தொகுப்புகள்

திங்கள், 24 ஜூலை, 2023

டேராடூன் பயணம் - பகுதி நான்கு - டப்கேஷ்வர் மந்திர், டேராடூன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தினம் தினம் தில்லி - தில்லி கேட் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


டேராடூன் பயணம் குறித்து இதுவரை மூன்று பகுதிகளை இங்கே வெளியிட்டு இருக்கிறேன்.  மூன்று பதிவுகளிலும் எனது வழக்கமான பயணங்களில் வரும் பகுதிகள் இல்லை - அதாவது பார்த்த இடங்கள் குறித்த தகவல்கள் இல்லை - இப்படி பயணப் பதிவுகள் எழுதுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இப்படியாக அமைந்து விட்டது. அலுவலகம் சார்ந்த பயணம் என்பதால் வேலை நாட்களில் எங்கேயும் சுற்றி வர இயலாமல் போவது இயல்பு தானே.  காலை நேரத்திலேயே பணி ஆரம்பித்து விட்டதால், காலை, மாலை நேரங்களில் கூட எங்கேயும் சென்று வர இயலவில்லை. டேராடூன் நகரில் நான் இருந்த கடைசி நாளான ஞாயிறு அன்று மட்டுமே எங்களுக்கு சிறிது நேரம் கிடைத்தது. அந்த கிடைத்த சிறிது நேரத்தில் பார்க்க முடிந்தது மூன்றே மூன்று இடங்கள் மட்டுமே - மூன்றுமே வழிபாட்டுத் தலங்கள் மட்டுமே! - இரண்டு சிவன் கோயில்கள், மூன்றாவது புத்தர் கோயில். அந்த மூன்றில் இன்றைக்கு நாங்கள் பார்த்த சிவன் கோயில்களில் ஒன்று குறித்து பார்க்கலாம். அதற்கு முன்னர் வேறு சில விஷயங்கள்!



டப்கேஷ்வர் கோயில் நுழைவாயில் அருகே நண்பர்களுடன்...


அசன் நதிக்கரையில்...


டப்கேஷ்வர்.... 


டேராடூன் நகரில் மட்டுமல்லாது அருகிலேயே மசோரி, கெம்ப்டி ஃபால்ஸ், DHதனோல்டி, என பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உண்டு.  டேராடூன் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் என்று பார்த்தால் சில கோயில்கள், மிருகக் காட்சி சாலை, அருவிகள், அருங்காட்சியகம், Robber’s Cave (a) Guchu Paani, சஹஸ்த்ரதாரா (கந்தகம் நிறைந்த நீர் - சரும நோய்கள் தீரும் என நம்பிக்கை), லச்சிவாலா எனும் பூங்கா, மால்சி மான் பூங்கா, FRI என அழைக்கப்படும் Forest Research Institute, டாட் காளி கோயில்,  என ஒரு பெரிய பட்டியல் இருந்தது. இருக்கும் ஒரு நாளில் எல்லா இடங்களையும் பார்ப்பது கடினமான விஷயம்.  அதிலும் எங்களிடம் இருந்தது சில மணி நேரம் மட்டுமே! அதனால் தான் நாங்கள் மூன்றே மூன்று இடங்களைத் தெரிவு செய்திருந்தோம்.  அந்த இடங்களில் முதலாவதான டப்கேஷ்வர் மந்திர் எனும் சிவன் கோயில் குறித்த சில தகவல்களையும் அங்கே சென்ற போது எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களையும் இந்தப் பகுதியில் பார்க்கலாம். வாருங்கள் டப்கேஷ்வர் மந்திர் சென்று சிவபெருமானை தரிசிப்போம். 


டப்கேஷ்வர் மந்திர்:


டேராடூன் நகரின் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில், மழை நாட்களில் அதிக நீர் வரத்து இருக்கும் ஆறான அசன் எனும் ஆற்றங்கரையில் அமைந்திருப்பது இந்த டப்கேஷ்வர் மந்திர் எனும் சிவபெருமானின் கோயில்.  ஒரு குகைக்குள் அமைந்திருக்கும் இந்தக் கோயில் குறித்த சில கதைகள் உண்டு. மஹாபாரத காலத்தில் ஏற்பட்ட கோயில் என்றும் சொல்கிறார்கள்.  இந்த கோயில் அமைந்திருக்கும் குகைக்கு பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருவான, குரு த்ரோணாச்சார்யா அவர்களின் பெயரை வைத்து (dh)த்ரோணா (G)குஃபா என அழைக்கிறார்கள்.  ஏன் இந்த குகைக்கு இந்தப் பெயர்? அதன் பின்னான காரணம் என்ன? கோயிலின் சிறப்பு என்ன போன்ற தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.  அது தவிர இந்தக் கோயிலில் உறையும் சிவபெருமானின் பெயர் வித்தியாசமாக டப்கேஷ்வர் என இருக்கிறதே அதற்கான காரணம் என்ன என்பதையும் தொடர்ந்து பார்க்கலாம்.  



குகைக்குள் சென்ற போது...


மஹாபாரதக் காலத்தில், கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் குருவான குரு த்ரோணாச்சார்யா அவர்கள் இந்தக் குகையில் தான் வாழ்ந்து வந்தார் என்றும் அதனால் தான் இந்தக் குகைக்கு (dh)த்ரோணா (G)குஃபா என்ற பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள்.  இந்தக் குகையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் சொட்டிக் கொண்டே இருக்கிறது. குகைக்குள் அமைந்திருக்கும் சிவலிங்கத்தின் மீது இந்தத் தண்ணீர் சொட்டுகள் தொடர்ந்து விழுந்த வண்ணம் இருக்கின்றன.  சிவலிங்கத்தின் மீது மட்டுமல்லாது குகைக்குள் முழுவதுமே தண்ணீர் சொட்டுகள் விழுந்தவண்ணமே இருக்கின்றன.  குகைக்குள் செல்லும் சமயம் சற்றே குனிந்தே செல்ல வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.  என் போன்று உயரமானவர்களுக்குக் கொஞ்சம் அல்ல நிறையவே குனிய வேண்டியிருந்தது என்றாலும் அத்தனை கடினமான விஷயம் அல்ல! சரி, குகைக்கான பெயர் காரணம் தெரிந்து விட்டது. இந்தக் குகையில் உறையும் சிவபெருமானுக்கு ஏன் டப்கேஷ்வர் என்ற பெயர்? அதையும் பார்த்துவிடலாம்! 



அசன் நதி...

டபக் (Tapak), டபக்னா என்கிற ஹிந்தி வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் சொட்டுவது! கீழே இருக்கும் சிவன் அதாவது ஈஷ்வர் (தமிழில் ஈஸ்வரன்) மீது தொடர்ந்து தண்ணீர் சொட்டிக் கொண்டே இருப்பதால் அங்கே (dh)த்ரோணா (G)குஃபா-விற்குள் இருக்கும் ஈசனின் பெயர் டப்கேஷ்வர்!  இந்தக் குகைக்குள் தண்ணீர் மட்டுமா சொட்டியது, பாலும் சொட்டியது என்கிறது இன்னுமொரு மஹாபாரதக் கிளைக்கதை.  குரு த்ரோணாச்சாரியார் அவர்களது மகன் பெயர் அஸ்வத்தாமா என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம் தானே.  ”அஸ்வத்தாமா ஹத குஞ்சரா”  என்கிற வாக்கியமும் தெரிந்தது தானே.  மஹாபாராதப் போரில் யுதிஷ்டிரர் அஸ்வத்தாமா இறந்தான் என்று சத்தமாகச் சொல்லி, குஞ்சரா அதாவது யானை என்பதை மட்டும் முணுமுணுத்தார் என்பதும், தனது மகன் அஸ்வத்தாமா இறந்து விட்டான் என்று குரு (dh)த்ரோணர் தனது ஆயுதங்களை கீழே போட்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார் என்பதையும் நாம் படித்து இருக்கிறோம்.  அந்த அஸ்வத்தாமா குறித்த இன்னுமொரு கதையும் இந்தக் குகை குறித்து இருக்கிறது என்று சொல்கிறார்கள். 


குரு (dh)த்ரோணாச்சாரியார் அவர்களின் மனைவி அஸ்வத்தாமாவை ஈன்றெடுத்த போது குழந்தைக்கு தனது தாய்ப்பாலை சரிவரத் தர முடியவில்லையாம்.  குறைவான தாய்ப்பால் மட்டுமே இருந்ததோடு, அவர்களிடம் குழந்தைக்குத் தர பசும்பாலோ அல்லது பால் தரும் பசுவோ இல்லாத காரணத்தினால் குறைவான அளவு பாலே கொடுக்க முடிந்ததாம். குழந்தை அஸ்வத்தாமா இதனால் ஈஸ்வரனிடம் பால் வேண்டி பக்தியுடன் கேட்க, சிவபெருமான் குழந்தையின் வேண்டுதலுக்கு இறங்கி குகையில் பால் சுரக்கச் செய்து சொட்டச் செய்தாராம்.  இப்படி ஒரு கதையும் இந்தக் கோயிலுடன் இணைத்துச் சொல்கிறார்கள்.  இப்போது பால் சொட்டுவதில்லை என்றாலும் இன்றைக்கும் தொடர்ந்து நீர் சொட்டிய வண்ணமே இருக்கிறது.  நாங்கள் சென்ற போது கூட குகையின் உள்ளே சென்றபோது தொடர்ந்து நீர் சொட்டிக் கொண்டே இருந்தது.  குகைக்கு மேல் பகுதியில் நீர் இருப்பதற்கான அடையாளமும் இல்லை. எங்கே இருந்து இந்த நீர் சொட்டுகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.  


கோயிலுக்கு சற்றே நடக்க வேண்டியிருக்கும்.  கோயிலுக்குள் இரண்டு சிவலிங்கங்கள் ஒன்றையொன்று ஒட்டிக்கொண்டு இருக்கின்றன.  தொடர்ந்து அங்கே பூஜைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.  அங்கே ஒரு பக்கெட்டில் தண்ணீரும் நிறைய சொம்புகளும் வைத்திருக்கிறார்கள்.  கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருமே சொம்புகளில் நீர் பிடித்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம். பெரும்பாலான வட இந்திய கோயில்களில் இப்படி பக்தர்கள் அனைவருமே பூஜை செய்யலாம் என்பது காலம் காலமாக நடந்து வரும் விஷயம்.  நாங்களும் சொம்பில் நீர் எடுத்து சிவபெருமானுக்கு பக்தி சிரத்தையுடன் அபிஷேகம் செய்தோம்.  தொடர்ந்து பக்தர்கள் வரிசையாக இப்படி நீர் கொண்டு அபிஷேகம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.  இங்கே ஆடி மாதம் அதாவது ”சாவன்” என்று அழைக்கப்படும் மாதம் சிவபெருமானுக்கு உகந்த மாதம்.  அந்த மாதத்தில் சிவபெருமானுக்கு கங்கையிலிருந்து நடந்தே நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வது அதாவது “ஜல் (ch)சடானா” மிகவும் பவித்ரமான விஷயமாகக் கருதப்படுவது.  ஆடி மாதத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து நாங்களும் எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும் என்று வேண்டிக்கொண்டோம். 


கோயிலிலிருந்து வெளியே வந்து காரில் அமர்ந்து அடுத்த இலக்கை நோக்கிப் பயணித்தபோது காவடியுடன் பல சிவபக்தர்கள் கோயில் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.  சிவபெருமானை இங்கே (BH)போலே என்று அழைப்பதுண்டு.  இப்படி ஒரு கூட்டமாக வருவதை (BH)போலே கி (BH)பராத் என்றும் அழைப்பார்கள்.  சிவபெருமானின் பெருமை சொல்லும் பாடல்கள் பாடியபடி பக்தர்கள் வருவார்கள். காளை மீது சிவபெருமான் வேடம் அணிந்தும் ஒரு பக்தர் வந்து கொண்டிருந்தார். நல்லவேளையாக நாங்கள் சென்று தரிசனம் பெற்று திரும்பிவிட்டோம். இல்லை என்றால் இந்த (BH)போலே கி (BH)பராத்  கோயிலுக்கு வரும் சமயம் சென்றிருந்தால் நிம்மதியாக தரிசனம் கிடைத்திருக்காது - அல்லது காத்திருக்க வேண்டியிருந்திருக்கும்.  சிறப்பான தரிசனம் பெற்ற பிறகு அங்கிருந்து புறப்பட்ட நாங்கள் எங்கே சென்றோம், என்ன செய்தோம் போன்ற தகவல்களை அடுத்த பதிவில் சொல்கிறேன். அது வரை பயணத்தில் தொடர்ந்து இணைந்து இருங்கள் நண்பர்களே.  


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….




13 கருத்துகள்:

  1. இடங்கள் எல்லாம் குறித்துக் கொண்டுவிட்டேன். போகும் வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ கனவு காணலாமே!!! தெரிந்தவர்கல் அங்கு செல்பவர்களுக்குக் சொல்லலாம்...

    அசன் நதி மனதைக் கவர்கிறது! குகைக்குள் செல்லும் காணொலியும் அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அதன் கரையிலேயே கோயில் ஆஹா!!! என்ன ஒரு இயற்கை அமைப்பு! ஆஞ்சு! கம்பீரமாக வரவேற்கிறார்!!!
    மழை பெய்யும் போது இன்னும் ஆபத்து. மலைமேலே நிறைய பெய்து அந்தத் தண்ணீர் திடீரென்று ஓடி வரும் வாய்ப்பும் உண்டு என்று தோன்றுகிறது.
    கருத்து அடித்துக்கொண்டிருந்த போதே மின்சாரம் போச்! வந்த பின் தான் இந்தக் கருத்து வரும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. குகை தகவல்கள் பிரமிக்க வைக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  4. கோயில் பற்றிய கதைகள் சுவாரசியம்.

    டபக்னா - ஹிந்தியில் இதன் பொருள் தெரிந்து கொண்டேன். ஆனால் எளிதாக நினைவு வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. நாம் பேசும் போது வழக்கில் 'டபக்கு டபக்கு' ன்னு ஏன் குதிக்கற...கொட்டறன்னு சொல்வதுண்டே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. குகைக்கு மேல் பகுதியில் நீர் இருப்பதற்கான அடையாளமும் இல்லை. எங்கே இருந்து இந்த நீர் சொட்டுகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். //

    அருகில் அசன் ஆறு ஓடுகிறதே! அதனால் இருக்கலாம் ஜி..பாறைகளுக்கு இடையில் இடைவெளிகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Bபோரா குகைகளில் கூட நீர்க்கசிவு உண்டே. அருகில் ஆறு ஓடுகிறதே.

      கீதா

      நீக்கு
  6. சிவலிங்கம் குகை பற்றிய விஷயங்கள் எல்லாமே ரொம்பச் சிறப்பாக இருக்கிறது ஜி. பக்தர்கள் வரும் முன் போய் வந்ததும் நல்லதாயிற்று, நீங்களும் அபிஷேகம் செய்து வழிபட முடிந்ததே...

    நல்ல அருமையான தகவல்கள். படங்களும் காணொளிகளும் அதைச் சொல்கின்றன. இரண்டுமே அருமை..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஹையா! இந்தக் கோவிலுக்கு நான் போயிருக்கேன். அழகான கோவில். ஆனால் அசன் ஆற்றில் அப்போது தண்ணீர் இல்லை.

    (டபக்கேக்ஷ்வர் கோவிலுக்கு எங்களோடு வந்தவர் ஒருவர் சரியான லபக்கேக்ஷ்வராக இருந்தார். எப்போதும் சமோசாவையும் ப்ரட் பக்கோடாவையும் லபக்கி கொண்டே இருந்தார்.)

    பதிலளிநீக்கு
  8. குகை பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.  இன்னமும் பால் சொட்டிக் கொண்டிருந்தால் வியாபாரஸ்தலமாயிருக்கும்!  தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது வியப்பு.  அசன் நதி என்கிறீர்கள், அல்லது என்கிறார்கள், அது கால்வாய் போல ஓடுகிறது!

    பதிலளிநீக்கு
  9. டப்கேஷ்வர் மந்திர் படங்களும், காணோளிகளும் நன்றாக இருக்கிறது.
    குகைகளில் நீர் சொட்டி கொண்டு தான் இருக்கும்.
    கூட்டம் வரும் முன் நன்றாக தரிசனம் செய்து விட்டீர்கள் சிவனை.

    பதிலளிநீக்கு
  10. /// குகைக்கு மேல் பகுதியில் நீர் இருப்பதற்கான அடையாளமும் இல்லை. எங்கே இருந்து இந்த நீர் சொட்டுகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ///

    அதுதான் பக்கத்தில் ஆறு இருக்கின்றது என்கின்றார்களே..

    இருந்தாலும் அந்த ரகசியம்
    ஸ்ரீ சொட்டீஸ்வர ஸ்வாமிக்கே வெளிச்சம்..

    பதிலளிநீக்கு
  11. தமிழ்நாட்டில் திருச்செங்கோடு மலை உச்சியில் அர்த்தநாரீஸ்வர ஸ்வாமியின் பாதத்தில் இருந்து நீர் சுரந்து கொண்டிருக்கும்.. நாற்பது வருடங்களுக்கு முன் நான் பார்த்திருக்கின்றேன்..

    இப்போது எப்படியோ தெரியவில்லை..

    திரு ஆனைக்கா கோயிலிலும் நீர் சுரந்து கொண்டு இருக்கும்..

    ஜம்புகேச லிங்கம் தண்ணீரில் மூழ்கியிருக்கும்.. பக்கத்தில் எந்த ஆறு ஓடுகின்றது?..

    பதிலளிநீக்கு
  12. டப்கேஷ்வர் மந்திர் ரொம்ப அழகா இருக்கு .. காணொளிகளும் மிகச் சிறப்பு

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....