தொகுப்புகள்

சனி, 9 நவம்பர், 2013

வெங்கலக் கடைக்குள் யானை…..


சாலைக் காட்சிகள் – பகுதி 4

அலட்சியம் – சாலைக் காட்சிகள் பகுதி – 3 - இங்கே

கிச்சு கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே

இளம் யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே

 நன்றி: கூகிள்.....

வியாழன் மதியம் இரண்டரை மணி இருக்கும். வீட்டிலிருந்து கிளம்பி திருவரங்கம் ராஜகோபுரத்தினைத் தாண்டி ஒன்றாம் எண் பேருந்தினைப் பிடிக்க நடந்து வந்து கொண்டிருந்தேன். கோபுரம் தாண்டியவுடனேயே திருவரங்கத்திலிருந்து திருவானைக்கா வழியாக மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் ஒரு பேருந்து காலியாக வரவே அதிலேயே ஏறிக்கொண்டேன்.

முன்வாசல் அருகே இருக்கும் இரண்டு இருக்கைகளில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டுவிட பேருந்து மெதுவாக ஊர்ந்து வந்து வளைந்து நின்றது.  சில நிமிடங்கள் பயணிகளுக்காக காத்திருந்த பின் ஏமாற்றத்துடனே அங்கிருந்து பேருந்தின் ஆறு சக்கரங்களையும் காலாலே [அட Accelerator-ஐ மிதித்து தான்!] உருட்டினார் ஓட்டுனர்.  பத்தடி கூட தாண்டியிருக்காது பேருந்து – அதற்குள் சாலையில் ஏதோ ஊர்வலம் போவது போல மக்கள் கூட்டம். 

யானைக்கட்டி சத்திரம் என ஒன்று அந்த சாலையில் உண்டு. பல சமயங்களில் அங்கே புத்தகக் கடைகளும், எதை எடுத்தாலும் 10 ரூபாய் கடைகளும் [உள்ளே போன பிறகு தான் தெரியும் வாசலில் உள்ள சில பொருட்கள் மட்டுமே 10 ரூபாய், உள்ளே அதை விட அதிக விலையில் பொருட்கள் வைத்திருப்பது!] போடுவார்கள். அந்த யானைக்கட்டி சத்திரத்தின் எதிரே ஒரு கல்யாண சத்திரம்!

அங்கிருந்து தான் ஊர்வலம் கிளம்பியது போலும்! அன்றைக்கு கல்யாண முகூர்த்தம் போல! காலையில் கல்யாணம் முடிந்து மணமகன் வீட்டாரின் உறவினர்களும், மணமக்களும் என நிறைய பேரை பார்த்ததும் “கிடைச்சுதடா, பல்கா சவாரி!” என எங்கள் பேருந்தின் ஓட்டுனர் வண்டியை நிறுத்தி விட, நடத்துனரும் “எங்கே போகணும்?” என வலை வீச ஆரம்பித்தார்!

எல்லோரும் அவர்கள் வேலையிலே [அதாங்க பேசறது] குறியாக இருக்க, ஒன்றிரண்டு பேர் மட்டும் “பஸ் எங்க போகுது?” எனக் கேட்க, “நிச்சயம் சவாரி கிடைக்குமென்ற” நம்பிக்கையை இழக்கவில்லை நடத்துனர்! மீண்டும் வலைவீசினார்.  ஒருவழியாக ஒன்றிரண்டு பேர் மூட்டை முடிச்சுகளை எடுத்து வண்டியில் வைக்க ஆரம்பிக்க நடத்துனரின் முகத்தில் சந்தோஷ ரேகைகள். 

”மொத்தம் 20 பைம்மா, கவனமா பார்த்துக்கணும், இல்லாட்டி எவனாவது லவுட்டிடுவான்!” பொறுப்பாக சொன்னார் ஒரு பெரியவர். அதற்குள் சீட்டு பிடிக்க அடிதடி.  அங்கேயும் இங்கேயும் தாவி ஒரு மாதிரி அமர்ந்தார்கள். மணப்பெண் முன் ஜாக்கிரதையாக காலியாக இருந்த இரட்டை இருக்கைகள் ஒன்றில் அமர்ந்து கொண்டு பக்கத்து இருக்கையை தன்னைக் கைபிடித்த மணவாளனுக்காக கையை வைத்துக் காத்திருக்க, ஒரு சிறு பெண், “அண்ணி பக்கத்துல தான் உட்காருவேன்” என அடம் பிடித்து மணமகளின் கை மேல் உட்கார, அண்ணி முகத்தில் சற்றே கவலை!

”அதற்குள் மற்றொரு பெண்மணி, அங்கே அண்ணன் தாம்மா உட்காருவாரு! நீ இங்கிட்டு வா!” என ஒரு கை பிடித்து இழுக்க, சிறுமி மற்றொரு கையால் கம்பிகளை பிடித்து மறுக்க, நடந்தேறியது ஒரு மல்யுத்தம்! சற்றே சாந்தமாக சிறுமியை சமாதானப் படுத்த ஒரு சமாதனப்புறா பறந்து வந்தது – பாட்டி ரூபத்தில்! மாப்பிள்ளையும் வந்து புது மணப்பெண்ணின் அருகே அமர, “போலாம் ரை!” குரல் கொடுத்தார் நடத்துனர்!

கல்யாண பார்ட்டி கொஞ்சமாக செட்டில் ஆகத் துவங்கியபோது ரயில்வே மேம்பாலம் ஏறத் துவங்கியது பேருந்து. கல்யாண கோஷ்டியில் ஒருவரையே “எத்தனை டிக்கெட்னு எண்ணி சொல்லிடுங்கம்மா!” என்ற நடத்துனர் கேட்டுக்கொள்ள வண்டிக்குள்ளே கணக்கெடுப்பு நடந்தது – எண்ண எண்ண, தப்புத் தப்பாக வந்தது போலும். நான்காவது முறையாக கணக்கெடுப்பு நடந்து கொண்டிருந்தது!

நானும் இன்னும் பயணச்சீட்டு வாங்கவில்லை! சரி ”நம்மையும் கல்யாணக் கோஷ்டியோடு எண்ணிட மாட்டாங்களா” அப்படின்னு ஒரு சின்ன நப்பாசை! தலையை கொக்கு மாதிரி நீட்டி நீட்டி பார்த்தேன்! அதுல கொஞ்சம் தப்பு பண்ணிட்டேன். ஒரு வேளை தலையைக் குனிஞ்சு உட்கார்ந்துருந்தா, என்னையும் அவங்க கோஷ்டில சேர்த்துருப்பாங்க!” பேராசை பெரு நஷ்டம்! என்னைப் பற்றிய எண்ணமே அவர்களுக்கு வரலை! சரி போனா போகுது நாலு ரூபா தானேன்னு நானே டிக்கெட் எடுக்க வேண்டியதா போச்சு!

மொத்த பேருந்துல கல்யாண கோஷ்டியில் ஏறியது இருபத்தி இரண்டு பேர் – அதுல நாலு டிக்கட் திருவானைக்கா மற்ற 18 மத்தியப் பேருந்து நிலையம் வரை. அவர்களைத் தவிர பேருந்தில் 30 பேர் இருந்தாலும் கல்யாணக் கோஷ்டியின் பேச்சு மட்டுமே பேருந்தில் கேட்டது! பின்னாடியிலிருந்து ஒரு குரல் “யக்காவ்! ஒழுங்கா உட்கார்ந்துட்டியா?” எனக் கேட்க, முன் பக்கத்திலிருந்து உட்கார்ந்துட்டேம்மா!” என ஒரு குரல் பதில் கொடுத்தது!

மணமகனின் அப்பா போல இருந்த ஒரு பெரியவர், தனது மகனை அப்போதே கழட்டி விட்டுட்டார் போல! தனது மருமகளிடம் ரொம்பவே கரிசனம் – “ஏம்மா, முன்னாடி உட்கார்ந்துக்கறயா? பின்னாடி பக்கம் உட்கார்ந்தா தூக்கி தூக்கி போடும்!”  இத்தனைக்கும் ஜோடி அமர்ந்திருந்தது பேருந்தின் நடுவில்!

அவர்கள் பேச்சினை கவனித்துக் கொண்டிருந்த எனக்கு பேருந்து காவேரி பாலத்தினைத் தாண்டி அண்ணா சிலையை நெருங்கியிருந்தது தெரியவில்லை. நடத்துனரின் “அண்ணா சிலை எல்லாம் இறங்கு” [அது என்னமோ புரியல! தேமேன்னு அண்ணா புத்தகத்தினை படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, அவரை ஏன் இறங்க சொல்றாங்க!] குரல் என்னை நிதானத்திற்கு கொண்டு வந்தது! அடுத்த நிறுத்தமான சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டுமே!

மொத்தத்தில் வெங்கலக் கடையினுள் ஒரு யானைக் கும்பல் புகுந்த மாதிரி இருந்தது பேருந்தினுள்!  ”இன்னுமொரு டிக்கெட் போட்டு ஜங்ஷன் வரை போய்ட்டு வரலாமா?”-ன்னு ஒரு ஆசையும் வந்தது! :) ஆனால் வேறு ஒரு இடத்திற்குச் செல்ல நினைத்து சென்றதால் சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கி விட்டேன்! சென்ற இடம் என்ன? அங்கே பார்த்தது என்ன? விரைவில் வேறொரு பகிர்வில் அதைப் பற்றிச் சொல்கிறேன்!

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

48 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  2. திரு. ரிஷபன் சார், சமீபத்தில் கல்கியில் எழுதியதை தாங்கள் படித்ததன் தாக்கமோ இந்த ஆக்கம் ;))))) எனினும் நல்லவே இருக்குது, வெங்கட்ஜி. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  3. சுவாரஸ்யமான அனுபவம்
    தலைப்பும் பதிவும் வெகு பொருத்தம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  5. அண்ணா புத்தகத்தினை படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க, //

    அண்ணா அதிர்ஷ்ட்டம் செய்திருக்கிறார்..கையில் புத்தகம் களவாடப்படாமல் இருக்க..!

    சில் ஊர்களில் அண்ணாவின் புத்தகத்தை வலுக்கட்டாயமாக அபேஸ் செய்த்ருப்பார்கள்..
    இருந்தாலும் அண்ணா கவனமாக படித்துக்கொண்டிருப்பாரே..!
    யாராவது கண்காணித்துக்கொண்டிருப்பார்களோ...!!???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  6. # நடத்துனரின் “அண்ணா சிலை எல்லாம் இறங்கு”#
    மெய் மறந்து சிலையாய் நின்ற உங்களைத்தான் சொல்லி இருப்பாரோ ?
    த.ம4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  7. இதைக் கூட பதிவாக்கிட்டீன்களா... வெங்கட்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. இனிமையான அனுபவம்.

    ஒரு யானையே பஸ்ஸுக்குள் வந்து வேங்கட நாகராஜ் அருகில் அமர்ந்தார் போல நினைத்துக்கொண்டேன், பதிவைப் படிக்கத் துவங்கும்போது.

    தஞ்சையிலே 1962 லே நானும் ஒரு நாள் என் அலுவலகத்திற்கு யானை மேல் உட்கார்ந்து கொண்டு போனேன். என்பது நினைவுக்கு வந்தது.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.....

      நீக்கு
  9. கண்ணில் காணும் காட்சிகள் பதிவாகவும் புகைப் படங்களாகவும் கலக்குறீங்க சார். நமக்கெல்லாம் பதிவு எழுது வத்ற்குள் இருக்கும் நாலு முடியும் போய்விடும் போலிருக்கிறது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இருக்கும் நாலு முடியும் போய்விடும் போலிருக்கிறது//

      அடாடா... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  10. அப்படியே கூட்டிகிட்டு போயிட்டீங்க உங்க கூட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  11. டவுன் பாஸ் பயணத்தையும் ச்வாரசியாகக் கூற முடியும் என்பதை உணர்த்தி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  12. ஹா ஹா ஹா நானும் இது போன்ற சுவாரசியமான வெங்கலக் கடைக்குள் புகுந்திருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  13. இ(த்)து!!!!! கலகல பதிவு!

    பாராட்டுகள்:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்..

      நீக்கு
  14. பஸ் பயணங்களில் இதே மாதிரி சுவாரஸ்யங்கள் சிக்குவதுண்டு! நல்ல கூர்மையான பார்வையும் ஞாபக சக்தியும் அதை விவரிக்கும் அழகும் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  15. கைபிடித்த மணவாளனுக்காக கையை வைத்துக் காத்திருக்க, ஒரு சிறு பெண், “அண்ணி பக்கத்துல தான் உட்காருவேன்” என அடம் பிடித்து மணமகளின் கை மேல் உட்கார, அண்ணி முகத்தில் சற்றே கவலை!//

    அருமையான நேரடி காட்சி.
    படம் கோபுலு வரைந்தால் நன்றாக இருக்கும்.

    சமாதனப்புறா பறந்து வந்தது – பாட்டி ரூபத்தில்! மாப்பிள்ளையும் வந்து புது மணப்பெண்ணின் அருகே அமர, “போலாம் ரை!” குரல் கொடுத்தார் நடத்துனர்!//
    மண்ப்பெண்ணுக்கு மகிழ்ச்சி வந்து இருக்குமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு

  16. பஸ் பயணங்களில்தான் பலவித அனுபவங்கள் நமக்கு கிடைக்கின்றன. ரயிலை விட பஸ்பயணம்தான் எனக்கு பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  17. எப்பொழுதுமே பேருந்துப் பயணம் மிகவும் சிறப்பானதும் சந்தோஷமானதுமாக அமையும் அண்ணா...

    வெங்கலக்கடைக்குள் யானை...தலைப்பு அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா..

      நீக்கு
  19. உண்மைதான் ஒரு சந்தோஷ தினத்தில் உறவினர்கள் இப்படி ஒன்று கூடினால் "வெண்கல கடைக்குள்ளே யானை புகுந்த மாதிரி"தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

      நீக்கு
  20. நாலு பேர் கூடுற இடம்ன்னாலே நமக்குக் கொண்டாட்டம்தான். கவனிக்க எவ்ளோ சுவாரஸ்யமான விஷயங்கள் அகப்படுது :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.....

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

      நீக்கு
  23. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  24. //நாலு ரூபா தானேன்னு நானே டிக்கெட் எடுக்க வேண்டியதா போச்சு!//

    -- அடப்பாவமே... :) :) :)

    நல்ல பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....