தொகுப்புகள்

சனி, 1 ஏப்ரல், 2023

காஃபி வித் கிட்டு - 165 - கொள்ளையடித்தவள் - யானைக்கும் மனித உணவு - (DH)தர்ஷணா - நண்பனும் பகைவனும் - Elephanta Caves - அவள் வாழ்க்கையில் அவன் - ஓவியம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“IN A DAY, WHEN YOU DON’T COME ACROSS ANY PROBLEMS – YOU CAN BE SURE THAT YOU ARE TRAVELLING THE WRONG PATH” - SWAMI VIVEKANAND.

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி : என் மனதை கொள்ளையடித்தவள்....

 

2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - என் மனதை கொள்ளையடித்தவள்.... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  

 

கம்பரின் ஒரே மகன் அம்பிகாவதி. மூன்றாம் குலோத்துங்க சோழன் மகளான அமராவதி மீது வைத்திருந்த காதலும் அவளைப் பார்த்ததும் காதல் ரசம் சொட்டும் பாடல்களை அருவி மாதிரி பொழிந்ததும் உங்களனைவருக்கும் தெரிந்த விஷயம். சிற்றின்பச் சாயல் இல்லாது நூறு பாடல்கள் பாடினால் தனது மகளை மணம் முடித்துத் தருவதாகச் சொல்லி போட்டி வைக்க, 99 பாடல்கள் பாடி முடித்தாலும் ஒரே ஒரு பாடல் தவறாக அவள் மீது காதலுடன் பாடி தனது காதலியை இழந்தார் அம்பிகாவதி.

 

இந்த அம்பிகாவதியின் மனதைக் கொள்ளை கொண்ட அமராவதி போலவே என் மனதையும் கொள்ளையடித்தாள் ஒரு அமராவதி! அமராவதிக்கு என் மேல் காதல் இருந்ததோ இல்லையோ எனக்கு அமராவதி மேல் ரொம்பவே காதல். ஒருதலைக் காதல் என்று கூட சொல்லலாம். யார் அந்த அமராவதி? அதைச் சொல்லத்தானே இந்த பதிவு! மனச்சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்தல்லவா இங்கே சொல்ல வந்திருக்கிறேன்!

 

என் மனதைக் கொள்ளையடித்த அமராவதியும் நான் இருந்த அதே நெய்வேலி தான்! நான் அடிக்கடி பார்த்ததுண்டு. ஏனோ எனக்கு அமராவதி மேல் ரொம்பவே காதல்....... 

 

என் மனத்தைக் கொள்ளை அடித்தவள் யார் என்று தெரிந்து கொள்ள மேலே சொன்ன பதிவினை மேலே உள்ள சுட்டி வழி படித்தால் தெரிந்து விடப்போகிறது!

 

******

 

இந்த வாரத்தின் எண்ணங்கள் - யானைக்கும் மனித உணவு :  


 

கடந்த மூன்று மாதமாக திருவரங்கத்தில் வாசம்.  அரங்கநாதர் கோவிலில் முன்பு ஆண்டாள் என்று ஒரு யானை மட்டுமே! ஆண்டாள் சமீபத்தில் தான் 45 வயது பிறந்த நாள் கொண்டாடினாள்.  வயது ஆகிக்கொண்டே வருவதால் சில மாதங்களுக்கு முன்னர், ப்ரேமி (எ) லக்ஷ்மி என்ற பெயர் கொண்ட இரண்டாவது யானையும் கோவிலுக்காக வரவழைத்து இருக்கிறார்கள். இந்த இரண்டு யானைகள் தவிர வேறு சில யானைகளும் எப்போதும் திருவரங்கத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன - யானைப்பாகன்களுடன் தான்!  விரும்பும் பக்தர்களிடம் காசு வாங்கிக் கொண்டு தலையில் தும்பிக்கையால் தொட்டு ஆசீர்வாதம் செய்கிறது.  அதெல்லாம் கூட சரி தான்.  அதை வைத்து பராமரிப்பதற்கு சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லி விடலாம். அதற்கான இயற்கையான உணவுகளுக்கு பதில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுப்பதைக் காணும்போது வருத்தமாக இருந்தது.  ஒரு நாள் ஆண்டாளுக்கு காலை நேரத்திலேயே ஒரு பாக்கெட் Good Day Biscuit வாங்கிக் கொடுத்தார் பாகன்.  இன்னுமொரு நாள் பார்த்தால் வெளியில் இருக்கும் யானை ஒன்றை காந்தி சாலையில் அழைத்துச் சென்றபோது பல கடைகளில் நிற்க, கடையிலிருந்து ஒருவர் வெளியே வந்து எதை எதையோ சாப்பிடக் கொடுக்கிறார்கள் - ஒரு பேக்கரியில் இரண்டு loaf bread தும்பிக்கையால் வாங்கி அப்படியே வாய்க்குள் போட்டுக்கொண்டது அந்த யானை!  காஃபி, தேநீர், இது போன்ற மனிதர்களுக்கான உணவுகள் என அனைத்தும் அந்த யானைகளின் இயற்கையான உணவிலிருந்து மாறுபட்டு மனித உணவுகளாகவே இருப்பது வேதனை தான்! 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த பாடல்: (DH)தர்ஷணா - ஹ்ருதயம் 

 

இந்த வாரத்தின் ரசித்த பாடலாக ஹ்ருதயம் என்ற மலையாளம் படத்திலிருந்து (DH)தர்ஷணா  என்று தொடங்கும் ஓர் பாடல். கேட்க நன்றாக இருக்கிறது. கேட்டுப் பாருங்களேன். 


 

மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 

 

Darshana - Official Video Song | Hridayam | Pranav | Darshana | Vineeth | Hesham | Merryland - YouTube

 

*****

 

இந்த வாரத்தின் ரசித்த வாசகம் - நண்பனும் பகைவனும்: 




******

 

இந்த வாரத்தின் ரசித்த வலைப்பூ - Elephanta Caves:

 

பயணம் குறித்த தகவல்களை தேடிக்கொண்டிருந்தபோது கிடைத்த ஒரு வலைப்பூ சரவணமணியன் என்ற இளைஞருடைய வலைப்பூ.  அதிகம் எழுதுவது இல்லை என்றாலும் எழுதி இருந்த சில பயணக் கட்டுரைகள் நன்றாகவே இருந்தன.  அதில் ஒரு கட்டுரை Elephanta Caves குறித்த கட்டுரை.  அக்கட்டுரையிலிருந்து சில வரிகள் கீழே. படங்களும் நன்றாகவே இருக்கின்றன.

 

சுமார் 75 நிமிடங்களில் கடலின் ஊடே யானையோட தலை பகுதி போல ஓர் தீவு நம்ம கண்களுக்கு தென்படுது.

 

எலிபெண்டா தீவு 16 கிமீ பரப்பளவு கொண்டது. தீவை சுற்றிலும தென்னை, மா, புளி போன்ற மரங்களுடைய அடர்ந்த காடாக உள்ளது.

 

இத்தீவின் மக்கள் தொகை 1,200 மட்டுமே. இங்குள்ள மக்கள் நெல் பயிரிடுதல், மீன் பிடித்தல், படகுகளை பழுது நீக்குதல் போன்ற பணிகளில் உள்ளனர். இத்தீவின் உயரமான பகுதியில், மராத்தியப் பேரரசின் இரண்டு பீரங்கிகள் வைக்கப்பட்டுள்ளது.

 

முழுக் கட்டுரையும் இங்கே படிக்கலாம். 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த கவிதை - அவள் வாழ்க்கையில் அவன் :

 

இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக மகுடேஸ்வரன் அவர்களின் கவிதை ஒன்று - நீங்களும் ரசிக்க! 


 

அவள் வாழ்க்கையில்

அவன்

 

யானையைப்போல்

தொலைவில் மறைந்திருக்கிறான்.

 

மயிலைப்போல்

தென்னங்கீற்றினில்

தென்படாதமர்ந்து அகவுகிறான்.

 

குயிலைப்போல்

குரலன்றி

ஏதுமற்றவனாயிருக்கிறான்.

 

கொள்ளளவு தாண்டிப் பெய்த

பெருமழையாய் -

துளியளவும் அணையேற்காது

முற்றாக வடிந்தகலும்

மிகைவெள்ளமாய் -

சரிந்திறங்குகிறான்.

 

எங்கோ ஒரு வடிநிலத்தில்

நாணல்களிடை கொக்குகள்

காத்திருக்கும் சேற்றுப்புலத்தில்

சிறு 'கிளக்' ஒலியோடு

மண்ணிற் புகுந்து  மறைகிறான்.



  • மகுடேஸ்வரன்

 

******

 

இந்த வாரத்தின் ஓவியம்  - சோகம் :


 

சில ஓவியங்கள் பார்த்த உடன் பிடித்து விடும்.  இந்த ஓவியம் இணையத்தில் பார்த்தது! ஏனோ அந்த ஓவியப் பெண்ணின் சோகம் என்னை ஏதோ செய்தது.  ஓவியம் குறித்த உங்கள் கருத்துகளையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். 

 

******

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து….

7 கருத்துகள்:

  1. அமராவதி தியேட்டர் நினைவுகள்!  படித்தேன்.

    ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அதற்குள் வாரிசு கொண்டு வந்து விட்டார்களா?  ஆண்டாளின் முக்கியத்துவம் குறைந்து விட்டதா?

    ஹ்ருதயம் படத்தில் பாடல்கள் யாவும் நன்றாய் இருக்கும்.  படத்தின் ஆதார ராகம் ஆபேரி!  நகுமோமு கூட உண்டு!


    நல்லதொரு வாசகம்.   யானைப்பற்றி என்றால் இன்னும் சுவாரஸ்யமாகப் அப்பிடிப்பேன்!  கவிதை நன்று.  அந்த ஓவியம் மோனாலிசாவின் இந்தியத்தங்கை போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. அமராவதி தியேட்டரை பார்த்து வந்தேன் ஜி

    மலையாளப்பாடல் கேட்டேன்

    கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. யானைக்கு மனித உணவு கவலை தருகிறது. மிருகங்களுக்கு இதை பழக்குவதால் அவையின் உடல் நலம் கெடுகிறது என்பதை அறியாத மக்கள். ;;(

    கவிதை , பாடல் நன்று.
    ஓவியம் பெண்ணின் மளச்சுமையை வெளிப்படுத்துகிறது போல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் மனதைக் கொள்ளை கொண்ட அமராவதியின் நினைவுகள் ரசனை!!

    ஆ!!! ஆண்டாளுடன் மற்றொன்றா...லக்ஷ்மி!! இரண்டும் ஒற்றுமையுடன் இருக்காங்க என்று தோன்றுகிறது. பாகன்களுமா இப்படி எல்லாம் உணவு கொடுக்கறாங்க ஆனைகளுக்கு? பாவம்...அதனால்தான் எனக்கு என்னவோ யானைகளை அவற்றின் இருப்பிடத்திலேயே அதாவது காட்டிலேயே விட்டிருக்கலாமே ஏன் இப்படிக் கோயில்களுக்குக் கொண்டு வந்து அவற்றிற்குப் பிடிக்காத கொட்டுச் சத்தம் எல்லாம் கேட்க வைத்து இதுவும் ஒரு வித கொடுமைதான் இல்லையா? என்று எனக்குத் தோன்றும்.

    திருச்சூர் பூரம் இப்படியான ஒரு நிகழ்வு....மதம் பிடிக்கும் சில சமயங்களில். மனிதர்களை இப்படிச் செய்தால் எப்படி இருக்கும்?

    'யாரும் இருக்கும் இடத்தில் இருந்த்விட்டால் எல்லாம் சௌக்கியமே'

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஹ்ருதயம் பாடல் கேட்டிருக்கிறேன் ஜி. இந்தப் பாடலும் ரசனையான பாடல்.

    ஜூனியர் மோகன்லால் குரல் சீனியரின் குரல் போலவே கொஞ்சம் இருக்கிறது. இளம் வயது குரல்...நன்றாக நடிக்கிறார்...

    வாசகம் - True!

    சரவணமணியன் வலைப்பூவைப் பார்த்துக் கொண்டேன். நீங்கள் கொடுத்திருக்கும் வரிகள் ஈர்க்கின்றன. வாசித்துவிடுகிறேன்.

    கவிதை நன்று.

    ஓவியம் சோகம்...ஏதோ இரைஞ்சுவது போன்று இருக்கிறது. "தயவு செய்து என்னை விட்டுவிடேன் இதற்கு மேல் எனக்குத் தாங்கும் சக்தி இல்லை" என்பது போல்...

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....