தொகுப்புகள்

புதன், 14 ஜூன், 2023

திருவண்ணாமலை பயணம் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.




******





திருவண்ணாமலை பயணம் - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து இந்த பயண அனுபவங்கள் குறித்து படிக்கலாம் வாருங்கள். மடப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் சில நிமிடங்கள் காத்திருக்க, திருப்பதி செல்லும் அரசுப் பேருந்து ஒன்று வந்தது. அதில் ஏறிக்கொண்டு 65/- ரூபாய் ticket வாங்கி திருவண்ணாமலை நோக்கிய பயணம் தொடங்கியது. பேருந்தில் எனக்குக் கிடைத்தது கடைசி ஆறு இருக்கைகளில் ஒன்று. பக்கத்திலே நான்கு மூட்டைகள் அடுக்கி வைத்திருக்க நானும் மூட்டைகளோடு மூட்டையாக அமர்ந்து கொண்டேன். திருக்கோவிலூர் வந்ததும் சில பெண்கள் அந்த கடைசி இருக்கைகளில் வந்து மூட்டைகள் மீது கால் வைத்து அமர்ந்தார்கள். அங்கே ஆரம்பித்த பேச்சு திருவண்ணாமலை வரை நிற்கவில்லை. அவர்கள் பேச்சினைக் கவனித்தபடியே திருவண்ணாமலை வந்து சேர்ந்து விட்டேன்.


பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில் அவசர இயற்கை உபாதையை தீர்த்துக் கொண்டேன். ஐந்து ரூபாய் வாங்கினாலும் சுத்தம் செய்வதே இல்லை என்பதை அங்கே சென்றபோது அந்த நிலையிலும் மூக்கைப் பிடித்துக் கொள்ள வைத்த நாற்றத்திலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. பெரும்பாலான பேருந்து நிலையங்களில் இருக்கும் கழிவறைகளில் இந்த பரிதாப நிலைதான். என்றைக்கு இதற்கு விடிவுகாலம் பிறக்குமோ? அங்கிருந்து வெளியே வந்து கூகிள் பாபா உதவியுடன் கோவிலை நோக்கி நடக்கத்துவங்கினேன். சாலையில் ஒரு பெரியவர் இளநீர் விற்றுக்கொண்டிருக்க அவரிடம் இளநீர் (30/-) வாங்கிப் பருகினேன். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நடந்த பின் இராஜ கோபுரம் கண்ணில் பட்டது.






















கோவிலுக்குள் சென்று ஒவ்வொரு இடமாக நின்று நிதானித்து தரிசனம் செய்து கொள்ள முடிந்தது. எத்தனை அழகான சிற்பங்கள் கோவிலெங்கும் - அதிலும் குறிப்பாக ஆயிரம் கால் மண்டபத்தில் சிற்பங்கள் மெய்சிலிர்க்க வைத்தன. மண்டபத்தின் அமைப்பு, சிற்பங்கள் என ஒவ்வொன்றும் பிரமிக்க வைத்தன. நிதானமாக ஒவ்வொரு சிற்பங்களையும் பார்க்க வேண்டும் என்றால் இரண்டு மூன்று நாட்களாவது வேண்டும் எனத் தோன்றியது. இன்றைக்கு ஒரு நாள் மட்டுமே இந்தப் பயணம் என்பதால் முடிந்த அளவு பார்த்து மனதில் திருப்தி அடைய வேண்டியதுதான். இந்தக் கோவிலுக்கு முன்னரும் பல முறை வந்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்னை அதிசயக்கச் செய்யும் கோவில் என்று சொல்வேன். அதிலும் இங்கே கிடைக்கும் Positive Vibrations குறித்து நிச்சயம் சொல்ல வேண்டும். கோவிலில் காலடி எடுத்து வைத்த உடனே உடம்பெல்லாம் சிலிர்த்து ஒரு வித மன அமைதியை உண்டாக்கும் - இதனை ஒவ்வொரு முறை இங்கே வரும் போதும் உணர்ந்திருக்கிறேன்.


கோவிலின் சிறப்பு:


மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. கோவிலின் மொத்த பரப்பளவு 24 ஏக்கர் - பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை இதன் அளவைச் சொல்லும்போதே புரிந்து கொள்ள முடியும் அல்லவா? பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் (நெருப்பு) தலம் (நிலம் - ஏகாம்பரேசுவரர் கோவில் காஞ்சிபுரம்; நீர் - ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் திருவானைக்காவல், திருச்சி; நெருப்பு - அண்ணாமலையார் கோவில் திருவண்ணாமலை; காற்று – காளத்தியப்பர் கோவில் திருகாளகத்தி, ஆந்திரப்பிரதேசம்; ஆகாயம் – நடராஜர் கோவில் சிதம்பரம்) . சமயக்குரவர் நால்வராலும் பாடப்பட்ட தலம். நீங்கள் எங்கே இருந்தாலும் சரி, அங்கே இருந்தே இத்தலத்தினையும், இங்கே உறையும் அருணாச்சலேஸ்வரரையும் நினைத்தாலே முக்தி கொடுக்கும் தலம் இது. திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற பல புனித நூல்கள் இந்த திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தான் பாடப்பட்டன.


பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம். நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோவிலுக்குள் ஒரு இடத்தில் நின்று உங்களால் இந்தக் கோவிலின் அனைத்து கோபுரங்களையும் நீங்கள் தரிசிக்க முடியும் என்பதும் இங்கே உள்ள ஒரு சிறப்பு. ஆறு பிராகாரங்கள், 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என பல சிறப்புகள் கொண்ட ஆலயம். ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.


மூன்று இளையனார்: இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார். கோபுரம் அருகிலேயே பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது. காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.


சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோயில் இது தான் என்றும் சொல்லலாம். பக்தருக்கு அருள் புரிவதில் இத்தல இறைவன் சிறந்தவன் என்பதற்கு ஒரு கதை உண்டு. சிவ பக்தரான பல்லாலா என்கிற மன்னர் இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார். இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்பதால், இவர் செய்த உதவியை சிவனடியார் பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து அவரே இறுதி சடங்குகள் செய்தார் எனவும் சொல்கிறார்கள்.


சிவபெருமான் அக்னி வடிவத்தில் உருவான கதை: ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை. இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது.


கோபுரங்கள்: ஒன்பது கோபுரங்கள்! கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).


இன்னும் இப்படி, திருவண்ணாமலை உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவில் குறித்த பல பெருமைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தக் கோவிலில், இந்தப் பயணத்தில் நான் சற்றேறக்குறைய மூன்று மணி நேரம் இருந்தேன். அவ்வளவு நேரம் இருந்தாலும், அங்கே இருந்து வெளியேற மனதில்லை எனக்கு. ஒரு நாள் பயணமாக மட்டுமே இங்கே வந்ததால் வெளியேறித்தான் ஆகவேண்டும் எனும் நிலை. இங்கே பல வெளிநாட்டவர்கள் நிரந்தரமாக தங்கி விட்டார்கள். அல்லது சில மாதங்களேனும் இங்கே தங்கி தியானத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களைப் போல இல்லாவிடினும், இரண்டு மூன்று தினங்களேனும் இங்கே தங்கி கோவிலையும், மற்ற இடங்களையும் நின்று நிதானித்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு. அப்படி ஒரு வாய்ப்பு என்றைக்கு எனக்கு அமையும் என்பதை எல்லாம் வல்ல அருணாச்சல ஈசனே அறிவான். கோவில் குறித்து மேலும் சில தகவல்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம். அது வரை… பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன் நண்பர்களே.


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….

28 கருத்துகள்:

  1. வருகின்ற வெள்ளி அங்கு செல்ல திட்டமிட்டிருந்தேன்.  இதுவரை சென்றதில்லை.  ஆனால் நீ இப்போது இங்கே வரவேண்டாம் என்பது போல அருணாச்சலம் எனக்கு வேறொரு சிறு திருப்பம் தந்துள்ளான்.  எப்போது தரிசனம் வாய்க்குமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா... உங்களுக்கு திருவண்ணாமலை பயணம் விரைவில் அமைய வாழ்த்துகள். அவன் அருளாலே உங்களுக்கு இந்தப் பயணம் விரைவில் அமையும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அண்ணாமலை தரிசனம்..

    ஆனந்தம்..

    வேறென்ன சொல்வது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணாமலை தரிசனம் - ஆனந்தம் தான். தங்கள் அன்பிற்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  3. அண்ணாமலை படங்கள் அனைத்தும் அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  4. கோவில் குறித்து அனைத்து தகவல்களையும் கொடுத்த விதம் அருமை..கிரிவலப்பாதை குறித்து அடுத்த பதிவை எதிர்பார்க்கிறோம்..வாழ்த்துகளுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

      நீக்கு
  5. You are different. உங்களை பல இடங்கள் அழைக்கின்றன... ஒருவேளை தனிமை விரும்பியோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஒரு வேளை தனிமை விரும்பியோ?” ஹாஹா... இருக்கலாம். பல சமயங்களில் தனிமை மட்டுமே எனக்குப் பிடித்தமாக இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  6. படங்கள் அழகு... விளக்கங்கள் அற்புதம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. படங்கள் மிக அழகு. கிரிவலம் எப்போதுமே எனக்கு மிக பிடித்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நண்பரே.

      நீக்கு
  8. அன்னாமலையார் குறித்த விரிவான விளக்கம் அருமை சார்.
    எண் திசைகளில் உள்ள அஶ்டலிங்கங்கள் குறித்த தகவல்களும், ஒவ்வொரு ராசியினருக்கும் பொருத்தமான லிங்கம் குறித்த தகவல்கள் குறித்தும் மற்றொரு நூலில் படித்திருக்கிறேந்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். மேலதிகத் தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. தகவல்கள் சிறப்பு ஜி
    படங்களை தரிசனம் செய்து கொண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  10. கோயில் ப்ற்றிய தகவல்கள் எல்லாம் ரொம்பச் சிறப்பு வெங்கட்ஜி!..

    படங்கள் ஆஹா! நேரில் கண்டதுண்டு. இப்போது படங்கள் மூலம்.

    எனக்கு மிகவும் பிடித்த கோயில். ஆனால் கூட்டம் இருக்கும் தருணத்தில் செல்ல கஷ்டம். பாண்டியில் இருந்தப்ப எங்கள் தெருவில் உள்ள நட்புகளுடன் திருவண்ணாமலை தீபத்துக்குச் செல்ல நானும் மகனும் பேருந்து நிலையத்திற்குச் சென்று....ஆ! இப்படியான கூட்டத்தில் ஏறுவது ரொம்ப சிரமம் என்று அதுவும் பதிவு செய்ய வேண்டுமாம் செய்தாலும் வரிசை....பெரிய வரிசை தள்ளு முள்ளு....நமக்கெல்லாம் அப்படி ஏறிட முடியாது அப்படி எல்லாம் தரிசனமும் வேண்டாம் என்று திரும்ப வந்துவிட்டோம் நானும் மகனும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் பற்றிய தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. கூட்டம் என்றால் எனக்கும் அலர்ஜி தான். பௌர்ணமி தினம் அன்று அதீத கூட்டம் இருக்கும் என்பதால் எப்போதும் தவிர்த்து விடுவது வழக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. ஆமாம்...கோபுரங்கள் அத்தனை அழகு....

    //அவ்வளவு நேரம் இருந்தாலும், அங்கே இருந்து வெளியேற மனதில்லை எனக்கு.//

    ப்ளஸ் 1. எனக்கும்...ஆனால் இனி எப்போது வாய்ப்பு கிடைக்குமோ தெரியவில்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் விரைவில் திருவண்ணாமலை செல்ல வாய்ப்பு அமையட்டும் கீதா ஜி. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    திருவண்ணாமலை கோவில் பற்றிய பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன. கோவிலின் விபரங்கள் அனைத்தையும் தெளிவாக கூறியுள்ளீர்கள். இறைவனை தரிசித்துக் கொண்டேன்.

    நாங்களும் சென்னையிலிருந்து போது ஒரு நடவை இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறோம். இந்த ஊரில் என் மச்சினர் கொஞ்ச மாதங்கள் (என் கணவரின் அண்ணா) வேலை பார்த்தார். அவரைக் காணச் சென்ற போது கோவிலுக்கும் சென்று வந்தோம். அது நிறைய வருடங்கள் ஆகி விட்டதால் அவ்வளவாக நினைவிலுமில்லை. இப்போது கோவிலைப்பற்றிய உங்கள் விளக்கங்கள் அனைத்தும் படிக்க மனதுக்கு இதமாக இருக்கின்றன. மறுபடியும் அவன் அழைக்கும் போதுதானே அவனை மீண்டும் தரிசிக்க இயலும். அந்த நாட்களுக்கு நானும் காத்திருக்கிறேன். தங்களின் அடுத்தப் பதிவையும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      திருவண்ணாமலை குறித்த இந்தப் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த உங்கள் விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  13. கோவில் பற்றிய விளக்கங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் குறித்த விளக்கங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. படங்களும் பதிவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் படங்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....