தொகுப்புகள்

செவ்வாய், 15 மார்ச், 2016

கோவிந்தா ஜி - மணிப்பூரில்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 5

ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில்

சென்ற பகுதியில் கங்க்லா கோட்டை பற்றி பார்த்தோம். அப்பதிவில் கங்க்லா பகுதியில் சில வழிபாட்டுத் தலங்களும் உண்டு என்பதைச் சொல்லி இருந்தேன். அந்த வழிபாட்டுத் தலம் பற்றி தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.  தொடரினை ஆரம்பிக்கும் போதும் மணிப்பூர் நகர மக்கள் வைஷ்ணத்தை அதிகம் தொடர்பவர்கள் என்பதும் சொல்லி இருந்தேன்.  இந்த ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தாஜி கோவில் வைஷ்ணவர்களின் மிக முக்கிய வழிபாட்டுத் தலம்.  மிகப் பழமையான கோவிலும் கூட. 


ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில் எதிரே இருக்கும் மண்டபம்

கங்க்லா கோட்டையிலிருந்து ஆட்சி புரிந்து வந்த மஹாராஜாக்கள் அனைவரும் இங்கே வந்து வழிபாடு நடத்தி இருக்கிறார்கள்.  போர் என்றாலே அழிக்கப்படும் பல விஷயங்களில் வழிபாட்டுத் தலங்களும் உண்டு. பலமுறை இடிக்கப்பட்டும், சூறையாடப் பட்டும் தொடர்ந்து இக்கோவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டிருக்கிறது. கோவிலின் இரண்டு கோபுரங்கள் [நம் ஊர் கோபுரம் மாதிரி இருக்காது!] முற்றிலும் தங்கத்தகடுகளால் வேயப்பட்டு இருந்ததைக் கூட போர் சமயத்தில் எடுத்துச் சென்று விட மீண்டும் தங்கத் தகடுகள் வேயப்பட்டு இருக்கின்றன.


ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில் கோபுரம்

கோவிந்தாஜி முக்கிய தெய்வமாகவும், கிருஷ்ணருக்கும் பலராமருக்கும்,  ஜகன்னாத்-க்கும்  சிலைகள் உண்டு.  கோவிலின் வெளியே இருக்கும் தாழ்வாரம் வரை தான் யாருமே செல்ல முடியும். பூஜை செய்பவர்கள் தாழ்வாரத்திற்கு வந்து பக்தர்கள் தரும் காணிக்கைகளை பெற்று இறைவனிடத்தில் சமர்ப்பிக்கிறார்கள்.  தினமும் காலை, மாலை, மதியம் ஆகிய வேளைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 


ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில் மணி


 ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில் கொடி மரம்

நம் ஊர் கொடி மரம் போல இங்கேயும் கொடி மரம் உண்டு என்றாலும், இக்கொடிகள் வித்தியாசமாக இருக்கின்றன.  படத்தில் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். இங்கே உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இம்மாதிரி நிறைய கொடிமரங்களைக் காண முடிந்தது. நமது பள்ளிக்கூடங்களில் இருக்கும் பெரிய மணி மாதிரி ஒன்றை நிறுத்தி வைத்திருந்தார்கள் – அதை பூஜா சமயங்களில் பயன்படுத்துகிறார்கள்.  பிரம்மாண்டமான மணி – அதைச் செய்ய எவ்வளவு பிரயத்தனம் செய்திருப்பார்கள் என்று பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. 


ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில் - ரீங்காரம் செய்யும் ஓசை இதிலிருந்து தான்....

அதைப் போலவே ஒரு வட்ட வடிவ பித்தளை தட்டும், அதில் ஒலி எழுப்ப ஒரு குச்சியும் மாட்டி வைத்திருக்கிறார்கள்.  அதுவும் பிரம்மாண்டம்!  அதிலிருந்து எழுப்பப்படும் ஒலியும் அதன் ரீங்காரமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது…..



ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தாஜி!
படம்: இணையத்திலிருந்து....


 கருடன்....
படம்: இணையத்திலிருந்து....

வெளியே நின்றபடியே சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம்.  அவர்களுடைய வழிபாட்டு முறைகள் நம்மிலிருந்து வித்தியாசமாக இருப்பதால் நமக்கு ஒன்றும் புரியவில்லை.  தாழ்வாரத்தினைத் தாண்டிச் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை என்பதும் தெரியாததால், படிக்கட்டில் கால் வைக்கப் போக, அங்கிருந்த ஒருவர் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதைச் சொன்னார்.  சரி என்று வெளியே நின்றபடியே ஒரு வணக்கம் சொல்லி அங்கிருந்து நகர்ந்தோம். 


ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்த்ரா கோவில்

அடுத்ததாக நாங்கள் சென்றதும் இன்னுமொரு வழிபாட்டுத் தலம் தான்.  ISKCON இங்கேயும் ஒரு கோவிலை நிர்வகித்து வருகிறார்கள். அக்கோவிலுக்குச் சென்று பார்க்கலாம் எனச் சொல்ல, அங்கே அனைவரும் சென்றோம்.  ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்த்ரா கோவில் என அழைக்கப்படும் இக்கோவில் மூன்று கோபுரங்களோடு மிக அழகாய் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு வெளியே புல்வெளியும் தோட்டமும் அமைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு வெளியே புகைப்படம் எடுக்க அனுமதித்தாலும், உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.  அங்கே வைக்கப்பட்டிருந்த ஒரு கருடன் சிலை மிக அழகாய் வித்தியாசமாக இருந்தது! புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தால் அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள்.


ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்த்ரா கோவில் கோபுரங்கள்

பல ஆண்டுகளாகவே இக்கோவில் இங்கே இருந்தாலும், 2006-ஆம் ஆண்டு, இங்கே நடந்த குண்டு வெடிப்பின் போது கோவில் கொஞ்சம் சேதமடைந்தது.  ஐந்து பேருக்கு மேல் இறந்து போனார்கள். ஐம்பதிற்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள். 


ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்த்ரா கோவில் - சிங்கத்தின் மேல் தூண்கள்!

கோவிலின் விதானத்தில் வண்ணமயமான ஓவியங்கள் பலவற்றை வரைந்து வைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது.  நாங்கள் சென்றபோது புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை என்றாலும், இணையத்தில் இக்கோவிலின் உள்ளேயும் படம் எடுத்து சிலர் பகிர்ந்து இருப்பதைக் காண முடிந்தது. அதிலிருந்து சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன் – நீங்களும் பார்த்து ரசிப்பதற்காக.

கோவில் உட்புறத் தோற்றம்....
படம்: இணையத்திலிருந்து....

தினமும் காலை முதல் இரவு வரை இக்கோவில் திறந்திருக்கும்.  இவ்விடத்தில் ஒரு உணவகமும் உண்டு. நாங்களும் அங்கே சென்று தேநீர் அருந்தலாம் என அங்கே செல்ல, உணவகம் மாலைக்கு மேல் தான் திறப்பார்கள் எனச் சொல்லி விட்டார்கள்.  கோவிலைப் பார்த்த பிறகு வெளியே ஓட்டுனர் ஷரத் உடன் சென்று கடைவீதியில் இருந்த உணவகம் ஒன்றில் தேநீர் குடித்தோம்.  லால் சாய் [கட்டஞ்சாய்!] மற்றும் பால் விட்ட தேநீர் எது வேண்டுமானாலும் 10 நிமிடம் காத்திருக்க வேண்டியிருந்தது!

மாலை நேரத்தில் தேநீருடன் ஏதாவது கொஞ்சம் கொறிக்கலாம் என்றால் எல்லாமே மணிப்பூரி உணவுகளாக, பெயர் தெரியாத உணவுகளாக இருந்தன! தேநீரை மட்டும் குடித்து விட்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம்.  நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம் என்ன, அங்கே பார்த்தது என்ன என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

28 கருத்துகள்:

  1. படங்களும் விவரங்களும் சுவாரஸ்யம். தொடர்கிறேன்.

    தம சுற்றிக் கொண்டே இருக்கிறது! சீக்கிரமே வாக்கு பதிவாகி விடுமென்று நம்புகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      தமிழ் மணம் - பல சமயங்களில் இப்படித்தான் படுத்துகிறது!

      நீக்கு
  2. அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். நானும் இந்த இடத்தைப் பார்த்திருப்பதால் கூடுதலான ஆர்வத்தோடு படித்தேன். தொடர்கிறேன்.
    த ம வாக்களிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  3. படங்கள் அழகு! தகவல்கள் அருமை. அறிந்துகொண்டோம். கருடன் சிலை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது அழகாகவும். தொடர்கின்றோம் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  4. ஹப்பா ஒருவறாக ஓட்டு விழுந்துவிட்டது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்... பிரம்மப் பிரயத்தனம் செய்து தான் ஓட்டு போட வேண்டியிருக்கிறது!

      தமிழ் மணம் வாக்கிற்கு நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  5. அருமையான படங்கள்...

    ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தா ஜி கோவில் கொடி மரம் : ஸ்கோரல் செய்து பார்க்கும் போதே பரவசம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. மணிப்பூர் கோவிந்தா ஜி கோவில் படங்களும் விவரங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  7. கோயில் கொடி மரம் தொடங்கி ஒவ்வொன்றும் வித்தியாசமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  8. புகைப்படங்கள் அனைத்தும் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  9. மணிப்பூர் என்றாலே கூடைப்பாவாடையுடன் பெண்களாடும் மணிப்புரி நடனம்தான் நினைவுக்கு வருகிறது. படங்களும் தகவல்களும் அருமை. உங்கள் தயவால் வட இந்திய சுற்றுலாத்தலங்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகிறது. நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி!

      நீக்கு
  10. #அங்கிருந்த ஒருவர் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதைச் சொன்னார். #
    இதென்ன கொடுமை ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  11. அழகான அருமையான கோவில்...தகவல்களுக்கு நன்றி ...

    கருடன் படம் ..பசங்க பார்க்கும் கார்ட்டூன்ல வர ஒரு உருவம் மாதிரி இருக்கு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

      நீக்கு
  12. த ம வாக்குகூட சரியாய் விழுந்து இருக்கு ,என் கமெண்ட் எங்கே போச்சு ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையம் பக்கம் வர இயலாத சூழல் காரணத்தினால் கொஞ்சம் லேட்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  13. அழகான படங்களுடன் தெரியாத கோவில்கள் பற்றி அறியத் தந்தீர்கள் அண்ணா...
    கொடி மரம் வித்தியாசமாக அழகாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....