தொகுப்புகள்

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

மோகத்தைக் கொன்று விடு!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாராஹி அம்மன் கோவில் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

“Each day comes bearing its gifts. Untie the ribbon.” - Ann Ruth Schabacker.

 

******



 

மோகத்தைக் கொன்று விடு - என்னடா இது இன்றைக்கு மஹாகவி பாரதியின் வரிகளோடு வந்திருக்கின்றேனே என்று தோன்றுகிறதா?  பாரதி எழுதாத விஷயம் எது! அவன் மஹாகவி அல்லவா? சும்மா இருந்த ஒரு நாளில் காஃபி குறித்து நம் மஹாகவி ஏதேனும் எழுதி இருக்கிறாரோ என்று கூகிள் பாபாவிடம் கேள்விக் கேட்கத் துவங்கினேன்.  பல வித வார்த்தைகளைக் கோர்த்து எப்படித் தேடினாலும் காஃபி குறித்து பாரதி என்ன சொல்லி இருக்கிறார்? அல்லது ஏதேனும் சொல்லித் தான் இருக்கிறாரோ என்று கூட தெரிந்து கொள்ள முடியவில்லை!  கூகிள் பாபாவே இந்த விஷயத்தில் fail ஆகிவிட்டார்.  ஆனால் பல தேவையில்லாத விஷயங்களை கூகிள் பாபா என் மடிக்கணினித் திரையில் கொட்டிக் கொடுத்தார்!  அப்படிக் கொடுத்த ஒரு படம் மேலே நீங்கள் பார்ப்பது!  ஆமாம் பாரதியாரை இதற்கெல்லாம் கூடவா பயன்படுத்துவது என்று நீங்கள் யோசிக்கலாம்! ஆமாம் நாம் அருந்தும் காஃபிக்கான கோப்பையில் அவர் படம் பதித்து, அவரது கவிதையிலிருந்து சில வார்த்தைகளையும் பதித்துத் தருகிறார்கள்!  தயாரித்துத் தருபவர்களை விடுங்கள் - அவை Flipkart, Amazon போன்ற அந்நிய தேசத்துத் தளங்களிலும் விற்பனையாகிறது என்று இந்தத் தேடலில் தெரிந்து கொள்ள முடிந்தது! 

 

சரி பாரதியார் காஃபி குறித்து என்ன சொல்லி இருக்கிறார் என்பதை எதற்காக தேடினேன்?  மோகத்தைக் கொன்று விடு என்று சொன்ன பாரதி காஃபி மீதான மோகத்தினையும் சேர்த்தே சொல்லி இருப்பாரோ? அல்லது இந்தப் பழக்கம் குறித்து தனியாக ஏதேனும் சொல்லி இருப்பாரோ? என்றெல்லாம் ஒரு நாளில் தீடிரெனத் தோன்றியது! நம்மில் பலருக்கு காஃபி அல்லது தேநீர் இல்லையெனில் வேலையே ஓடாது என்று சொல்லிக் கொள்வது வழக்கம் உண்டு தானே! அதிலும் சில நண்பர்களுக்கு காலை எழுந்தவுடன் காஃபி அல்லது தேநீர் குடித்தால் தான் காலைக்கடன்களையே முடித்துக் கொள்ள முடியும் என்று சொல்வதை பலமுறை கேட்டு இருக்கிறேன்.  எனக்கு காஃபி குடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமெல்லாம் கிடையாது என்றாலும் பல சமயங்களில் ஒரே நாளில் நிறைய காஃபி அல்லது தேநீர் குடிப்பது வழக்கமாகிவிட்டது! மாற்றிக்கொள்ள நினைத்தாலும் முடிந்ததில்லை.  அலுவலகத்தில் காலை, மாலை, மதியம் என ஒரே நாளில் ஐந்து ஆறு காஃபி/தேநீர் குடிப்பது வழக்கமாகிவிட்டது. 

 

வீட்டில் இருந்தால் கூட இந்தப் பழக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது! திருவரங்கம் வந்தபின் நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்கு - வெளியில் செல்லும்போது ஒன்றிரண்டு, என அதே கணக்கு தொடர்ந்து கொண்டிருந்தது!  “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்” என்று படித்திருக்கிறோம்! எனக்கு ஒரு பழக்கம் உண்டு - எதையாவது இப்படி யோசிக்கத் தொடங்கினால் இந்தப் பழக்கத்தினை நிறுத்தலாமே என்று முடிவு செய்துவிட்டால் - என் முடிவை நானே மாற்றிக் கொள்வதில்லை!  96-இல் விட்ட ஒரு பழக்கம் இதுவரை அப்படியே விட்டதாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது! மீண்டும் அந்தப் பழக்கம் வரவே இல்லை.  என்ன பழக்கம், அந்த விட்ட பழக்கம் என்பது இந்தப் பதிவிற்குத் தேவையற்றது!  அதனால் அதை அப்படியே விட்டுவிட்டு, காஃபி/தேநீர் பழக்கத்திற்கு வருவோம்.  இந்த வருடத்தின் முதல் மாதமான ஜனவரியில் 14-ஆம் தேதி - அதாவது Bபோகிப்பண்டிகை அன்று தீடிரென எடுத்த ஒரு முடிவு - காஃபி/தேநீர் ஆகிய இரண்டையும் விட்டு விடலாம் என்ற முடிவு.  இதோ மூன்று மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது! விட்டது விட்டதுதான்! இதுவரை அவை இரண்டையும் தொடவே இல்லை! 

 

நண்பர்கள் வீடுகளில், எங்கள் வீடுகளில், வெளி இடங்களில் என எங்கே சென்றாலும் காஃபி/தேநீர் போன்றவை எத்தனை முறை கேட்டாலும் ஒரே பதில் - “இவை அருந்துவதை விட்டுவிட்டேன், எனக்கு வேண்டாம்!” என்பதாகவே இருக்கிறது. வெளியில் செல்லும் போது கூட தண்ணீர், மோர் அல்லது இளநீர் அருந்துவதே வழக்கமாக ஆகிவிட்டது! தில்லி சென்ற பிறகு இளநீர் கிடைக்கும் என்றாலும் பழரசங்கள், லஸ்ஸி போன்றவை அதிகமாகவே கிடைக்கும் என்பதால் விட்டது விட்டதாகவே தொடரும் என்பதில் ஐயமில்லை.  சரி காஃபியை விட்டாயிற்று என்பதால் அது குறித்து பேசவோ அல்லது பார்க்கவோ கிடையாது என்றில்லையே! சமீபத்தில் பார்த்த ஒரு பாடல் காட்சி இது - காஃபி சம்பந்தப்பட்டது! குழம்பி என்ற சுத்தமான தமிழ்ப் பெயரில் அழைக்கப்படும் காஃபி! அதே பெயரில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு தமிழ் படம் வந்திருக்கிறதாம்! ஒரு வகை திரில்லர் படமாம்! அதில் வந்திருக்கும் இந்தப் பாடல் இணையத்தில் காஃபி குறித்து தேடியபோது கிடைத்தது! நடிகை லட்சுமி மேனன் பாடிய பாடலாம்! அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ ரகம் இல்லை என்றாலும் பார்க்கலாம்! பாருங்களேன்!


  

மேலே உள்ள இணைப்பு வழி பார்க்க இயலவில்லை என்றால் நேரடியாக கீழே உள்ள Youtube இணைப்பு வழி பார்க்கலாம்! 

 

Oh Coffee Penne | Making Video | Lakshmi Menon | Kuzhambi Tamil Movie | TrendMusic Tamil - YouTube

 

இதையெல்லாம் தட்டச்சு செய்த பின்னர் எனக்கு ஒரு குரல் கேட்டது - என் மனசாட்சியின் குரல் தான் - “ஏண்டா! நீ காஃபி குடிக்கிறதை விட்டுட்டேன்னு சொல்றதுக்கு இப்படி ஒரு போஸ்ட் போடணுமா என்ன! இதுல லட்சுமி மேனன் பாட்டு வேற ஒரு கேடு!” 

 

எல்லா சமயங்களிலும் மனசாட்சியின் குரலைக் கேட்க வேண்டியதில்லை என்பதால் இந்தப் பதிவு இன்று வெளிவந்துவிட்டது! So Enjoy!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…

 


8 கருத்துகள்:

  1. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    காஃபியை அல்லது தேநீரை நிறுத்துவது சாதனைதான்.  சிகரெட்டைக் கூட நிறுத்தி விடலாம், உடலுக்கு கெடுதல் அது இது என்று சொல்லி விட்டு விடலாம்.  ஆனால் காஃபி...?   கஷ்டம்தான்.  எனக்கு காலை எழுந்து காலைக்கடன் முடித்து, பலதேய்த்து வந்து உடனே காஃபி வேண்டும்.  நானே போட்டுக்கொண்டு விடுவேன்!

    பதிலளிநீக்கு
  2. காபியை நிறுத்தியதில் மகிழ்ச்சி. எங்களுக்கு அந்தப் பழக்கம் இல்லாத்தால் எவ்வளவு சௌகரியம் என்பது நினைவுக்கு வருகிறது.

    புத்தாண்டு வாழ்த்துகள். இன்று புத்தாண்டு சம்பந்தப்பட்ட அல்லது கோவில் பதிவைத்தான் எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  3. இனிய தமிப்புத்தாண்டு/விஷு வாழ்த்துகள்.

    வெங்கட்ஜி நீங்கள் காஃபி குடிப்பதை நிறுத்தியது நல்ல விஷயம்.

    என்னால் முடியவில்லை. ஆனால் ரொம்பக் கொஞ்சமாக (ஒரு பெக்னு சொல்வாங்களே அந்த அளவு) காலை, மாலை, ரொம்ப அபூர்வமாக இடைய்ில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. குழம்பி என்று திரைப்படமா அதுவும் திரில்லர் படமா!!!

    பாட்டு கேட்டேன், ஓகே ரகம். இடையில் ராப் வருவதும், இசை ரொம்பத் தூக்கலாக இருப்பதும் சங்கடப்படுத்துகிறது. பாட்டு மெட்டு கூட ஓகே...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நானும் முன்பு குழம்பி குடிப்பதை நிறுத்தி இருந்தேன் இப்பொழுது மீண்டும் தொற்றிக் கொண்டது.

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  6. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்!
    நான் காப்பி, டீயை விட்டு 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
    எங்கள் மாமியார் வீட்டில் சாருக்கு மட்டும் காப்பி குடிக்கும் பழக்கம் உண்டு, அவர்கள் கல்லூரியில் பேப்பர் திருத்த போகும் போது பிடித்து கொண்ட பழக்கம்.

    பாடல் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. அருமை. விடுவதும் தொடுவதும் புதுவதன்றே.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....