ஏரிகள் நகரம் – பகுதி 6
ஏரிகள் நகரம் தொடரின் பகுதி ஐந்தினை
முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.
நாங்கள் தற்கொலை முனைக்கு வந்து சில நிமிடங்கள் ஆகிவிடவே, எங்கள் ஓட்டுனர் மத்லூப் எங்களைத் தேடிக் கொண்டு அங்கே வந்துவிட்டார். ஒரு வேளை பணம் கொடுக்காது நாங்களும் காணாமல் போய்விடுவோம் என்று எண்ணியிருப்பாரோ? ”பயப்படாதே மத்லூப், நாங்கள் இங்கே விழப்போவதில்லை! கொஞ்சம் இயற்கையையும், மக்களின் செயற்கையான செயல்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம்” எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தோம்.
அடுத்ததாய் நாம் பார்க்கப் போகும் இடத்திற்கும் குதிரைக்கும் சம்பந்தம் உண்டு. அது என்ன சம்பந்தம்? அடுத்த பகுதியில் பார்க்கலாமா?
தற்கொலை முனையிலிருந்து புறப்பட்ட எங்களது பயணம்
அடுத்ததாய் நின்றது ஒரு மலை முகட்டில். இங்கே என்ன இருக்கிறது என்று ஓட்டுனர்
மத்லூபிடம் கேட்க, மேலேயிருந்து ஒரு அற்புதமான இடத்தினை நீங்கள் பார்க்கப்
போகிறீர்கள் என்று சொன்னார். அது என்ன இடம் என்று பார்க்கலாமா?
’என் பெயர் மோகனாங்கி... அட இல்லைப்பா வேற எதுவோ நினைப்புல சொல்லிட்டேன்! - நான் தான் [KH]குர்பா தால்’
சில அடிகள் நடந்தால் சில மரங்களும், மரங்களின் ஊடே
பார்த்தால் ஒரு சிறிய ஊரும் தெரிகிறது. அந்த ஊரின் பெயர் குர்பாதால் [khurpa tal]. இந்த
தொடரின் முதல் பகுதியில் சொன்னது போல தால் என்ற ஹிந்தி சொல்லிற்கு ஏரி என்ற பெயர்.
நைனிதால் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிறையவே சின்னச் சின்ன ஏரிகள். அப்படி ஒரு
ஏரி தான் குர்பா தால். மேலிருந்து பார்க்கும்போது குதிரைக் குளம்பு போன்ற
வடிவத்தில் இருப்பதால் இந்த ஏரிக்கும் அது இருக்கும் சிறு கிராமத்திற்கும்
குர்பாதால் என்று பெயர் எனச் சிலர் சொல்கிறார்கள்.
’குதிரைக் குளம்பு என்பதை விட TROWEL போல இருக்கிறது என்பது தான் பொருத்தமா இருக்கும்!’
ஹிந்தி மொழியில் குர்பா என்றால் சிறிய மண்வெட்டி!
இந்த குர்பா தால் நைனிதால் நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில்
இருக்கிறது. முன்பு இங்கே நிறைய இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் நடந்ததாகவும், அவையெல்லாம்
இப்போது குறைந்து காய்கறித் தோட்டங்கள் அதிக அளவில் வந்து விட்டதாகவும் ஓட்டுனர்
சொல்லிக் கொண்டிருந்தார். மிக அழகிய கிராமம் என்று சொன்னாலும் நாங்கள் மேலேயிருந்து
அதன் அழகினைப் பார்த்ததோடு சரி. தனிமை விரும்பிகள் மற்றும் இயற்கை விரும்பிகள்
அங்கே சென்று கிராமிய சூழலில் இருக்கலாம்!
”அந்தா தெரியுதே ரோடு.... அது மேலே போனா குர்பா தால் வந்துடும்!”
மேலே இருந்து பார்த்தபோது அவ்வளவு அழகான சூழலாக
இருந்தது. அங்கே ஒரு மரம். ஆரம்பிக்கும்போதே நான்கு கிளைகளோடு இருப்பது போல
தோன்றியது. அந்த கிளைகளைப் பிடித்துக்கொண்டு சில புகைப்படங்கள் எடுத்துக்
கொண்டோம். சில மணித்துளிகள் அங்கிருந்தோம். அவ்விடத்தினை விட்டு நகர மனதில்லை. இருந்தாலும்
இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே என்பதால் வெளியே வந்தோம்.
”என்ன குற்றம் செய்தோம் கொற்றவனே?
எங்களை இப்படி தூக்கிலிட்டது எதற்காக?”
வாசலில் சில சிறிய கடைகள் – ஒரு டேபிள் சில
குப்பிகள், பாத்திரங்கள் – அவ்வளவு தான் கடை! சுடச்சுட MAGGIE, மோமோஸ் மற்றும்
தேநீர் தயாரித்துக் கொடுக்கும் கடைகள் இருந்தன. குளிர் மிகவும் அதிகமாக இருந்ததால்,
கொஞ்சம் சூடாக தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என நண்பர்கள் அனைவரும் ஒரு
சேரக் கருதவே ஐந்து பேருக்கும் [அட ஐந்தாவது எங்கள் ஓட்டுனர் மத்லூப் தான்] தேநீர்
தயாரிக்கச் சொன்னோம். இஞ்சி, ஏலக்காய் போட்டு அவர் தயாரித்த தேநீர் மிகவும்
சுவையாகவே இருந்தது.
”யாரப்பா அது? எங்களுக்கு நடுவே எங்களைப் போலவே நிற்பது?”
ஐந்து தேநீருக்கு விலை 75 ரூபாய். என்னது விலை
அதிகம் என்று தோன்றுகிறதா? அங்கே இருந்த குளிருக்கு இதமாக இருந்தது அந்த சூடான
தேநீர். எங்களுடன் வந்த நண்பர் ஒருவர் ”எனக்கு
குளிராது. அதனால் தொப்பி, கையுறை எல்லாம் போட்டுக் கொள்ள மாட்டேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அங்கே நின்றபோது
கொஞ்சம் குளிர் அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார். தேநீர் நிச்சயம் தேவை என்று முதலில் உணர்ந்ததும்,
சொன்னதும் அவர் தான்!
”கோப்பையில் இருப்பது தேநீர் தானே? என்று சந்தேகத்துடன் கேட்பவர் யார்?”
ஆகவே ”ஐந்து தேநீருக்கான
விலை அதிகமில்லை ஜென்டில்மேன்” என்று சொல்லி,
பணம் கொடுத்துவிட்டு தேநீர் தயாரித்துக் கொடுத்த அந்த நல்லுள்ளத்திற்கு
நன்றியையும் சொல்லி புறப்பட்டோம்! தேநீர்
தயாரித்தவருக்கு தன் சொத்தையே எழுதித் தரத் தயார் என்று சொன்னார் மேலே சொன்ன
ஆசாமி!
”இந்த இடத்தினைப் பார்த்தபோது ‘உள்ளம் கொள்ளை போகுதே’ எனப் பாடத் தோன்றியது. பக்கத்தில் குதிரை/கழுதை இருந்ததால் பாடவில்லை!”
மேலே இருந்து பார்க்கும்போதே மிக அழகாக இருக்கிறதே
இந்த இடம், அருகில் சென்று பார்த்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என
மனதுக்குள் ஒரு ஆசை இருந்தபடியே இருந்தது எங்களுக்கு. ஆனாலும் இன்னும் சில ஏரிகளையும், நைனிதால்
நகரில் இருக்கும் சில இடங்களையும் பார்க்க வேண்டும் என்பதால் அங்கிருந்து
நகர்ந்தோம்.
”மலையோரம் வீசும் காத்து.....
மனதோடு பாடும் பாட்டு.....
கேட்குதா கேட்குதா?”
இந்தப் பதிவில் மேலே ஒரு புகைப்படம் வெளியிட்டு
இருக்கிறேன். வரிசையாக குளிர்பான குப்பிகளை கட்டித் தொங்க விட்டிருப்பதைப்
பார்த்தீர்களா? இது எதற்காக என்று யாருக்காவது தெரிந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
அது எதற்கு என்பதை அடுத்த பதிவில் நான் சொல்வதற்குள்! :)
தொடர்ந்து பயணிப்போம்......
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.