தொகுப்புகள்

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

ருபின் பாஸ் - உத்திராகண்ட் - மலையேற்றம் - ப்ரேம் Bபிஷ்ட் - பகுதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

TODAY IS YOUR DAY! YOUR MOUNTAIN IS WAITING! SO… GET ON YOUR WAY - DR. SEUSS

 

******

 

ருபின் பாஸ் குறித்து இது வரை மூன்று பகுதிகளாக வெளியிட்டு இருக்கிறேன். முதல் பகுதி இங்கே! இரண்டாம் பகுதி இங்கே! மூன்றாம் பகுதி இங்கே! பயணம் குறித்தும் தொடர்ந்து நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களின் வார்த்தைகளில் படிக்கலாம் வாருங்கள் - வெங்கட் நாகராஜ். ஓவர் டு ப்ரேம்!

 

*****



 பசுமையான மலைப்பகுதி....


எங்கள் பயணத்தின் நான்காம் நாள் (14.06.2016) காலை, 6.30 மணியளவில் ஜாக்கா கிராமத்திலிருந்து புறப்பட்டோம். கிராமத்திலிருந்து புறப்பட்ட பாதை அரை கிலோமீட்டர் வரை செங்குத்தாகவே இருந்தது.  அதன் பிறகு கொஞ்சம் சமதளமாக இருந்த பாதையில் பயணிக்க ஆரம்பித்தோம்.  அங்கே ஒரு சில கிராமத்துப் பெண்கள் வயல்களில் வேலை செய்வதைப் பார்க்க முடிந்தது.  நாங்கள் கடந்து வந்த பாதையை, பின்னோக்கிப் பார்த்த போது, அந்த அதிகாலை நேரத்தில், அடர்ந்த தேவதாரு காடுகளின் பின்னணியில்  ஜாக்கா கிராமத்தின் பேரழகைப் பார்த்து ரசிக்க முடிந்தது. 



தங்குமிடங்கள்....


மரத்தினடியில் ஓய்வெடுத்த போது....
 

தொடர்ந்து நாங்கள் பயணித்த பாதை அடர்ந்த தேவதாரு காடுகளின் வழியாகச் சென்றது. மேலும் அந்தப் பாதையில் ரூபின் நதி ஒரு குறுகிய பள்ளத்தாக்கு வழியாக பாய்வதையும் எங்களால் பார்க்க முடிந்தது. சுமார் ஒரு மணி நேர மலையேற்றத்திற்குப் பிறகு, ரூபின் ஆற்றின் குறுக்கே அமைந்த ஒரு டீக்கடையில் ஒரு கிராமத்துச் சிறுவன் இருக்கக் கண்டோம். அந்த இடத்தை நாங்கள் அடைந்த போது, காலை 8.20 மணி. அந்தச் சிறுவனிடம் பேசியபடியே அங்கே தேநீர்/இலகு உணவு  உண்டோம். அரைமணிநேரம் அங்கே தங்கிய பிறகு, நாங்கள் தொடர்ந்து முன்னேறினோம். முன்னோக்கிச் சென்ற போது மலையேற்றப் பாதை அவ்வளவு செங்குத்தானதாக இல்லை என்றாலும் சோர்வைத் தருகின்ற பயணமாக இருந்தது.  மேலும் சிறிது நேரம் நடந்த பிறகு, நாங்கள் உடுக்கனால் என்ற பகுதியை சென்றடைந்தோம்.  அந்த இடத்தில் "இந்தியா ஹைக்ஸ்" அமைப்பினர் அமைத்திருந்த சில கூடாரங்களை எங்களால் பார்க்க முடிந்தது. அவ்விடத்தினை நாங்கள் அடைந்த போது காலை 10.30 மணி.  நாங்கள் அங்கு சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டோம். 



சமவெளியும் மலைகளும், நடுவே ஆறும்....


நீச்சலடிக்கும் வழிகாட்டி....
 

அதன்பிறகு, மேலும் பயணித்து அழகான ரோடோடென்ட்ரான் காடுகளுக்கு பெயர் பெற்ற புராஸ் கண்டியை (Buras Kandi) பகுதியை நாங்கள் சென்றடைந்தோம்.  இந்தப் பகுதியும் ஒரு முகாம் அமைக்கும் தளமாகும் என்றாலும், நாங்கள் முகாம் அமைக்காமல் அங்கே ஒரு மரத்தடியில் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். ஓய்வுக்குப் பிறகு தொடர்ந்து பயணித்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, எங்களின் அடுத்த இலக்கை அடைந்தோம்.  அங்கிருந்து தொலைதூரத்தில் இருக்கும் அழகிய அருவியைக் காண முடியும் என்பது அதன் சிறப்பு.  அப்போது பிற்பகல் 1.15 மணி.  அந்தச் சமயத்தில் ருபின் ஆற்றின் கரையில் எங்களுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக அங்கே ஒய்வு எடுக்க முடிவு செய்தோம். அந்த இடத்தில் எங்கள் இளம் சுமைதூக்கி/வழிகாட்டி பனிக்கட்டி போல மிகவும் குளிர்ச்சியான ருபின் நதியில் குதித்து தனது நீச்சல் திறமையைக் காட்டினார். அவர் அந்த குளிர்ந்த நீரில் குளிப்பதைப் பார்த்த எங்களுக்கும் குளிர்வது போல இருந்தது. 



பனிப்பாறை....


புத்துணர்வு தரும் அருவி....
 

ஆற்றங்கரையில் ஓய்வு தந்த புத்துணர்ச்சியுடன், நாங்கள் மதியம் 2.00 மணியளவில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். தொடர்ந்து பயணித்த நாங்கள் விரைவில், ருபின் ஆற்றின் மீது அமைந்த முதல் பனிப்பாறையைக் கடந்தோம். மேலும் தொடர்ந்து மலையேறிய பிறகு, ருபின் நதி அந்தப் பள்ளத்தாக்கைப் பிரிக்கும் ஒரு பரந்த புல்வெளியை அடைந்தோம். நதியில் கலப்பதற்கு முன், மலைகளில் இருந்து உருளும் பல சிறிய நீரோடைகளின் மீது நாங்கள் குதித்துத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. அழகான பூக்கள், முக்கியமாக மஞ்சள் நிறப் பூக்கள், அப்பகுதியை அலங்கரிக்கும் விதமாக இருந்தன. அந்த அழகிய பூக்களையும் வசீகரிக்கும் இயற்கைக்காட்சிகளையும் பார்த்த எங்களால் படங்கள் எடுக்காமல் இருக்க முடியவில்லை. கோடைக் காலம் என்பதால் மேய்ப்பர்கள் தங்கள் ஏராளமான பசுக்கள் மற்றும் காளைகளை தன்னந்தனிய மேய விட்டு இருந்ததையும் நாங்கள் பார்த்தோம்.



அருவிக்கு எதிரே எங்கள் முகாம்....
 

பிற்பகல் 3.00 மணியளவில், நாங்கள் ஒரு சமதளத்தில் முகாமிட்டு, எங்கள் இரவு உணவைத் தயாரிக்கத் தொடங்கினோம். அடுத்த இரண்டு நாட்கள் எங்களுக்காகக் காத்திருக்கும் கடினமான மலையேற்றத்திற்கு எங்களை தயார் செய்யும் விதமாக, நல்லதொரு ஓய்வை எங்களுக்கு பெற்றுக் கொள்ள, நாங்கள் சீக்கிரம் இரவு உணவை சாப்பிட்டு, ஓய்வு எடுத்தோம்.  தொடர்ந்து எங்கள் பயணம் எப்படி இருந்தது, என்ன அனுபவங்கள் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்திருங்கள்.

 

ப்ரேம் Bபிஷ்ட்

 

******

 

நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம்.  பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

26 கருத்துகள்:

  1. அதிகம்பேர் புழங்காத இடம்...  அமைதியான இடம்..  அழகிய காட்சிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமைதியான இடமும் அங்கே உள்ள காட்சிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அழகான அருவி... பக்கத்திலே தங்குதல்... ஆகா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருவியின் அருகே தங்குவது நல்லதொரு விஷயம் தான் - மகிழ்ச்சி அளிப்பதும் கூட! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. பிஸ்த் அவர்களின் பதிவின் சிறப்பம்சம் புகைப்படங்கள் தான். அவருடைய புகைப்படங்கள் நன்றாக உள்ளன. இந்த மலையேற்றம் மற்றும் கூடாரம் அமைத்து தங்குதல் போன்றவை நம்மால் முடியாதது. ஆகவே வாசிப்போடு சரி.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்களும் விஷயங்களும் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  4. சுவாரஸ்யமான பயண விபரங்கள்.
    கருத்துப் பெட்டியை ஏன் இப்படி மாற்றினீர்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயண விவரங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. கருத்துப் பெட்டி நான் மாற்றவில்லை ஜி. ப்ளாக்கர் தளம் தன்னிச்சையாக இப்படி மாற்றி இருக்கிறது. பல தளங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதை சில நாட்களாகவே கவனித்தேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
    2. சகோ தேவகோட்டை ஜி , உங்களுக்கும் கருத்து பெட்டி மாறி விட்டது பாருங்கள்.

      நீக்கு
    3. பலருடைய தளங்களிலும் இந்த மாற்றம் உண்டாகிக் கொண்டிருக்கிறது. தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. படங்களைப் பார்த்தாலே மனதிற்கு அமைதி கிடைக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  6. உங்கள் நண்பரின் மலைப்பயண அனுபவங்கள் மிக அருமை.
    படங்கள் எல்லாம் அழகு. அடுத்து கடினமான மலையேற்றத்தை படிக்க தொடர்கிறேன்.
    தேவதாரு காடுகள் காணப்படும் இடங்களை பாட புத்தகத்தில் படித்து இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. மனதை கவரும் அருமையான படங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  8. இலகு உணவு - புதிதாய் அறிகிறேன்.
    எனக்கும் இதுபோன்ற இடங்களில் முகாமிட்டு ரசிக்க ஆசைதான். தங்களின் நண்பரின் பயண அனுபவமும் புகைப்படங்களும் அருமை, வாழ்த்துக்கள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்துகள் கோயில்பிள்ளை.

      நீக்கு
  9. இலகு உணவு - புதிதாய் அறிகிறேன்.
    எனக்கும் இதுபோன்ற இடங்களில் முகாமிட்டு ரசிக்க ஆசைதான். தங்களின் நண்பரின் பயண அனுபவமும் புகைப்படங்களும் அருமை, வாழ்த்துக்கள் வெங்கட். தேவதாரு - மேய்ப்பர்கள் போன்ற வார்த்தைகள் வாசிக்க மகிழ்வை தருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய வார்த்தைகள் - மகிழ்ச்சி. சில வார்த்தைகள் நன்றாக இருந்தாலும் பல வார்த்தைகள் தமிழாக்கம் செய்யும் போது வேதனையே தருகிறது! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோயில்பிள்ளை.

      நீக்கு
    2. ஆமாம் வெங்கட்ஜி! தமிழாக்கம் செய்யும் போது வேதனைதான். அதை நானும் உணர்ந்ததுண்டு. வேலை தருபவர்கள் சில சமயம் அதை அப்படியே தமிழில் எழுதச் சொல்லிவிடுவார்கள். அப்படிச் செய்து செய்து வலையிலும் அதே பழக்கம் வந்துவிடுகிறது! ஆங்கிலத்தில் எழுதாமல் அதை அப்படியே Transliterate தங்கிலிஷில் எழுதும் பழக்கம்.

      கீதா

      நீக்கு
    3. மொழியாக்கம் நீங்கள் அடிக்கடி செய்வதால் இதில் உள்ள குழப்பங்களை உங்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும் கீதா ஜி. தங்களது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. அழகான மலை ஏற்றப் பயணம். படங்கள் அனைத்தும் மனதைக் கவர்கின்றன. செல்ல முடியாத பயணம் வாசித்து மனதில் அனுபவித்துக்கொள்ள வேண்டியதுதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசித்து மனதில் பயணத்தினை அனுபவிப்போம்... :) சரி தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  11. ரசித்து ரசித்து வாசிக்கிறேன் ஜி. கூடவே வாய்ப்பு கிடைக்காதா என்ற எண்ணமும்!! அருவியின் முன் கூடாரமிட்டு தங்கி...வாவ்! என்ன ஒரு அமைதியான சூழல், பசுமை. நதி, இப்போதைக்குக் மனதில் நானும் மலை ஏறுவது போல நினைத்துப் பார்த்துக் கொண்டு.!!

    சில இடங்களில் ஆறு/ஒடை ஒடியது போன்ற தோற்றம் ஆனால் தண்ணீர் இல்லை அலல்து கொஞ்சமாக ஓடுகிறது போல.... பனிப்பாறை கறுப்பாக இருக்கிறதே அலல்து என் கண்களுக்கு அப்படித் தெரிகிறதோ..

    படங்களையும் ரசித்தேன் ஜி உங்கள் நண்பருக்கும் நன்றி சொல்லிவிடுங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைக்கு மனதில் மட்டுமே இந்த பயணங்களை அனுபவிக்க வேண்டும் - நானும். சமீபத்தில் கூட திட்டமிட்டு ஒரு பயணம் செய்தார் - என்னால் அவர்களுடன் பயணிக்க இயலவில்லை. சூழல் அப்படி! பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....