அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அறம் - ஜெயமோகன் - வாசிப்பனுபவம் - ஆதி வெங்கட் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் ஆட்டோ வாசகங்கள் : இரு கண்கள்
சில வாரங்களாக ஆட்டோ வாசகங்கள் வெளியிடவில்லை. பார்க்கும்போது டக்கென்று மனதுக்குள் சேமித்து வைத்து, பிறகு எழுதிட நினைப்பேன். ஆனால் பல சமயங்களில் வேறு வேலைகளில் மூழ்க, அந்த வாசகங்களை மறந்து விடுவேன். ஆனாலும் சில வாசகங்கள் மறக்க முடிவதில்லை. அப்படியான இரண்டு வாசகங்கள் இன்றைக்கு காஃபி வித் கிட்டு பதிவில்…
வாசகம் ஒன்று:
என்னைப் பெற்ற தாயானவலும்,
என்னால் தாயானாவலும்
என் இரு கண்கள்
வடிவேலின் ஏதோ ஒரு காமெடியில், வங்கியில் கொள்ளை அடிக்கச் செல்லும்போது, வங்கியிலிருப்பவர் சொல்வாரே, நீங்கள் எழுதியதில் நிறைய தப்பு இருக்கிறது, அதனை திருத்தி எடுத்து வாருங்கள் என்று அது ஏனோ நினைவுக்கு வந்தது. நல்ல சிந்தனையாக இருக்கிறதே என்று தோன்றினாலும், ல - ள வித்தியாசத்தில் கவனத்தில் நிற்கவில்லை இந்த வாசகம்.
வாசகம் இரண்டு:
உங்கள் வழிச்செலவு
என் வாழ்க்கைச் செலவு
அதாவது நாம் கொடுக்கும் கட்டணம் அவருக்கான வாழ்க்கை செலவிற்கு உதவுகிறது என்று சொல்கிறார். ஆனாலும் பல சமயங்களில் வாழ்க்கைச் செலவு அதிகம் என வழிச்செலவினை அதிகமாக்கி விடுகிறார்கள் சில ஆட்டோ ஓட்டுனர்கள் - அதனை எங்கே முறையிடுவது என்று தோன்றியது எனக்கு!
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் : வெப் சீரிஸ்
பல வயதினர்களும் ஒரு காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டி முன் உட்கார்ந்து மணிக்கணக்காக டெலிவிஷன் சீரிஸ் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போதும் சில பெரியவர்கள் மாலை நேரங்களில் இப்படியான சீரியல்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் இளைஞர்களும் இந்த சீரியல் மோகத்தில் கட்டுண்டு கிடக்கிறார்கள்! என்ன இன்றைய இளைஞர்கள் பார்க்கும் சீரிஸ் - வெப் சீரிஸ்! நிறைய இளைஞர்கள் - இளைஞிகள் சொல்லும், பேசும் வெப் சீரிஸ் என்ன என்பது கூட நம்மில் சிலருக்கு - குறிப்பாக எனக்குத் தெரியாது! ஏனோ இந்த சீரிஸ் மீது ஒரு Aversion. எப்போதுமே தொலைக்காட்சி பார்ப்பது கிடையாது. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு காலை நேர நடை முடித்து வீடு திரும்பும்போது வழியில், சாலை சந்திப்பு அருகே அவரவர் சைக்கிளில் ஒரு பெண், மற்றும் இரண்டு ஆண்கள் - மூவருமே எட்டிலிருந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் போலத் தான் இருந்தார்கள் - மூவரையும் பார்க்க நேர்ந்தது.
ஒரு வகையில் இது ராஜா காது கழுதை காது பகுதிக்கான மேட்டர்! ஆனாலும் எண்ணங்கள் பகுதியாக வெளியிட்டு இருக்கிறேன். அது சரி அந்த மூவரும் என்ன பேசிக் கொண்டிருந்தார்கள் என்று பார்க்கலாம்! அந்தப் பெண், அந்தப் பையன்களிடம் இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தார் - “டேய் நீங்க எல்லாம் Brothers and Sisters வெப் சீரிஸ் பார்க்கிறீங்களா? ரொம்ப நல்லா இருக்கு! ஜியோ ஹாட்ஸ்டாரில் வருகிறது… பார்க்கலைன்னா பாருங்கடா” என்று! ட்யூஷன் கிளாஸ் முடிந்து வரும்போது இந்தப் பேச்சு! நான் கடந்த பிறகு அந்தப் பெண்ணின் குரல் கேட்டது - “சரிடா இன்னிக்கு வீட்டுக்குப் போய் பாருங்க! நாளைக்கு ட்யூஷன்ல இது பத்தி பேசலாம்!” என்று. அட வெப் சீரிஸ் பார்க்கறது மட்டுமல்லாமல் டிஸ்கஷன் வேறா என்று சிந்தித்தபடியே வீட்டுக்கு நடந்தேன். ஏதோ நல்லா இருந்தா சரி! வேறென்ன சொல்ல!
******
பழைய நினைப்புடா பேராண்டி : கடந்து வந்த பாதை
2021-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கடந்து வந்த பாதை - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
தமிழ்நாட்டின் அன்றைய தென்னாற்காடு மாவட்டம் விருத்தாசலம் தாலுக்காவின் முகாசாபரூர் கிராமத்தில் அரிச்சுவடியைத் துவக்கி (அட நம்ம வெங்கட்டுக்கும் விருத்தாசலம் பக்கம் நெய்வேலி தானுங்கோ!), 4-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை கடலூர் புனித சூசையப்பர் பள்ளி (மஞ்சக்குப்பம்); 9 மற்றும் 10-ஆம் வகுப்புகள் ராணிப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி (1975). 11-ஆம் வகுப்பு தருமபுரி அதியமான் அரசு உயர்நிலைப்பள்ளி வந்தடைந்தேன் (1976). தந்தை தமிழக அரசு செயலகப் பணியில் இருந்ததால் அவரது அலுவலக மாற்றத்திற்கேற்ப, நானும் மாறிக் கொண்டே இருந்தேன். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மை என்பதை எனது இந்த மாற்றங்கள் உணர்த்துகிறது தானே!
நான் படித்த நாட்களில் 11 + 1 + 3 முறை கல்வி தான். 11-ஆம் வகுப்பு வரை பள்ளி. ஒரு வருடம் PRE UNIVERSITY COURSE எனப்படும் PUC. அதன் பின் இளநிலை கல்லூரி.
11-ஆம் வகுப்பில் கண்களில் காவிரி பெருக்கெடுக்க ஆரம்பித்தது - அது தாங்க SQUINT EYE PROBLEM! ஒரு வழியாக படிப்பை ஒப்பேற்றினேன். ”கம்மியாய் மார்க் எடுத்தேன்”னு சொன்னா போதாதோ என நீங்கள் கேட்பது நிதர்சனமான உண்மை.
ஒரு நாள் இரவு, கிராமத்திலிருந்த என்னை, அப்பா, “உடனடியாகக் கிளம்பு” எனக் கட்டளையிட (அந்த நாட்களில் அப்பாக்கள் கட்டளையிடுவது மட்டுமே வழக்கம். பிள்ளைகளின் எதிர்ப்பு சொல்/செயல் வடிவில் கனவிலும் எண்ண முடியாது!), இரவு 07.30 மணிக்கு, சிம்னி விளக்கின் வெளிச்சத்தில் இரவு உணவு உண்டு, இரண்டு கிலோ மீட்டர் நடையில் இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து 09.40 கடைசி இரயிலில் விருத்தாசலம் சென்று, இரவு ஒரு மணி இரயில் பிடித்து, காலை 05.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி சந்திப்பு! நகரப் பேருந்து பிடித்து காலை 7 மணி அளவில் திருவெறும்பூரில் உள்ள உறவினர் வீடு சென்றடைந்தோம்.
மேலே உள்ள சுட்டி வழி நண்பர் சுப்ரமணியன் எழுதிய அவரது அனுபவங்கள் குறித்தான தொடரின் பகுதி ஒன்று - இந்தப் பதிவினை முழுவதுமாக படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!
******
படித்ததில் பிடித்தது : நெய்வேலி - ஆமருவி தேவநாதன்
நாங்கள் பிறந்து வளர்ந்த நெய்வேலி குறித்து மற்றுமொரு நெய்வேலி வாசியான திரு ஆமருவி தேவநாதன் என்பவர் எழுதிய ஒரு கட்டுரை - எங்கள் ஊர் பற்றி மிகவும் சிறப்பாக ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார். அந்தக் கட்டுரைக்கான சுட்டி கீழே!
Neyveli: The Town That Raised Me and Then Forgot Itself
படித்துப் பாருங்களேன்! எங்கள் ஊர் குறித்து பல விஷயங்கள் உங்களுத் தெரியலாம்!
******
இந்த வாரத்தின் ரசித்த கவிதை - சாவி :
கல்யாண்ஜி அவர்களின் கவிதை ஒன்று - ரணங்களின் மலர்ச்செண்டு தொகுப்பில் இருந்து - இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக…
இரண்டு கைகளாலும் கண்களைப் பொத்தி,
பூங்காத் தனிமையில் இருப்பவரைப் பார்க்கிறேன்.
சிறு காற்றுப் புகுந்துவிடாமல் துளி வெளிச்சம் நெருங்கிவிடாமல்
இறுகக் குவிந்திருக்கும் கைகளுக்குள்
அவரது தகர்ந்த கனவுகள்,
புதிய கோபுரங்களுக்கான வரைபடங்கள்,
உதிர்ந்துவிட்ட ஒரு மலர்,
விதைக்க இருக்கும் ஒரு விதை,
மறந்துவிட்டுவிட்டுப் போன ஒரு சிரிப்பு,
உடைபட்ட விலங்கு ஒன்றின் கண்ணி,
ஒரு லாக்கப் கம்பித் துரு,
ஒரு தோட்டா,
ஒரே ஒரு நரை முடி,
ஒரு மரண அஞ்சலிக்கான வரிகள்,
வாத்தியக் குழு ஒன்றிற்கான இசைக்குறிப்புகள், பொரித்து வெளியேறின சிறுபறவை முட்டையோடு,
கருத்த சில உண்ணிப் பழங்கள்,
ஈசல் உதிர் இறகு,
இறந்த மனைவி சாப்பிடாமல் போன மாத்திரைகள்,
கைக்குட்டை நுனியின் பூத்தையல் ரோஜா,
ஒரு பிரளயத்திற்கான தடுப்புச் சுவர்,
தியானத்திற்கு முந்திய அமைதி...
எதுவும் இருக்கலாம்
நரம்புகள் புடைத்துக் குவிந்த அவர் கைகளுக்குள்.
ஒரு புல் அசையும் சிறு பொழுது
இத்தனையும் இருக்கிற/இத்தனையும் இல்லாத
கைகளை அவர் சற்று விலக்கினால்
அவருடைய கண்களை மட்டும் பார்த்துக் கொள்வேன்.
என்னுடைய இந்த தினத்தைத் திறப்பதற்கான சாவி
ஒருவேளை அங்கே தான் இருக்கலாம்.
******
இந்த வாரத்தின் சிறுகதை : நல்ல மனம்
இந்த வாரத்தின் ரசித்த சிறுகதையாக தினமலர் வாரலர் இதழிலிருந்து ஒரு சிறுகதைக்கான சுட்டி…
******
இந்த வாரத்தின் செய்தி - புத்தகக் கண்காட்சி :
எங்கள் நெய்வேலியில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டும் நடக்கப் போகிறது. தொடர்ந்து 25-ஆம் ஆண்டாக, வெள்ளி விழா புத்தகக் கண்காட்சி நடக்க இருக்கிறது. விழா குறித்த ஒரு தகவல் படம் மேலே இணைத்திருக்கிறேன். என் ஊர் நெய்வேலியாக இருந்தாலும், கடந்த 35 வருடங்களாக நெய்வேலி நகரை விட்டு வெகு தொலைவில், தில்லியில் இருந்ததால் ஒரு முறை கூட கண்காட்சிக்குச் செல்லும் வாய்ப்பு அமையவில்லை எனக்கு. இந்த முறை முடிந்தால் ஒரு சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை சென்று வரும் யோசனை இருக்கிறது. எல்லாம் நினைத்தபடி நடந்தால் இந்த வருடம் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வருவேன். அப்படியே நண்பர்களையும் சந்தித்து வர முடியுமே.
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
13 ஜூன் 2026






இன்றைய வாசகத்தின் படமும் பொருளும் மிக அருமை..படம் ரொம்பப் பொருத்தம்
பதிலளிநீக்குகீதா
ஆட்டோ வாசகத்தில் அந்த லு வைக் குறிப்பிட நினைத்தேன் ஆனா அடுத்த வரிகளில் புரிந்து விட்டது.
பதிலளிநீக்குஇப்போது யுட்யூப் தலைப்புகளில் கூட பல எழுத்துப் பிழைகளைக் காண நேரிடுகிறது. வாசகம் நல்லாதான் இருக்கு ஆனால் ல ள பிரச்சனை ரொம்பவே நெருடுகிறது
கீதா
வாழ்க்கைச் செலவு அதிகம் என வழிச்செலவினை அதிகமாக்கி விடுகிறார்கள் சில ஆட்டோ ஓட்டுனர்கள் - அதனை எங்கே முறையிடுவது என்று தோன்றியது எனக்கு!//
பதிலளிநீக்குஹாஹாஹா உண்மை. நமக்கும் வாழ்க்கை இருக்கிறதே!! ஆனால் இப்போது பொதுவாக ஆட்டோ ஓட்டுநர்கள் சொல்லும் காரணம் பெட்ரோல் விலை, எரிவாயு உருளைகளின் விலை கிடைப்பதில்லை என்பதுதான்.
உண்மையாகவே நம் பொருளாதாரம் அதாவது உலகின் பொருளாதாரம் மிகவும் அபாயகரமான நிலையில்தான் இருக்கிறது. பணக்காரர்கள் ஏழைகள் - ஏற்றத் தாழ்வு கூடிக் கொண்டேதான் போகிறது. பொருளாதார வல்லுநர்களின் பார்வையில் தெரிந்து கொண்டது.
கீதா
“சரிடா இன்னிக்கு வீட்டுக்குப் போய் பாருங்க! நாளைக்கு ட்யூஷன்ல இது பத்தி பேசலாம்!” என்று. //
பதிலளிநீக்குஇளைஞர்கள் இலக்கை நிர்ணயிக்கத் தவறிவிட்டு, அதை நோக்கிப் பயணிக்காமல் பின்னர் தங்கள் வாழ்க்கையில் அது கிடைக்கவில்லை இது கிடைக்கவில்லை என்று அரசையும் சமூகத்தையும் குறை சொல்வது நியாமே இல்லை.
சில யுட்யூப் காணொளிகலின் கீழ் வரும் கருத்துகள், இளைஞர்களின் போக்கு சினிமா மோகம், அதை வைத்துத் தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பது என்பதையும் பார்க்க முடிகிறது. எல்லோரும் சொல்கிறார்கள் இளைஞர்கள் அதாவது zen z தலைமுறையின் பார்வை மாறியிருக்கிறது என்று. மாற்றம் என்று. ஆனால் அது நல்ல இலக்கை நோக்கி மாறவில்லை என்பதும் தெரிகிறது. எப்போது அறிவுக்கும், கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையோ கேள்வி கேட்கும் சிந்தனைகள் வளர்க்கப்படவில்லை அல்லது வளர்த்துக் கொள்ளவில்லையோ அப்போது சமுதாயம் முன்னேறுவது மிகவும் கடினம்.
கீதா
கடந்துவந்த பாதை வாசித்திருக்கிறேனோ என்ற நினைவு வந்தாலும் அங்கு போனால் கருத்து இல்லை. எப்படி விட்டுப் போனதென்று யோசித்தேன் வருடம் தேதி எல்லாம் பார்த்ததும் புரிந்தது. கடமையினால் சென்னையில் இருக்க வேண்டிய சூழல்...
பதிலளிநீக்குகிட்டத்தட்ட அனுபவங்கள்தான் இது போலதான். வீட்டுச் சூழலினால் நம்ம திறமைகள் எல்லாம் அப்போது கணக்கிலெடுத்துக் கொள்ளவெ படாது. நான் +2 தலைமுறையில் முதல் தலைமுறை!
10 ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி. 11 ல் ஆங்கிலவழிக் கல்வியில் சேர்ந்ததும், ஆங்கிலத்தில் ஓரளவு நான் நன்றாக இருந்திருந்தாலும், ஆங்கில மொழியில் அறிவியல் பாடங்கள் ரொம்பவே பயமுறுத்தித் திணறிய நாட்கள்.
அவரது அனுபவங்களும் கிட்டத்தட்ட நம்முடையது போலதான் அதாவது அப்போதைய தலைமுறை ....
10ஆம்ப்பு வரை பாவாடை சட்டை. 11ல் கண்டிப்பாகத் தாவணி!
கீதா
மிக மிக அழகாக எழுதியிருக்கிறார் நெய்வேலி பற்றி.
பதிலளிநீக்குகுறிப்பாக அந்த township! ஆம் நான் சென்றிருந்த போது மிகவும் வியந்த ஒன்று. சண்டிகர் கூட இப்படித் திட்டமிட்டுக் கட்டப்பட்ட ஒன்று என்றுதான் சொல்லப்பட்டாலும் நெய்வேலி டவுன்ஷிப் அது தனி என்று தோன்றியது.
எழுத்தாளர் ஆமருவி அவர்கள் மிகவும் அனுபவித்து எழுதியிருக்கிறார். மனதில் காட்சிகள் விரிந்தன. சைக்கிள், அமைதி, நூலகம், பூங்காக்கள் மரங்கள், செவ்வாய், அன்று திருவிழா போன்ற சந்தை என்று பலவும் அனுபவித்து எழுதியிருப்பதை என்னால் 15 வருடங்களுக்கு முன் சென்றிருந்த போது கூட - இரு முறை - நூலகம் எல்லாம் உள்ளே சென்று பார்க்கவில்லை என்றாலும் அந்தச் சாலைகளில் சும்மா சுற்றி வந்த போது வியந்தேன் மரங்களும் அமைதியும் என்று. அவர் சொல்லியிருப்பதை என்னால் உணர முடிந்தது.
ஜவஹர் வித்யாலயாவில் கல்லூரியில் என் துறையில் ஒரு வருட senior தோழி அங்கு ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அங்குதான் வசிக்கிறார் ஆனால் எந்த இடம் என்று தெரியவில்லை.
ஆனால் இப்போதைய மாற்றம் குறித்தும் கொஞ்சம் சொல்லியிருக்கிறார்...நீங்களும் சொல்லியிருந்தீர்களே.
கீதா
கவிதை நன்று, அந்த வீடு இன்னும் மனதில் என்னென்னவோ உணர்வுகளைச் சொல்கிறது
பதிலளிநீக்குகீதா
சிறுகதை வாசிக்கிறேன் ஜி.
பதிலளிநீக்குநம்ம ஊருக்குப் போவதென்றால் இனிமைதான் அதுவும் புத்தகக் கண்காட்சியும் கூட. Enjoy!
கீதா