தொகுப்புகள்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

கதம்பம் - தப்பித்த சிங்கம் - கணேஷா - டீன் ஏஜ் - சிறுதானிய பொங்கல் - வரலட்சுமி பாட்டி - குலாப்ஜாமூன் கேக் - உத்தரவு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நான் ப்ரமீளாடா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்

 

தடைகள் பல வரலாம்; தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம்; எதைக் கண்டும் அஞ்சாமல் துணிந்து நில்; முன் வைத்த காலை பின் வைக்காதே; நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் வெற்றியின் படிகள் தான்.

 

******

 

Zoo-விலிருந்து தப்பிய சிங்கம்!



 

காலைநேரத்தில் FM கேட்பது என் வழக்கம்! அடுக்களை உள்ளேயே அலைபேசியில் வைத்து கேட்பேன். சமையல் ஒருபுறம், மகளை பள்ளிக்கு தயார் செய்வது மறுபுறம் என பரபரப்பாகவும், அதே சமயம் சுகமான பாடல்களை கேட்டுக் கொண்டே energetic ஆகவும் இருந்தேன். 

 

அப்போது ஊர் உலக செய்திகளை சொல்லிக் கொண்டே வந்த RJ, 'Zoo இருந்து இரண்டு சிங்கங்கள் தப்பிச்சு போயிடுச்சாம் மக்களே! அப்புறம் என்ன ஆச்சுன்னு அடுத்து வரும் பாடலுக்கு அப்புறம் சொல்றேன்னு' சொல்லிட்டு போயிட்டார்!

 

எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே

 

இல்லாருக்கும் நல்ல மாற்றமுண்டு ஏற்றமுண்டு உலகிலே. 

 

இசைஞானியின் இசையில் கானகந்தர்வனின் குரலில் அருமையான பாடல் ஒலிக்க ஆரம்பித்தது..!

 

எங்கேர்ந்து நல்ல காலம்! 

 

சிங்கம் எங்க வாக்கிங் போனதோ! யார் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி டிபனுக்கு போச்சோ! தெரியலையே! 

 

இப்பத் தான் ஒரு சிறுத்தைய படாதபாடு பட்டு பிடிச்சாங்க! அடுத்து இப்ப சிங்கமா! சிங்கம் சிங்கிளா தான் போகும்னு தலைவர் சிவாஜி படத்துல சொல்லுவாரே! இதென்ன ஜோடி போட்டுட்டு போயிருக்கு! 

 

இப்படி ஒரு திகில்ல விட்டுட்டாங்களே! என்று மனம் சிங்கத்திலேயே லயித்திருக்க

 

ஒருவழியாக நான்கு பாடலுக்கு பின்பு வந்த RJ , 'சிங்கம் தப்பிப் போனது ஈரான் நாட்டில் என்றும் அதைப் பிடித்து விட்டதாகவும்' சொன்னதும் தான் நிம்மதியாச்சு!

 

இந்த விஷயத்தை வழக்கம் போல நம்ம தலைவர் கிட்ட சொன்னதும், 'யாரும் இருக்க மாட்டாங்க' 'நீ மட்டும் தான் திகில்ல இருப்பம்மா! என்றார்...🙂

 

சரி!சரி! பல்பு வாங்காத நாளும் நாளாஇதுக்கெல்லாம் அசந்தால் எப்படி..🙂

 

*****

 

ரோஷ்ணி கார்னர் - ஓவியம்:

 

மகள் வரைந்த கணேஷா ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு!


 

*****

 

டீன் ஏஜ் புரிதல்கள்!:


 

கூட்டுக் குடும்பங்களில் வீடு நிறைய மனிதர்கள் இருக்கும் போது யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் கவனிக்க நேரம் இருந்திருக்காது! ஆனாலும் அப்போதைய குழந்தைகள் அதைப் பெரிதாக எதிர்பார்த்ததில்லை..!பெரியவர்களை கேட்டால் 'அவனா படிச்சான்! வளர்ந்தான்! இன்னிக்கு நல்லா இருக்கான்!னு பெருமிதமாக சொல்வதை நாம் கேட்டிருப்போம்!

 

நம்முடைய தலைமுறையில் கூட பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் நமக்கே முழுமையாக கிடைக்கணும் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்காது! இந்நாளைய பிள்ளைகள் அப்படியல்ல! அவர்களை வளர்ப்பதும் சாதாரண விஷயமல்ல! ஹார்மோன்களின் விளையாட்டால் டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளிடம் நிறைய மாற்றங்கள் ஏற்படும்!

 

சில நேரம் குழந்தையாகவும், சில நேரம் நமக்கே அறிவுரை சொல்லும் பெரிய மனிதராகவும் இருக்கிறார்கள். கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து விட்ட இந்நாளில் எந்த ஒரு சூழ்நிலையையும் தனித்தே சமாளிக்க வேண்டிய நிர்பந்தமும் நமக்கு ஏற்படுகிறது!

 

பெற்றோரின் அன்பும், அரவணைப்பும், கவனமும் தன் மீதே முழுவதும் இருக்கணும்! அதுவும் நாம் எப்போதும் ஒரே மாதிரி இருக்கணும்! என்ற எதிர்பார்ப்புகள் நிறைய ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதுவும் ஒரே குழந்தை என்கிற போது அருகிலிருந்தே கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போன்ற நிலைக்கு தான் நாம் தள்ளப்படுகிறோம்.

 

இந்த பெருந்தொற்று காலத்தில் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பிள்ளைகளிடத்தில் உளவியல் ரீதியான மாற்றங்களும் ஏற்படுகிறது. பதிவின் நீளம் கருதி அவை பற்றி பிறிதொரு பகுதியில் எழுதுகிறேன்.

 

*****

 

ஆதியின் அடுக்களையிலிருந்து - சிறுதானிய பொங்கல்:

 

இரவு உணவாக சிறுதானியப் பொங்கல் தேங்காய் சட்னியுடன்!


 

*****

 

வரலட்சுமி பாட்டி!



 

அப்பா வழி குடும்ப மரத்திற்காக அத்தையிடம் சில விவரங்கள் கேட்டிருந்தேன். நேற்று இரவு கால் செய்த அத்தை என் அப்பாவின் இரு வழி தாத்தா பாட்டியின் பேர்களைச் சொல்ல குறித்துக் கொண்டேன். அதில் என் அப்பாவின் அப்பா வழி பாட்டியின் பெயர் வரலட்சுமி எனவும் சட்டென்று என் மனதுக்குள் நிழலாக ஒரு உருவம் தோன்றி மறைந்தது!

 

அப்பாவின் உறவுகள் பெரும்பாலும் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் தான் வசித்திருக்கிறார்கள். எந்த ஊரில் என்று நினைவில்லை! ஒருமுறை என் சிறுவயதில் அப்பா அழைத்துச் சென்ற பயணத்தில் வயதான ஒரு பாட்டியை பார்த்து வந்தோம்!

 

அந்நாளைய கைம்பெண் கோலம்! தலைமுடி களையப்பட்டு காவி நிறத்தில் முக்காடிட்ட நார்மடி புடவை உடுத்தியிருந்தார்! படுத்துக் கொண்டிருந்த பாட்டி எங்களைப் பார்த்ததும் பொறுமையாக எழுந்து உட்கார்ந்து கொண்டு அப்பாவிடம் பேசினார். இவ தான் என் பொண்ணு! என்று அப்பா சொன்னதும், பாஸு பொண்ணா நீ! (அப்பா பெயர் பாஸ்கரன்) என்று  கேட்டவாறு என் கண்கள், மூக்கு என்று முகம் முழுவதும் தடவிப் பார்த்தார்! பாட்டிக்கு அப்போது கண் பார்வை சரியாக இல்லை என்று நினைக்கிறேன்!

அத்தையிடம் இதைச் சொன்ன போது அவருக்கும் சரியாக நினைவில்லை! ஒருவேளை அந்தப் பாட்டி தான் இந்த வரலட்சுமி பாட்டியாக இருந்தால் அவரைக் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது! நான் நிச்சயம் வரம் பெற்றவள் தான்! இன்றும் நிழலாக ஒரு உருவம் நினைவில் வருகிறதே!

 

******

 

குலாப்ஜாமூன் கேக்!:




 

எப்போதுமே தீபாவளி சமயத்தில் கட்டாயமாக குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி வைத்துக் கொள்வேன். எதுவும் முடியவில்லை என்றால் செய்துக்கலாமே என்ற எண்ணம்! ஆனால் அதை விடுத்து வேறுவிதமான இனிப்புகளை செய்வதும் என் வழக்கம்..🙂 பிறகு புத்தாண்டு சமயத்திலோ, இடையிலோ அதைச் செய்வேன்!

 

இம்முறை வாங்கிய மிக்ஸுடன் மைதாவும், சர்க்கரையும் சேர்த்து கேக்காக செய்து பார்த்தேன். மிகவும் மிருதுவாகவும், நல்ல ருசியுடனும் இருந்தது. எண்ணெயில் பொரிக்காத குலாப்ஜாமூன்! தேவைப்பட்டால் மேலே கொஞ்சம் சர்க்கரை சிரப்பும் சேர்த்துக்கலாம். முன்பு ஒருமுறை இந்த மிக்ஸில் குக்கீஸும் செய்து பார்த்திருக்கிறேன்.

 

******

 

உத்தரவு! - கதை முயற்சி:



 

கத்திரிக்கா..வெண்டிக்கா... வாழக்கா.. காய் காயே..!

 

தேங்கா இருக்கா காய்க்காரே? கீர்த்தி ஒரு கேள்வியுடன் தான் காய் வாங்க வந்தாள்.

 

இன்னிக்கு தேங்கா எடுத்துட்டு வரலங்க! குடுத்து விடலாம்னா பயலும் ஸ்கூலுக்கு போயிட்டானே! 

 

நேத்து கோயிலுக்கு போயிட்டேன்!நாளைக்கு கொண்டுட்டு வரட்டுமா!

 

சரிங்க காய்க்காரே! நாளைக்கு கொண்டு வாங்க! ஆமா முள்ளங்கி எவ்ளோ? அப்படியே செளசெளவும் ஒண்ணு போடுங்க!

 

சமயபுரத்துக்கு போனீங்களா? என்று கேட்டாள்! அவர் மொட்டை அடித்திருந்ததால்....

 

ஆமாங்க! இப்ப தான் உத்தரவு கெடச்சிச்சு! 

 

உத்தரவுன்னா! பூ போட்டு பாப்பீங்களா!

 

இல்லங்க! இவ்வளவு நாளா போக வழியே இல்லாம இருந்தது! ஏதாவது ஒரு தடை வந்துட்டே இருந்தது பாத்துக்கோங்க! மனசே சரியில்ல..

 

பயல தலைமுடிய வெட்டினா  தான் ஸ்கூலுக்கு வரலாம்னு சொல்லிட்டாங்க! போன வாரமெல்லாம் என் பொண்டாட்டிக்கு திடீர்னு கையே தூக்க முடியாம சிரமமா போச்சு!

 

எப்படியாவது மாரியாயிய போய் பாத்துட்டு வந்துடணும்னு நெனைச்சிட்டே இருந்தேங்க! அப்புறம் தான் வழி கெடச்சுது! போய் முடி இறக்கி நேர்த்திக்கடன முடிச்சிட்டு வந்தேன்.

 

அண்ணன் தம்பி பிரச்சினை! வீட்ல கஷ்டம்னு எவ்வளவோ இருக்கு பாருங்க! யார்க்கிட்டேயும் சொல்லிக்கறதில்ல! என்றார்.

 

ஒவ்வொருக்குள்ளும் ஆயிரம் சங்கடங்கள்! எல்லாத்தையும் கடந்துட்டு தான் இருக்காங்க! ஏதோ ஒரு நம்பிக்கை தான் ஒவ்வொரு நாளையும் பூக்க வைக்குது! இல்லையா! என்று யோசித்துக் கொண்டவாறே

 

இனிமே எல்லாம் சரியாகிடும்! காய்க்காரே! என்று சொல்லிய படி வீட்டுக்குச் சென்றாள் கீர்த்தி.

 

*****

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

20 கருத்துகள்:

  1. // கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போன்று //

    உண்மை...

    கதம்பம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருப்பது அறிந்து மகிழ்ச்சி தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. ரோஷ்ணியின் ஓவியம் மிக அழகு.

    மற்ற விஷயங்கள் பேஸ்புக்கிலும் படித்தேன்.  கூட்டுக் குடும்பம் பற்றி எழுதி இருந்தது நிறைய சிந்தனைகளைக் கிளப்பியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் ஓவியமும், பதிவின் மற்ற பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். கூட்டுக்குடும்பம் குறித்த எண்ணங்கள் உங்கள் சிந்தனைகளை தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது. உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளலாமே. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. கதம்பத்தை ரசித்தேன். நேர்த்திக்கடன் மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய கதம்பம் பதிவின் வழி பகிர்ந்துகொண்ட விஷயங்கள் உங்கள் ரசனைக்கு உகந்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. கதம்பம நல்லா இருக்கு ஈரான் சிங்கத்தை பத்தி இங்குட்டு பதறிப் போற அந்த மனசு இருக்கே 🤩🤩

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுந்தர் உங்கள் உங்கள் வருகையோ? பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. கதம்பம் சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய கதம்பம் பதிவினை ரசித்ததோடு அதனை கருத்து வழி சொன்னதற்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. கதை சூப்பர். ஸமயபுரம் அம்மா எல்லாவற்றையும் சரி செய்வாள்.
    அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

    சிங்கம் தப்பிச்சது இருக்கட்டும். ஊட்டியில்
    இரண்டு புலிகள் சாலையில் நடமாட்டம்.
    படத்தோடு போட்டிருந்தார்கள்.
    என்ன ஆச்சோ அப்புறம்!!

    பதின்ம வயது இங்கேயும் எல்லோரையும்
    ஓட்டிக் கொண்டிருக்கிறது.
    அவர்களாகத்தான் வெளியே வரவேண்டும்.

    எங்களுக்கு எல்லாம் அப்படி ஒரு வயது வந்ததாகவே
    நினைவு இல்லை.ஹாஹ்ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை முயற்சி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா. புலிகள் குறித்த தகவல்களும் அப்போது நிறைய வந்தது. பதின்ம வயது செயல்களிலிருந்து அவர்களாகவே சரியான நேரத்தில் வெளி வந்து விடுவார்கள் என்றே எனக்கும் தோன்றுகிறது. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை கருத்துரை வழியாக பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. சிறுதானிய பொங்கல் சூப்பர்!

    ஆதியின் அடுக்களையிலிருந்து ந்னு பார்த்ததும் ஓ திறந்தாச்சான்னு யுட்யூப் போனா அங்கு இல்லை இங்க ஜஸ்ட் ஃபோட்டோதானா!! புரிந்து கொள்ள முடிகிறது ஆதி. நேரம் பிரச்சனை.

    குலாப்ஜாமூன் கேக் சூப்பர். நல்லா வந்திருக்கு. கப் கேக்கும். கலக்கறீங்க

    கதை நல்ல முயற்சி. இன்னும் நீங்கள் எழுதலாம் ஆதி! முடிந்த போது.

    ரோஷினி குட்டியின் ஒவியம் டாப்! ரொம்ப ரொம்ப நன்றாக வரைந்திருக்கிறாள் நாளுக்கு நாள் நல்ல மெருகேறுகிறது! அவள் கைத்திறன்

    வாழ்த்துகள் பாராட்டுகள்!

    கீதா





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. தொடர்ந்து நீங்கள் எல்லோரும் தரும் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. கூட்டுக்குடும்பம் பற்றிச் சொன்னது நானும் அதே கருத்துதான். என்றாலும் கூடவே ஒன்று மட்டும் நான் பெரிய கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள் என்பதால்....அது கூட்டுக் குடும்பத்து மனிதர்களைப் பொருத்து குழந்தைகளில் சிலருக்கு ஒப்பிட்டுப் பேசுவது இவற்றினால் கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை, அதனால் சில விளைவுகளும் வருவதுண்டு. எல்லாவற்றிலும் ப்ளஸ் உண்டு மைனஸும் உண்டு. கூட்டாக இருந்தாலும் சரி ந்யூக்ளியர் குடும்பமாக இருந்தாலும். ஸோ வளரும் சூழல், நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் பொருத்து..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டுக் குடும்பங்களிலும் சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இரண்டிலும் நல்லதையும் கெட்டதையும் பார்த்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. உங்கள் மகள் ரோஷ்ணியின் ஓவியம் மிக அழகு.

    கதை முயற்சிக்கு வாழ்த்துகள்.

    கதம்பத்தை ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளின் ஓவியமும் பதிவின் மற்ற பகுதிகளும் நீங்களும் ரசிக்கும்படியாக அமைந்துவிட்டது அறிந்து மகிழ்ச்சி துளசிதரன் ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. ரோஷ்ணி ஓவியம் மிகவும் அழகு வாழ்த்துகள்.

    பதின்மவயது எதையும் ஆராயும் வயது தலைமைத்துவ ஆர்வம் இருக்கும் .






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....