தொகுப்புகள்

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

ஃப்ரூட் சாலட் – 81 – கம்மங்கூழ் – தெளிவு – தேசிய கீதம் - நதிக்குள்.....



இந்த வார செய்திகள்:

முகப்புத்தகத்தில் படித்த செய்திகள் தான் இந்த வார செய்தியாக.....

செய்தி-1:



மேலே உள்ள பாட்டி, ஒரு கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வருகிறார். விலை அதிகம் இல்லை 5 ரூபாய் தான்..

ஏனம்மா ஊரே பத்துரூபாய்க்கு விற்கிறது நீங்கள் ஏன் விலை ஏற்றவில்லை? அதற்கு அவர் சொன்ன பதில் நம் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று விடும்.

இவர் சரியாக ஒரு நாளைக்கு பத்து கிலோ மீட்டர் தன் சைக்கிளை தள்ளிச் சென்று வியாபாரம் செய்கிறார். மேலும் கம்மங்கூழ் கேஸ் அடுப்பில் சமைத்தால் சுவை மாறிவிடும் என்று விறகு அடுப்பில் பானை வைத்து இவரே தயாரிக்கிறார். இவ்வளவு சிரமபட்டு ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள்? எனக் கேட்டால், என் உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்கிறார். இந்தப் பாட்டியின் நேர்மை இங்கே கடை விரிக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான்.

செய்தி-2:



பச்சைக்குறி காட்டப்பட்ட இந்த பெரியவரை நாம் போற்ற வேன்டும் ஏனென்றால், மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் இவர் ஒரு சிறிய ஓட்டல் வைத்துள்ளார். அவரிடம் சாப்பாடு வெறும் 10 ரூபாய் மட்டுமே! சாதம், சாம்பார், கூட்டு, ரசம இதில் அடங்கும். மேலும் இந்த வயதில் அவருடைய வீட்டில் இருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்புவரை இதே சாப்பாட்டை ரூபாய் 6க்கு விற்பனை செய்தார். கடுமையான விலைவாசி ஏற்றத்தால் தற்பொழுது ரூபாய் 10க்கு விற்பனை செய்து வருகிறார். பலதரப்பட்ட மக்கள் அவரது இந்த உணவகத்தின் மூலம் பயனடைகிறார்கள். அந்தபெரியவரிடம் கேட்டபோது "லாபம் அதிகம் கிடைக்காது, ஆனா இங்க வரவங்க நிறைய பேரு கஷ்டப்படுறவுங்கதான், அவுங்களோட சேர்த்து என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது அவ்வளவுதான்" என்று கூறுகிறார்.

இந்த வார முகப்புத்தக இற்றை:


இந்த வார குறுஞ்செய்தி:

என்றாவது நமது கஷ்டங்களை எல்லாம் மற்றவர்களுடைய கஷ்டங்களோடு மாற்றிக்கொள்ளலாம் என்ற நிலை வந்தால், சத்தம் போடாது நமது கஷ்டங்களையே எடுத்துக் கொண்டு திரும்பி விடுவோம்!

ரசித்த படம்:


ராஜா காது கழுதை காது:

நேற்று ஒரு ஹோமியோபதி மருத்துவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். தில்லியில் படுத்தியெடுக்கும் குளிர் காரணமாக அங்கே நோயாளிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அப்போது அங்கே ஒருவர் கையில் மருந்து பாட்டிலுடன் வந்தார். கொஞ்சம் அதிகமாகவே கோபத்துடன் இருப்பது தெரிந்தது.  வந்தவுடன் கையிலிருந்த மருந்து பாட்டில்களை “தடாலெனசத்தத்துடன் வைத்து ‘எங்கே அந்த மருத்துவர். கொடுக்கற எல்லா மருந்தும் போலி. போலீஸ்ல புகார் கொடுக்கப் போகிறேன்என்று பலவிதமாய் சத்தமாகப் பேசினார்.

வரவேற்பறையில் இருந்த மருத்துவரின் உதவியாளர், “உங்களுக்கு என்னதான் பிரச்சனை சொல்லுங்க?என்று கேட்கவே அவரோ இன்னும் கோபத்துடன், “இந்த மருந்து உங்க கடையில் வாங்கினது.  இரண்டு பாட்டில் குடிச்சுட்டேன். ஆனாலும் எனக்கு குணமாகலைஎன்று சொன்னார். மருந்தினை பார்த்தபடியே, அவர் கேட்ட கேள்வி – “இந்த மருந்தினை எதுக்கு வாங்கினீங்க?”  அதற்கு அவர் சொன்ன பதில் – “இடுப்பு வலிக்கு... என் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, இடுப்பு வலிக்கு இந்த மருந்து தான் கொடுத்தீங்க, அதே மருந்து தான் நான் வாங்கிட்டு போனேன். ஆனா எனக்கு ஏன் குணமாகலை!

உதவியாளர் மட்டுமல்ல, காத்திருந்த அனைவருமே சிரிக்க, அவருக்கு “இது பெண்களுக்கான மருந்து, உங்களை யார் குடிக்கச் சொன்னது?எனக் கேட்க, கோபமாக வந்தவருக்கு ஒரு மாதிரி வெட்கமாக ஆகிவிட்டது போலும்.... கொஞ்சம் வெட்கத்துடன் “நல்ல வேளை நான் பெண்ணாக மாறிவிடவில்லைஎன்று சொல்லியபடியே வெளியேறினார்.

ரசித்த காணொளி:

தேசிய கீதம்.....




இதைப் பார்த்தாவது மாற்றம் வருமா நம் மனதில்.....

படித்ததில் பிடித்தது:

நதிக்குள்...

நதிக்குள் வானம், மேகம்,
குளிர்ச்சியான சூரியன்
என் கைக்குள் ஒரு நதி
சிதறும் கணத்தில்
நதி, வானம், மேகம், சூரியன்
எல்லாமே துளித்துளியாக
உடல்மீது விழுந்து சிதறும்.

அள்ளிய நீரைப் பருகினால்
நதி, வானம், மேகம், சூரியன்
எல்லாமே எனக்குள் செல்லும்

யாருக்குள் யார் அடக்கம்?

-   காலச்சுவடு ஃபிப்ரவரி மாத இதழிலிருந்து....
கன்னடத்தில்.. மம்தா சாகர், 
தமிழாக்கம்: எழுத்தாளர் பாவண்ணன்

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 கருத்துகள்:

  1. மதுரை அண்ணா பேருந்துநிலைய பெரியவரின் சேவைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    Z++ பிளஸ் மருந்து ஹா... ஹா...

    மற்ற ஃப்ரூட் சாலட் நல்ல சுவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  2. உண்மையாய் உழைக்கும் அந்த இரண்டு உ¬ழ்ப்பாளிகளும் நியாயமான லாபம் கிடைத்தால் போதும் என்று சொல்வது இன்றைய சமூகத்திற்கான செய்தி. முகப்புத்தக இற்றை அருமை. இஸட் ப்ளஸ் ப்ளஸ் காவலாளிகள் புன்னகைக்க வைத்தார்கள். காணொளி நெகிழச் செய்தது. அதுசரி... இதைப் பார்த்து என்ன மாற்றம் நம் மனதில் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் பிரதர்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது நடக்கின்ற பல நிகழ்வுகள் - மனிதர்கள்/அரசியல்வாதிகள் மனதில் இல்லாத தேசப்பற்று வரவேண்டும்........ என்று எதிர்பார்க்கிறேன்! :))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாலகணேஷ்.

      நீக்கு
  3. தேடிப் பிடித்து செய்திகள் தருகிறீர்கள் வெங்கட்! அனைத்து பகுதிகளும் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா....

      நீக்கு
  4. மனிதாபிமானமுள்ள உழைப்பாளிகள். முகப்புத்தக இற்றையும், Z ++ security யும் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      நீக்கு
  5. இந்த வார பழக்கலவையில் எனக்கு அதிகம் பிடித்தது ‘இந்த வார முகப்புத்தக இற்றை’யில் தரப்பட்ட‘தெளிவு’ம், காணொளியும், குறுஞ்செய்தியும் தான். பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  6. குறைந்த அளவு லாபமே போதும் என்று நினைக்கும் இரண்டு முதியவர்களுக்கும் பாராட்டுக்கள்.... Z++ செம காமெடி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  7. செக்யூரிட்டிகளின் கண்காணிப்பு சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  8. வணக்கம்
    ஐயா.
    பாட்டியைப்பற்றிய செய்தி.மற்றும் மதுரை பேருந்து பெரியவர் பற்றி செய்தித்துளிகளை படிக்கும் போது... நேர்மையின் யதார்தம் புரிகிறது... தேடலுக்கு பாராட்டுக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  9. ///என்றாவது நமது கஷ்டங்களை எல்லாம் மற்றவர்களுடைய கஷ்டங்களோடு மாற்றிக்கொள்ளலாம் என்ற நிலை வந்தால், சத்தம் போடாது நமது கஷ்டங்களையே எடுத்துக் கொண்டு திரும்பி விடுவோம்! ///

    பூரிக்கட்டைதான் மிக கஷ்டம் என நினைத்து இருந்தேன் ஆனால் நீங்கள் சொன்னதை பார்த்தால் நிறைய வீட்டில் உலக்கை அடி கிடைக்கிறது போல தோன்றுகிறது.. அதனால் என் கஷ்டத்தை நான் அடுத்தவரிடம் மாற்றாமல் நானே வைத்து கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.....

      நிறைய வீட்டில் உலக்கை அடி! :)))) சொல்ல முடியாது தவிப்பவர்கள் நிறைய உண்டு.....

      நீக்கு
  10. பதில்கள்
    1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  11. எல்லாமே அருமைதான். ஆனாலும் குறுஞ்செய்தி டாப்.

    படம் : அது D +++ செக்யுரிட்டி !

    ரா.கா.க.கா. : இப்படிக் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சில மனிதர்கள்..

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. ரசித்த காணொளி: தேசிய கீதம்.....ராயல் சல்யூட்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  13. முகப்புத்தகத்தில் படித்த அந்தப் பாட்டி, பெரியவர், பார்த்து ரசித்த செக்யூரிட்டி எல்லாம் மீண்டும் உங்கள் பதிவின் மூலமாக...

    இடுப்பு வலி மருந்து சிரிக்க வைத்தது.

    காணொளிக்கு சல்யூட்...

    கவிதை அருமை.

    சாலட் சுவையாய் இருந்தது அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  14. நீங்கள் குறிப்பிட்ட இரு வியாபாரிகளுமே ஏழ்மையிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு ஏழ்மை என்றால் மிக நன்றாக தெரிகிறது. அதிலிருந்து நாம் விடுபட்டாலே போதும் என்ற மனநிலையுடன் உள்ளவர்கள். அதிலும் முதியவர்கள். அதாவது தேவைகள் அதிகம் இல்லாதவர்கள். ஆகவே கிடைப்பதை வைத்து திருப்தியடையும் மனநிலை அவர்களுக்கு தானாகவே வந்துவிட்டது. அவர்களுடன் வால்மார்ட் போன்ற பல்நாட்டு நிறுவனங்களை ஒப்பிடுவதைவிட நம் சாலையோர மளிகைக் கடைகளை ஒப்பிட்டிருக்கலாம். என்னுடைய வீட்டுக்கருகே உள்ள மளிகைக் கடையில் இரண்டு கி.மீ தொலைவிலுள்ள மார்க்கெட்டில் கிடைக்கும் காய்கறிகளை நான்கு மடங்கு விலையில் விற்கிறார்கள். இவர்களுடைய பேராசையை என்ன சொல்ல? இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் கொள்முதல் செய்வதும் அதே மார்க்கெட்டில்தான். இவர்களுக்கும் வியாபாரம் நடக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

      நீக்கு
  15. சூப்பரு! சூப்பரு! அதிலும் அந்த Z++ சூப்பரோ சூப்பர்.

    படிக்காதவர்களும் ஏழைகளும் மனசாட்சிப்படி செயல்படுகிறார்கள். ரொம்பப் படித்தவர்களும் பெருத்த பணக்காரர்களும் சூதும் வாதும் பண்ணி......... என்னத்த சொல்லி என்னத்த செய்ய.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

      நீக்கு
  16. சுதா த்வாரகாநாதன் புது தில்லி21 பிப்ரவரி, 2014 அன்று 10:44 AM

    அனைத்து பகுதிகளும் சூப்பர். கவிதை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா தவாரகாநாதன் ஜி!

      நீக்கு
  17. அந்தப் பெரியவரையும் பாட்டியையும் பற்றி படிக்கையில் மனம் சிலிர்க்கிறது. வாழ்க அவர்கள்! வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.....

      நீக்கு
  18. இரசித்தேன்! இடுப்பு வலி மருந்து! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா...

      நீக்கு
  19. ஏடிஎம் ஜோக்கும், ராஜா காது பகுதியும் சிரிக்க வைத்தன! கவிதை சிந்திக்க வைத்தது! கூழ்விற்கும் பெண்மணியையும் சாப்பாடு போடும் பெரியவரையும் போற்ற வேண்டும்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்....

      நீக்கு
  20. அந்த இரண்டு முதியவர்களிடமும் இருக்கிற அந்த "போதும் என்கிற மனசு" எல்லோரிடமும் இருந்துவிட்டால், உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    அந்த ராஜா காது கழுதை காது, ரசித்து படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா....

      நீக்கு
  22. ஏழைகளுக்கு உள்ள மனிதாபிமானம் போற்றத்தக்கது ..பத்து ரூபாய்க்கு சோறு போடும் மதுரையில்தான் ஒரு காபி விலை 2௦௦ ரூபாய்க்கு கொள்ளை அடிக்கும் கடைகளும் உள்ளன !
    த ம 1 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  23. நல்ல பகிர்வுகளின் தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

      நீக்கு
  24. நல்ல வேளை நான் பெண்ணாக மாறிவிடவில்லை” என்று சொல்லியபடியே வெளியேறினார்.//

    ஆளு கொஞ்சம் காமெடி சென்ஸ் உள்ள ஆளு போல ஹா ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ....

      நீக்கு
  25. அருமையான தொகுப்பு. கவிதை அருமை. கன்னடத்தில்.. மம்தா சாகர், தமிழாக்கம்: எழுத்தாளர் பாவண்ணன் என்பதையும் பதிவில் சேர்த்திட்டால் நன்றாக இருக்குமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி......

      எழுதும்போது பெயர் சேர்க்க விடுபட்டு இருந்தது. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  26. உடனடியாகப் பதிவில் சேர்த்து விட்டீர்கள். நல்லது:)!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறைச் சுட்டிக்காட்டிய பின் சரி செய்வது நல்லது தானே! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  27. அனைத்து பகுதிகளும் சூப்பர். கவிதை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....