தொகுப்புகள்

புதன், 18 மார்ச், 2026

நடை நல்லது - ஆண்டாள் தரிசனம் - பறவைகளின் குரல் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட தாணிப்பாறை - சதுரகிரி பயணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


ஆண்டாள் தரிசனம் - 10-03-2026:






காலை நேரம் - வீட்டிலிருந்து ஐந்தரை மணிக்குப் புறப்பட்டு வடக்கு வாசல் அருகே செல்லும் போது பத்து நிமிடங்கள் கடந்திருக்கலாம்.  சரியாக கொள்ளிடத்திலிருந்து, அரங்கனின் திருக்கோயிலுக்கு குடங்களில் நீர் எடுத்துக்கொண்டு வருபவர்களை பார்க்க முடிந்தது.  கூடவே மணியோசையும். பின்னால் பார்த்தால் ஆலய யானையான ஆண்டாள் வந்து கொண்டிருந்தாள்.  மேலே வெள்ளிக்குடத்தில் எடுத்த நீரை வைத்துக் கொண்டு ஒருவர் அமர்ந்து வந்தார்.  கீழே யானைப்பாகன் ஒரு புறமும் அவரது உதவியாளர் மறுபுறமும்.  யானை கடப்பதற்காக சிறிது நேரம் காத்திருந்து அதனை ரசித்தோம்.  வழியில் இருக்கும் ஏதோ ஒரு பொருளை தும்பிக்கையால் தொட முயல பாகன் அதனைக் கடிந்து கொண்டார்.  மீண்டும் அதையே செய்ய நினைக்க, கையிலிருந்த குச்சியால் ஆண்டாள் மீது ஒரு அடி கொடுத்தார் பாகன்.  பார்த்ததும் எனக்குக் கோபம் வந்தது.  என்னதான் யானைக்கு அந்த அடி வலித்திருக்காது என்று தோன்றினாலும் எதற்காக அடிக்க வேண்டும் என்று தோன்றியது.  


வழியில் கடை பக்கத்திலிருந்த ஒரு நபர் ஆண்டாளுக்கு வாழைப்பழமும் மேரி பிஸ்கெட்டும் வாங்கித் தர, அதனை வாங்கி பாகன் முதலில் பழங்களைக் கொடுத்து விட்டு, பிஸ்கெட் பாக்கெட்டைப் பிரித்து ஒரு பிஸ்கெட் தவிர மற்ற அனைத்தையும் ஒரே வாயில் கொடுத்தார் யானைக்கு. மீதி இருந்த ஒரு பிஸ்கெட் - பாகனின் வாய்க்குள் போனது.  காட்டுக்குள் விதம் விதமான செடிகளை, பழங்களைச் சாப்பிடும் யானை இங்கே மேரி பிஸ்கெட் சாப்பிடப் பழகிவிட்டது. நடுவே Speed Breaker வர மிக மிகப் பொறுமையாக அதனைக் கடக்கிறது ஆண்டாள்.  ஐந்தறிவு ஜீவன் என்று சொல்கிறோம் - ஆனால் அது கூட Speed Breaker இருக்கும் இடத்தில் மெதுவாகக் கடக்கிறது.  இரு/நான்கு சக்கர வாகனங்களில் வரும் ஆறறிவு அறிவிலிகள் வேகமாகக் கடக்கின்றனர்.  வழியில் ஏதோ ஒரு ஒயர் குறுக்கே இருக்க, ஆண்டாள் கடக்காமல் நிற்கிறது.  மேலே இருக்கும் நபர் மற்றும் யானைப் பாகன் அந்த ஒயரை மேலே தூக்க யானை அந்த இடம் கடக்கிறது.  அதற்கு முன்னர் ஒரு குரல் எழுப்புகிறது கொஞ்சலாய்!  பாகன் அதனிடம் பேசுகிறார் - “ஒயர் இருந்தா நான் என்னடி பண்ணறது? நானா இதை வச்சேன்?” என்கிறார்.  அவர்களுக்குள்ளான சம்பாஷனைகள் தான் எத்தனை ரசனை! 




மெதுவாக நடந்து வடக்கு வாசல் வழி படிகளில் இறங்கி யானை உள்ளே செல்ல, பின்னேயே சென்று கொண்டிருந்த நாங்கள் உத்திர வீதி வழி நடந்து சென்று கொண்டிருந்தோம். ஆலயத்திற்குள் ஆண்டாள் நடக்கும்போது அதன் மணியோசை எங்களுக்கு வீதியில் கேட்டுக் கொண்டிருந்தது.  ஆண்டாள் குறித்த பேச்சுடன் எங்கள் நடை தொடர்ந்தது. உத்தர வீதிகளில் நடை முடிந்து மீண்டும் சரியாக வடக்கு வாசல் அருகே வந்தால் எதிரே எங்களுக்குத் தரிசனம் தந்தது, “தரிசனம்” எனும் தொடரை முகநூலில் சமீபத்தில் எழுதிய ரிஷபன் ஜி. அவர் எழுத்து… அப்பப்பா! பிரமிப்பு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?  அரங்கனின் ஆலயத்தில் கைங்கர்யம் செய்யச் சென்று கொண்டிருந்த அவருடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பேசுவதனைத் தொடரவே ஆசை இருந்தாலும், அவருக்குக் கைங்கர்யம் காத்திருக்கிறது - எங்களுக்கும் அலுவலகத்திற்குச் செல்லுமுன்னர் செய்ய வேண்டிய வேலைகள் காத்திருக்க, விடை பெற்றோம் - இனிமையான நடைப்பயணம் குறித்த சிந்தனைகளோடு.  இப்படியான ஒரு நடை மனதுக்கு இதமும் மகிழ்வும் தரத்தான் செய்கிறது இல்லையா?  நடை சமயத்தில் எடுத்த சில படங்கள் இணைத்திருக்கிறேன் - நீங்களும் ரசிக்க ஏதுவாக! 


*******


பறவைகளின் குரல் - 14-03-2026:












சனிக்கிழமை என்பதால் சற்றே மெதுவாக எழுந்தோம். இல்லாளுக்கு வேறு வேலைகள் இருக்கிறது என்றார் - “மூணு, நாலு நாளா நடக்கலையே, நீங்க மட்டுமாவது போய்ட்டு வாங்க…” என்று சொன்னதும் புறப்பட்டு விட்டேன் - நடக்கும் பாதையைக் கொஞ்சம் மாற்றி, மேலூர் கிராமத்தினை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  பக்கத்தில் தான் கிராமம் இருக்கிறது என்றாலும் பொதுவாக அந்தக் கிராமத்தினை நோக்கிய பாதையில் நடந்து, கிராம எல்லைக்கு அருகே சென்றவுடன் திரும்பிவிடுவோம். இன்று தனியாக நடந்ததால் கிராமத்திற்குள்ளும் முடிந்த அளவு நடப்போம் என்று தொடர்ந்து நடந்தேன்.  எப்போதும் போல வழியில் இயற்கை எழிலை ரசித்தபடியே. பாதையில் கேட்கும் பலவித பறவைகளின் குரல்கள், மெல்லிய சிலிர்ப்புடன் கூடிய காற்று, தூரத்திலிருந்து காதுகளை வந்தடையும் இளையராஜாவின் இன்னிசை என்று நடை மிகவும் ரம்மியமாக அமைந்தது. தனியாக நடப்பதில் ஒரு வசதி - பேச்சே தேவையில்லை - முழுவதுமாக இயற்கையுடன் ஒன்றிவிடலாம்!  சேர்ந்து போவது வேறு வித சுகம் என்றால் இப்படித் தனியாக நடப்பது வேறு சுகம்! 


சற்றே விடிந்த பின்னர் நடந்ததால் வேறு சில மனிதர்களையும் நடக்கும் வழியில் பார்க்க முடிந்தது.  எடை குறைக்கவும், உடலை கவனித்துக் கொள்ளவும் நடப்பவர்களுக்கு மத்தியில் கிராமத்திலிருந்து நடந்து பணிக்குச் செல்லும் பெண்கள், மூதாட்டிகளையும் பார்க்க முடிந்தது.  ஒரு மூதாட்டி - அப்படி ஒரு Photogenic Face அவருக்கு - முதுமையின் அழகு அவருடைய முகத்தில் தெரிய, அவரை படம் பிடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நிழற்படம் எடுப்பதை ஹாபியாக வைத்திருக்கும் சிலர் Random ஆக எதிரே பார்க்கும் சிலரை, அவர்களின் அனுமதியுடன் படம் எடுத்து பகிர்வதுண்டு.  அவர்களுக்கும் காண்பித்து அவர்கள் மகிழ்வதை காணொளிகளாகவும் எடுத்து பகிர்ந்து வருகிறார்கள்.  இது உண்மையா பொய்யா என்பது புரியாத புதிர்! இப்படியான சில படங்கள் முன்னதாகவே பேசி வைத்துக் கொண்டு எடுத்ததாக இருக்கலாம்.  ஆனாலும் நான் கேமராவுடன் சுற்றிய நாட்களில் Discreet Shots என்கிற பெயரில் சில முதியவர்களை படம் எடுத்ததுண்டு - எடுக்கப்படும் நபருக்குத் தெரியாத விதத்தில் எடுத்திருக்கிறேன் - அவர்களது முகத்தில் தெரியும் சுருக்கங்களுக்காக! 



மனிதர்களைப் பார்ப்பது போலவே, பூக்களையும், இயற்கையின் எழிலையும் பார்ப்பது பிடித்துத்தான் இருக்கிறது. சில பூக்களைப் பார்க்கும்போதே எத்தனை பேரெழிலுடன் படைத்திருக்கிறான் இந்த ஆண்டவன் என ஆண்டவனின் பேராற்றலை நினைத்து பூரிப்பதுண்டு.  எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என நினைத்தபடி, படங்கள் எடுத்துக் கொண்டும், சிந்தனைகளை ஓடவிட்டும் நடப்பது மகிழ்ச்சியான விஷயம்.  அதிலும் பூக்கள், இலைகள் என ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு புதுமையை படைத்திருக்கும் ஆண்டவனின் கலை உணர்வை என்னவென்று சொல்ல. இந்த இனிமையான அனுபவங்களைப் பெற நடை தேவை - அந்த நடை தொடர ஆசை தான்.  ஆனாலும் சில நாட்களில் நடக்க முடியாதபடிக்கு ஏதோ ஒரு வேலை வந்து விடுகிறது - கடந்த மூன்று நாட்களைப் போல! முடிந்த போதெல்லாம் நடையைத் தொடர்வோம் - நடை குறித்த பதிவுகளையும் - நீங்கள் விரும்பினால்!


*******



இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

18 மார்ச் 2026


13 கருத்துகள்:

  1. இப்போது யானைப்பாகன் ஸ்ரீதரன் இல்லையா?  ஆண்டாளுடன் பேசிக்கொண்டே நடப்பாரே...  இருவருக்கும் ஒரு புரிதலான உரையாடல் நடக்குமே....   ஓ...  பின்னர் வரும் பாகனின் பாஷை படித்ததும் அது அவர்தான் என்று புரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. என்னுடைய ஒரு ஸ்ரீரங்க தரிசனத்தில் உள்ளே ரங்கநாதரை நெருங்கிய நிலை வரிசையில் நான் காத்திருக்க, ஆண்டாள் அன்று வரவில்லை என்று நினைக்கிறேன், இன்னொரு யானை பெயர் மறந்து விட்டது.. அது க்ளோசப்பில் எங்களை பார்த்தபடி தாண்டிச் சென்றது மறக்க முடியாத அனுபவம்.

    பதிலளிநீக்கு
  3. ஓ.. ரிஷபன் ஜி கோவிலில் கைங்கர்யங்கள் செய்கிறாரா? ஆஹா.. தொடரும் புகைப்படங்கள் அருமையோ அருமை.

    பதிலளிநீக்கு
  4. யானையுடன் கூட நடக்கும்போது நடையின் சோர்வு தெரிந்திருக்காது. நல்லது. படங்கள் அழகாக உள்ளன.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  5. ஆண்டாள் அழகு! ஆண்டாளுக்கு அடியா....பாவம். ஆனால் பாகனுக்குத் தெரியுமோ அவளுக்கும் பாகனுக்குமான சம்பாஷணையோ அது!! நாம் சின்னக் குழந்தைகளைச் சும்மா தட்டுவோமே அப்படியா?

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அடக் கடவுளே! ஆண்டாளுக்கு பிஸ்கட்டா? ஆனைகளுக்கு பிஸ்கட் போன்ற பதப்படுத்தப்பட்ட பொருட்கள் கொடுக்கக் கொடாது. அதன் ஜீரணத்திற்கு அவை நல்லதல்ல.

    ஆனைகளுக்குக் கோபம் வருவதற்குக் காரணமும் இப்படியான சில உணவுகள் வயிற்றிற்குள் செல்வதுதான்...

    //காட்டுக்குள் விதம் விதமான செடிகளை, பழங்களைச் சாப்பிடும் யானை இங்கே மேரி பிஸ்கெட் சாப்பிடப் பழகிவிட்டது. //

    முதல் வரிதான் அந்த உணவுதான் சரி ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நடுவே Speed Breaker வர மிக மிகப் பொறுமையாக அதனைக் கடக்கிறது ஆண்டாள். ஐந்தறிவு ஜீவன் என்று சொல்கிறோம் - ஆனால் அது கூட Speed Breaker இருக்கும் இடத்தில் மெதுவாகக் கடக்கிறது. //

    உண்மை ஜி. ஆறறிவுகளுக்குக் கூட இந்த புத்திவராது.

    இங்கு போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் சாலைகளைக் கடக்கும் நாய்கள் அழகாக சிக்னல் பார்த்து கடக்கின்றன. ஆனால் பாருங்க நம்ம மக்கள் சிக்னல் பார்க்காம வேகமாகக் கடப்பாங்க இல்லைனா சிவப்பு இருநாலும் வண்டியை வேகமாக ஓட்டிச் செல்வாங்க!!

    //வழியில் ஏதோ ஒரு ஒயர் குறுக்கே இருக்க, ஆண்டாள் கடக்காமல் நிற்கிறது. மேலே இருக்கும் நபர் மற்றும் யானைப் பாகன் அந்த ஒயரை மேலே தூக்க யானை அந்த இடம் கடக்கிறது. அதற்கு முன்னர் ஒரு குரல் எழுப்புகிறது கொஞ்சலாய்! பாகன் அதனிடம் பேசுகிறார் - “ஒயர் இருந்தா நான் என்னடி பண்ணறது? நானா இதை வச்சேன்?” என்கிறார். அவர்களுக்குள்ளான சம்பாஷனைகள் தான் எத்தனை ரசனை! //

    ரசித்து வாசித்தேன் ஜி. ஆண்டாளின் குரல்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அப்பப்பா! பிரமிப்பு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல? அரங்கனின் ஆலயத்தில் கைங்கர்யம் செய்யச் சென்று கொண்டிருந்த அவருடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பேசுவதனைத் தொடரவே ஆசை இருந்தாலும், அவருக்குக் கைங்கர்யம் காத்திருக்கிறது//

    ஓ! அதான் ரிஷபன் அண்ணா, அப்படியான ஒரு கதையை எழுதியிருக்கிறார்! ஆலயத்தில் கைங்கர்யமா சூப்பர். நல்ல விஷயம்.

    காணொளியில் கூட மணிச்சத்தம் கேகிறதே. ஆண்டாளின் நடை அழகை ரசித்துப் பார்த்தேன் ஜி

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  9. எனக்குத் தனியாக நடப்பதில் சுகம்.

    காணொளியில் பறவைகளின் கீச் கீச் இனிய நாதம்!!! சூப்பர் ஜி காணொளியும் ரசித்தேன் அழகான அமைதியான பாதை.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. யானையை அவங்க குழந்தை மாதிரி பார்த்துப்பாங்க. அதனால செல்ல அடி..நம்ம குழந்தைகளை நாம செல்லமா தட்டறதில்லையா அதுபோல.

    பதிலளிநீக்கு
  11. இருந்தாலும் யானையை (கோயில் பெயர் சொல்லலை.. திருவரங்கம்தான்) வீதியில் உலா வரும்போது காசு வாங்கி ஆசீர்வாதம் செய்யவைப்பதை நான் விரும்புவதில்லை. யானையை பிச்சை எடுக்க வைப்பதற்குச் சமானம் இது.

    பதிலளிநீக்கு
  12. ரிஷபன் அவர்களின் சிறுகதைகளுக்கு நானும் ஒரு ரசிகன்.

    ஆண்டாளுக்கு மேரி பிஸ்கட். பாகனுக்கு மேரா பிஸ்கட். பாகனுக்கும் பசிக்குமுல்லா!

    பதிலளிநீக்கு
  13. வாசகம் அருமை.
    சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.

    காலை நடப்பயிற் சியின் போது அருமையான் தரிசனம் . ஆண்டாளின் தரிசனம் இறைவனுக்கு கைகர்ய்ம் செய்ய நீர் சுமந்து செல்கிறதே!

    யானை பாகன் யானை பேசி கொண்டதை ரசித்தேன், குழந்தையை கோல் கொண்டு அடிப்பது போல செல்ல அடிதான் அடித்து இருப்பார் பாகன் என்று நினைக்கிறேன். நிஜ அடி என்றால் அடுத்து கொஞ்சி பேச மாட்டார்களே இருவரும்.

    காலை நேஅர் மலர்கள் படம், கோபுர தரிசனம் மனதுக்கு இதம்.
    இன்று பேரன் புதுமையான அழகான பூ படம் லண்டனிலிருந்து அனுப்பி இருந்தான்.
    இறைவனின் படைப்பில் எல்லாம் அழகே ! காலை நேரம் பறவைகளின் இனிய ஒலி
    ஆலய மணி ஓசை, யானைவரும் மணி ஓசை , காலை இதமான காற்று நடை நல்லது, முடிந்த போது எல்லாம் நடைப்பயிற்சி செய்யுங்கள்.

    நடை காணொளி ஆள் அரவமற்ற பாதை காணொளி அருமை.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....