தொகுப்புகள்

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

தமிழகப் பயணம் – தில்லி திரும்பியாச்சு….



அதிகாலை 3 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து கடும் குளிரில் குளிப்பதற்கு வெந்நீர் வைத்து, அது சுடக் காத்திருப்பது ஒரு கொடுமை. கொஞ்சம் சோம்பேறித் தனத்துக்கு செவி சாய்த்து விட்டால், அன்றைக்கு முன்பதிவு செய்திருக்கும் விமானம் நம்மை விட்டு உயர உயரப் பறந்து போக 100 சதவீத வாய்ப்பு உண்டு. இறுக்கமாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள முயலும் இமைக் காதலர்களைக் கொடுங்கோலனாக மாறி பிரித்தே வைத்து இருந்தேன். தண்ணீர் சுட்டதும் குளித்து தயார் ஆனேன். அப்போது காலை நான்கு மணி. அலைபேசி மூலம் நண்பரை அழைத்து நான் தயார் என்பதைச் சொல்லி அவர் தயார் ஆனதும் அழைக்கச் சொல்லி அவரது அழைப்பிற்கு காத்திருந்தேன்.


அன்றைக்கு வெள்ளிக்கிழமை. தில்லியின் திருப்பதி தேவஸ்தானம் கோவிலின் திருமஞ்சனம் நடக்கும் நாள். தேவையான பால் மற்றும் தயிர் வாங்கி வருவதை நண்பர் தொடர்ந்து பல வருடங்கள் செய்து வருகிறார். அப்படி பால் வாங்க்ச் செல்லும் வழியில் என்னை தில்லி மெட்ரோ ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ஷிவாஜி ஸ்டேடியம் ஸ்டேஷனில் இறக்கிவிட்டுச் செல்வதாக முதல் நாளே சொல்லி இருந்தார். முதல் மெட்ரோ காலை 04.45 மணிக்கு. சரியாக காலை 04.30 மணிக்கு நண்பரின் அழைப்பு. உடமைகள் உடன் வீட்டைப் பூட்டி கீழே வந்து நண்பரின் வண்டியில் மெட்ரோ நிலையம் வரை பயணம். நண்பருக்கு நன்றி சொல்லி நிலையத்தின் பின்புறம் இருக்கும் வழியே உள்ளே செல்லச் சென்ற போது கதவு மூடியிருந்தது. வாயிலில் அமர்ந்து இருந்த பைரவர் குலைக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தார். உள்ளே அமர்ந்து இருந்த CISF அதிகாரி கதவை பிடித்து விலக்கச் சொன்னார். உள்ளே நுழைய, அங்கே அமர்ந்து இருந்த அதிகாரிகள், குளிருக்காக போர்த்தியிருந்த போர்வையை விலக்கி யார்யா இது காலங்காத்தால வந்து இருப்பது என பார்த்தார்கள்.

மெட்ரோ டோக்கன் கொடுக்கும் சிப்பந்தியின் குரல் மட்டும் வந்தது. கொஞ்சம் காத்திருந்த பின்னர் பயணத்திற்கான டோக்கன் கொடுத்தார். நடைமேடை சென்ற போது அங்கே என்னைத் தவிர வேறு யாருமே இல்லை. அங்கே காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். யாருமே இல்லா அவ்வேளையில் நகரும் படிக்கட்டுகள் தொடர்ந்து அலுப்பே இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு துப்புரவு தொழிலாளர் கடமையே கண்ணாக மெட்ரோ நிலையத்தின் சுத்தமான பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போதைய நேரம் அதிகாலை 04.40 என்பதை நினைவில் கொள்க. 04.45 மணிக்கு அன்றைய நாளின் முதலாம் மெட்ரோ புது தில்லி இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வரும். அதில் பயணிக்கக் காத்திருந்த ஒரே ஆள் நான்தான்! மெட்ரோ ரயில் வர, ஷிவாஜி ஸ்டேடியம் நிலையத்தில் ஏறிக்கொண்ட ஒரே ஆள் நான் மட்டுமே.

கடும் குளிரான அதிகாலை நேரமாக இருந்தாலும், கடமை தவறாது சரியான நேரத்திற்கு மெட்ரோ இரயில்கள் இயங்குவது பாராட்டுக்குரிய விஷயம். பொதுவாக காலை நேரத்தில் மெட்ரோ இல்லை என்றால் எங்கள் வீட்டிலிருந்து தலைநகரத்தின் T3 விமான நிலையத்திற்கு [International] டாக்ஸி என்றால் 500 ரூபாய் கேட்பார்கள் – மெட்ரோவில் ரூபாய் 50 மட்டுமே! வசதியாகவும் இருக்கும் என்பதால் பெரும்பாலும் மெட்ரோவில் தான் நான் பயணிப்பது. வேறு வழியில்லை என்றால் தான் டாக்ஸி. காலை நேரத்திலேயே விமான நிலைய வாயிலில் நீண்ட வரிசை. பயணச் சீட்டையும் அடையாள அட்டையையும் காண்பித்து உள்ளே சென்றால் Jet Airways Facilitation Counter-லும் நீண்ட வரிசை. Boarding Pass பெற்றுக் கொண்டு Security Check வரிசை பார்த்தால் அது ஹனுமார் வால் போல நீண்டு இருந்தது.

அடுத்த நாள் குடியரசு தினம் என்பதால் பாதுகாப்பு சோதனைகள் அதிகமாக இருந்தது. உடைகளைக் களையச் சொல்லாதது தான் பாக்கி! Winter Jacket, Shoe என அனைத்தையும் களைந்து வரிசையில் நின்று சோதனைகளை முடித்து உள்ளே நுழைந்தால் எனது விமானத்திற்கான வாயில் 46 நோக்கி வேகவேகமாக நடக்க வேண்டியிருந்தது – அதுவே இரண்டு கிலோமீட்டர் இருக்கும் போல! வேகவேகமாக நடந்து வாயிலை அடைவதற்கும் Boarding துவங்குவதற்கும் சரியாக இருந்தது. பொதுவாக, ஒவ்வொரு பயணத்திலும் விமான நிலையத்தில் சிறிது நேரம் பராக்கு பார்த்து, ஏதாவது வாங்கவோ, Window Shopping செய்வதோ வழக்கம். இம்முறை எதற்குமே நேரம் இல்லை! வேகவேகமாக உள்ளே நுழைந்து எனக்கு அளிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து உறக்கத்தினை தழுவினேன். இம்முறை ராஜா காதுக்கு வேலை கொடுக்கவே இல்லை! உறக்கம் தான். சென்னையில் இறங்கி, மின்சார இரயில் பிடித்து பெருங்களத்தூர் – அங்கிருந்து தமிழக அரசின் பேருந்து – திருச்சி நோக்கி.

இருக்கை வசதியாகவே இருந்தது. By Pass Rider, Point to Point என என்னென்னவோ எழுதி இருந்தாலும், கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்தார்கள் ஓட்டுனரும் நடத்துனரும். திருச்சி வந்து சேர்வதற்குள் சில பயணிகள் ஓட்டுனரிடம் சண்டைக்குச் சென்றார்கள் – என்னய்யா இது இப்படி உருட்டறீங்க என ஒரு ஆண் சண்டைக்குச் செல்ல, அவருக்கு இணையாக ஒரு கிராமத்துப் பெண்மணி இவங்களை விட நானே நல்ல ஸ்பீடா ஓட்டுவேன் போல என்று தனக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக் கொண்டார். ஓட்டுனரோ, நடத்துனரோ கண்டுகொள்ளவே இல்லை! “எருமை மாட்டின் மேல் மழை பெய்த மாதிரி” என்ற வாக்கியத்திற்கு உதாரணமாக இருந்த அவர்களைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக இப்படி யாராவது சொன்னால், கூடக் கூட பேசி, சண்டை போடுவார்கள். இவர்களோ கண்டுகொள்ளவே இல்லை! ஒரு வழியாக திருச்சி சேர்ந்து வீட்டை அடைந்தேன். தில்லியில் காலை நான்கரை மணிக்குப் புறப்பட்டது, மாலை ஐந்து மணிக்கு திருச்சி சேர்ந்தாயிற்று!

இரண்டு வாரங்கள் மட்டும் தமிழகத்தில் இருந்து இந்த ஞாயிறு தலைநகர் தில்லி திரும்பியாயிற்று. தமிழகத்தில் இருந்த போது சிலரை சந்திக்கலாம் என நினைத்திருந்தாலும், இருந்த வேலைகள் காரணமாக எங்கேயும் செல்ல முடியவில்லை. ஒரு நாள் மட்டும் நெய்வேலி சென்று வந்தேன். நெய்வேலி நினைவுகள், அனுபவங்கள் பிறிதொரு பகிர்வில்….

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

பின்குறிப்பு: தமிழகத்தில் இருந்த நாட்களில் சக பதிவர்களின் பதிவுகளை பெரும்பாலும் படிக்க இயலவில்லை. இனி தொடர்ந்து படித்திடுவேன். நண்பர்கள் மன்னிக்க!



40 கருத்துகள்:

  1. ஊருக்கு கிளம்பி , ஊரிலிருந்து திரும்பி என்று பயண அனுபவம் ஜெட் வேகத்தில் !
    நெய்வேலி நண்பர்கள் சந்திப்பு, நெல்லிக்காய், எலுமிச்சை வரவு எல்லாம் ஆதியின் பதிவில் படித்தேன்.
    உங்கள் நினைவுகள், அனுபவங்கள் படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெட் வேகத்தில்..... :)

      விரைவில் மற்ற அனுபவங்கள் பற்றி எழுதுகிறேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. குட்மார்னிங் வெங்கட். அதிகாலை மெட்ரோ பயணம் சுகமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      சுகமான பயணம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அந்த பஸ் டிரைவர்கள்தான் மெதுவாக ஓட்டுகிறார்களா, இல்லை, நம் மனவேகத்துக்கு ஈடு கொடுக்க முடிவதில்லையா? அவர்களுக்கு வசூல் டார்கெட் கட்டுப்பாடு ஒரு சுமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர் பிரச்சனை அவரவருக்கு. பொதுவாகவே பேருந்து ஓட்டுனர்/நடத்துனர் இருவருக்கும் டார்கெட் உண்டு. அதைப் பற்றி பயணிகளுக்கு கவலை இல்லை. இங்கே யாரும் எதற்காகவும் அடுத்தவர் நிலை குறித்து சிந்திப்பதில்லை. என் வேலை நடக்கணும்... அவ்வளவுதான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. டெல்லி குளிரில் காலை விமானநிலையம் வருவது மிகவும் கடினமான ஒன்று. உங்கள் பயணம் நல்ல முறையில் நிறைவுற்றது மகிழ்ச்சி

      நீக்கு
    3. உண்மை. உங்கள் பகுதியில் இருந்து வருவது இன்னும் கடினம் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  4. அந்தக்குளிரில் கிளம்புவதே கஷ்டம். அதுவும் காலங்கார்த்தாலே! நல்லபடியாக் கிளம்பி வந்து நல்லபடியாத் திரும்பியும் சென்றதுக்கு வாழ்த்துகள். திரும்பும்போது தான் ஜெட் ஏர்வேஸில் ஒரு வழி பண்ணிட்டாங்க போல! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரும்பும் சமயம் ரொம்பவே படுத்தி விட்டார்கள். அதுவும் ஒரு வித அனுபவம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  5. வழக்கம்போல எதிர்பார்ப்போடு கூடிய அனுபவம். உரிய நேரத்திற்குள் விமான நிலையம் அடைவதற்குள் தைஅடுத்தடுத்து என்ன செய்யப்போகின்றீர்கள் என்று எழுதியதைப் பார்க்கும்போது சற்றே பதட்டம் இருப்பதைக்கூட காண முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் பதட்டம் அடைந்து தான் போனேன். அதுவும் பாதுகாப்பு சோதனைக்கு அதிக நேரம் ஆனபோது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. பயண அனுபவங்கள் என்றுமே மனதில் நிற்பவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். பயணம் நமக்க்ய் நீங்கா நினைவுகளை தருபவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. நல்ல எழுத்து நடை...
    என்ன வருத்தம்
    நீங்கள் திருச்சியில் இருந்தபொழுது ஒரு சிறிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கலாம்..
    மகிழ்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கலாம்.... நினைப்பது எல்லாம் நடந்து விடுவதில்லை. வரும் சில நாட்களில் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம். குடும்பத்தினர் உடன் அதிக நேரம் செலவழிக்க மட்டுமே முடிகிறது. அடுத்த முறை சந்திக்கலாம். தங்கள் அன்பிற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  8. மெட்ரோ இரயில்கள் பலருக்கும் வரப்பிரசாதம் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெட்ரோ ஒரு வரப் பிரசாதம் என்பது உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. பயண அனுபவங்கள் அருமை. அடுத்து நெய்வேலி அனுபவங்களா, சீக்கிரம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெய்வேலி அனுபவங்கள் விரைவில்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி.

      நீக்கு
  10. உங்கள் மனைவிக்கு நன்றி சொல்லுங்கள் உங்கள் தளம் தொய்க்காமல்சென்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. //இறுக்கமாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ள முயலும் இமைக் காதலர்களைக் கொடுங்கோலனாக மாறி பிரித்தே வைத்து இருந்தேன்//

    அட!பிப்ரவரி 14 - க்கு பக்கம் வந்தாலே இந்த மாதிரி வரிகளும் தானா வந்து விழுதுல்ல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபிப்ரவரி வந்தாலே... ஹாஹா.. நீங்களும் உங்க கவிதைகளை எடுத்து விடுங்க அண்ணாச்சி.

      நீக்கு
  12. தில்லியில் நடந்த செய்திகளை விளக்கமாக சொல்லிவிட்டு ஸ்ரீரங்க மகிமையை விட்டுவிட்டீரே ! நியாயமா ?

    பின்குறிப்பு : நான் இன்று தில்லி வந்துள்ளேன்.... 3 நாட்கள் தில்லி குளிரை அனுபவிக்க வேண்டி அரங்கன் சங்கல்பம் போல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரங்க மகிமை..... ஹாஹா.... சொல்லலாம்...

      ஆஹா தில்லி வந்தது அறிந்து மகிழ்ச்சி. நேற்று உங்களுடன் பேச முடிந்தது மகிழ்ச்சி தந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.

      நீக்கு
  13. நீங்கள் சொன்ன தகவலை யாரும் மறுக்க முடியாதுதான். ஐ.ஜி.ஐ ஹவாய் அட்டா - சிவாஜி ஸ்டேடியம், மெட்ரோ வசதி தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். மெட்ரோ இல்லா தில்லியில் பயணித்த நாட்கள் கொடுமையானவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதவன்.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    தில்லியிருந்து கிளம்பிய பயணத்தை அருமையாக தங்கள் எழுத்து நடையில் திறம்பட சொல்லியிருப்பதை மிகவும் ரசித்தேன். ஒரு நாள் முழுவதும், ரயில், விமானம், பஸ் என வித்தியாசமாக பயணித்திருந்தாலும் களைப்புதான். ஆனால் குடும்பத்தை பார்த்ததும் களைப்பு அகன்றிருக்கும். விமான வசதி வராத காலத்துக்கு முன் தில்லி பயணமே ரயிலில் இரண்டு மூன்று நாள் ஆகுமில்லையா? உறவினர் சொல்லி கேள்விபட்டுள்ளேன். ஆனால் பயணம் என்று வரும் போது கொஞ்சம் உற்சாகமாகத்தான் இருக்கும் என எண்ணுகிறேன்.

    இதற்கு முந்தைய இரு பதிவுகளை படித்து கருத்திடாமைக்கு மன்னிக்கவும். விரைவில் படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணங்களில் களைப்பு பார்க்க முடிவது இல்லை. குடும்பத்தினர் உடன் சில நாட்கள் இருக்கப் போவது நினைத்தால் களைப்பு பறந்து விடும்.

      மன்னிப்பு எதற்கு? முடிந்த போது படியுங்கள். பல சமயத்தில் அனைவருடைய பதிவுகளை படிக்க முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  15. இனிய மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி!

    நேற்று தில்லி திரும்பியாச்சு இல்லையா...இனிதான் உங்கள் பதிவுகளைப்பார்க்கனும்...இரு நாள் பதிவுகளைப் பார்க்கனும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி. சென்னைப் பயணம் முடிந்ததா?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
    2. ஆமாம் ஜி நேற்று பங்களூர் வந்தாச்சு ஆனால் மீண்டும் 20 ஆம் தேதி சென்னைக்குப் பயணம். 21 அன்று வேலையை முடித்துக் கொண்டு 22 அன்று மீண்டும் பங்களூருக்கு பிருந்தாவனில் பயணம்...

      கீதா

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  16. We learn from your experience. Your writing is helpful. You pictured the early morning trip to airport. In noida we depend on private vehicles. Tension and frightening situation. Delhi metro starts at 6 o clock only. Connectivity problem.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நோய்டாவிலிருந்து விமான நிலையம் நல்ல தூரம் தான். சீக்கிரமாகவே புறப்பட வேண்டியிருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  17. வெங்கட்ஜி இப்போதுதான் தமிழகம் வந்ததாக நீங்கள் சொல்லியது நினைவு அதற்குள் தில்லி திரும்பியாகிவிட்டதா? மின்னல் வேகத்தில் வந்து சென்றீர்கள் போலும். பயணம் இனிதாக அமைந்ததது தானே?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு வாரம் மட்டுமே இப்பயணம். அதனால் மின்னல் வேகமாகத் தோன்றியிருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  18. ஓட்டுனரோ, நடத்துனரோ கண்டுகொள்ளவே இல்லை! “எருமை மாட்டின் மேல் மழை பெய்த மாதிரி”//

    ஹா ஹா ஹா வெங்கட்ஜி அவங்களுக்கு இதெல்லம் சர்வ சகஜமா இருக்கும்!!!!!

    எப்படியோ உங்கள் பயணம் நல்லபடியாக முடிந்து மீண்டும் தில்லி...பதிவுகள் வரும் என்று எதிர்பார்க்கலாம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... இப்படி தினம் தினம் பலரை சந்திக்க வேண்டியிருக்குமே இந்த ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும்.... பழகிக் கொள்ள வேண்டும் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....