தொகுப்புகள்

சனி, 28 பிப்ரவரி, 2026

காஃபி வித் கிட்டு - 228 - எட்வின் சோட்டா - தீராக் கனல் - கடைவீதிப் பிள்ளையார் - மண்டலா - பூனை முடி - Jugalbandi - கேட்காதே


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட என்ன அவசரமோ பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் ரசித்த இசை  : Native American Flute



படம்: இணையத்திலிருந்து...

Edwin Sota என்ற பெயர் கொண்ட Native American. வித்தியாசமான இரண்டு, மூன்று குழல்கள் கொண்ட புல்லாங்குழலில் இசையை நமக்குத் தருபவர்.  The Voice of the Mountain, Breath of the Cedar Forest போன்ற ஆல்பங்கள் பிரபலமானவை.  அவரது குழலிசை ஒன்றினை சமீபத்தில் கேட்டேன்.  பிறகு ஒவ்வொன்றாகக் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படி ரசித்த இசை ஒன்று உங்கள் காதுகளுக்கு இனிமையாய் இதோ, இந்த வாரத்தின் ரசித்த இசையாக….

 

******


இந்த வாரத்தின் சிறுகதை :  தீராக் கனல்


இணைய வழி உலவிக் கொண்டிருந்தபோது கிடைத்த ஒரு வலைப்பூவின் சுட்டி என்னைத் தேட வைத்தது.  திருப்பூரைச் சொந்த ஊராகக் கொண்டவர் - வணிகவியலிலும் இந்தி இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  மணல் கடிகை எனுன் தலைப்பில் இவர் எழுதிய நாவல் பெயரிலேயே வலைப்பூவின் பெயரும் அமைந்திருக்கிறது.  காலச்சுவடு பக்கத்தில் இவர் எழுதிய ஒரு சிறுகதை படிக்கக் கிடைத்தது.  தீராக் கனல் என்கிற தலைப்பிட்ட அந்தச் சிறுகதை - Chain Snatching மற்றும் அதனைத் தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், இழப்பு என்று செல்லும் போது, படிக்கும் நம்மை அந்த இடத்தில் கொண்டு சேர்க்கிறது.  மனதைத் தொட்ட சிறுகதை - படித்துப் பாருங்களேன் - கீழே உள்ள சுட்டி வழி!


தீராக் கனல்

******

 

பழைய நினைப்புடா பேராண்டி : கடைவீதிப் பிள்ளையார்……


2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கடைவீதிப் பிள்ளையார்…… - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. விதம் விதமாய் பிள்ளையார் பொம்மைகள், ஓவியங்கள் என சேகரிப்பது சிலருக்கு வழக்கம்.  எனக்கு படம் பிடிப்பது பழக்கம்.  அப்படி நான் எடுத்த விநாயகர் படங்கள் 2016-இல் இதே நாளில் வெளியிட்டு இருக்கிறேன்.  அந்தப் பதிவு இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! 



பிள்ளையார்…..  நம் ஊரில் அரச மரத்திற்கு அரச மரம், பிள்ளையார் இருக்கிறார். மண்ணில் பிடித்து வைத்தாலும் சரி, கல்லில் செய்தாலும் சரி, மரத்தில் செய்தாலும் சரி, மஞ்சள் தூளில் பிடித்து வைத்தாலும் சரி அவருக்கு எந்த கவலையும் இல்லை! எந்தப் பொருளிலும் பிள்ளையாரைச் செய்து விடுகிறார்கள். 


எந்த ஊருக்குப் போனாலும், எந்த மேளாவிற்குப் போனாலும், அங்கே பிள்ளையார் சிலைகளையும், விற்கப்படும் பிள்ளையார் பொம்மைகளையும் புகைப்படம் எடுத்து வைப்பது எனது ஒரு வழக்கம். பெங்காலி நண்பர் ஒருவர் இப்படி பிள்ளையார் பொம்மைகளையும் சிலைகளையும் சேர்த்து வைப்பது பற்றி முன்னரே ஒரு பதிவில் சொல்லி இருக்கிறேன்.


சமீபத்தில் சூரஜ்குண்ட் மேளாவிற்கு நண்பர்களோடு சென்ற போது அங்கேயும் பல பிள்ளையார் பொம்மைகள் – சில தரையில் வைத்திருக்க, பல பிள்ளையார்களை அந்தரத்தில் தொங்க விட்டிருந்தார்கள்!  அனைத்தையும் புகைப்படமாக என் காமிராவிற்குள் பிடித்துக் கொண்டேன்.  நான் பிடித்தவை இதோ…


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் தகவல்  : மண்டலா


இந்த முறை புத்தகத் திருவிழாவிற்குச் சென்ற போது எங்கள் மகள் தனது அம்மாவிற்கு பரிந்துரைத்த ஒரு புத்தகம் (?)  சில வடிவங்கள் கொண்ட மண்டலா புத்தகம்.  வடிவங்கள் விதம் விதமாக, ஒவ்வொரு பக்கத்திலும் ஏற்கனவே வரைந்திருக்க, அதில் வண்ணங்கள் கொண்டு தீட்ட வேண்டும். இப்படியான வடிவங்களை மகளே வரைவதுண்டு. மண்டலா ஓவியங்கள் Stress Buster வகையில் வருபவை - அதனை பயன்படுத்துவது Stress விலக வசதியாக இருக்கும் என்றும் சொல்வார்கள்.  மகளுக்கு ஒன்று, தனக்கு ஒன்று என இரண்டு அப்படியான மண்டலா புத்தகங்கள் வாங்கினார்கள்.  மகள் ஒரு படத்திற்கான வண்ணங்களை தீட்டி முடித்திருக்கிறார்.  இல்லத்தரசி வரைய ஆரம்பித்திருக்கிறார்.  மகள் வண்ணம் தீட்டிய மண்டலா ஓவியம் கீழே! 






******


இந்த வாரத்தின் ரசித்த வாசிப்பு :  பூனை முடி


மகுடேஸ்வரன் அவர்களின் முகநூல் பக்கத்தினை தொடர்கிறேன் என்பதால் அவ்வப்போது அவரது இடுகைகளை வாசிப்பது வழக்கம்.  சமீபத்தில் வாசித்த அவரது ஒரு அனுபவம் - வளர்ப்பு பூனைக்கு முடி வெட்டுவது சம்பந்தமான இடுகை - படித்துப் பாருங்களேன்!  பூனையைப் பற்றிப் படித்ததும் நண்பர் பத்மநாபன் வளர்க்கும் பூனைகள் பற்றி நினைவு வர, அவருக்கு இந்த இடுகையை அனுப்பி வைத்தேன்! 


வளர்ப்பிலிருக்கும் பாரசீகப் பூனையின் உடல்முடி மிகுந்து சிக்காகிவிட்டது. முடி வெட்டியாகவேண்டும். இணையத்தில் உலாவி உள்ளூரிலிருக்கும் வளர்ப்பு விலங்குகட்கான முடிதிருத்தகம் ஒன்றைக் கண்டுபிடித்தேன். கொடுத்திருந்த முகவரிக்குச் சென்று முடிவெட்டுதல் குறித்து வினவினேன். அங்கிருந்த தம்பி மேற்கொண்டு செய்திகள் கேட்டார். 


“சொல்லுங்க...”


“பூனைக்கு முடி வெட்டணும்ங்க...”


“ஓ... செய்யலாங்க. அவங்க எங்க இருக்காங்க  ?” என்றார்.


நான் பூனைக்கு முடிவெட்டுவதைப் பற்றிக் கேட்டால் இவர் யாரைப் பற்றிக் கேட்கிறார் என்பது புரியவில்லை. 


“பூனைக்குத்தான் முடி வெட்டணும்ங்க...” என்றேன். 


“அதுக்குத்தான் அவங்க எங்க இருக்காங்கன்னு கேட்டேன்.”


“எவங்க ?” 


”முடி வெட்டணும்ல அவங்களுக்கு ?”


ஓ... பூனையைத்தான் அவர் ‘அவங்க’ என்கிறாரா ?  ‘பாருங்களேன்... பூனைக்கு வந்த வாழ்வினை’ என்று நினைத்துக்கொண்டேன்.


“பூனையைத்தானே ? வீட்ல இருக்குது. எடுத்துட்டு வர்றேன்...”


“ம்ம். அவங்களை அழைச்சிட்டு வாங்க” என்று இசைந்தார். 


பிறகு வீட்டிற்கு வந்து பூனைக்கென்றே வாங்கிய காற்றுத்துளை மிகுந்த கூடையில் அமர்த்தி எடுத்துச் சென்றேன். 


குளிர்ப்பாட்டி வெதுப்பூட்டி முடிவெட்டிவிட்டனர். 


வேலை முடிந்ததும் இன்னொரு தம்பி கட்டணச்சீட்டு எழுதினார். 


“ம்ம்... பேர் சொல்லுங்க.”


“மகுடேசுவரன்”


“உங்க பேரு இல்லைங்க. அவங்க பேரு சொல்லுங்க...”


பூனைக்கென்று நாங்கள் பெயர் வைக்கவில்லை. ஆளாளுக்குச் செல்லமாய் ஏதாவது சொல்லிக் கூப்பிடுவோம். நான் பூனையைப் பார்த்தேன். ‘என்னை இங்கே கொண்டுவந்து பாடாய்ப் படுத்திவிட்டாயே. கேட்கறாங்கல்ல... சொல்லு’ என்பதுபோல் அதுவும் என்னைப் பார்த்தது. 


“பூனைக்கு எதுக்குங்க பேரு... பூனைன்னா பூனைதான்” என்றேன். நாய் கொண்டுவந்திருந்த பக்கத்து அம்மணி முகந்திருப்பிச் சிரித்துக்கொண்டார்.    


“பேரு வைக்காம எப்படிங்க ? இப்ப நான் என்னன்னு எழுதறது ? வீட்ல ஏதாவது பேர் வெச்சுக் கூப்பிட்டிருப்பீங்க. சொல்லுங்க.”


“எங்கம்மா குண்டுன்னு கூப்பிடும். வீட்ல பஞ்சுன்னு கூப்பிடுவாங்க. நான் பட்டுக்குட்டின்னு கூப்பிடுவேன். இதைப் பேருன்னு எப்படிச் சொல்றது ?”


“சரி. நான் பஞ்சுன்னு எழுதிக்கிறேன்” என்று எழுதினார். பஞ்சுக்கு எழுதப்பட்ட கட்டணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு பூனையோடு கிளம்பினேன். 


நாம்தான் பூனையை எளிதாக நினைக்கிறோம். உரிய இடத்தில் அதற்கென்று வாழ்வும் விளியும் இருக்கின்றன என்று விளங்கிக்கொண்டேன்.


******


இந்த வாரத்தின் விளம்பரம்  - Jugalbandi :


Fevicol விளம்பரங்கள் ஒவ்வொன்றுமே ரசிக்கும் விதமாக இருக்கும்.  இத்தனை வருடங்களில் அவர்களது ஒரு விளம்பரம் கூட ரசிக்க முடியாமல் போனதில்லை.  சென்ற வருடம் அவர்கள் வெளியிட்ட விளம்பரம் ஒன்று Fevicol Jugalbandi.  இது வரை பார்க்காவிட்டால் பார்த்து ரசிக்கலாமே!

******


இந்த வாரத்தின் ரசித்த வாகன வாசகம்  - கேட்காதே :


ஆட்டோ வாசகங்கள் இந்த வாரமும் தொடர்கிறது.  சென்ற வாரம் ஒரு ஆட்டோவில் பார்த்த வாசகம் சிந்திக்க வைத்தது.  சரியாகத்தானே சொல்லி இருக்கிறார்.  அந்த வாசகம்….


கஷ்டப்படாமல் வாழ கஷ்டப்படு….


வேறொரு இரு சக்கர வாகனத்தில் எழுதியிருந்த வாசகம் - அடிபட்டிருப்பார் போலும் என்று சிந்திக்க வைத்தது….


வா, போ, பழகு….  வண்டி மட்டும் கேட்காதே!


சிந்திக்க வைக்கிறன இல்லையா?  நீங்கள் பார்த்த, நினைவில் இருக்கும் வாகன வாசகங்களைச் சொல்லுங்களேன் - பின்னூட்டத்தில்!


******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

28 ஃபிப்ரவரி 2026


13 கருத்துகள்:

  1. ரசித்தேன்.  பூனைக்கு என்ன பேர் என்றதும் கவுண்ட்டமணி ஞாபகம் வந்து விட்டார்.  அவர் வீட்டுக்குப்போயிருந்த ஒரு இயக்குனர் இதேபோல அவர் வீட்டு நாயைப் பற்றி கேட்டதும் அவர் சொன்னதும் இதுதான் "நாய்க்கு என்னங்க பேரு?  நாய்தான்" என்றாராம்!

    பதிலளிநீக்கு
  2. வண்ணம் தீட்டிய மண்டலா ஓவியம் சூப்பர்.

    பூனைக்கு முடி வெட்டுவது.... உலகம் எங்கேயோ போய்விட்டது. நல்ல வேளை பாம்புக்குச் சட்டை உரிக்க கடை ஆரம்பிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  3. வாசகம் அருமை.
    புல்லாங்குழல் இசை இனிமை.
    மலைத்தொடரை காட்டும் பொழுது எல்லாம் இந்த இசைதான் பின்னனியில் இருக்கும்.

    ரோஷ்ணி வரைந்து வண்ணம் தீட்டிய மண்டலா ஓவியம் அருமை.

    இந்த வாரத்தின் ரசித்த வாசிப்பு : பூனை முடி//

    அருமை. நானும் அவர் பக்கத்தை படிப்பேன்.

    பெவிக்கால் விளம்பரம் அருமை, முன்பும் இதே போன்ற அவர்கள் விள்ம்பர காணொளி பகிர்ந்து இருந்தீர்கள் .
    வாகன வாசகங்கள் அருமை
    .வண்டி மட்டும் கேட்காதே அருமை.

    பதிலளிநீக்கு
  4. வாசகம் நல்லாருக்கு

    கூடவே ஒரு தத்துவப் பாடலும் நினைவுக்கு வருகிறது தமிழ்க்கீர்த்தனை....நம்ம தாஸேட்டன் கச்சேரிகளில் பாடிய கீர்த்தனை. இல்லாததை நினைத்து வருந்துகிறான் அது எட்டாததை நினைத்துக் கொட்டாவி விடுகிறான் எல்லாம் உனது மனதுள்ள இருக்க இன்பம்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  5. The Voice of the Mountain, Breath of the Cedar Forest//

    இவரது குழலிசையைக் கேட்டிருக்கிறேன். மகன் அறிமுகப்படுத்தினான். இப்ப இது கேட்டேன். ஆல்பத்திற்குச் சரியான பெயர் தான்.... மனக்கண் முன் கொண்டுவரும் இசை. கண்ணை மூடிக் கொண்டு ரசித்தால்...

    வியப்பான விஷயம் மூன்று புல்லாங்குழல்கள்....வித்தியாசமான கருவியாக (புல்லாங்குழல்களில் ஒவ்வொன்றிற்கும் சுருதி வேறுபடும்....அவற்றை இப்படி இணைத்து வாசிப்பது திறமை.

    ரசித்துக் கேட்டேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. இவர் இன்னொரு விதமான புல்லாங்குழல்கள் இணைத்து ஒரு வடிவத்தில் வைத்திருபபர் நீங்களும் பார்த்திருப்பீங்க கேட்டிருப்பீங்க. native என்று மூதாதையர்கள் பயன்படுத்திய வகைகள் என்று.

    கேட்பேன் ஆனால் பெயர்கள் டக்கென்று பிடிபடாமல் போகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கதையை பின்னர் வாசிக்கிறேன் ஜி.

    ரோஷ்ணியின் ஓவியமான மண்டலா ஆர்ட் பிரமாதம். ஆமாம் stress busters வகையில் இதில் ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக ....உதவும். நானும் செய்ததுண்டு என்பதால்...கலைகளே நல்ல stress busters

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பூனை - மகுடேஸ்வரன் பகுதி சுவாரசியமாக இருக்கிறதே. வாசிக்கிறேன்.

    மகன் இரு பூனைகள் வைத்திருக்கிறான். ஒன்றிற்கு ஒரு கால் கிடையாது. மகனும் மருமகளும் வகைகள் பார்த்து வாங்குவதில்லை. காப்பாற்றி வளர்க்கிறாங்க. அவங்க தொழிலும் அதுவே.

    முன்பு வீட்டுச் செல்லங்கள் பற்றி எழுதியதுண்டு ஆனால் சமீபத்தில் நான் அதிகம் இது பற்றி எழுதுவதில்லை.

    விளம்பரத்தை ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. விளம்பரத்தில் வரும் ஆரம்ப இசை அந்த ரிதம் ரொம்ப நல்லாருக்கு. விளம்பரம் கொஞ்சம் சிரிக்கவும் வைத்தது ஃபெவிக்கால் விளம்பரம் எப்படி வருகிறது என்று பார்த்தால் ஆரம்பமே அந்த இருவர்....Siamese போன்று....

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மகுடேஸ்வரன் - எழுதியது தளம் முகநூலா...தளம் ப்ளாகர் என்று நினைத்தேன். முழுவதுமே கொடுத்திருகீங்க இல்லையா?

    ஒரு சில பூனைகளுக்கு அதுவும் அவர் வளர்க்கும் பாரசீகப் பூனைக்கு முடி வெட்டிதல் இருக்கும். முன்பிருந்த வீட்டில் மாடியில் உள்ள பெண் பூனைகள் வளர்க்கிறார். அவை எல்லாம் நாட்டுப் பூனைகள்...வீட்டில் வீடருகில் போட்ட குட்டிகளை வளர்க்கிறார் மருத்துவரிடம் சென்று எல்லா ஊசிகளும் போட்டு....பாதுகாப்பாக வளர்க்கிறார். நம்ம வீட்டுக்கு அடிக்கடி வரும் ம்....சாப்பிடு....ம்தூங்கும்...நம்ம வீடு அதுங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பிள்ளையார் படங்கள் செம.மீண்டும் ரசித்தேன். டக்கென்று என்ன பதிவென்று நினைவுக்கு வரவில்லை.இங்கு பெரும்பாலும் எல்லலாக் கோயில்களிலும் பிள்ளையார் இருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. தீராக்கனல் வாசித்தேன் ஜி. மனதை என்னவோ செய்தது.

    செயின் திருட்டு ஆனால் அதன் விளைவு கொடுமை.

    சின்ன சின்ன பாராவாகக் கொடுத்திருக்கலாம் அங்கு அவங்க...அல்லது எழுத்தாளர் .

    கீதா

    பதிலளிநீக்கு
  13. வாசகங்கள் ரசனை. கஷ்டப்படால இருக்கக் கஷ்டப்படு...சூப்பர்ல? அதே போல வண்டியை மட்டும் கேக்காத...சிரிப்பு அரும்பியது. யதார்த்தம் அவருக்கு அனுபவங்கள் நிறைய என்று தெரிகிறது

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....