அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பாடுவோர் பாடினால் - பூ வாசம் புறப்படும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. சென்ற பகுதியில் சண்டிகர் நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த குறிப்புகளைத் தந்திருந்தேன். அவை இந்தப் பகுதிகளில் பயணம் செய்ய இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன். இந்தத் தொடரில் இனி மேல் தான் பிரதான இலக்கான லாஹௌல் ஸ்பித்தி குறித்த தகவல்கள் வர இருக்கின்றன. அப்பாடி ஒரு வழியா ஆரம்பிச்சாச்சா என்று உங்களில் சிலர் நினைக்கலாம்! தகவல்களை முழுமையாகச் சொல்லும் விதமாகவே இதற்கு முந்தைய பகுதிகளில் விரிவான தகவல்களை எழுதி இருந்தேன். சரி வாருங்கள் பயணத்தினை தொடங்கலாம். ஏற்கனவே சொல்லி இருந்தது போல இந்தப் பயணத்தில் என்னுடன் பயணிக்க இருக்கும் நண்பர் கிரிஷ் அவர்களின் நண்பர் ஹிமாச்சலப் பிரதேசத்தினைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மூலம் எங்கள் பயணத்திற்கான வாகனத்தினை ஏற்பாடு செய்திருந்தோம்.
மே மாதம் 13-ஆம் தேதி காலையில் பயணிக்க இருக்கும் நாங்கள் மூவரும் - நான், நண்பர் பிரமோத் மற்றும் அவரின் நண்பர் கிரிஷ் - சீக்கிரமாகவே எழுந்து தயாரானோம். காலை ஏழு மணிக்கு அந்த ஓட்டுனர் தனது வாகனத்துடன், நாங்கள் தங்கியிருந்த JB Residency எனும் தங்குமிடத்திற்கு வந்து சேர வேண்டும் என்று சொன்னதோடு, அந்த இடத்திற்கான Location Map - உம் அவருக்கு WhatsApp வழி பகிர்ந்திருந்தோம். தற்போதைய ஓட்டுனர்கள் பெரும்பாலும் அறிவியல் முன்னேற்றங்களை பயன்படுத்தும் விதத்தில் இருப்பது நல்ல வசதி தான். தெரியாத ஊரில் வழி சொல்லி புரிய வைப்பது கொஞ்சம் கடினம் தான். அதனால் இந்த Location Map அனுப்பும் வசதி நல்ல உதவி. சரியாக காலை ஏழு மணிக்கு, ஷிம்பு என்று வீட்டில் அழைக்கப்படும் சந்தீப் ஷர்மா வந்து சேர, நாங்கள் மூவரும் எங்கள் உடமைகளோடு இரண்டாம் மாடியிலிருந்து லிஃப்ட் வழி கீழே வந்து அறைக்கான சாவியைக் கொடுத்து விட்டு புறப்பட்டோம். நாங்கள் தங்கிய அந்த அறைக்கான ஒரு நாள் வாடகை - ரூபாய் 1700/- மட்டும்.
முதலில் திட்டமிட்டபடி, எங்களது அன்றைய இலக்கு - மாலைக்குள் ஹிமாச்சலப் பிரதேசத்தின் நார்க்கண்டா வரை செல்வதாக இருந்தது. அங்கே வரை சென்று, அங்கே இரவு தங்குவதாக திட்டம் வைத்திருந்தோம். சண்டிகர் நகரிலிருந்து நார்க்கண்டா வரையான மொத்த தொலைவு சுமார் 175 கிலோ மீட்டர் மட்டுமே. பொதுவாக இந்தத் தொலைவினை சுமார் மூன்றிலிருந்து மூன்றரை மணி நேரத்தில் கடந்து விடலாம். ஆனால் நாங்கள் பயணிப்பது மலைப்பகுதி என்பதால் குறைந்த பட்சம் ஐந்திலிருந்து ஐந்தரை மணி நேரம் ஆகும். அது மட்டுமல்லாது வழியில், காலை உணவு மற்றும் மதிய உணவு சாப்பிடுவதற்கும், வழியில் இருக்கும் ஷிம்லா, குஃப்ரி போன்ற இடங்களில் கொஞ்சம் சுற்றிப் பார்ப்பதற்கும் நேரம் எடுத்துக் கொண்டால் நார்க்கண்டா சென்று சேர்வதற்கு மாலை நேரம் ஆகிவிடும் - மாலை அதாவது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மலைப்பாதைகளில் பயணம் செய்வது சரியல்ல என்பதால் இப்படி ஒவ்வொரு நாளும் மாலை ஆறு/ஏழு மணிக்கு மேல் பயணிப்பதில்லை என்று தான் திட்டமிட்டிருந்தோம். திட்டமிட்டபடி சண்டிகரிலிருந்து புறப்பட்ட எங்கள் முதல் நிறுத்தம் - காலை உணவிற்காக!
சண்டிகரிலிருந்து வெளியேறி பிஞ்சோர் கார்டன் பகுதியைக் கடந்து டிம்பர் ட்ரெயில் பகுதிக்கு அருகே இருந்த ஒரு உணவகத்தில் காலை உணவிற்காக வண்டியை நிறுத்தினார் ஓட்டுனர் ஷிம்பு. இந்தப் பகுதிகளில் காலை நேர உணவு என்றால் பெரும்பாலும் பராட்டா வகைகள் மற்றும் ப்ரெட் டோஸ்ட் தான்! நாங்கள் சென்று சேர்ந்த உணவகமான Paradise Valley என்பதிலும் அப்படியே தான் கிடைத்தது. நண்பர் கிரிஷ் அவர்களுக்கு பராட்டா மீது அப்படி ஒரு ஈடுபாடு. அவர் தொழில்முறையில் ஒரு Chef ஆக இருந்து பல பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர் என்பதால் உணவு மீது நல்ல ஈடுபாடு இருந்தது. விதம் விதமாக சுவைப்பதை விரும்புவராக இருந்தார் என்பதை இந்தப் பயணத்தில் என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. பிறகு இந்தப் பாதையை விட்டுவிட்டு வேறு தொழிலில் - போக்குவரத்து தொடர்பான தொழிலில் ஈடுபாடு கொண்டு தனியாக தொழில் நடத்துகிறார். ஆனால் உணவு மீதான ஈடுபாடு இன்னமும் அதிகமாகவே இருக்கிறது அவருக்கு. காலை உணவினை அனைவரும் முடித்துக் கொண்டு, அதற்கான தொகையை (நால்வருக்கு 800/- ரூபாய்) தந்து அங்கிருந்து புறப்பட்டோம். உணவு சுவையாகவே இருந்தது.
நானும் நண்பர் ப்ரமோதும் ஏற்கனவே இந்தப் பாதையில் பயணித்து அவற்றில் இருக்கும் சுற்றுலாத் தலங்களையும் பார்த்து ரசித்திருக்கிறோம் என்றாலும் நண்பர் கிரிஷ் இந்தப் பகுதிக்கு வருவது இதுவே முதல் முறை. அதனால் ஷிம்லா, குஃப்ரி மற்றும் நார்க்கண்டா பகுதிகளில் சில இடங்களையேனும் அவர் பார்ப்பதற்கு வசதியாக எங்கள் திட்டம் இருந்தது. ஷிம்லாவில் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்று விரிவாகச் சொல்ல அவசியமில்லை என்று தோன்றுகிறது. ஏற்கனவே எனது பக்கத்தில் ஷிம்லா பயணம் குறித்தத் தகவல்கள் பதினைந்து பகுதிகளாக வெளியிட்டு இருப்பதோடு, அந்தப் பயணத் தொடரினை மின்புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறேன். இருந்தாலும் சுற்றுலாத் தலங்களை பார்க்காவிட்டாலும் ஷிம்லா என்றவுடன் மக்களுக்கு நினைவுக்கு வரும் இடமான மால் ரோடு பகுதிக்கு மட்டுமேனும் நண்பர் கிரிஷ் அவர்களை அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்து ஓட்டுனரிடம் சொல்ல அவர் மால் ரோடு பகுதிக்கு வண்டியில் போக முடியாது என்று எங்களுக்குத் தெரிந்த விஷயத்தினைச் சொன்னார்.
ஷிம்லா நகர் மலைப் பிரதேசம் என்பதால் மேலேயும் கீழேயும் சாலைகள் செல்லும் விதத்தில் இருக்கும். மலைப்பகுதியில் இப்படி மேலே ஏறிச் செல்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயம் - அதுவும் பழக்கம் இல்லாதவர்களுக்கு! கீழே இறங்குவது சுலபம் என்று சிலர் நினைக்கக்கூடும் - அதுவும் சுலபமல்ல என்பதை மலைப்பாதையில் பயணிக்கும்போது உணர முடியும். நாங்கள் செல்ல வேண்டிய இடமான மால் ரோடு செல்ல மேல் நோக்கிய பாதையில் ஏறிச் செல்ல வேண்டியிருக்கும். பலருக்கும் இது கடினம் என்பதால் ஷிம்லா நகர நிர்வாகம் மால் ரோடு வரை கீழேயிருந்து மேலே செல்ல லிஃப்ட் வசதிகளைச் செய்திருக்கிறது. எங்கள் ஓட்டுனர் சரியாக அந்த லிஃப்ட் அருகே வாகனத்தினை நிறுத்த நாங்கள் அங்கே இறங்கிக் கொண்டோம். ஓட்டுனர் வாகனத்துடன் பக்கத்தில் இருந்த வாகன நிறுத்தத்திற்குச் சென்று விட்டார். லிஃப்ட் பயன்பாடு இருக்கிறது என்றாலும் அதற்கு தனியாக கட்டணம் உண்டு! ஆளொன்றுக்கு மேலே செல்ல இருபது ரூபாய், கீழே வரவும் இருபது ரூபாய்!
என்னது மக்கள் பயன்பாட்டிற்கு இருக்கும் இந்த லிஃப்ட் வசதிக்கு கட்டணம் வேறா? என்று சிலர் நினைக்கலாம். கட்டணம் இல்லை என்றால் சில வருடங்களில் இல்லை இல்லை மாதங்களிலேயே இந்த வசதியை ஒரு வழி செய்திருப்பார்கள் பொது மக்கள். தில்லி நகரில் சாலைகளைக் கடக்க அமைத்திருக்கும் Foot Over Bridge பகுதியில் இரண்டு பக்கங்களிலும் படிகள் மட்டுமல்லாது Escalator வசதி, லிஃப்ட் வசதி என இரண்டும் இருந்தது. சரியான விதத்தில் பயன்படுத்தாது, அதனைப் போகும் வரும் நபர்கள் பட்டன்களை நோண்டுவது என மொத்தமாக அவற்றைச் செயலிழக்கச் செய்து விட்டார்கள். தற்போது அந்த வசதிகள் இல்லாமல், அரசாங்கத்தினைக் குறை சொல்லிக் கொண்டு, படிகளில் ஏறிச் செல்கிறார்கள். இப்படி இலவசமாக இல்லாமல் கட்டணம் செலுத்திச் செல்லும் போது சரியான விதத்தில் அதன் பயன்பாடு இருக்கிறது. கூடவே சிலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது - சீட்டு வழங்குபவர்கள், லிஃப்ட் ஆப்ரேட்டர்கள் என சிலர் இருப்பதால் சரியான விதத்தில் இத்தனை வருடங்களாக இயங்குகிறது.
மால் ரோடு - வருடத்தின் எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சுற்றுலாத் தலம். ஒரு ஓரத்தில் அழகிய சர்ச் இருக்க, பாதையின் இருமருங்கிலும் கடைகள் - விதம் விதமான பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பார்கள். கூடவே உணவகங்களும் உண்டு. பராக்கு பார்த்தபடி உணவகங்களில் வாங்கிய நொறுக்குத் தீனியைச் சுவைத்தபடி நடந்து வரலாம். குளிருக்கான உடைகள், ஹிமாச்சல மக்கள் அணியும் ஒரு வகை தொப்பி, ஷால், ஸ்வெட்டர், விதம் விதமான மரப் பொருட்கள் என அனைத்தும் அங்கே கிடைக்கும். வெளியூர் ஆள் என்று நம் முகத்தில் எழுதி ஒட்டியிருப்பதால், விலையை அதிகமாகவே சொல்வார்கள் - அதனால் நிறையவே Bargain செய்ய வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் பொறுமை உங்களுக்கு இருந்தால் சில கலைப்பொருட்களை அங்கிருந்து வாங்கி வரலாம்.
நானும் நண்பர்களும் மால் ரோடு பகுதியில் சிறிது நேரம் உலா வந்து, ஒரு கடையில் தேநீர் அருந்தி அங்கிருந்து மீண்டும் லிஃப்ட் வழியாக நாங்கள் வாகனத்திலிருந்து இறங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்தோம். அந்த இடத்தில் ஃப்ரெஷ் ஆக ஸ்ட்ராபெர்ரி பழங்கள் கிடைக்க நூறு ரூபாய் கொடுத்து ஒரு சிறு பெட்டியினை வாங்கி சுவைத்தோம். நாங்கள் வந்து சேர்ந்த விஷயத்தினை ஓட்டுனரிடம் தெரிவிக்க, அவர் வாகன நிறுத்தத்திலிருந்து வெளியே வந்து வேக வேகமாக எங்களை அழைத்தார். ஷிம்லா பகுதியில் இதுவும் ஒரு பெரிய தொல்லை - குறுகிய பாதைகள் என்பதால் அதிக நேரம் வாகனத்தினை சாலையில் நிறுத்தி வைக்க முடியாது. வண்டி வந்ததும் கிடுகிடுவென வாகனத்தில் அமர்ந்து கொண்டு வாகனத்தினை அங்கிருந்து அகற்ற வேண்டும் - இல்லை என்றால் காத்திருக்கும் காவலர்கள் நல்லதொரு தொகையை கறந்து விடுவார்கள். அதனால் ஷிம்பு எங்களை வேகமாக வரச் சொல்லி வண்டிக்குள் அடைத்துக் கொண்டார்! மலையுச்சியில் தெரியும் அனுமனின் சிலையை நண்பர் கிரிஷுக்குக் காண்பித்து அங்கிருந்து புறப்பட்டோம்.
தொடர்ந்து எங்கே பயணித்தோம்? அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன போன்றவற்றை வரும் பகுதிகளில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே. பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
10 ஜூன் 2026




ஜி அந்த ப்ளேட்டை அப்படியே இங்க தள்ளுங்க கொஞ்சம்!!!! ஹாஹாஹா
பதிலளிநீக்குகவர்கிறது!
கீதா
அறை வாடகை பரவாயில்லை ஜி. Very reasonable!
பதிலளிநீக்குகுஃபிட் வழிதானே நார்க்கண்டா....நாங்கள் சென்றிருட்ந்த போது இந்த இடம் அத்தனை அழகாக இருந்தது....இப்ப நிறைய கட்டுமானங்கள் என்று நினைக்கிறேன்.
இரண்டுவ் அருடங்கள் முன்பு துளசி போயிருந்தப்ப, குஃபிட் அருகில் நார்க்கண்டா போகும் வழியில் ஏதோ சாகச விளையாட்டுகள் சென்டர் ஒன்றிற்கு அவங்க போயிருந்ததையும் சொல்லியிருன்டார். அவங்க ஷிம்லா வில் ஒரு tourist வண்டி ஏற்பாடு செய்து கொண்டு சுற்றிப் பார்த்துவிட்டு வந்தாங்க.
அப்ப தெரிந்தது. கடவுளே தேவ் பூமி இப்படி ஆவதை, தேவன் கவனிக்கிறாரா என்று!
கீதா
அவர் தொழில்முறையில் ஒரு Chef ஆக இருந்து பல பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர் என்பதால் உணவு மீது நல்ல ஈடுபாடு இருந்தது.//
பதிலளிநீக்குஆஹா!!!! அப்ப கண்டிப்பா விதம் விதமாகச் சுவை பார்க்கத்ட் தோன்றும்.
நாங்கள் போன வருடங்களில் மால் ரோடில் இப்படியான லிஃப்ட் வசதி இருந்திருக்கவில்லை. ஏறி இறங்கி...அதன் அருகில்தான் தங்கியிருந்தோம் என்றாலும்....
துளசி சென்றிருந்த போதுதான் இப்படி லிஃப்ட் வந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். நல்ல வசதி!
கட்டணம் மிக அவசியம் ஜி நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் அதேதான்.
மால் ரோடு உங்கள் இப்பதிவு எனக்கு நிறைய நினைவுகளைக் கொண்டு வந்தது. துளசியின் பதிவுக்குப் பிறகு இப்ப பார்க்கும் போது....மீண்டும் ஹிமாச்சல் செல்ல மாட்டோமா என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது.
அங்கிருந்து ஜாக்கூ மந்திர் அனுமன் தெரிவார். ஜாக்கூ மந்திர் கூட நிறைய வசதிகள் வந்திருக்கின்றன என்பதையும் அறிந்தேன் இரண்டு வருடம் முன்...
கீதா