அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட மோகத்தைக் கொன்று விடு! பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
“There’s no life without humour. It can make the wonderful moments of
life truly glorious, and the tragic moments bearable.” - Rufus Wainwright, singer.
******
விழுப்புரம் இரயில் நிலையத்தில் - சமோசாவும்
வடையும் :
தமிழகப் பயணத்தில் ஒரு நாள் விழுப்புரம் வரை செல்ல
வேண்டியிருந்தது! வேலைகளை முடித்துக் கொண்டு விழுப்புரம் இரயில் நிலையம் வந்து
எங்கள் இரயிலுக்காக காத்திருந்தபோது நாங்கள் இருந்த இடத்தில் பத்துப் பன்னிரெண்டு
சீருடை அணிந்த விற்பனையாளர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பலரும் வைத்திருந்தது பெரிய வடை மற்றும்
மிகப்பெரிய சமோசா! ஒரு சிலர் தண்ணீர் பாட்டில் - இரயில் நீர் அல்ல! என்றாலும்
அதுவும் 15 ரூபாய் தான்.
வடை மற்றும் சமோசா பார்த்தாலே வயிறு நிரம்பி விடும் என்று தோன்றியது. என்ன தான் வடை/சமோசா/உணவுப் பொட்டலம்/தண்ணீர்
விற்பது தான் அவர்கள் வேலை என்றாலும் அதிலும் அவர்கள் எந்தவித கவலையும் இல்லாமல்
இருப்பது போலவே தோன்றியது.
ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்துக் கொண்டும், மகிழ்வாக சிரித்துக் கொண்டும் இரயில்
வரக் காத்திருந்தார்கள்.
வந்ததோ இல்லையோ அப்படி ஒரு ஓட்டம்! அடுத்த இரயில் வரும்வரை ஓடினால் தான் அன்றைய
தயாரிப்பை விற்று முடித்து பணம் சம்பாதிக்கலாம்.
இப்படி ஓடி ஓடி உழைத்த ஒருவர், ஓடி வந்த போது
இரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே கால்கள் மாட்டிக்கொண்டு, நிரந்தரமாக வேலை செய்ய
முடியாமல் போய்விட்டதாம்.
இரயில் நிலையத்தில்
இருக்கும் மேம்பாலத்தில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறாராம் -
அவருக்கு உணவு கொடுத்துவிட்டு வந்த சக உழைப்பாளி ஒருவர் சொன்னபோது மனதுக்கு
வருத்தமாக இருந்தது!
ஓடிய ஓட்டம் அனைத்தும் இப்படி முடிந்ததே என்று யோசனையோடு இரயில் ஏறினேன்… இந்த உழைப்பாளிகள்
அனைவரும் வாழ்வுக்கும் சாவுக்கும் ஒரு நொடி தான் வித்தியாசம் தான் என்பதை உணர்ந்து
வேலை செய்தால் நல்லது!
******
பழைய நினைப்புடா பேராண்டி : நைனா
தேவியும் ஜம்மா மசூதியும்
2014-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - நைனா தேவியும் ஜம்மா மசூதியும் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
போலவே இந்த நைனிதால் ஆற்றினை 64
சக்தி பீடங்களில் ஒன்றாகவும் குறிப்பிடுகிறார்கள். சிவபெருமான் எரிந்து போன
சதி[பார்வதி]யின் உடலை தூக்கிக் கொண்டு வரும்போது சதியின் கண்கள் இங்கே விழுந்தது
எனவும் அதனால் தான் இந்த ஆறு நைனிதால் எனப் பெயர் பெற்றதாகவும் சொல்வதுண்டு. ஹிந்தியில் நயன் என்றால் கண்கள். தால் என்றால் ஆறு. நயனங்கள் இந்த தாலில் விழுந்ததால்
நைனிதால்! இந்த ஆற்றின் வடகரையில் கோவில் கொண்டிருப்பவள் நைனா தேவி.
மிகப் பழமையான இந்தக் கோவிலில்
சக்தியை கண்கள் ரூபத்தில் வழி படுகிறார்கள். நைனாதேவி கோவிலில் நைனா தேவியினைத்
தவிர காளிக்கும் பிள்ளையாருக்கும் தனிச் சன்னதிகள் உண்டு. 1880-ஆம் ஆண்டு ஏற்பட்ட
கோரமான மலைச்சரிவில் நைனா தேவி கோவில் முற்றிலும் அழிந்து விட மீண்டும்
இக்கோவிலைக் கட்டி இருக்கிறார்கள்.
நாங்கள் கோவிலுக்குச் செல்லும்
போது இருந்த மழைத்தூறல் மற்றும் முந்தைய இரவின் பனிப்பொழிவின் காரணமாக சாலை
எங்கும் சேறும் சகதியும். அவற்றை மிதித்தபடியே கோவிலின் வாசலில் வந்து, எல்லோரும்
தத்தமது காலணிகளை ஒழுங்கில்லாது ஆங்காங்கே போட்டு விட்டு சென்று இருந்தார்கள். கோவிலில் பலத்த கூட்டம் - சிலர் வெளியே நின்றபடியே
இறைவியை தரிசிக்க, சிலர் உள்ளே கூட்டத்தோடு கூட்டமாக இடிபட்டு சென்று வந்தார்கள்.
கூட்டத்தோடு கூட்டமாக நானும் உள்ளே சென்று வெளியே வந்தேன்! பெரும்பாலான
கோவில்களில் இப்போதெல்லாம் நின்று நிதானமாக தரிசனம் செய்ய முடிவதில்லை!
முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!
******
இந்த வாரத்தின் ரசித்த இணையதளம்/வலைப்பதிவு : ஆலம்பரை கோட்டை
இந்த வாரத்தின் ரசித்த தளம்/வலைப்பதிவு சுற்றுலா
சம்பந்தப்பட்டது என்றாலும், இந்தத் தளத்தில் மற்ற பல விஷயங்களும் உண்டு. நான் பார்த்து/படித்து ரசித்தது கிழக்குக் கடற்கரை
பகுதியில் இருக்கும் ஆலம்பரை கோட்டை குறித்த பதிவு. அதிக அளவில் தகவல்கள் இல்லை என்றாலும், அவர்
பகிர்ந்து கொண்டிருக்கும் படங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்! நீங்களும் இந்த தளத்திற்குச் சென்று வாசித்துப்
பாருங்களேன். தளத்திற்கான சுட்டி கீழே.
*****
இந்த வாரத்தில் படித்த ஒரு சிறுகதை - தலைகள் இரண்டு :
சமீபத்தில் எஸ்.ரா. அவர்களின் தளத்தில் வாசித்த ஒரு
சிறுகதை “தலைகள் இரண்டு!”
வித்தியாசமான சிறுகதை. அந்தக் கதையிலிருந்து சில வரிகள் கீழே.
பெரிய ஹாலில் மட்டுமில்லாது நான்கு அறைகளிலும் இறந்த
சிசுக்களின் மாதிரிகள் வைக்கபட்டிருந்தன. அந்த அறைகளில் பகலிலும் டியூப் லைட்
இல்லாமல் எதையும் காண முடியாது. நேரடி வெளிச்சம் மிகக் குறைவு என்பதால் கேமிரா
பொருத்துவது சவாலான வேலையாக இருந்தது.
உள் அறையின் ஜன்னலை ஒட்டி இருந்த கண்ணாடி குடுவை
ஒன்றில் இரண்டு தலை கொண்ட சிசுவின் உடல் மிதந்து கொண்டிருந்தது.
இரட்டைத் தலைகளைக் காணும் போது இரண்டு மலர்கள் ஒரே
காம்பில் மலர்ந்திருப்பது போலவே தோன்றியது. மூடிய கண்கள் கொண்ட அந்தச் சிசுவை
நெருங்கி பார்த்துக் கொண்டிருந்தான் மனோகர்.
அந்தக் குடுவையின் அடியில் சிசுவின் தாய் பெயர்
இந்திராணி சுப்ரமணியம் இடம் காஞ்சிபுரம் வருஷம் 1994 என்று
குறிப்பிடப்பட்டிருந்தது. மனோகர் அந்தப் பெயரை வாசித்த போது…
முழு கதையையும் அவரது தளத்தில் இங்கே படிக்கலாம்! படித்துப் பாருங்களேன்!
******
இந்த வாரத்தின் புதிய ஹிந்தி வார்த்தை - CHUI MUI:
இந்த வாரம் உங்களுக்கு ஒரு புதிய ஹிந்தி வார்த்தை
சொல்லித் தரலாம் என இருக்கிறேன் நண்பர்களே! ஹிந்தி திணிப்பு செய்கிறேன் எனச் சொன்னாலும் கவலை
இல்லை! இந்த வார்த்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதே இதன் வித்தியாசமான உச்சரிப்பு
தான்! நமக்கு மிகவும் தெரிந்த தமிழில் “தொட்டால் சிணுங்கி” என்றும், ஆங்கிலத்தில்
TOUCH ME NOT என்றும் சொல்லப்படும் இந்தத் தாவரத்திற்கு ஹிந்தியில் பெயர் என்ன
தெரியுமா? CHUI MUI. இந்த ஹிந்தி வார்த்தையை (छुईमुई)
ச்சூயிமூயி என்று படிக்கவேண்டும். இதற்கு லாஜ்வந்தி என்ற பெயரும் உண்டு என்றாலும்
ச்சூயிமூயி என்ற வார்த்தை அதிகம் தெரிந்த வார்த்தை!
******
இந்த வாரத்தின் ரசித்த பாடல்
- Belli bettavanalone :
சமீபத்தில் Mangli என்ற பாடகர் குறித்து தெரிந்தது.
அவரது சகோதரியும் பாடகர் தான். சிவபெருமான் குறித்த இவரது பாடல்கள் தாளம் போட
வைக்கும் விதமாக இருக்கிறது. அப்படி கேட்டு ரசித்த ஒரு பாடல் இதோ நீங்களும் கேட்டு
ரசிக்க - இந்தப் பாடல் கன்னட மொழியில்! பாரம்பரியமான கர்நாடக இசையை அடித்துக்
கொள்ள முடியாது என்றாலும், இந்த மாதிரியான இசையையும் ரசிக்கலாம்!
******
இந்த வாரத்தின் பதாகை - இப்படியும்
சிலர் :
தமிழ் தமிழ் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டே
இருக்கிறார்களே தவிர இப்படி ஒரு பதாகை வைக்க முடிகிறது இங்கே! சரி பதாகை
தயாரித்தவர் இப்படித் தயாரித்து விட்டார் என்றாலும் இதை சரி பார்த்தவர்களுக்குக்
கூடவா இதில் இருக்கும் தவறுகள் தெரியவில்லை. இலக்கண சுத்தமாக எழுத வேண்டும் என்று இல்லை - அது
எல்லோருக்கும் தெரியாத விஷயம் - வார்த்தைகளில் இருக்கும் எழுத்துப் பிழை கூடவா
தெரியாது! என்னவோ போங்க!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த
தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும்
சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
அவரவர் வாழ்க்கை அவரவர்களுக்கு. சிலர் அதிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள். சிலர் யோசித்து முன்னேறுகிறார்கள். என்ன செய்தாலும் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் அனுபவிக்கிறார்களா என்பதுதான் முக்கியம்.
பதிலளிநீக்குஆலம்பாறை கோட்டை பக்கம் போனதும் ஒருகணம் அதுவும் உங்கள் தளம் என்றே நினைத்து விட்டேன். அப்புறம் சரியாய்ப் படித்தேன்!
பதிலளிநீக்குஇந்தக் கதையைப் படிக்கும் சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும் எஸ்ராவின் வேறொரு கதையைத் தேடுவதால் அவர் பக்கத்துக்கு அவசியம் சென்று அது இருக்கிறதா என்று தேடவேண்டும்!
பதிலளிநீக்குசூயிமூயியின் இன்னொரு பெயர் லாஜ்வந்தி என்று கேள்விப்பட்டதும் மண்டைக்குள் பல்பு எரிந்தது. அந்தப் பெயரில் ஒரு பெண்ணை அறிவேன் நான். ஆனால் எங்கு, எப்போது, யார் என்று நினைவுக்கு வரவில்லை! அது நினைவுக்கு வரும்வரை வேதனைதான்!
பதிலளிநீக்குதமிழ்நாட்டில் நிறைய பேர்களுக்கு ஒழுங்கான தமிழே தெரியாது. சரியான வார்த்தைகளையும்,உச்சரிப்பையும் மறந்து விட்டார்கள். சிலர் 'ளி' யைத் தெளிவாக உச்சரிப்பதாக நினைத்து இப்படிதான் அழுத்தம் திருத்தமாக 'ழி' என்பார்கள்! கொடுமை. என்னாகுமோ தமிழ் இன்னும் கொஞ்ச நாளில்..
பதிலளிநீக்குஎழுத்துப் பிழை வருத்தமாக உள்ளது...
பதிலளிநீக்குதமிழ் இலக்கணம் என்ற ஒன்று இருப்பதே இன்று தெரியாது..
பதிலளிநீக்குகம்மங்கூல் என்று எழுதியிருக்கின்றார்கள்..
இன்னும் பல இடங்களில் புதிய பொழிவுடன் - என்று இருக்கும்..
பதிலளிநீக்குஒருமை பன்மை தெரியாத நாளிதழ்களும் இருக்கின்றன..
பதிலளிநீக்குஓடி ஓடி உழைக்கும் உழைப்பாளி செய்தி கேட்டு வருத்தம் ஏற்படுகிறது.
பதிலளிநீக்குநானும் நிறைய சிறு கதைகள் படித்து வருகிறேன். கி.ராஜநாராயணன் அவர்களின் "பெண்கதைகள் "முடித்து விட்டேன். "அபிதா "படித்து வருகிறேன், லா.ச. ராமாமிர்தம் அவர்கள் புத்தகம் முன்பே படித்தது இருந்தாலும் மீண்டும். "பிரளயம் "ஜெயகாந்தன் அவர்கள் புத்தகம் எல்லாம் படித்து கொண்டு இருக்கிறேன்.
//சமீபத்தில் Mangli என்ற பாடகர் குறித்து தெரிந்தது. அவரது சகோதரியும் பாடகர் தான். சிவபெருமான் குறித்த இவரது பாடல்கள் தாளம் போட வைக்கும் விதமாக இருக்கிறது.//
நானும் இவர்பாட்டை கேட்டேன், நன்றாக இருக்கிறது. பாடலுடன், ஆடவும் செய்கிறார்.
உழைப்பாளிகளின் வாழ்க்கை ஓடி ஓடி உழைக்கணும் என்ற பாடல் நினைவுக்கு வந்தது! பாவம் ஒருவரின் கால் போனது...மிக வருத்தமான விஷயம்.
பதிலளிநீக்குபழைய நினைப்புடா பேராண்டி - வாசிக்கிறேன் ஜி..
ஆலம்பாரக்கோட்டை சென்றிருக்கிறேன் ஜி. அழகான இடம் இடிந்த கோட்டை தான் என்றாலும் அழகான இடம் கூடவே கடற்கரை, back water எல்லாம் அரை நாள் செலவிற்கான இடம். ஆனால் அப்போது என்னிடம் கேமராவோ செல்ஃபோனோ கிடையாது. மகன் பாண்டிச்சேரியில் படித்த போது பாண்டிச்சேரி - சென்னை அடிக்கடி பயணித்ததுண்டே! அப்படிச் சென்ற இடம். ஒரே ஒரு முறைதான். பேருந்தில் சென்று வந்த போது இந்த இடம் திரும்பும் இடத்தில் பலகை பார்த்து குறித்துக் கொண்டு சென்ற இடம்..ஆனால் அதிக நேரம் செலவிட முடியவில்லை அப்போது அதன் பின் செல்லவும் இல்லை.
கீதா
புதிய தளச் சுட்டியை குறித்துக் கொண்டேன்.
பதிலளிநீக்குஎஸ் ரா அவர்களின் தளத்தில் இந்தக் கதையை பார்த்து எடுத்து வைத்துக் கொண்டேன் சுட்டியை ஆனால் இன்னும் வாசிக்கவில்லை.
அட தொட்டால் சிணுங்கியின் பெயரா!! கற்றுக் கொண்டேன். படம் பார்த்ததும் தொ சி என்று புரிந்தது!!
கீதா
லாஜ்வந்தி - அழகான பெயர்! இதை வாசித்ததும் மனம் உடனே துவஜாவந்தி என்ற ராகத்திற்குச் சென்றது கூடவே இந்தப் பெயரில் ராகம் இருக்கிறதா என்று மனம் கேட்டு ஆம் கண்டிப்பாக இருக்கும் கர்நாடக இசையில் இல்லை என்றாலும் ஹிந்திஸ்தானியில் இருக்கும் என்று மனமே விடையும் சொல்லி கூகுளில் தேடியது! அட! இருக்கிறதே!!!ஹிந்துஸ்தானியில்! பாட்டையும் கேட்டுக் கொண்டேதான் கருத்து அடிக்கிறேன்.
நீக்குகீதா
கன்னட பாடல் சமீபத்தில் இங்கு சிவராத்திரி அன்று நம் வீட்டு அருகில் ஆட்டோ ஸ்டாண்டில் எல்லா விழாக்களும் கொண்டாடிடுவாங்க அப்படிக் கொண்டாடிய போது கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் ஆடவும் செய்தார்கள்!!! ஆனால் பாடகர் பற்றித் தெரியவில்லை. மங்க்லி என்று இப்போது உங்க மூலம் தெரிந்து கொண்டேன். கிராமீய மணத்தில் இப்பாடல் அமைந்திருக்கிறது. தாளம் போட வைக்கும் மெட்டு. நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஎழுத்துப் பிழைகள் பொது வெளியில் நிறையவே பார்க்க முடிகிறது. சர்வசகஜமப்பா என்ற ரீதியில்! தமிழ் நாட்டில் தமிழின் நிலை! என்ன சொல்ல?
கீதா