறது நான் முன்று முறை டெல்லி பயணம் வந்ததும் குளிர் காலத்தில்தான் எனக்கும் அங்கே கோடை காலத்தை விட குளிர் காலம்தான் பிடித்தது பசுமையான காய்கறிகள் சூடான சிற்றுண்டி பகலில் மிதமான வெயில் குளிர்கால பதிவுகள் நினைவில் உள்ளது

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....