இந்த வார செய்தி:
வினோத் குமார் சிங் – பீஹார் மாநிலத்தில் உள்ள சிவான்
மாவட்டத்தில் பாராசிக்வாரா எனும் கிராமத்தினைச் சேர்ந்த 33 வயது இளைஞர். பீஹார்
மாநில அரசில் வேலை பார்க்கும் இவர் ஒவ்வொரு வார இறுதியிலும், நீச்சல் பயிற்சியில்
ஈடுபடுவதற்காக தனது ஊரிலிருந்து கொல்கத்தா செல்வார். தனது ஊரில் நீச்சல் பயிற்சிக்கு
போதிய வசதி இல்லை என்பதால் வாராவாரம் இப்படி பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.
தேசிய அளவில் பல நீச்சல் போட்டிகளில் வென்றுள்ள இவர்,
உலகளவிலும் சில போட்டிகளில் பங்குபெற்ற சிறப்பான தகுதிகளை அடைந்துள்ளார். இவரது நீச்சல் திறமையின் காரணமாகவே இவருக்கு
பீஹார் மாநில அரசில் வேலை கிடைத்தது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். இப்போது இவர் நீச்சலில் இன்னும் ஒரு மகத்தான
சாதனை படைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார்.
என்ன சாதனை? புகழ் பெற்ற English Channel ஐ நீந்திக் கடக்கும் சாதனை, அதுவும் எப்படி, தனது கண்களை கட்டிக் கொண்டு,
கால்களை இரண்டையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு நீந்திக் கடக்கும் சாதனை செய்ய
முயற்சி செய்ய இருக்கிறார். நீச்சலில் ஒரு
வகையான Butterfly Stroke இவருக்கு மிகவும் சுலபமாகவும், இயற்கையாகவும் வருகிறது
என்கிறார் இவரது பயிற்சியாளர்.
கொல்கத்தாவில் பள்ளி ஆசிரியராக இருக்கும் இவரது தந்தை இவருக்கு
நல்ல படிப்பினைக் கொடுத்திருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரை கொல்கத்தாவிலே படித்து
நல்ல மதிப்பெண்கள் பெற்ற இவர் மேல்படிப்புக்காக பீஹார் வந்தாராம். ஆனாலும், படிப்பினை விட நீச்சலில் இருந்த
ஆர்வம் காரணமாக தொடர்ந்து அதில் ஈடுபட்ட அவருக்கு அந்த நீச்சல் காரணமாகவே வேலையும்
கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே இந்த English Channel-ஐ குற்றாலீஸ்வரன் போன்றவர்கள் கடந்திருக்கிறார்கள். இவரை மட்டும் இங்கே
சிறப்பாகக் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு – பிறவியிலேயே இவருக்கு இரண்டு
கைகளும் கிடையாது. தனது குறையை பெரியதாக எடுத்துக் கொள்ளாது, வாழ்க்கையில்
சிறப்பான செயலை செய்ய நினைக்கும் வினோத் குமார் சிங் அவர்களை வாழ்த்துவோம். அவரது
முயற்சி வெற்றி அடைய உங்கள் சார்பில் எனது வாழ்த்துகளும்!
இந்த வார முகப்புத்தக இற்றை:
ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும்போது அது எந்த நேரத்திலும் முறிந்து விடும்
என்ற பயத்துடன் அமர்வதில்லை. ஏன் என்றால் பறவை நம்புவது அந்த கிளையை அல்ல, தனது
சிறகுகளை.
இந்த வார குறுஞ்செய்தி:
நண்பர்கள் இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாத பூந்தோட்டம்
போன்றது. ஆனால் என்னிடம் பல சிறப்பான மலர்கள் கொண்ட அழகான பூந்தோட்டம் இருக்கிறது.
அப்படி ஒரு சிறப்பான பூ ஒன்று இப்போது இந்த குறுஞ்செய்தியை வாசித்துக்
கொண்டிருக்கிறது!
இந்த வாரத்தின் புகைப்படம்:
என் இலைகள் எங்கே?
மீண்டும் நான் துளிர்ப்பது எப்போது?
ரசித்த காணொளி:
பெப்சியும் கோகோ கோலாவும் போட்டிப் போட்டுக்கொண்டு பல
விளம்பரங்களைச் செய்வதுண்டு. அப்படி ஒரு
பெப்சி விளம்பரம் இன்றைய ரசித்த காணொளியாக உங்கள் பார்வைக்கு......
புதிய வலைப்பூ:
”வாசகர் கூடம் – புத்தகம் சரணம்
கச்சாமி” என்ற
தலைப்பில் நம்ம பதிவுலக வாத்யார் கணேஷ், அவரது சீடர்களான திடம் கொண்டு போராடும்
சீனு, நஸ்ரியா புகழ் பரப்பும் கோவை ஆவி, வேலையில் சேர்ந்து விட்டாலும் இன்னமும்
பள்ளி மாணவனாகவே நினைக்கும் ஸ்.பை. சரவணன், அலைகளை கரை சேர விட மறுக்கும் அரசன்
மற்றும் கனவுகளை மெய்யாக்க நினைக்கும் ரூபக் ராம் ஆகியோருடன் சேர்ந்து புதியதாக
ஒரு தளம் ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் ” படித்த புத்தகங்களில்
ரசித்த விஷயங்கள் பற்றிப் பகிர்வதற்கும், எழுத்தாளர்கள், படைப்புகள் பற்றிய கட்டுரைகள் பகிர்வதற்கும், நூல் அறிமுகம் / விமர்சனம் செய்வதற்கும்
என்று புத்தகங்களுக்காக
தனியான தளம்” துவங்கியிருப்பதாக
சொல்கிறார்கள்.
முதல் பதிவாக ”பரபரப்பின் பெயர் துளசிதளம்!” என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்தின் துளசிதளம் கதை பற்றி எழுதி இருக்கிறார்கள். சிறப்பான இவர்களது சேவை தொடர நீங்களும் ஆதரவு தரலாமே!
படித்ததில் பிடித்தது!:
அன்புருவமாய்
அமைதிப் பூங்காவாய்
கருணைக் கடலாய்
பண்புப் பெட்டகமாய்
தியாகச் சுடராய்
அழகுச் சிலையாய்
போகப் பொருளாய்
வரையறுக்கப்பட்ட அடையாளங்களில்
தொலைந்தே போனது
எம் ஆதி அடையாளம்!
-
கிருட்டினம்மாள்.
[சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் தொகுப்பிலிருந்து!]
என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ
ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த
வெள்ளியன்று சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
வெங்கட்.
புது தில்லி.